மற்ற எபிசோடுகள்
Published:Updated:

‘நோ’மீன்ஸ் நோ! - பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்... இனி இல்லை இடைவெளி! - 5

‘நோ’மீன்ஸ் நோ
பிரீமியம் ஸ்டோரி
News
‘நோ’மீன்ஸ் நோ

பெற்றோர்களின் இடத்தில் இருந்து யோசித்தால் இந்த பதில்கள் எல்லாமே நியாயமானவையாகத் தெரியலாம்

‘நோ’ என்பது வெறும் வார்த்தையல்ல, முழுமை யான வாக்கியம். அதற்கு விளக்கமோ, நியாயமோ தேவையில்லை. ஆனா லும் இந்த ஒற்றை வார்த் தையைச் சொல்வதில், உபயோகிப்பதில்தான் பலருக்கும் பயமும் தயக்கமும்.

முடியாது என்று சொல்லிவிட்டால் அடுத்த வர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்களோ என்ற எண்ணத்தில் நிஜமாகவே முடியாத விஷயங்களுக்குக்கூட ‘நோ’ சொல்லாமல் ‘யெஸ்’ சொல்லி மாட்டிக்கொள்வது பலரது வழக்கம்.

குழந்தை வளர்ப்பில் இந்த வார்த்தைக்குப் பெரும்பங்கு உண்டு. ஆனாலும் பெரும் பாலான பெற்றோரும் குழந்தைகளின் மீதான பாசம், அன்பு காரணமாக எதற்கும் ‘நோ’ சொல்வதில்லை. குழந்தைகள் கேட்கும் எல்லாவற்றுக்கும் எப்போதும் பெற்றோர் களால் `ஓகே' சொல்லிக்கொண்டிருக்க முடியாது. பல விஷயங்களுக்கு `நோ' சொல்லித் தான் ஆக வேண்டியிருக்கும். அது அவர்களது நலனுக்கானது என்பதையும் அவர்கள் உணர வேண்டும்.

டாக்டர் ஷர்மிளா - ஆஷ்லி
டாக்டர் ஷர்மிளா - ஆஷ்லி

டாக்டர் ஷர்மிளா

‘உங்க குழந்தைங்க உங்ககிட்ட ஏதாவது கேட்கும்போது அது சரியில்லைனு தெரிஞ் சாலும் ஏன் ‘நோ’ சொல்லத் தயங்கறீங்க?’ என்று பெற்றோர்கள் சிலரிடம் கேட்கப்பட்டது. ‘ஏன்னா நான் ஓர் அம்மா... குழந்தைங்க கேட்கும்போது அம்மா எப்படி மறுக்க முடியும்?’ என்பதில் தொடங்கி, ‘ரெண்டு பேரும் வேலைக்குப் போறோம். பிள்ளைங்க கூட செலவு பண்ண எங்களுக்கு டைம் இல்லை. அதை ஈடுகட்ட அவங்க கேட்கறதைச் செய்யறதைத் தவிர வேற வழி தெரியலை’, ‘ஒரே மகள் / மகன்... அவளு(னு)க்குச் செய்யாம வேற யாருக்குப் பண்ணப் போறோம்...’ என்பதுவரை விதம்விதமான பதில்கள் வந்தன. ‘முடியாது’, ‘நோ’ன்னு சொல்லி, அப்புறம் பிள்ளைங்களுக்கு எங் களைப் பிடிக்காமப் போயிட்டா.... அதனால தான்’ என்று சொன்னவர்களும் இருந்தார்கள்.

பெற்றோர்களின் இடத்தில் இருந்து யோசித்தால் இந்த பதில்கள் எல்லாமே நியாயமானவையாகத் தெரியலாம். ஆனால், அதையும் மீறி சில விஷயங்களில் சில இடங்களில் பிள்ளைகள் கேட்கும் விஷயங் களுக்கு ‘நோ’ சொல்லித்தான் ஆக வேண்டும். ‘நோ’ சொல்ல யோசிக்கும் பெற்றோருக்கு இந்த டிப்ஸ் உதவலாம்.

1. அடிக்கடி சொல்லாதீர்கள்

‘நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு... என்கிட்ட யேவா...’ என்ற எண்ணத்தில் பிள்ளைகள் எது கேட்டாலும் ‘நோ’ சொல்லிக்கொண்டிருந் தீர்கள் என்றால் அவர்களுக்கு உங்கள் மீதான கோபம் அதிகரிக்கும். பிள்ளைகள் என்ன கேட்கிறார்கள் என்பதைக் கேட்டுக்கொண்டு, அது குறித்து யோசித்துவிட்டு பிறகு ஓகே சொல்வதா, ‘நோ’ சொல்வதா என முடி வெடுங்கள். எதற்கெடுத்தாலும் ‘நோ’ சொல் வதன் மூலம் பெற்றோர் தன் சந்தோஷத்துக்குக் குறுக்கே நிற்கிறார்கள் என்ற வெறுப்புணர்வை அவர்கள் மனதில் விதைக்கிறீர்கள் என்பதை யும் கவனத்தில் கொள்ளுங்கள்.

2. ஏன் ‘நோ’ சொல்கிறீர்கள்?

தான் ஆசைப்பட்டு, எதிர்பார்ப்புடன் கேட்கும் ஒரு விஷயத்துக்கு பெற்றோர் ‘நோ’ சொல்லும்போது அதை பிள்ளைகளால் தாங்க முடியாதுதான். ஆனால், நீங்கள் ஏன் அப்படிச் சொன்னீர்கள் என்பதற்கான நியாயமான காரணத்தை அவர்களுக்குப் புரியவைத்துவிட்டால் ஏற்றுக்கொள்வார்கள். உங்களையும் புரிந்துகொள்வார்கள். பிள்ளை களிடம் நேர்மையாக இருங்கள். அவர்கள் உங்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களோ, அதேபோல் அவர்களிடமும் நீங்கள் நடந்துகொள்ளுங்கள்.

3. மாற்றி மாற்றிப் பேசாதீர்கள்!

உங்கள் பிள்ளைகள் கேட்கும் விஷயத்துக்கு இன்று `ஓகே' சொல்வது, நாளை `நோ' சொல்வது என மாற்றி மாற்றிப் பேசினால், அவர்கள் உங்கள் பேச்சைக் கேட்பதையே நிறுத்திவிடுவார்கள். உங்களுக்கும் உங்கள் வார்த்தைகளுக்கும் வீட்டில் மதிப்பிருக்க வேண்டும் என நினைத்தால் எதையும் யோசித்துப் பேசுங்கள். பேசிய பிறகு யோசிக் காதீர்கள். உங்கள் வீட்டுக்கென சில விதி முறைகள் இருப்பதை பிள்ளைகளுக்குச் சொல்லிப் புரியவையுங்கள். அவர்கள் அந்த விதிகளைப் பின்பற்ற வேண்டுமானால் நீங்கள் எந்த விஷயத்தையும் மாற்றி மாற்றிப் பேசாமலிருக்க வேண்டியது முக்கியம்.

4. ‘நோ’ சொல்வதில் உறுதியாக இருக்கிறீர்களா?

எந்த இடத்தில் எந்த விஷயத்துக்கு ‘நோ’ சொல்ல வேண்டும் என்ற தெளிவு உங்களுக்கு இருக்க வேண்டும். உங்கள் டீன்ஏஜ் மகனோ, மகளோ புதுமையான ஒரு ஐடியாவை உங்களிடம் பகிரலாம். அது உங்கள் குடும்பத் துக்குப் பொருந்தாததாக இருந்தாலும் உங்களுக்குப் பிடித்திருந்தால் ‘யெஸ்’ சொல்லிப் பாராட்டலாம். உங்கள் பிள்ளையுடன் வாக்குவாதம் செய்யலாம். ஆனால், அது வினையாகாமல் விளையாட்டாக நடக்க வேண்டும். ஒரு விஷயம் தேவையா, இல்லையா என்பதில் உங்களுடைய பார்வை, உங்கள் பிள்ளைகளுக்குப் புரியும்படி இருக்க வேண்டும்.

ஆஷ்லி

நான் மட்டுமல்ல, டீன்ஏஜில் இருக்கும் பெரும்பாலானவர்களுக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை அவர்களின் பெற்றோர் சொல்லும் ‘நோ’ ஆகத்தான் இருக்கும். குறிப்பிட்ட வயது வரை எல்லா விஷயங்களுக்கும் அம்மா, அப்பாவிடம் அனுமதி கேட்டுக்கொண்டிருக் கும் நாங்கள், ஒருகட்டத்தில் அவர்கள் பதிலை எதிர்பார்க்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிடுவோம். என்ன சொன் னாலும் அவர்களது பதில் ‘நோ’ என்றுதான் வரப்போகிறது, பிறகு எதற்கு அனுமதி யெல்லாம் கேட்டுக்கொண்டு என்று எங்கள் மனதில் பதிந்துவிடும். இதிலிருந்து தப்பிக்க, நாங்கள் விரும்பும் விஷயங்களை பெற் றோருக்குத் தெரியாமல் எப்படிச் செய்வது என யோசிக்க ஆரம்பிப்போம். இதை நான் இங்கே பகிர ஒரு காரணம் இருக்கிறது.

பெற்றோர் சொல்லும் ‘நோ’க்கு பயந்து அவர்களுக்குத் தெரியாமல் பிள்ளைகள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ரிஸ்க்கானது. அப்படி அம்மாவுக்குத் தெரியாமல் பல விஷயங்களைச் செய்து வம்பில் மாட்டிக்கொண்ட அனுபவங்கள் பல உண்டு எனக்கு.

உதாரணத்துக்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். என் தோழி ஒருத்தி நெயில் ஆர்ட் செய்துகொண்டாள். அதைப் பார்த்ததும் எனக்கும் செயற்கை அக்ரிலிக் நகம் வைத்துக்கொள்ள ஆசை வந்தது. அம்மாவிடம் கேட்டபோது ‘நோ’ சொல்லிவிட்டார். ஆனாலும் நான் தாத்தா - பாட்டியிடம் கெஞ்சி, அம்மாவுக்குத் தெரியாமல் நெயில் ஆர்ட் செய்து கொண்டேன். அது தெரிந்ததும் அம்மாவுக்கு பயங்கர கோபம். அம்மா என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்... எனக்கு அது அழகாக இருக்கிறதே என அந்த நாள் முழுவதும் சந்தோஷமாக இருந்தேன். அடுத்தநாள் என்னால் சாப்பிட முடியவில்லை, கம்ப்யூட்டரில் வேலை செய்ய முடியவில்லை. என்னுடைய எந்த வேலையையும் செய்ய முடியாத அளவுக்கு அந்த நெயில் ஆர்ட் தொந்தரவாக இருந்தது.

‘நோ’மீன்ஸ் நோ! - பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்... இனி இல்லை இடைவெளி! - 5

‘காரணம் இல்லாம நான் எதுக்கும் ‘நோ’ சொல்ல மாட்டேன். இந்த மாதிரி அவஸ்தை யெல்லாம் இருக் கும்னுதான் நான் வேண்டாம்னு சொன்னேன். அழகுக்காக நீ செய்ய நினைக்கிற ஒரு விஷயம் உனக்கு அசௌகர்யமா இருக்கக் கூடாது. தவிர, இது மாதிரியான நீள மான நகங்கள் வெச் சுக்கிறது, வளர்க் கிறதெல்லாம் ஆரோக்கியத்துக் கும் நல்லதில்லை’ என்று அம்மா புரியவைத்தார். இதுபோல இன்னும் நிறைய சம்பவங்களைச் சொல்லலாம். ‘எனக்குத் தெரியாம ஏன் இப்படிப் பண்றே’ என அம்மாவும், ‘சொன்னா நீங்க ‘நோ’ சொல்வீங்களே... வேற வழி’ என நானும் பலமுறை விவாதித்திருக்கிறோம். பலமுறை இப்படி வாக்குவாதம் செய்து இருவரும் ஒரு முடிவுக்கு வந்தோம்.

நான் ஒரு விஷயத்தைச் சொல்லும்போது அதில் உடன்பாடில்லை என்றால் அம்மா அது ஏன் வேண்டாம் என்பதை எனக்கு முழுமையாக விளக்குவார். அவர் `நோ' என்று சொன்னால் ‘நோ’ தான். எனக்கு வேறு ஆப்ஷன்கள் இருந்ததில்லை. ஆனால், நான் என்ன சொன்னாலும் அதற்கு ‘நோ’தான் சொல்ல வேண்டும் என்று நினைக்க மாட்டார். நான் சொல்லும் அல்லது விரும்பும் விஷயம் எனக்குப் பாதுகாப்பானதுதான் என்ற நம்பிக்கை வந்தால் அனுமதிப்பார். அம்மாவைப் புரிந்துகொண்டதால் அவர் சொல்லும் `நோ' இப்போதெல்லாம் என்னை ஏமாற்றுவதில்லை.

- ஹேப்பி பேரன்ட்டீனிங்....

டீன் டேட்டா

கொடுக்கவேண்டிய இடத்தில் சுதந்திரம் கொடுத்து, இழுத்துப்பிடிக்க வேண்டிய இடத்தில் கண்டித்து வளர்க்கப்படும் குழந்தைகள் நல்ல மனநலத்துடன் வளர் கிறார்கள். ஒரேயடியாக கண்டிப்புடன் அல்லது அதீத செல்லம் கொடுத்து வளர்க்கப் படுபவர்களின் மனநிலையில் தடுமாற்றங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள் மனநல நிபுணர்கள்.

உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி 10 முதல் 20 சதவிகிதக் குழந்தைகள் அவர்களது பதின்பருவத்தில் மனநலம் பாதிக்கப்படுவதை உணர்கிறார்களாம். அவர்களில் பெரும்பான்மை யானோர் அது பற்றி வெளியே சொல்வதுமில்லை, உதவி கேட்பதுமில்லை.

பெரும்பாலான மனநல பிரச்னைகள் பிள்ளைகளின் 14-வது வயதில் ஆரம்பமாவதாகச் சொல்கின்றன புள்ளிவிவரங்கள். 15 முதல் 19 வயது பிள்ளைகளிடம் நிகழும் மரணங்களுக்கு மூன்றாவது முக்கிய காரணம் தற்கொலை. இந்தியாவில் 13 முதல் 17 வயதுக்குள்ளான 9.8 மில்லியன் பிள்ளைகளுக்கு அவர்களின் நடவடிக்கைகளில் தீவிரமான தலையீடு தேவையிருப்பதாக நேஷனல் மென்ட்டல் ஹெல்த் சர்வேயின் தரவுகள் சொல்கின்றன.