Published:Updated:

``அற்புதமான 27 வருடங்கள்.. நன்றி பேபி!''- மனைவிக்குத் திருமண தின வாழ்த்து சொன்ன ஒபாமா

''நம்மை இணைத்த அந்த மேஜிக்கை இப்போதும் உணர்கிறேன்!''

பராக் ஒபாமா, மிச்சேல் ஒபாமா
பராக் ஒபாமா, மிச்சேல் ஒபாமா ( twitter.com )

அரசியல் செலிப்ரிட்டி தம்பதிகளில், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் அவருடைய காதல் மனைவி மிச்செலும் உலகளவில் வெரி வெரி லவ்வபிள். மனைவிக்கு குடைபிடிக்கும் ஒபாமா, கணவரை அரவணைக்கும் மிச்சேல் எனத் தங்களின் அந்நியோன்யத்தை பொதுவெளிகளிலும் அழகாக வெளிப்படுத்துபவர்கள் இவர்கள். இதனாலேயே இந்தத் தம்பதிக்கு அரசியல் தாண்டி, உலகளவில் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இரு தினங்களுக்கு முன் தங்களுடைய 27-வது திருமண நாளைக் கொண்டாடினார்கள் மிச்சேல் - ஒபாமா தம்பதி. அதற்காக ஒருவருக்கொருவர் ட்விட்டர், இன்ஸ்டா என மாறி மாறி வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்ள, 'புதுமணத் தம்பதிகளைப்போல அவ்வளவு க்யூட்' என லட்சக்கணக்கான நெட்டிசன்கள் கொண்டாடி வருகிறார்கள்.

அந்தி சாயும் மாலை வேளையில் ஒருவரையொருவர் அணைத்தபடி செவ்வானத்தையும் அதன் பின்னணியில் சூரியன் அஸ்தமிப்பதையும் ரசிக்கும் தங்களுடைய புகைப்படத்தைப் பதிவிட்டு, ''உன்னுடனான என் உறவு எப்போதுமே சிறப்பாக இருந்து வருகிறது. இந்த 27 வருடங்களையும் அற்புதமாக்கிய உனக்கு நன்றி பேபி'' என்று மிச்சேலுக்கு ஒபாமா ட்விட்டரில் திருமண வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், மிச்சேல் தன்னுடைய ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாவில், ''நம் வாழ்க்கை முழுக்க சாகசங்கள் நிரம்பியிருக்கும் என்று ஒபாமா சொல்லி 27 வருடங்கள் ஓடிவிட்டன. அவற்றையெல்லாம் ஒபாமா செய்துவிட்டார் என்றுதான் சொல்வேன். இதோ, எங்கள் வாழ்க்கையின் அடுத்தகட்டத்துக்கு வந்துவிட்டோம். எங்களுடைய கூடு காலியாக இருக்கிறது. அடுத்து என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும். எங்களைத் திருமணத்தில் ஒன்றிணைத்த அந்த மேஜிக் பவரை நான் இப்போதும் உணர்கிறேன். திருமண நாள் வாழ்த்துகள் பராக்!'' என்றிருக்கிறார்.

1989-ம் வருடம் பராக் ஒபாமாவும் மிச்சேலும் முதல் தடவையாகச் சந்தித்தார்கள். மூன்று வருட டேட்டிங், பிறகு திருமணம் என்று 1992-ம் வருடம் இணைந்தார்கள். அந்த வகையில் 30 வருட உறுதிகொண்டது பராக் - மிச்சேல் காதல். தற்போது இவர்களுடைய மகள்கள் மலியாவும் சாஷாவும் கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பதால்தான் 'கூடு காலியாக இருக்கிறது' என்று பதிவிட்டிருக்கிறார் மிச்சேல்.

வாழ்த்துகள் மிஸ்டர் அண்டு மிஸஸ் ஒபாமா!