Published:Updated:

`உறவிலே வாழ்தல்’ .. அதாங்க லிவ் இன்...*கண்டிஷன்ஸ் அப்ளை! - வாசகர் பார்வை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

ஒரு பனை ஓலையில் மணமகன் மணமகள் பெயர் எழுதி அதை மணமகள் கழுத்தில் தொங்க விடுதல் ஒரு சடங்கு. அதற்குத் தாலபத்திரம் என்று பெயர்....

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சமீபகாலமாக நம் நாட்டிலே மேற்கத்திய கலாசாரத்தின் தொற்றாக ஒரு புதிய உறவு முளைத்துள்ளது.

அதன் பெயர் live-in-relationship

தமிழிலே "உறவிலே வாழ்வது" என்று பொருள் கொள்ளலாம்.

பெயர்தான் உறவிலே வாழ்வது, ஆனால் அதன் முதல் நிபந்தனை எதுவென்றால் எந்த உறவும் இல்லாமல் வாழ்வதே.

இது தோழமையா என்றால், ஆம்.

இது காதலா என்றால், இருக்கலாம்.

திருமணத்தில் முடியுமா என்றால், முடியலாம். நிச்சயமாக சொல்ல முடியாது.

எவ்வளவு காலம் நீடிக்கும்? கணிக்க முடியாது.

அப்படி என்றால் இது என்னதான் உறவு?

Representational Image
Representational Image
Unsplash

உறவறியா உறவு; உறவிலே துறவு.

அதாவது என்ன உறவென்று அறியாமல் இருப்பது;

அந்த உறவைத் துறப்பதற்கு எப்போதும் தயாராக இருப்பது.

நீ என்னை ஆளக்கூடாது; நான் உன்னை ஆள மாட்டேன்.

உன் வெளி உனது, என் வெளி எனது.

எனக்குப் பிடித்ததை நான் செய்வேன். உனக்குப் பிடித்ததை நீ செய்.

நமக்குப் பிடித்ததை மட்டும் நாம் செய்வோம்.

எல்லைக்கோடு ஒன்று உண்டு. ஆனால் எல்லையைத் தாண்டுவது என்று இருவரும் முடிவு எடுத்துவிட்டால், கோட்டை அழித்து விடலாம் தப்பில்லை என்பதே கோட்பாடு.

சரி, இதில் காதல் உண்டா? உண்டு.

காமம் உண்டா? உண்டு.

சதவிகிதம் வேண்டுமானால் வேறுபடலாம். ஆனால் இரண்டும் உண்டு.

Representational Image
Representational Image

சரி... காதல், காமம் இரண்டும் வேறா?

காதல் வெற்றிலை என்றால், காமம் அதில் சுண்ணாம்பு.

சுண்ணாம்பு மிகுந்தால் வாய் வெந்துவிடும், வெறும் வெற்றிலையும் வேலைக்காகாது.

பொதுவாக மனிதன் இரு நிலைகளில் தன்னையே மறக்கிறான் அல்லது இழக்கிறான். பாரதியின் வரிகளில் சொன்னால் உன்மத்த நிலை. ஒன்று தியானம், மற்றொன்று காதலோடு சேர்ந்த மயக்கம்.

இந்த இடத்தில் வள்ளுவனின் கடைசிக் குறளை பொருத்தலாம்.

“ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்”.

கொடுப்பதும் எடுப்பதும் காமத்தில்தான், குறைகளும் நிறையாதல் காதலில்தான். தொடுத்திடும் வார்த்தைகள் கவிதையாகும், துணையாகும் ஊடலது காதலுக்கே; உடலின் மகிழ்ச்சியாம் என்னவென்றால், உள்ளத்தில் அன்பு மிகு காதல் கொண்டோர் கூடலால் தழுவுவதே; எனவே ஊடல் காதலர் போற்றிடும் கருவியேதான். (கவிஞர் கோவூர் தணிகை)

Representational Image
Representational Image

இங்கே உணவுப் பரிமாறல் உண்டு. உணர்வுப் பரிமாறல் உண்டு. உறவுப்பரிமாறலும் உண்டு.

உறவினுள் பழகுதலின் வழியே புரிதல் அதிகரிக்கும். அதன் விளைவு இணைதலாகவும் இருக்கலாம், பிரிதலாகவும் இருக்கலாம்.

இரண்டில் எதுவாக இருந்தாலும் தெளிவாக இருக்கும்.

நிற்க..... பண்டைத் தமிழர் வாழ்விலே களவொழுக்கம் கற்பொழுக்கம் என்ற இரண்டு உண்டு.

களவொழுக்கம் என்பது காதலர்கள் பிறர் அறியாதவாறு தங்கள் திருமணத்திற்கு முன்பாக தனியிடத்திற்குக் கூடிக் காதற்களவு நிகழ்த்துவதாகும். (தொல்காப்பிய சூத்திரம் கிமு 711)

காதற் களவின் காலவரையறை இரண்டு மாதம்தான் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

களவொழுக்கத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுது களவு வெளிப்படுதலும் உண்டு.

அது அம்பல், அலர் என இரண்டு வகைப்படும்.

சிலருக்கு மட்டும் தெரிந்தால் அது அம்பல்.

பலர் அறிய காதல் நிகழ்ந்தால் அது அலர்.

``ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்

நீராக நீளும்இந் நோய்''

ஊரில் உள்ளவர்கள் சொல்லும் அலர் எருவாகவும் அது கேட்டு அன்னை சொல்லும் கடுஞ்சொற்கள் நீராகவும் கொண்டு இக்காதல் நோயானது வளர்கின்றதென காதலி களிப்படைகின்றாள்.

ஊரறியத் தெரிந்தவுடன் களவொழுக்கம் கற்பொழுக்கம் ஆக மாறுவதுதான் கரணம் என்னும் மண நிகழ்வு.

Representational Image
Representational Image

கையைப் பிடித்துக் கொடுப்பதும் மணமகன் கொள்வதும் தான் திருமண நிகழ்வு. கிட்டத்தட்ட இன்றைய register marriage போலே.

சிலப்பதிகாரக் காலத்திற்கு முன்புவரை திருமணங்கள் எளிமையாகவே நடந்தது.

பூச்சொறிதல் நெல்மணிகளைத் தூவி வாழ்த்துதல்.

நெல்மணிகள் விதைத்தால் வளரும். திருமணம் மேலும் ஒரு சந்ததியை விதைக்கும் என்பதே அதன் பொருள்.

ஒரு பனை ஓலையில் மணமகன் மணமகள் பெயர் எழுதி அதை மணமகள் கழுத்தில் தொங்க விடுதல் ஒரு சடங்கு. அதற்குத் தாலபத்திரம் என்று பெயர்.

நாளடைவில் அதுவே தாலியாக மாறியது. பன ஓலைக்குப்பதிலாக மஞ்சள் கயிறு, பின்னர் பொன்னால் செய்த தாலி என்று பின்னாளில் உருமாறியது.

சரி... மீண்டும் நம் கதைக்கு வருவோம் .

அன்றைய களவொழுக்கத்தை இன்றைய காதல் மற்றும் lived-in-relationship-க்கு ஓரளவிற்கு ஒப்பாகக் கூறலாம்.

களவொழுக்கம் காதல் திருமணம் என்றால், கற்பொழுக்கம் பெற்றோரால் நிச்சயிக்கப்படும் திருமணம் என்றும் பொருள் கொள்ளலாம்.

திருமணத்திற்கு முன் பழகுவதால் பல விஷயங்களை தெரிந்துகொள்ளலாம், புரிந்தும் கொள்ளலாம்.

பொதுவாக காதலிக்கும் போது ஒருவரின் நல்ல பக்கங்கள் மட்டுமே தெரியும், பேசப்படும். ஒரு வித மயக்கத்தில் நடுவிலே கொஞ்சம் பக்கங்கள் காணாமல் போய்விடும்.

ஆனால் ஒரே இடத்தில் வாழும் போது காணாத பக்கங்கள் கண்களுக்கு மட்டுமல்ல புலன்களுக்கும் புலப்படும்.

Representational Image
Representational Image

பழகித் தெரிதல், பழகித் தெளிதல் இரண்டுமே இங்கு சாத்தியம்.

மேலும் பாலுறவுத் தகைமை என்ற ஒன்று உண்டு. (Sexual compatibility) பெரும்பாலும் திருமண முறிவுக்குக் காரணம் இந்தப் பாலுறவுத் தகைமையின்மை என்று சொல்லலாம்.

சில சமயங்களில் திருமணத்திற்குப் பின்னர்தான் ஆணும் பெண்ணும் பாலுறவுக்குத் தகுதியானவரா, இல்லையா என்ற பெரும் உண்மை வெளிச்சத்திற்கு வருவதும் உண்டு.

பெற்றோர் பார்த்து செய்யும் திருமணங்களில் பெரும்பாலும் மணமுறிவு ஏற்படுவதில்லை என்று சொல்பவர்களும் உண்டு.

நான் புள்ளிவிவரங்களுக்குள் செல்ல விரும்பவில்லை.

மணமுறிவு (divorce) ஏற்படாமல் இருக்கப் பல காரணங்கள் இருக்கலாம்.

பெற்றோரைக் கருதி, உற்றாரைக் கருதி, பிள்ளையைக் கருதி, பொருளாதாரச் சார்பு நிலைக் கருதி இப்படி பல விஷயங்கள் மணமுறிவு கோராமல் இருக்கலாம். ஆனால் மனமுறிவு எப்போதோ ஏற்பட்டிருக்கும். அது வெளியே தெரியாமலே இருக்கும்.

இன்னும் ஒரு படி மேலே சொன்னால் சில வீடுகளில் பிள்ளைகள் பிறப்பது கூட விபத்தாக நிகழ்ந்திருக்கும்.

எத்தனை காலம் கூடி வாழ்ந்தும் தன் கணவனுக்கு எது பிடிக்கும் என்று தெரியாத மனைவியும், தன் மனைவியின் தேவை எதுவென்று அறியாத கணவனும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Representational Image
Representational Image

ஒரே வீட்டில் வாழ்வதாலேயே, வேறு வழியில்லாமல் ஒத்து வாழ்வதும் உண்டு. ஒத்து வாழ்வது போல நடிப்பதும் உண்டு. நடிப்பதே வாழ்க்கையாகி, ஒரு கட்டத்தில் உண்மை எது நடிப்பு எது என்று தெரியாமல் தொலைந்து போனவர்களும் உண்டு.

தொல்காப்பியர் காலத்தில் சாதிப் பிரிவினையும் சீதனம் கொடுத்தல் வாங்கல் ஆகியவையும் இருக்கவில்லை.

இன்றைய ஆடம்பரத் திருமணச் செலவு, ஒருவேளை மணமுறிவு ஏற்படின் அதற்கு ஆகும் செலவு, இரு வீட்டிலும் ஏற்படும் வலி வேதனை போன்ற பாதகங்களை சீர்தூக்கிப் பார்த்து யோசித்தால், இந்த உறவறியா உறவில் (லிவ் இன்) வாழ்வது அவற்றைத் தவிர்க்கலாம் என்று தோன்றுகிறது.

சில சமயம் காதல் கூடாமல் காதலில் இடைநிற்றல் (break up) ஏற்படின் அது ஒருவரை உரப்படுத்தும், வளப்படுத்தும். தோல்வியை எதிர் கொள்ளும் சக்தியைத் தரும். காதலில் பெறும் இப்பயிற்சி வாழ்விலே வரும் பல சோதனைகளை, தோல்விகளைத் தாங்கும் வல்லமையைத் தரும்.

காதல் ஒருவனுக்குத் தன்னம்பிக்கையைத் தரும் என்றால், காதல் தோல்வி விடாமுயற்சியைத் தரும்.

Representational Image
Representational Image

முதலில் தனியனாக (single) இருப்பது ஒருவகைத் துன்பம் எனின், காதல் இடைநிற்றலின்பின் மீண்டும் தனியனாக இருப்பது ஒரு வகை வெறுமை.

ஆனால் அது வாழ்வில் pause பட்டன் வைத்த நிலை.

தன்னைத்தானே ஆராய்ந்து கொள்ள, சுயமதிப்பீடு செய்து கொள்ள, ஒரு கால நேரம் கிடைக்கிறது. அங்கே அவன் உரம் பெறுகிறான்.

இந்தக் கால இளைஞர்கள் காதல் தோல்வியால் தாடி, போதை, தற்கொலை என்று முடிவெடுக்காமல் "இதுவும் கடந்து போகும்" என்று எடுக்கும் முடிவுகள் பாராட்டப்பட வேண்டியவையே.

அதிலும் பெண்கள் பொருளாதாரத்தில் ஒரு தன்னிறைவடைந்த நிலையில் இருந்துகொண்டு தங்கள் வாழ்வை, துணையைத் தேர்ந்தெடுத்து அதனால் வரும் விளைவுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு வாழ்வதும் பாராட்டப்படவேண்டிய ஒன்று.

ஆனால் வேடிக்கை எது? கேளிக்கை எது? வரையறை எது? வரன்முறை எது? என்பதை அவரவர்களின் தீர்மானத்திற்கே விட்டுவிடுகின்றேன்.

இந்தக் கட்டுரை மூலம் நான் எந்த ஒரு பக்கத்தையும் ஆதரிப்பதாகக் கொள்ள வேண்டாம். எல்லாமே என் பார்வையில் பட்ட ஒரு அலசல், அவ்வளவே.

ஏனெனில் மொத்தத்தில் வாழ்க்கை என்பது எந்த வரையறைக்குள்ளும் அடங்காதது.

சிலருக்கு மகிழ்ச்சி தரும் ஒரு விஷயம், வேறு சிலருக்கு மகிழ்ச்சியைத் தராது.

அது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. அடுத்தவர் பார்வை, விமர்சனத்திற்கு வாழ்வதைவிட அவரவர் மனதிற்கு வாழ்வதே மேன்மையானது. புதிர்கள், சம்பவங்கள், எதிர்பாரா நிகழ்வுகள் எல்லாம் கலந்த, நாளை எது என்று புரியாத புதிராக இருப்பதுதான் வாழ்க்கையின் சுவாரசியம்.

காதலும் அதற்கு விதிவிலக்கல்ல.

வாழ்க்கை வாழ்வதற்கே|

காதல்| காதல்| காதல்|

காதல் போயின், காதல் போயின், மீண்டும் காதல்| காதல்| காதல்|

-பரிதிமாறன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு