Published:Updated:

காதல் அடைதல் உயிரியற்கை!

அருண் - ரேணுகா
பிரீமியம் ஸ்டோரி
அருண் - ரேணுகா

அப்பா மளிகைக் கடை வச்சிருக்கார். பொருள்களை மடிக்கிறதுக்காக வாங்குற இதழ்களைப் படிச்சுத்தான் எனக்கு வாசிப்புப் பழக்கம் வந்துச்சு.

காதல் அடைதல் உயிரியற்கை!

அப்பா மளிகைக் கடை வச்சிருக்கார். பொருள்களை மடிக்கிறதுக்காக வாங்குற இதழ்களைப் படிச்சுத்தான் எனக்கு வாசிப்புப் பழக்கம் வந்துச்சு.

Published:Updated:
அருண் - ரேணுகா
பிரீமியம் ஸ்டோரி
அருண் - ரேணுகா

“ரேணுவையும் என்னையும் இணைச்சது குழந்தைங்கதான். நாம குழந்தையா இருந்தப்போ நமக்குக் கிடைச்ச அனுபவங்கள் இன்னைக்குப் பிறக்குற குழந்தைகளுக்குக் கிடைக்கிறதில்லை. பிறந்தவுடனே பனியன் துணியில நெய்யப்பட்ட ஆடைகள்... பாக்கெட்ல வர்ற பிராண்டட் உணவுகள்... இந்த அவஸ்தைகள்ல இருந்து குழந்தைகளை மீட்கணும். அதுக்காக அவரவர் துறைகள்ல வேலை செய்யணும்னு முடிவு செஞ்சோம். நம்பிக்கையும் புரிதலும் அதிகமாக, தோழமை காதலாச்சு...’’ மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாகப் பேசுகிறார் அருண்.

``சமூக ஊடகங்கள் மூலமாத்தான் அருண் எனக்கு அறிமுகமானார். மத்தவங்களைப் பத்தி யோசிக்கவே நேரமில்லாம எல்லாரும் ஓடிக்கிட்டிருக்கிற நேரத்துல, பார்த்த வேலையை விட்டுட்டு முழுநேரமா மத்தவங்களுக்காக வேலை செய்ற குணம் யாருக்கு வரும்..? அருணை மாதிரி நல்ல தோழன் வாழ்க்கை முழுவதும் வழித்துணையா வந்தா நல்லாருக்கும்னு தோணுச்சு...’’ புன்னகை மாறாமல் பேசுகிறார் ரேணுகா.

காதல் அடைதல் உயிரியற்கை!

இன்டீரியர் டிசைனரான அருண், ‘அம்பரம்' என்ற பெயரில் பச்சிளம் குழந்தைகளுக்கான நல்லாடைகள் தயாரிக்கிறார். குழந்தை வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்தியல் படித்துள்ள அருணின் காதல் மனைவி ரேணுகா, மதுரை சீடு நிறுவனத்துடன் இணைந்து `நற்சூழ்' என்ற பெயரில் கூடுகைகள் நடத்தி, குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு நம் மரபுணவுகளில் கிடைக்கும் ஊட்டச்சத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். அருண்-ரேணுவின் பெருமிதக் காதலுக்குச் சாட்சியாக, 2 வயது லிகிதன்.

``அப்பா மளிகைக் கடை வச்சிருக்கார். பொருள்களை மடிக்கிறதுக்காக வாங்குற இதழ்களைப் படிச்சுத்தான் எனக்கு வாசிப்புப் பழக்கம் வந்துச்சு. இன்டீரியர் டிசைனிங், அனிமேஷன் படிச்சுட்டு சென்னைக்கு வந்தேன். கொஞ்சநாள்ல அப்பா, அம்மாவையும் கூட்டிவந்து சென்னையில செட்டிலாகணும்னு திட்டம். ஆனா இங்கே நிலை எதிர்மறையா இருந்துச்சு. செலவும் பரபரப்பும் ஒட்டவேயில்லை. வேற ஏதாவது மனசுக்குப் பிடிச்சமாதிரி செய்யணும்னு தோணுச்சு. அந்தத் தருணத்துலதான் சோஷியல் மீடியாவுல வானகம் பத்தியும் நம்மாழ்வார் பத்தியும் படிச்சு அங்கே போய் வேளாண் பயிற்சியெடுத்தேன். எங்காவது நிலம் குத்தகைக்கு எடுத்து விவசாயம் பண்ணலாம்னு தோணுச்சு. `அப்படியெல்லாம் அகலக்கால் வைக்காதே... தெரிஞ்ச வேலையைச் செய்'ன்னு நண்பர்கள் சொன்னாங்க. சரி, நமக்குத் தெரிஞ்ச இன்டீரியர்ல ஏதாவது செய்யலாம்னு செம்மை வனத்துக்குப் போய் மரபு சார்ந்த கட்டுமானங்கள், உள்கட்டமைப்புகள் கத்துக்கிட்டேன். அதுவும் தொழிலா ஒத்துவரலே.

ஒருநாள் வீட்டிலிருக்கிற ஒரு தலையணை கிழிஞ்சு உள்ளிருந்த துணிகளெல்லாம் வெளியே வந்திருச்சு. அதுக்குள்ள, நான் குழந்தையா இருந்தப்போ போட்டிருந்த சட்டைகளை எல்லாம் அம்மா வச்சிருந்திருக்காங்க. எல்லாம் பருத்தியாடைகள். அதைப் பார்த்தப்போ, இன்னைக்குள்ள குழந்தைகளுக்கு இந்தமாதிரி அனுபவங்கள் கிடைக்கலையேங்கிற எண்ணம் வந்துச்சு. இதுதான் நாம இறங்கவேண்டிய களம்னு தோணுச்சு. தீவிரமா அதுசார்ந்த விஷயங்களைக் கத்துக்கிட்டேன். இயற்கையான நிறமிகளைச் சேர்த்துத் தூய பருத்தியில குழந்தைகளுக்கான ஜப்ளா, நாப்பி, படுக்கை, துண்டுகள் தயாரிக்க ஆரம்பிச்சேன், கூடவே பனையோலைக் கிலுகிலுப்பை, குழந்தைகளுக்குப் பல் முளைக்கிறப்போ கடிக்கக் கொடுக்கிற சூப்பாங்குச்சி, கையில கட்டுற வசம்புக் கயிறும் சேர்த்துத் தயாரிச்சு, தெரிஞ்ச நண்பர்களுக்கு குழந்தை பிறக்கும்போது கொடுத்தேன். பெரிய வரவேற்பு கிடைச்சுச்சு. இதையெல்லாம் சமூக ஊடகங்கள்ல பகிர்ந்துக்கிட்டப்போ, ஒரு தோழியா ரேணு அறிமுகமானா...’’ - மனைவியின் முகம் பார்த்து நிறுத்துகிறார் அருண்.

காதல் அடைதல் உயிரியற்கை!

ரேணுகா சென்னையில் பிறந்தவர். அப்பா அரசுப் போக்கு வரத்துக்கழகத்தில் பணியாற்று கிறார். அம்மா, இல்லத்தரசி. ஒரு தம்பி விஸ்காம் படிக்கிறார்.

``ஒருநாள் சென்னையில் இருக்கிற ஒரு இயற்கை வேளாண் அங்காடியில சந்திச்சு இயல்பா பேசிக்கிட்டிருந்தோம். `நம்ம குழந்தைக்கு நல்ல உணவும் உடையும் கிடைச்சா நல்லாருக்கும்'னு அருண் சொன்னப்போ, எனக்கு வித்தியாசமா தெரியலே. `ஆமால்ல'ன்னு சொன்னேன். அதுக்கப்புறம்தான் அந்த வார்த்தையோட பொருள் புரிஞ்சது.

திருமணம் செஞ்சுக்கிறதுன்னு முடிவெடுத்த பிறகு வீட்டில் பேசினோம். ரெண்டு வீட்டிலயுமே எதிர்ப்பு. ஒரு கட்டத்துல நான் மதுரைக்குக் கிளம்பிப் போயிட்டேன். மறுநாளே கீழக்குயில்குடி சமணர் படுகையில மாலை மாத்திக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ரெண்டு குடும்பமுமே எதிர்பார்க்கலே. கோபத்துலதான் இருந்தாங்க. கோபங்கள், வருத்தங்கள் இருந்தாலும் எங்களை ஏத்துக்கிட்டு வரவேற்பு நிகழ்வை நடத்தினாங்க. ஆனாலும் பெரிய காயம் அவங்களுக்கு. லிகிதனோட அம்மாவா பார்க்கும்போது அவங்க கோபத்தையும் வலியையும் புரிஞ்சுக்க முடியுது. நாங்க வாழ்ற அர்த்தமுள்ள வாழ்க்கைதான் அவங்க காயத்தை ஆற்றும்...’’

கண்கலங்குகிறார் ரேணுகா!