மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அவரவர் கனவுகளை அவரவரே காணட்டும் - பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்... இனி இல்லை இடைவெளி! - 10

அவரவர் கனவுகளை அவரவரே காணட்டும்
பிரீமியம் ஸ்டோரி
News
அவரவர் கனவுகளை அவரவரே காணட்டும்

ஓவியம்: மோனா.கொ

கானுயிர் புகைப்படக் கலையில் ஆர்வமுள்ள மகனை, இன்ஜினீயரிங் படிக்கச் சொல்லி விரட்டும் அப்பா... ஒருகட்டத்தில் அப்பாவின் ஆசைக்காக தன் கனவைத் துறக்கத் தயாராகும் மகன்... இறுதியில் மகனின் விருப்பத்தை மட்டுமல்ல திறமையையும் புரிந்துகொண்ட அப்பா, மனமிரங்கி மகனுக்குப் பச்சைக்கொடி காட்டும் ‘நண்பன்’ படக் காட்சி ஞாபகமிருக்கிறதா... இங்கே நம்மூரில் பெரும்பாலான அப்பாக்கள், ‘நண்பன்’ பட ஸ்ரீகாந்த்தின் அப்பா போலத்தான் இருக்கிறார்கள்.

அவரவர் கனவுகளை அவரவரே காணட்டும் - பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்... இனி இல்லை இடைவெளி! - 10

டாக்டர் ஷர்மிளா

``பிள்ளைகளின் கனவுகள் நனவாக வழிகாட்டுவதுதான் நல்ல பெற்றோருக்கு அழகு. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இங்கே பல பெற்றோரும், நிறைவேறாத தங்கள் கனவுகளை பிள்ளைகளின் மூலம் நன வாக்கவே நினைக்கிறார்கள். சாதனை யாளர்கள் பலரின் சரித்திரத்திலும் இப்படி யொரு வலி இருந்ததைக் கேள்விப்படுகிறோம். ‘நான் பாடகராகணும்னு ஆசைப்பட்டேன்... நடக்கலை. அதான் என் பிள்ளைக்கு பாட்டு கத்துக்கொடுக்கறேன்...’, ‘நான் கிரிக்கெட்டர் ஆகணும்னு ஆசைப்பட்டேன்... என்னால முடியாததை என் மகனைவெச்சு சாதிக்க நினைக்கிறேன்...’ என்று யோசிக்கிற பெற்றோர் களைப் பல வீடுகளிலும் பார்க்கலாம்.

இந்திய பெற்றோர்களைப் பொறுத்தவரை இத்தகைய மனப்பான்மை சகஜமானது. அரிதாகச் சில குடும்பங்களில் பெற்றோர்களின் கனவை, விருப்பங்களை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு அவற்றை நனவாக்க சந்தோஷமாகத் தயாராகும் பிள்ளைகள் இருக் கிறார்கள். பல குடும்பங்களில் அப்படியிருப்ப தில்லை. பெற்றோர் தரும் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தவிக்கும் பிள்ளைகளே அதிகம்.

என் சொந்த அனுபவத்தையே சொல் கிறேன். என் அப்பா ஆசைப்பட்ட பல விஷ யங்களை என்னால் செய்ய முடியவில்லை. ஒரு கட்டத்தில் ‘நான் எதுக்குமே லாயக் கில்லையோ...’ என்ற குற்ற உணர்வு எனக்கு வந்திருக்கிறது. அதன்பிறகு நான் சாதாரண மாகச் செய்கிற விஷயங்களைக்கூட என்னால் சரியாகச் செய்யமுடியாமல் தவித்திருக்கிறேன். அந்த அழுத்தத்தை நான் என் மகளுக்குக் கொடுக்கக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தேன்.

‘அம்மா, அப்பாவா எங்கக் குழந்தைக்கு ஓர் இலக்கை நிர்ணயிக்கிறதும், அதை நோக்கி அவங்களை நகர்த்திக் கூட்டிட்டுப் போறதும் லட்சியத்தை அடையவைக்கிறதும் தப்பா’ என பெற்றோர்கள் குரல் எழுப்பலாம். உங்கள் ஆசையில் தவறில்லை. அதே நேரம் உங்களுடைய கனவைச் சுமக்கும் அளவுக்கு அவர்களுக்கு சக்தி இல்லாதபட்சத்தில், அதில் ஈடுபாடு இல்லாத பட்சத்தில் அதை அவர்களின் மேல் திணித்து, விரட்டுவதுதான் தவறு. டீன்ஏஜ் பிள்ளைகளுக்கு ஏற்படும் மன அழுத்தம் இன்று அதிகரித்து வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கனவுகள் சிதைந்து விரக்தியின் உச்சத்தில், வாழ்க்கையை வெறுக்கத் துணிகிற, தற்கொலை வரை யோசிக்கிறவர்களைப் பார்க்கிறோம்.

பெற்றோர்களின் கனவுகளை பிள்ளைகள் நனவாக்கக்கூடாதா என்றால், நனவாக்கலாம். அந்தக் கனவு நியாயமானதாக, உங்கள் பிள்ளைகளால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்பட்சத்தில். அதைப் புரியவைத்து உங்களால் பிள்ளைகளை கன்வின்ஸ் செய்து சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள முடியும் பட்சத்தில்... முடியாதபட்சத்தில் அவர்கள் கனவுகளை அவர்களே காணட்டும்.''

ஷர்மிளா - ஆஷ்லி
ஷர்மிளா - ஆஷ்லி

ஆஷ்லி

‘`அம்மா மட்டுமல்ல, என் மொத்தக் குடும்பமும் இப்படிப்பட்ட அழுத்தத்தை என்மேல் வைத்திருக்கிறது. என் குடும்பத்தில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை என பலரும் மருத்துவர்கள். ‘ஆஷ்லிமா... நல்லா படிச்சு நீயும் டாக்டரா யிடணும்...’ என்ற இந்த வார்த்தைகளைத்தான் நான் அதிகம் கேட்டு வளர்ந்திருக்கிறேன். ஆனால், வகுப்பில் சயின்ஸ் பாடத்தில் எனக்கு ஆர்வமே வரவில்லை. மாறாக தூக்கம் தான் வந்தது. வீட்டிலுள்ளவர்களின் தொடர் வலியுறுத்தலால் எனக்கு சயின்ஸ் பாடத்தில் வெறுப்பு அதிகமானது. ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தபோது விருப்பப் பாடத்தைத் தேர்வு செய்யும் ஆப்ஷன் எனக்கு இருந்தது. சயின்ஸ், காமர்ஸ் என என் முன்னே இரண்டு சாய்ஸ். ரொம்பவே பயத்துடன், வீட்டுக்கு வந்து, அம்மாவிடம், ‘எனக்கு டாக்டராக வேண்டாம். நான் காமர்ஸ் படிக்கப் போறேன்’ என்று சொன் னேன். அதுவரை தன் மகளை மருத்துவராக்கிப் பார்க்கும் கனவில் இருந்த அம்மாவுக்கு அந்தக் கனவு தகர்ந்ததில் பேரதிர்ச்சி. ஆனாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் என் விருப்பத்தைப் புரிந்து கொண்டு எனக்கு சப்போர்ட் செய்தார். ஒருவேளை அன்று அம்மா என் விருப்பத்தை ஏற்க மறுத்திருந்தால் நானும் மருத்துவம் படித்திருப்பேன். ஆனால் அதைச் சந்தோஷ மாகப் படித்திருப்பேனா, வெற்றிகரமான மருத்துவராக இருந்திருப்பேனா என்பது சந்தேகமே.

சாய்ஸில் சரி, தவறு என எதுவும் இல்லை. சாய்ஸ் எதுவானாலும் அதைச் சரியாகச் செய்வதுதான் முக்கியம் என்பது என் அம்மாவின் அட்வைஸ். எனவே உங்கள் குழந்தையின் சாய்ஸ் எதுவானாலும் அதை அவர்கள் சரியாகவும் சிறப்பாகவும் செய்ய துணை நில்லுங்கள். ஒவ்வொரு குழந்தைக் குள்ளும் ஒரு தலைவர் இருப்பார். அந்தத் தலைவரை வெளியே கொண்டுவருவதில் சப்போர்ட் செய்யுங்கள். உங்களைப் போலவே அவர்களுக்கும் கனவுகள் இருக்கும்... அவர்களுக்காவது அந்தக் கனவுகள் நனவாகட்டுமே.’’

- ஹேப்பி பேரன்ட்டீனிங்...

******

பெற்றோருக்கு...

உங்கள் பிள்ளைகள் தன்னிச்சையாக இயங்கும் சுதந்திரத்தைக் கொடுங்கள். படிப்பு, விளையாட்டு என அவர்கள் ஈடுபடும் விஷயங்களைக் கண்காணிக்கலாமே தவிர, கட்டுப்படுத்திக்கொண்டே இருக்காதீர்கள்.

உங்கள் பிள்ளையின் வளர்ச்சியில், வெற்றியில் சப்போர்ட் செய்யுங்கள். எப்போதும் எல்லா விஷயங் களிலும் வெற்றி என்பதை நோக்கி உங்கள் பிள்ளை களை விரட்டாதீர்கள். தோல்விகளிலிருந்து பாடம் கற்கப் பழக்குங்கள்.

எல்லா நேரத்திலும் பிள்ளைகளின் பக்கத்திலேயே இருக்கத் தேவையில்லை. விலகி இருந்தும் அவர்களின் அணுகுமுறையை கவனிக்கலாம். படிப்பு, விளையாட்டு, முடிவெடுப்பது என பிள்ளைகள் செய்யும் விஷயங்களில் அவர்களின் பொறுப்பை உணரச் செய்யுங்கள்.