Election bannerElection banner
Published:Updated:

`` `வர்தா' லாக் டவுனில் அம்மா, அப்பா இருந்தார்கள்... கொரோனாவில்..?!'' - அனுஹாசன் #Video

Anuhasan
Anuhasan

"வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டி இருக்கிறதே என்று இருந்தது. ஆனால், வீட்டிலேயே அடைந்துகிடக்கிறோம் என்று நினைப்பதற்குப் பதிலாக, நம் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுகிறோம் என்று நினைத்தால், பாசிட்டிவ்வாக உணரலாம்."

அனுஹாசன்... நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் மட்டுமல்ல. மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடியவர். சமூக வலைதளத்தில் சுறுசுறுப்பாகவும் வெளிப்படையாகவும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பவர். தன் லாக்டவுன் நாள்கள் அனுபவங்கள் பகிர்கிறார் இங்கு...

Anuhasan
Anuhasan

''லாக்டவுன் நாள்களில் இத்தனை சிரமங்களை நாம் எல்லோரும் ஏற்றுக்கொண்டிருப்பதற்கு மிக முக்கியக் காரணம்... இன்றைய உலகின் பொது எதிரியான கொரோனாவை ஒழிக்க வேண்டும் என்பதுதான். உலகம் முழுவதும் மக்களுக்கு இது முதன்முறை ஏற்பட்டிருக்கும் புதிய அனுபவமாக இருக்கிறது. மனித சமூகத்தின் வேறுவிதமான பயணத்துக்கான முதல் படியாகவும் அமைந்திருக்கிறது. ஒருவருக்கொருவர் அன்பால் இணைவதற்கான அருமையான ஒரு வாய்ப்பாகவும் இருக்கிறது.

இந்த லாக்டவுனில் இரண்டு விதமான உணர்வுகள், நம் மனதில் தோன்றுகின்றன. ஒன்று விரக்தி, இன்னொன்று பதற்றம். முதல் இரண்டு, மூன்று நாள்கள் ஒரு மாதிரியாகத்தான் இருந்தன. என்னடா இது என்றுகூடத் தோன்றியது. ஆனால், அதன் பிறகு இதற்கு நாம் பழகிவிட்டோம் என்றுதான் நினைக்கிறேன்.

Anu hasan
Anu hasan

வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டி இருக்கிறதே என்று இருந்தது. ஆனால், வீட்டிலேயே அடைந்துகிடக்கிறோம் என்று நினைப்பதற்குப் பதிலாக, நம் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுகிறோம் என்று நினைத்தால், பாசிட்டிவ்வாக உணரலாம். இது அன்பான சூழ்நிலையை உருவாக்க ஆரம்பிக்கும்.

நாம், நம் குடும்பத்தினரோடு சேர்ந்து உட்கார்ந்து, நின்று நிதானமாக முகம் பார்த்துப் பேசி, சாப்பிட்டு, அரட்டை அடித்து எத்தனை நாள்கள் ஆகிவிட்டன?! இந்த லாக்டவுன் அதற்கான பெரிய வாய்ப்பை இப்போது நமக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறது. குடும்ப உறவுகளை இந்தளவுக்கு நேசத்தோடும் பாசத்தோடும் புரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு இதுவரை நமக்கு அமைந்ததே இல்லை.

இந்த நேரத்தில் எனக்கு இதேபோன்றதொரு நினைவு மேலெழும்புகிறது. லாக்டவுன் மாதிரி கிடையாது. ஆனால், அந்த நேரத்திலும் நம்மால் வெளியில் போக முடியவில்லை. அதுதான் 'வர்தா' புயல். அப்போதும் இதே மாதிரி வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலைதான் ஏற்பட்டது. டிசம்பர் 2016 'வர்தா' புயல் வந்தபோது அப்பா அம்மா இருவரும் என்னுடன் இந்தச் சென்னை வீட்டில் இருந்தார்கள்.

Chandrahasan
Chandrahasan

அப்போது அப்பா ஹைதராபாத் போயிருந்தார். அங்கே அவருடைய போனில் சார்ஜ் தீர்ந்துவிட்டது. நாங்கள் அவரைத் தொடர்புகொள்ள எவ்வளவோ முயன்றோம். முடியவில்லை. அப்பாவுக்கு அப்போது கிட்டத்தட்ட 80 வயது இருக்கும். ஒரு வேலை காரணமாக, தன் இஷ்டத்துக்கு அவர் தனியாகவே சென்றுவிட்டார். அவர் வீடு திரும்பும்வரை பதைபதைப்புடனேயே இருந்தோம். ஒருவழியாக அவர் வீடு வந்த சேர்ந்தார். அப்பா அம்மா, நான் மூன்று பேர்தான் அப்போது வீட்டிலிருந்தோம்.

சமையல் செய்பவர் வரவில்லை என்பதால், நான் சமைத்துக்கொண்டிருந்தேன். இதே வீட்டில், இந்த டேபிளில் அம்மா உட்கார்ந்துகொண்டு எனக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் கொடுக்க, அதைக் கேட்டு கேட்டு நான் சமையல் செய்வேன். சமையலை முடித்து உணவுகளை டைனிங் டேபிளில் வைத்ததும், அப்பா அந்த சாம்பாரை கரண்டியால் ஒரு முறை கிளறிவிட்டு, கையில் ஊற்றி டேஸ்ட் பார்ப்பார். மூவரும் டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடும்போது, 'சாம்பார் இந்த டிசைன்ல நல்லா வந்ததுக்கு காரணமே, நீ இறக்கி வெச்சதும், நான் கரண்டியில் ஒருமுறை கிளறினேன் பார்த்தியா... அதுதான்' என்பார் அப்பா. 'நல்லா இருக்கே இந்த நியாயம்' என்பார் அம்மா.

அம்மா அப்பா இருந்தபோது... லாக்டவுண் நாளில் நினைவுகளைப் பகிரும் நடிகை அனுஹாசன்! #AnuHasan #LockDown Reporter : S.KATHIRESAN

Posted by VikatanTv on Monday, April 6, 2020

இந்த நினைவுகளைத் திரும்பிப் பார்க்கும்போது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னொரு பக்கம், நினைவுகள் மட்டுமே மிச்சமிருக்கின்றன. இப்போது அம்மா அப்பா இருவரும் இல்லை. நான் மட்டும் தனி ஆளாக இந்த வீட்டிலிருக்கிறேன்... அவர்களின் நினைவுகளுடன்."

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு