Published:Updated:

மருமகளின் பேராசை, குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் மகன்; வரவைப்பது எப்படி? #PennDiary104

Penn Diary

என் மகனுக்கு ஊருக்குத் திரும்ப மனது ஏங்குகிறது. ஆனால் இப்போதும் என் மருமகள், அவனை வெளிநாட்டிலேயே வேலை செய்யும்படி சொல்கிறார். அவன் சம்பாதித்து அனுப்பும் பணம், அவருக்கு மேலும் மேலும் பணத்தின் மீது ஆசையையே கூட்டுகிறதே தவிர, போதும் என்ற எண்ணம் வரவே இல்லை.

Published:Updated:

மருமகளின் பேராசை, குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் மகன்; வரவைப்பது எப்படி? #PennDiary104

என் மகனுக்கு ஊருக்குத் திரும்ப மனது ஏங்குகிறது. ஆனால் இப்போதும் என் மருமகள், அவனை வெளிநாட்டிலேயே வேலை செய்யும்படி சொல்கிறார். அவன் சம்பாதித்து அனுப்பும் பணம், அவருக்கு மேலும் மேலும் பணத்தின் மீது ஆசையையே கூட்டுகிறதே தவிர, போதும் என்ற எண்ணம் வரவே இல்லை.

Penn Diary

நான் ஒரு சிறு நகரத்தில் வசிக்கிறேன். என் கணவர் என் மகனுக்கு 12 வயதிருக்கும்போதே இறந்துவிட்டார். நான் அருகில் இருந்த ஒரு கார்மென்ட் தொழிற்சாலையில் வேலைபார்த்து என் பிள்ளையை வளர்த்தேன். அவன் நன்றாகப் படித்ததால் மெரிட்டில் நல்ல கல்லூரியில் இடம் கிடைத்தது. கடனை வாங்கி அவனை படிக்கவைத்தேன். படிப்பை முடித்ததும் அவனுக்கு வேலை கிடைத்தது.

Boy
Boy
pixabay

அவன் படிப்புக்காக நான் வாங்கியிருந்த கடனை விரைவாக கட்டி முடித்துவிட்டு, அவனுக்குத் திருமணம் செய்ய முடிவெடுத்தேன். ’25 வயசுல கல்யாணமா... ஏம்மா... இன்னும் ரெண்டு, மூணு வருஷம் போகட்டும்’ என்றவனை சமாதானப்படுத்தி, பெண் பார்க்க ஆரம்பித்தேன். காரணம், அப்பாவை இழந்த பின்னர் நானும் என் மகனுமாகவே காலத்தை ஓட்டினோம். உறவினர்கள் ஆதரவும் பெரிதாக இல்லை. எனவே, குடும்பமாக சந்தோஷமாக இருப்பது என்ற உணர்வு என் மகனுக்குக் கிடைக்காமல் போனதில் எனக்கு மன வருத்தம் நிறைய. அதனால்தான், அவனுக்கு விரைவாக திருமணத்தை முடித்து, மனைவி, குழந்தைகள் என அவன் மகிழ்ச்சியுடன் வாழ்வதை பார்க்க ஆசைப்பட்டேன்.

நான் எதிர்பார்த்த மாதிரியே என் மகனின் திருமணம் சிறப்பாக முடிந்தது. திருமணமாகி அவனுக்கு ஒரு குழந்தை பிறந்த நிலையில், அவன் அலுவலகத்தில் இருந்து வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு வந்தது. குடும்பத்தை பிரிந்து அவன் செல்ல வேண்டாம் என்பதால், எனக்கு அந்த முடிவில் உடன்பாடில்லை. ஆனால் அவன் மனைவி, நல்ல வேலை, நல்ல சம்பளம், இதுதான் எதிர்காலத்துக்கு நல்ல முடிவு என்று கூற, என் மகனுக்கும் அப்போது அதுவே சரியென்று பட, வெளிநாடு சென்றான். அவன் நன்றாக சம்பாதித்ததால் ஊரில் சொந்த வீடு, நிலம், இடம், நகை என எல்லா வசதிகளையும் ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது. ஆனால் அதற்குள்ளாக ஆறு ஆண்டுகள் சென்றுவிட்டிருந்தன. இடையில், இன்னொரு குழந்தையும் பிறந்திருந்தது.

Wedding
Wedding
Pexels

ஒரு கட்டத்தில் என் மருமகளிடமும், மகனிடமும், ‘நமக்கு தேவைக்கும் அதிகமா எல்லாமே நிறைவா கிடைச்சிடுச்சு. இனி எதுக்கு அவன் வெளிநாட்டுல குடும்பத்தை பிரிஞ்சு இவ்ளோ கஷ்டப்படணும்? வாழ வேண்டிய வயசுல ரெண்டு பேரும் பிரிஞ்சிருக்கணும்? அதனால இனி வெளிநாட்டு வேலை வேண்டாம். இங்க பார்க்கிற வேலையில் கிடைக்கிற சம்பளம் போதும்’ என்று பேசினேன். என் மகனுக்கும் ஊர் திரும்ப விருப்பம் வந்துவிட்டிருந்தது. ஆனால் என் மருமகள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ‘சம்பாதிக்கிற வயசுலதான் சம்பாதிக்க முடியும். இன்னும் ரெண்டு, மூணு வருஷம் அவரு வெளிநாட்டுலேயே இருக்கட்டும்’ என்று சொல்லிவிட்டார்.

இப்போது என் மகன் வெளிநாடு சென்று 11 வருடங்கள் ஆகிவிட்டன. திருமணமாகி ஒன்றரை வருடங்களில் வெளிநாட்டுக்குச் சென்றவன். ஆண்டுக்கு இரண்டு முறை, 15 நாள்கள் விடுமுறையில் வந்து செல்கிறான். பிள்ளைகள் வளர்வதை அருகில் இருந்து பார்க்கவில்லை அவன். பிள்ளைகளும் அவர்கள் அப்பா உடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இப்போது அவனுக்கு ஊருக்குத் திரும்ப மனது ஏங்குகிறது. ஆனால் இப்போதும் என் மருமகள், அவனை வெளிநாட்டிலேயே வேலை செய்யும்படி சொல்கிறார். அவன் சம்பாதித்து அனுப்பும் பணம், அவருக்கு மேலும் மேலும் பணத்தின் மீது ஆசையையே கூட்டுகிறதே தவிர, போதும் என்ற எண்ணம் வரவே இல்லை.

Couple
Couple
Pixabay

என் பையனிடம் நான், ’உன் மனைவி சொல்றதை இனியும் கேட்க வேணாம். வேலையை விட்டுட்டு வாடா’ என்று சொல்லிப்பார்த்துவிட்டேன். ‘இல்லம்மா... இன்னும் ஒரு வருஷம் பார்க்குறேன். அதுக்குள்ள அவ மனசு மாறிடுவா’ என்கிறான். இதைத்தான் கடந்த நான்கு வருடங்களாக எனக்கு சமாதானமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறான். தனக்குத் தானேயும் இந்த பொய் சமாதானத்தை சொல்லிக்கொள்கிறான். என் மகனை வெளிநாட்டில் இருந்து வரவைப்பது எப்படி? அவன் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்வதை நான் கண் நிறைய காண வழி என்ன?