Published:Updated:

`பிடிக்கலைன்னு சொன்னா பிடிச்சிருக்குனு அர்த்தம்' லவ் மூடநம்பிக்கைகளுக்கு கெட் அவுட்! - 90ஸ் கிட்ஸும் நவீன காதலும்

modern love
modern love

ஒருவர் கொடுத்து ஒருவர் பெறுவது இல்லை காதல்; அது பரஸ்பரம் பகிர்வது. இந்தப் புரிந்துணர்வுக்குக் காரணம் 90-களில் பிறந்து, 2010-க்கு மேல் காதலிக்கும் பருவத்தில் நுழைந்தவர்கள்தான்.

கடந்த 20 வருடங்களில் டெக்னாலஜிக்கு சரிக்கு சமமாக வளர்ச்சியடைந்த மனித உணர்வு எதுவென்றால், அது காதல்தான். ஒரு நூற்றாண்டின் இறுதியில் ஓட்டு போடுகிற வயதில் இருப்பவர்கள்தான் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை முன்னெடுப்பார்கள். இந்த முறை அந்த மாற்றம் மிகப்பெரிய அளவில் காதலில் நிகழ்ந்திருக்கிறது.

love
love

கால் நூற்றாண்டுக்கு முன், `தாங்கள் என்னைக் காதலித்தது என் பாக்கியம்' என்று கண்ணீர் மல்கிய பெண்களிடமிருந்தும், ஒரு பெண்ணின் மனதில் இடம்பிடிப்பதே வாழ்நாள் சாதனை எனச் சுற்றிக்கொண்டிருந்த ஆண்களிடமிருந்தும், காதல் மெள்ள மெள்ள தப்பித்து, `ஒருவர் கொடுத்து ஒருவர் பெறுவது இல்லை காதல்; அது பரஸ்பரம் பகிர்வது' என்கிற சமதளத்தில் லேண்ட் ஆகியிருக்கிறது. இந்த மாற்றத்துக்கெல்லாம் காரணம் 90-களில் பிறந்து, 2010-க்கு மேல் காதலிக்கும் பருவத்தில் நுழைந்தவர்கள்தான். காதலை பசி, தூக்கம்போல இயல்பான விஷயமாக்கியவர்கள் இவர்கள்தான்.

கவுன்சலிங் சைக்காலஜிஸ்ட் திவ்யபிரபா, "முன்னரெல்லாம், ஆண்கள்தான் முதலில் காதலைச் சொல்வார்கள். பெண்கள் கால் கட்டைவிரலைத் தரையில் தேய்ப்பதோடு சரி. அதிகபட்சமாகக் கண்களால் காதலைச் சொல்லலாம். அதையும் மீறி, `எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு, உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா?' என்று யதார்த்தமாகக் காதலைச் சொல்லிவிட்டாலே ஜோலி முடிஞ்சே போச்சு. அந்தக் காதலுக்குச் சொந்தக்காரனே சந்தேகக்காரனாகிவிடுவான்.

love
love
காதலுக்கு ஏது இலக்கணம்?

ஆனால் இன்றோ, `எனக்குக் காதல் வந்தா அதை நான்தானே சொல்லணும்' என்று, மேலே சொன்ன நிலையை அடித்து துவம்சம் செய்துவிட்டார்கள் 90'ஸ் பெண்கள். `சொல்லியிருந்தா சரின்னு சொல்லியிருப்பானோ' என்று என்றைக்காவது வருத்தப்பட்டுவிடக் கூடாது என்று பெண்கள் காதலை வெளிப்படுத்திவிடுகிறார்கள். ஆண்களின் மனமும் அதை வரவேற்கும் வகையில் முதிர்ச்சியடைந்திருக்கிறது. அவர்களில் சிலர், `பொண்ணுங்க தேடி வந்து லவ் சொல்ற அளவுக்குத் தகுதியா இருக்கோம்ல' என்று காலரைத் தூக்கி விட்டுக்கொள்வதும் நடக்கிறது.

காதல் கன்ஃபர்ம் ஆனபிறகுதான், எமோஷனல் சீனுக்குள் டிராவல் ஆகிறார்கள் இன்றைய காதலர்கள். அதற்கு முன்வரை, `நீ யார், நான் யார், உன் பின்புலம் என்ன, என் பின்புலம் என்ன, காதலித்தால் அது கல்யாணத்தில் முடியுமா, கல்யாணத்துக்குப் பிறகான வாழ்க்கை, குழந்தை பெற்றுக்கொள்வது...' என்று சகலமும் ஓரளவுக்காவது இருவருக்குள் ஒத்துவருகிறதா என்று தெரிகிறவரைக்கும், பேச்சு வார்த்தை அல்லது நட்பு மட்டும்தான். சில வருடங்களுக்கு முன்புவரை இந்த விஷயங்களையெல்லாம் பெற்றோர்களும் உறவினர்களும்தான் செய்துகொண்டிருந்தார்கள். இன்றோ, காதல் என்ற உணர்வோடு எதிர்காலம் என்ற ரியாலிட்டியையும் சேர்த்து யோசிப்பதே இந்தத் தலைமுறையின் தெளிவு!'' என்று அதை வரவேற்கிறார்.

love
love

காதல் தெய்விகமானது, காதலுக்குக் கண்ணில்லை என்றெல்லாம் சொல்லி, தனக்கு எந்த வகையிலும் பொருந்தாதவர்களின் மீது, வெறும் உருவத்தில் மயங்கி காதலில் விழுபவர்களின் எண்ணிக்கை இப்போது குறைந்திருக்கிறது. உளவியல் நிபுணர்களும், `இள வயதினர், தங்கள் தகுதிக்கு ஒத்துவராதவர்களைக் காதலிப்பது தற்போது குறைந்திருக்கிறது' என்கிறார்கள்.

காதலும் திருமணமும், காலங்காலமாக பெண்களின் சிறகுகளை வளராமல் பார்த்துக்கொண்டதில் பெரும் பங்கு வகித்தவை. இன்றைய காதலோ பெண்களின் சிறகுகளை பலமாக்கியிருக்கிறது. 90'ஸ் கிட்ஸ் தலையெடுத்த பிறகுதான் இந்த நிலைமை பெரியளவில் மாறியிருக்கிறது. அதற்கு முன்னால் வரைக்கும் திருமணம் முடிந்தவுடன் வேலையை விட்டுவிட வேண்டும் என்பது சொல்லப்படாத விதியாகவே இருந்து வந்தது. விதிவிலக்குகளையும், `பொம்பளை சம்பாத்தியத்துல சாப்பிடுறவன்' என்று கமென்ட் அடித்து, கவனமாக மட்டம் தட்டிக்கொண்டிருந்தார்கள்.

modern love
modern love
சினிமா விமர்சனம்: சில்லுக் கருப்பட்டி

``90'ஸ் கிட்ஸான நாங்கள் திருமண வயதில் அடியெடுத்து வைத்தபிறகு இந்த நிலைமை மெள்ள மெள்ள மாற ஆரம்பித்திருக்கிறது'' என்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர். காதல் திருமணம், தன் கரியர் என்று இரண்டையும் வெற்றிகரமாக அமைத்துக்கொண்டவர். இவரைப்போல, மனதுக்குப் பிடித்த வேலை, சம்பாதிப்பது என்று சுயம் தொலைக்காத சுதந்திரமான பெண்கள் அதிகமாகியிருக்கிறார்கள். பாதி சமூகம் இதை வரவேற்க, `சேவல் கூவினால் மட்டுமே சூரியன் உதிக்கும்' என்று நம்பிக்கொண்டிருந்த மீதி சமூகம் வேறு வழியில்லாமல் வளைந்துகொடுக்க ஆரம்பித்திருக்கிறது.

பெண் சுதந்திரம் என்ன விலை என்று கேட்டது ஒரு காலம். பிறகு, பெண்களுக்குச் சுதந்திரம் தந்துவிட்டோம் என்று உளறிக்கொண்டிருந்தது ஒரு காலம். `பெண்களின் சுதந்திரம் ஆண்களுடைய பாக்கெட்டில் இல்லை' என்கிற தெளிவு 90'ஸ் கிட்ஸுக்குத்தான் மிகச் சரியாகப் புரிய ஆரம்பித்திருக்கிறது. அது காதலிலும் பிரதிபலிக்க ஆரம்பித்திருக்கிறது.

modern love
modern love

``பெண்கள் `பிடிக்கலை'னு சொன்னா, `பிடிச்சிருக்கு'னு அர்த்தம் என்பது போன்ற காதல் மூட நம்பிக்கைகளுக்கு எல்லாம் நாங்க கெட் அவுட் சொல்லிட்டோம். இதில் நாங்க மெச்சூர்டான தலைமுறையா நடந்துக்குறோம்'' என்கிறார், ஸ்டார்ட் அப் பிசினஸில் இருக்கும் 24 வயது சென்னை இளைஞர் ஒருவர்.

ஒரு செடி, ஒரு பூ உளறல்கள் இல்லாமல், இரண்டாவது காதலை ஒழுக்கத்துடன் இணைத்துக் குழப்பிக்கொள்ளாமல், பிரேக்-அப் கவலையை அளவான வருத்தத்துடன் கடந்துவிடுகிறார்கள் இந்த இளம் தலைமுறையினர்.

மொத்தத்தில், நவீன காதலை 90'ஸ் கிட்ஸ் இல்லாமல் பேசவே முடியாது என்பது நிஜம்!

அடுத்த கட்டுரைக்கு