லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

விவாகரத்து... சுமுகத் தீர்வா, விடுதலை கொண்டாட்டாமா?

விவாகரத்து... சுமுகத் தீர்வா, விடுதலை கொண்டாட்டாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
விவாகரத்து... சுமுகத் தீர்வா, விடுதலை கொண்டாட்டாமா?

#Avaludan

உலகம் முதல் உள்ளூர் வரை, பரபரப்பு செய்திகள் குறித்த கருத்துகளை பகிரச் சொல்லி `அவள் விகடன்' சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்தவற்றில் சிறந்தவை இங்கே...

வைரலாகி இருக்கும் சீரியல் நடிகை ஷாலினியின் Divorce Photoshoot-ஐ முன்வைத்து, ‘விவாகரத்தை சுமுகமாகக் கடக்காமல் கொண்டாட்டமாக மாற்றுவது சரியான போக்கு அல்ல’, ‘கொடுமையான உறவில் இருந்து வெளிவரும்போது அதைக் கொண்டாடினால் என்ன தவறு’ எனப் பல தரப்பு கருத்துகள் பகிரப்படுகின்றன.

இது குறித்த உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்...

Shenthiru Aparna

அது ஒரு துயர் நீக்கம். அதை கொண்டாடினால் என்ன தவறு?

விவாகரத்து... சுமுகத் தீர்வா, விடுதலை கொண்டாட்டாமா?
விவாகரத்து... சுமுகத் தீர்வா, விடுதலை கொண்டாட்டாமா?

Rexlin Sheebha

இரு நபர்கள் பிரிவது, இருவருக்குமே புதிய ஆரம்பம். அதை சுமுகமாகத் தொடங்க வேண்டும். அதை தனிப்பட்ட முறையில் கொண்டாடுவதிலும் தவறில்லை. ஆனால், ஃபோட்டோஷூட் செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டாடுவது, குறிப்பாக திருமண புகைப்படத்தை கிழிப்பது, காலில் போட்டு மிதிப்பதை எல்லாம் கொண் டாட்டமாக ஏற்க முடியாது.

Sharmila N

விவாகரத்து ஆன பெண்ணை பறிகொடுத்தவராகவே பார்க்க வேண்டும் இந்த சமூகத்துக்கு. அவர் பாதிக்கப் பட்டவராக, பாவப்பட்டவராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டால்தான் பலரும் ஆதரவு கொடுப்பார்கள். மாறாக, `இந்த விவாகரத்தால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்று கொண்டாடினால், `என்ன... ஓர் ஆணை வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஆனந்தமாக இருக்கிறாயா?’ என்று ஆணாதிக்க சமுதாயம் அவர் மீது கோபம்கொள்ளும். ஃபோட்டோஷூட்க்கு பொங்குபவர்கள் அப்படியானவர்களே.

Dhaya

திருமண வாழ்க்கையில் துன்புறுகிறவர்களுக்கு விவாகரத்து என்பது விடுதலை. இனி இந்த வாழ்க்கையை வாழவே முடியாது என்ற புள்ளியில் பிரிபவர்களுக்கு குடும்பமும், சமூகமும் ஆதரவு தர வேண்டும். ஆனால், மன்னிக்கக் கூடிய, சகிக்கக்கூடிய, பொறுக்கக்கூடிய காரணங்களுக்கும் இன்று சிலர் விவாகரத்தை நோக்கி நகரும்போது, இது போன்ற விவாகரத்துக் கொண்டாட்டங்கள் அவர்களையும் பிரிவின் திசை நோக்கி உந்தும். அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

Jaya Sheela

விவாகரத்தை கொண்டாடுவது ஒருத்தரோட தனிப்பட்ட விருப்பம். ஷாலினி தன் கணவரால அனுபவிச்ச கொடுமை களை பகிர்ந்திருக்கிற வீடியோவை பார்த்தவங்களுக்கு, அவங்க இந்த விவாகரத்தை ஏன் கொண்டாடுறாங்கனு புரிஞ்சுக்க முடியலாம். `பெண்கள் இப்படி செய்யலாமா? எல்லா பொண்ணுங்களும் இப்படி செய்ய ஆரம்பிச்சுட்டா என்ன பண்ணுறதுனு?’னு அதை பொதுமைப்படுத்தி ஏன் பார்க்கணும்?

Ravichandran

ரிலேஷன்ஷிப் பிரச்னைகள் அதிகமாகி வரும் காலகட்டம் இது. இந்நிலையில் இதுபோன்ற கலாசாரம் வருவதும், வளர்வதும், ஆண்களையும் பெண்களையும் எதிர் எதிர் துருவங்களாகவே நிறுத்தும். இது ஒரு தனிநபரின் செயல் பாடு, அவர் அனுபவித்த வலிகள் அவருக்குத்தான் தெரியும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. என்றாலும், பொது வெளியில் அதை பகிர்வதால் ஏற்படும் சமூகத் தாக்கத்தையும் பேசத்தான் வேண்டும்.

Ravikumar Krishnasamy

`கல்லானாலும் கணவன்’, ‘ஆண் துணையில்லாம வாழவே முடியாது’, ‘உனக்கு புருஷன் வேண்டாம்னாலும் புள்ளைக்கு அப்பா வேணும்’ என்றெல்லாம் குடும்ப வன்முறைகளையும் டாக்ஸிக் உறவுகளையும் சகித்துக்கொள்ளச் சொல்லி காலம் காலமாகப் பெண்களை அழுத்தி வந்தார்கள். ஒரு நீடித்த அழுத்தம் விடுபடும்போது அது இயல்புக்கு மீறிய அதி அதிர்வுடன்தான் இருக்கும். இந்த ஃபோட்டோஷூட் அப்படியானது என்பதால், பலர் மனங்களையும் கலவரப் படுத்துகிறது.

Santhanalakshmi S

எத்தனையோ வரதட்சணை கொலைகள், குடும்ப வன் முறைக் கொலைகளை செய்தியாகக் கடந்தவர்கள், இந்த ஃபோட்டோஷூட்டுக்கு மட்டும் கருத்தாளர்கள் ஆகியிருக் கிறார்கள். பெண்கள் பாதிக்கப்பட்டபோது எல்லாம் எழாத குரல்கள், ஒரு பெண் விவாகரத்துக்குப் பின் சந்தோஷமாக இருக்கிறாள் என்றதும் கூக்குரலாக ஒன்று சேர்கிறது. உங்கள் சமூக அக்கறை புல்லரிக்க வைக்கிறது.

Kandhasamy Nalini

இதையே ஓர் ஆண் செய்திருந்தால், ’கொண்டாட்டம் என்ற பெயரில் மனைவி புகைப்படத்தை கிழிப்பதும் மிதிப்பதும் தவறு’ என்று நிச்சயமாகக் கண்டித்திருப்போம் எனும்போது, பெண்ணுக்கும் அதையேதான் சொல்ல வேண்டும். இந்தக் கொண்டாட்ட முறை தவறு. கொண்டாட்டத்தின் நோக்கம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். கோபத்தின் வடிகாலாக இருக்கக் கூடாது.

Joseph James Amalan

`என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா’ ரக நகைச்சுவை களை பார்த்து சிரித்தே பழக்கப்பட்டவர்களை, இந்த ஃபோட்டோஷூட் கோபம்கொள்ளத்தான் வைக்கும். ‘இதனால நம்ம வீட்டுப் பொண்ணுங்களும் துணிஞ்சிடுவாங் களோ’ என்ற பயம் கொடுக்கத்தான் செய்யும்.

Valli Subbiah

ஆண், பெண் யாராக இருந்தாலும் ஒரு மனக்கசப்பான, துயர் அழுத்திய உறவில் இருந்து பிரிந்து வரும்போது அடையும் விடுதலை உணர்வும், நிம்மதியும் பெரிது. ஆனால், அதை வெளிப்படுத்தும் முறையும் முக்கியம். குறிப்பாக, இந்த நடிகைக்கு ஒரு குழந்தை இருக்கிறார். தம்பதி பிரியும்போது அது சுமுகமாக இருப்பது

குழந்தைகள் நலனுக்கு அவசியமானது.

Prabha Karan

இணைந்து வாழ முடியாதபட்சத்தில் பிரிந்து செல்வதுதான் சரி. ஆனால், கொண்டாட்டம் தவறான முன் உதாரணமாகி விடும். அது, மற்றவர்கள் பிரிவை நோக்கிச் செல்லும் வேகத்தையும் அதிகரிக்கும். பெண்களுக்குக் குடும்ப அமைப்பில் உள்ள பிரச்னைகள் சரிசெய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. அதேபோல, ஆண்கள், பெண்களுக்கு குடும்ப அமைப்பே குறைந்தபட்ச அணுக்க மானது, பாதுகாப்பானது என்ற உண்மையும் மறுப்பதற் கில்லை.