Published:Updated:

குழந்தை வளர்ப்பில் வேண்டாம் பொறுப்புத் துறப்பு!

டாக்டர் ஷர்மிளா - ஆஷ்லி
பிரீமியம் ஸ்டோரி
News
டாக்டர் ஷர்மிளா - ஆஷ்லி

- பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்... இனி இல்லை இடைவெளி! - 8

‘பிள்ளைகள் கெட்ட வார்த் தைகளைப் பேசுவதில்லை, கேட்ட வார்த்தைகளையே பேசுகிறார்கள்...’

‘பசங்க-2’ படத்தில் இப்படியொரு வசனம் வரும். குழந்தைகளின் பேச்சுக்கு மட்டுமல்ல, அவர்களின் நடத்தைக்கும் இது பொருந்தும். பிள்ளைகள் அடங்குவதில்லை, அடாவடியாக நடந்துகொள்கிறார்கள் என்றெல்லாம் புலம்பும் பல பெற்றோருக்கும் அதன் மூல காரணம் புரிவதில்லை. பிள்ளைகள் எதையும் தாமாகச் செய்வதில்லை. பிள்ளைகளின் நடத்தையில் பெற்றோரின் ஆளுமையும் மிக முக்கியப் பங்கு வகிப்பதை அவர்கள் உணர்வதில்லை. மொத்தத்தில் பிள்ளைகளின் ஆளுமைக்கு அஸ்திவாரம் போட்டுவிட்டு, பிறகு அவர்களின் நடத்தைக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல நடந்துகொள்வது சரியானதல்ல. பிள்ளை வளர்ப்பில் பொறுப்புத் துறப்பு வேண்டாம் பெற்றோர்களே...

குழந்தை வளர்ப்பில் வேண்டாம் பொறுப்புத் துறப்பு!

டாக்டர் ஷர்மிளா

‘`பேரன்ட்டிங் செமினார் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தேன். ஒரு பெண் ஆரம்பம் முதல் அமைதியின்றி, பதற்றத்துடனேயே உட்கார்ந் திருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் அதே பதற்றத் துடன் என்னிடம் வந்தார். தன் இரண்டு பிள்ளைகளுமே சொல்பேச்சைக் கேட்பதில்லை என்று அழாத குறையாகச் சொன்னார்.

‘குழந்தைங்களா இருந்தவரைக்கும் நான் என்ன சொன்னாலும் கேட்டுச்சுங்க. டீன் ஏஜுக்கு வந்ததும் என்னை மதிக்கிறதே இல்லை’ என்றார்.

‘அப்படி என்னதாம்மா பண்றாங்க... ’ என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் உங்களையும் நிச்சயம் அதிர வைக்கலாம்.

‘எப்பப் பார்த்தாலும் போனும் கையுமா இருக்காங்க. எந்நேரமும் வீடியோ கேம்ஸ், பொழுதன்னிக்கும் ஃபிரெண்ட்ஸோட அரட்டை... அப்படி என்னதான் இருக்குமோ அந்த மொபைல்ல’ என்றார்.

‘வீட்ல உங்களுக்குன்னு தனி மொபைல் இருக்கா... அதை நீங்க யூஸ் பண்றதுண்டா’ என்றதும் ஒரு நொடி அதிர்ந்தவர், ‘ஆமாம்...என் வேலை விஷயமா நான் எப்போதும் போன்லதான் இருப்பேன்...’ என்றார். அன்று அவருக்குச் சொன்ன அதே கதையைத்தான் இன்று உங்களுடனும் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.

என் மகள் ஆஷ்லிக்கு மூன்று வயதிருக்கும்... அவளை என் மடியில் உட்காரவைத்துக் கொண்டு அவளின் நகங்களை வெட்டப் போனேன். ஒரு நிமிடம் என்னைப் பார்த்தவள், ‘அம்மா... நீங்க மட்டும் நீளமா நகம் வெச்சிருக் கீங்க. நீங்க வெட்டாம எனக்கு மட்டும் வெட்டிவிடறீங்களே’ என்றாள். அதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை நான். ஆனாலும் அந்த மூன்று வயதுக் குழந்தையின் கேள்வி எனக்கு ஒரு விஷயத்தைப் புரிய வைத்தது.

‘ஏதாவது புரியுதா...’ என்றேன் அந்தப் பெண்ணிடம்.

‘நல்லாவே புரியுதுங்க... என் வேலை விஷயமா நான் எப்போதும் போனும் கையுமா இருக்கேன். அப்படியிருக்குறப்ப பிள்ளைங்க போன் யூஸ் பண்ணக்கூடாதுன்னு கண்டிக் கிறது அவங்களுக்குப் பிடிக்கலை. நான் ஃபாலோ பண்ணாத விஷயத்தை, என் பிள்ளைங்க மட்டும் பண்ணணும்னு நினைச் சது தப்புதாங்க...’ என்றார்.

‘இந்தக் காலத்துல போன் உபயோகத்தை யாராலயும் தவிர்க்கவே முடியாது. நீங்க உங்க வேலை விஷயத்துக்காகத் தான் போன் யூஸ் பண்றீங்கன்னாலும் அதை உங்கப் பிள்ளைங்க கிட்ட சொல்லணும். அவங்ககூடவும் நேரம் செலவிடணும்...’ என்றதும் என்னைக் கட்டியணைத்து நன்றி சொன்னார்.

பெரும்பாலான பெற்றோர்களும், ‘நான் பண்ணா நீயும் பண்ணணுமா... என் வய சென்ன, உன் வயசென்ன... நானும், நீயும் ஒண்ணா....’ என்றெல்லாம் தடித்த வார்த்தை களைப் பேசி, சாதாரண விஷயத்தை சிக்கலான விஷயமாக மாற்றிவிடுகிறார்கள். எல்லாக் குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோரே முதல் ரோல் மாடல். எனவே உங்கள் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ, முதலில் நீங்கள் அவர் களுக்கு அப்படி இருந்து காட்டுங்கள். பிறந்தநாள் முதல் நீங்கள்தான் குழந்தைக்கு நடக்க, பேச, ஓட என எல்லாவற்றையும் கற்றுத் தருகிறீர்கள். அவர்கள் கற்றுக்கொள்கிற நல்லதுக்கு மட்டுமல்ல, கெட்டதுக்கும் ஏதோ ஒருவகையில் நீங்களே காரணமாகிறீர்கள்.

The apple never falls far from the tree என்று ஆங்கிலத்தில் பிரபல பொன்மொழி ஒன்று உண்டு. ‘தாயைப் போல பிள்ளை... நூலைப் போல சேலை’ என்போமே... அதன் அர்த்தமும் இதுதான். உங்கள் பிள்ளைகளிடம் மாற்றங் களை எதிர்பார்க்கும் விஷயங்களைப் பட்டிய லிடுங்கள். அதே விஷயங்களில் நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதை ஒப்பிடுங்கள். மாற வேண்டியது நீங்களா, உங்கள் பிள்ளை களா என்பது விளங்கும்.''

குழந்தை வளர்ப்பில் வேண்டாம் பொறுப்புத் துறப்பு!

ஆஷ்லி

‘`நான் குழந்தையாக இருந்தபோது அம்மா மாதிரியே டிரஸ் செய்வது, அம்மா மாதிரியே பேசுவது, நடப்பது என எல்லாவற்றிலும் அம்மாவை அப்படியே பின்பற்றியிருக்கிறேன். அம்மாவிடம் உள்ள நல்ல பழக்கங்களை அப்படியே பின்பற்றுவதில் தவறில்லை. ஆனால், ஒருகட்டத்தில் அம்மா எது செய்தாலும் அது நல்லதோ, கெட்டதோ அதை அப்படியே நானும் செய்ய ஆரம்பித் தேன். ‘எல்லா விஷயத்துலயும் என்னை மாதிரியே இருக்காதே... நானும் மனுஷிதான். தப்பு பண்றவதான். அதனால நான் பண்ற தப்பை நீயும் பண்ணாதே’ என்று அம்மாவே எனக்கு அட்வைஸும் செய்திருக்கிறார்.

சின்ன வயதில் அவர் சொல்வதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால் அம்மாவுக்கும் எனக்கும் பல முறை வாக்கு வாதங்கள் வந்திருக்கின்றன. இப்போது அம்மா செய்வதில் எது சரி, எது தவறு என பகுத்தறியும் பக்குவம் வந்திருக்கிறது. எல்லாவற்றிலும் அம்மாவைப் பின்பற்றத் தேவையில்லை என்ற தெளிவு எனக்கும், தான் செய்வதை தன் மகள் கவனிக்கிறாள், கூடியவரையில் சரியானதையே செய்ய வேண்டும் என்ற தெளிவு அம்மாவுக்கும் வந்திருக்கிறது.''

- ஹேப்பி பேரன்ட்டீனிங்...

அட்டென்ஷன் பேரன்ட்ஸ்!

* உங்கள் குழந்தைகள் எந்நேரமும் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே உங்கள் சொல், செயல் என எல்லாவற்றிலும் கவனமாக இருங்கள். அவர்கள் குழந்தைகளாக இருக்கும்போது உங்களைப் பார்த்துப் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் பின்பற்றவும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் அந்த வயதிலேயே அவர்களுக்கு பாசிட்டிவ் வான ரோல் மாடலாக இருக்கப் பழகுங்கள்.

* உங்கள் வீடுதான் உங்கள் குழந்தையின் முதல் பள்ளிக்கூடம். எனவே, அவர்கள் எதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் முதல் ஆசிரியர்களான உங்களுக்குத் தெளிவு இருக்கட்டும்.

* ஊடகங்களில் பிள்ளைகள் எதைப் பார்க் கிறார்கள் என்று கண்காணியுங்கள். டி.வி, யூடியூப் நிகழ்ச்சிகளை, வாய்ப்பு கிடைக்கும் போது அவர்களுடன் நீங்களும் சேர்ந்து பாருங்கள். உங்கள் கண்காணிப்பு அவர் களைச் சரியாக வழிநடத்தும்.