Published:Updated:

`காதல் தோல்வியை இரக்கத்துடன் பார்க்கும் சமூகம், காமத்தில் தோற்றால்..?' - காமத்துக்கு மரியாதை! - 1

தாம்பத்திய உறவில் காமம் சார்ந்து சந்திக்கிற சிக்கல்களுக்கு நிபுணர்களுடன் இணைந்து தீர்வுகளை தேடவிருக்கிறோம். `காமத்துக்கு மரியாதை'... இனி வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு... Vikatan.com-ல்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்

செவ்வி தலைப்படு வார். (குறள்)

`மலரைவிடக் காமம் மென்மையானது. அந்த உண்மையை அறிந்து காமத்தின் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலர்தான்.’

காமத்தை இந்தக் குறளைவிட நுட்பமாகச் சொல்லிவிட முடியாது.

பூக்கள் அரும்பாக, மொட்டாக இருக்கும் காலத்தைவிட அவை மலர்ந்திருக்கும் காலத்தில் விவரிக்க இயலா மென்மையுடன் இருக்கும். அதன் மென்மைக்கு அது மட்டுமே உவமை. காமம் இதையும்விட மென்மையானதோர் உணர்வு. தன் மகரந்தப் படுக்கையில் மயங்கிக்கிடக்கிற வண்டு, மூச்சு விடுவதற்காகத் தன் இதழ்களைத் தளர்வாக மூடிக்கொள்கிற மாலை நேரத்து தாமரைபோல, தன் சிறகை படபடத்து தாமரையின் இதழ்களைக் கிழிக்காத வண்டைப்போல, ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் காயப்படுத்தாத உணர்வே காமம்.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Image by StockSnap from Pixabay
`ஆர்கஸம்' இனியும் ஆபாசம் அல்ல; உங்களின் ஆரோக்கியமே! - பெட்ரூம்... கற்க கசடற! - 1

காமத்தைப்போலச் சரிசமமான பகிர்தல் வேறொன்றில்லை. `ஒருவர் மட்டுமே கொடுத்து ஒருவர் மட்டுமே பெற்று’ என்கிற ஓரவஞ்சனையெல்லாம் காமத்துக்குத் தெரியாது. உடல்கூறுபடி ஆணையும் பெண்ணையும் இயற்கையே அப்படித்தான் படைத்திருக்கிறது. நான், தான், ஆண் இவற்றையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு நம்மை நாம் அவதானித்தாலே இது புரிந்துவிடும்.

விண்கற்கள் விழுந்து; கடல் நீர் நிலத்துக்குள் புகுந்து; சூரியன் சுருங்கி; மாயன் காலண்டர் முடியும்போது என்று அறிவியலில் ஆரம்பித்து ஆன்மிகம் வரைக்கும் `உலகம் இப்போ அழிஞ்சுடும், அப்போ அழிஞ்சுடும்’ என்று ஆரூடம் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார்கள். இப்படியெல்லாம் உலகம் அழியுமா என்பது தெரியவில்லை. ஆனால், மனிதன் மனதில் காமம் குறைய ஆரம்பித்தால், ஜனித்தலும் குறைந்து ஒரு காலகட்டத்தில் மனித இனம் நிச்சயம் அழிந்துவிடும்.

Love
Love
Image by Gerd Altmann from Pixabay

மனதுக்குப் பிடித்த காமத்தை அடையவே மனிதர்கள் உழைக்கிறார்கள்; ஜெயிக்கிறார்கள்; விதவிதமாய் உடுத்துகிறார்கள்; ஒன்றுமே செய்ய இயலாதபோது பிழைத்துக்கிடக்கவாவது பிரயத்தனப்படுகிறார்கள்.

பலரும் எட்ட முடியாத உயரங்களை எட்டுகிற ஒரு சிலரின் வாழ்க்கையை உற்று நோக்கினால், காதலும் காமமும் பொங்கிப் பிரவாகிக்கிற துணையொன்று அவர்களின் தோளோடு தோளாக ஒட்டி நின்றுகொண்டிருப்பது தெரியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்கு காமம் என்றாலே அது பேசக்கூடாத விஷயம் போலவே நடந்துகொள்கிறார்கள். காதல் என்றால், `ஆஹா... அது எவ்ளோ புனிதமான உறவு’ என்று கொண்டாடுகிறார்கள். அவர்கள் வழிக்கே செல்வோம். `நீங்கள் கொண்டாடுகிற காதலை மட்டும்தான் உங்கள் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டும். `உவ்வேக்’ என்கிற காமத்தை அனுபவிக்கவே கூடாது’ என்றால், ஒத்துக்கொள்வார்களா? முடியாதல்லவா... வாய் வார்த்தைகளால் தன்னை வெறுக்கிறவர்களைக்கூட அன்பு குழைத்த ஒரு முத்தத்துக்காக ஏங்க வைப்பது இது.

Couple
Couple
Image by Free-Photos from Pixabay
Vikatan

கற்பு போலவே காமமும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதுதான். ஆணுக்கு அது உடலிலிருந்து மனம் நோக்கிப் பாய்கிற உணர்வு. பெண்ணுக்கோ மனம் நிறைந்து வழிந்த பிறகே அவள் உடலுக்கான சாவிகளை உணர்வுகள் தேட ஆரம்பிக்கும். யதேச்சையாகக் கண்ணில்பட்ட அல்லது கண்ணில்பட வைத்த கிளிவேஜிலேயே தொபுக்கடீர் என்று விழுந்துவிடலாம் ஆணின் காமம். மனதுக்குள் நுழையாத ஆண் எத்தனை இன்ச் காட்டினாலும் `போங்கடா நீங்களும் உங்க............’ என்று கடந்துவிடும் பெண்ணின் காமம். அதனால்தான், காலங்காலமாக `காதல் வலைவிரித்து’ அதாவது, பெண்களை நம்ப வைத்து காமம் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் சில ஆண்கள்.

காதலில் தோல்வியுற்றவர்களை இரக்கத்துடன் பார்க்கிற நம் சமூகம், காமத்தில் தோற்றவர்களை அவ்வளவு ஈர மனதுடன் அணுகுவதில்லை. தன் நம்பிக்கை பொய்த்துப்போய் நிற்கிற அவர்களுக்கு, நியாயப்படி நம்பிக்கை வார்த்தைகள் சொல்ல வேண்டிய சமூகம்தான் அவர்களுடைய ஒழுக்கத்தின் மீது கற்களை வீசிக்கொண்டிருக்கும். இன்னொரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? காதலைவிட காமம் அப்பாவி. `இத்தனை மணிக்கு மேல் போன் செய்யாதே, வீட்டுப் பக்கம் வரவே வராதே’ என்று தனக்கான பாதுகாப்பில் காதல் படு உஷார். காமமோ, தன்னுடைய இணை காமத்தை `அவன் இருக்கான் எனக்கு/ அவ இருக்கா எனக்கு’ எனப் பரிபூரணமாக நம்பி தன்னையே ஒப்புவிக்கும்.

காமத்துக்கு மரியாதை!
காமத்துக்கு மரியாதை!
ரிலேஷன்ஷிப்பின் முதல் 6 மாதங்கள் ஏன் முக்கியம்? #AllAboutLove - 8

இப்படிப்பட்ட காமத்தின் உள்ளும் புறமும் பற்றித்தான் இந்தத் தொடரில் பேசப் போகிறோம்; தெரிந்துகொள்ளப் போகிறோம்; காமத்துக்கும் வக்கிரத்துக்கும் இடையேயான வித்தியாசத்தைத் தெரிந்துகொள்ளப் போகிறோம்; கூடவே தாம்பத்திய உறவில் காமம் சார்ந்து சந்திக்கிற சிக்கல்களுக்கு நிபுணர்களுடன் இணைந்து தீர்வுகளையும் தேடவிருக்கிறோம். உங்கள் துணையிடம்கூட பகிரத் தயங்குகிற பிரச்னைகளுக்கான பதில்கள் நிச்சயம் இருக்கும். இந்தத் தொடரின் வழி உங்கள் அந்தரங்க கேள்விகளை அனுப்ப விரும்புகிறவர்கள் uravugal@vikatan.com என்ற மின்னஞ்லுக்கு அனுப்பலாம்.

காமத்துக்கு மரியாதை
காமத்துக்கு மரியாதை
மரியாதை செய்வோம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு