Published:Updated:

`பெண் விடுதலையை மட்டுமே யோசித்தேன்!'- நூற்றாண்டுக் கால வழக்கத்தை மாற்றிய மணமகள்

ஆண்களால் செய்ய முடிந்த அத்தனை விஷயங்களையும் பெண்களாலும் செய்ய முடியும் என்று நிரூபித்திருக்கிறோம்

bangladesh couple
bangladesh couple ( abcnews.go.com )

வங்கதேசத்தைச் சேர்ந்த காதிசா அக்தர் குஷி என்கிற இளம்பெண்ணின் விருப்பத்தை, அவரின் குடும்பத்தினரும், வருங்காலக் கணவரின் குடும்பத்தினரும், அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்து நிறைவேற்றி வைத்திருக்கிறார்கள். அப்படியென்ன விருப்பம் என்கிறீர்களா?

Khadiza Akter Khushi
Khadiza Akter Khushi
abcnews.go.com

பல நூற்றாண்டுகளாகவே வங்கதேசத்தில், திருமணத்தன்று மணமகன்தான் மணமகள் வீட்டுக்குச் சென்று, அவரை மணமுடித்து தன் வீட்டுக்கு அழைத்துச் செல்வார். காதிசாவோ இதை மாற்றி, மணமகனின் வீட்டுக்குத்தான் சென்று அவரை மணமுடிக்க விரும்பினார். அவருடைய விருப்பத்துக்கு இரு வீட்டார் குடும்பத்தினரும் சம்மதிக்க, திருமணமும் நல்லபடியாக முடிந்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் கடந்த ஒரு வாரமாக சமூகவலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கின்றன.

மணமகள் காதிசா பெங்காலி பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில், ``இத்தனை வருடங்களாக இருந்த பழக்கத்தைப் பற்றி நான் யோசிக்கவில்லை. பெண் விடுதலையை மட்டுமே யோசித்தேன். அதற்கு என் குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டார்கள். இந்த வழக்கத்தை ஆரம்பித்த முதல் பெண்ணாக வேண்டுமானால் நான் இருக்கலாம். ஆனால், சக வங்கதேச பெண்களால் இது தொடரும் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்கிறார் அழுத்தமாக.

``நாங்கள் தவறாக எதையும் செய்துவிடவில்லை. எங்கள் திருமணத்தின் மூலம், ஆண்களால் செய்ய முடிந்த அத்தனை விஷயங்களையும் பெண்களாலும் செய்ய முடியும் என்று நிரூபித்திருக்கிறோம்''
மணமகன் தாரிகுல் இஸ்லாம்

இந்த `பிரேக் த ரூல்ஸ்' இஸ்லாமியத் திருமணம், பல தரப்பினரிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்த, புதுமணத் தம்பதிக்குக் கண்டனங்களும் தொடர்ந்தபடி உள்ளன. இந்நிலையில் மணமகன் தாரிகுல் இஸ்லாம், ``நாங்கள் தவறாக எதையும் செய்துவிடவில்லை. எங்கள் திருமணத்தின் மூலம், ஆண்களால் செய்ய முடிந்த அத்தனை விஷயங்களையும் பெண்களாலும் செய்ய முடியும் என்று நிரூபித்திருக்கிறோம்'' என்கிறார்.

'காதிசாவைப் போலவே தாங்களும் திருமணம் செய்துகொள்ள வேண்டும்' என்று பெண்களும், 'காதிசாவைப் போன்ற தைரியமான பெண்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறோம்' என ஆண்களும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள் என்பது, இந்தத் திருமணத்தின் வெற்றி!