Published:Updated:

`என்னால் திருமணம் செய்துகொள்ளமுடியுமா?'- இளைஞரின் மனப்போராட்டத்துக்கு நிபுணர் பதில் #LetsSpeakRelationship

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship

திருமணத்துக்குப் பிறகு உங்கள் மனைவியுடன் குடும்ப வாழ்க்கை நடத்துவதற்கு, அவர் மீதான விருப்பம் அவசியம்.

நான் 25 வயது இளைஞன். சென்னையில் வசிக்கிறேன். பல சமூக அமைப்புகளில் பங்குகொண்டுள்ளேன். என் நண்பர்களில் பலர் திருமண வாழ்வில் இணைந்துவிட்டனர். ஆனால், என்னால் திருமணம் குறித்து சிந்திக்க முடியவில்லை. நான் திருமண வாழ்வுக்குத் தயாராகவில்லை என்றே தோன்றுகிறது. குடும்ப அமைப்பின் மேல் எனக்கு நம்பிக்கையும் குறைவாகவே இருக்கிறது. திருமணம் என்பது இரு தனிப்பட்டவர்களின் உடல் மற்றும் மனங்களின் கலப்பு என்பது என் நம்பிக்கை. சிறுவயதில் ஏற்பட்ட சுயஇன்பப் பழக்க ஈடுபாடு, LGBT சமூக நண்பர்களின் நட்பு... இவைகூட திருமணம் பற்றி நான் சிந்திக்காமல் இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம். என் தயக்கமெல்லாம், திருமணத்துக்குப் பிறகு தம்பத்யத்தில் என் இணையை நிறைவுசெய்ய முடியுமா என்பதே. ஒரு பெண்ணின் வாழ்வை வீணாக்க நான் விரும்பவில்லை. ஆனால், எனக்குக் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்கிற விருப்பம் இருக்கிறது. இந்த எண்ணங்கள் என்னை மிகவும் பாதிக்கின்றன. என் கவலை தீர வழி சொல்லுங்கள்.

- பெயர் சொல்ல விரும்பாத வாசகர்

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship

பதில் சொல்பவர் மனநல மருத்துவர் டி.வி. அசோகன்.

``திருமணம் என்பது இரு தனிப்பட்டவர்களின் உடல் மற்றும் மனங்களின் கலப்பு என்கிற உங்கள் நம்பிக்கை மிகச் சரியே.

`LGBT சமூக நண்பர்களின் நட்பு' என்றால், அது உடல் சார்ந்ததா அல்லது மனம் சார்ந்ததா என்பதை நீங்கள் தெளிவாகக் குறிப்பிடவில்லை. ஆணும் ஆணும் இணைகிற உறவுமுறையும், ஆணும் பெண்ணும் இணைகிற உறவுமுறையும் அது அதற்குண்டான இயல்புகளுடன் இருக்கும். அதேபோல, ஓர் ஆண் பை செக்‌ஷுவலாக இருக்கும் உறவு அதற்குரிய இயல்புகளுடன் இருக்கும். இதில் நீங்கள் எந்த வகையான வாழ்க்கை முறையில் இருக்கிறீர்கள் என்பது கேள்வியில் தெளிவாக இல்லை. இது முழுக்க முழுக்க உங்கள் சொந்த விஷயமென்றாலும், `ஒரு பெண்ணின் வாழ்வை வீணடிக்க நான் விரும்பவில்லை' என்று நீங்களே குறிப்பிட்டிருப்பதால், இந்தக் கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது.

திருமணத்துக்குப் பிறகு உங்கள் மனைவியுடன் குடும்ப வாழ்க்கை நடத்துவதற்கு, அவர் மீதான விருப்பம், அதாவது ஒரு பெண் மீதான விருப்பம் அவசியம். அது இருந்தால்தான், உங்கள் இணையை உறவில் நிறைவு செய்வது, குடும்பம் நடத்துவது, குழந்தை பெற்றுக்கொள்வது என இவையெல்லாம் சாத்தியமாகும். இந்த விருப்பம் உங்களுக்கு இருக்கிறதா என்பதை நீங்கள்தான் யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship

குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்றால், உங்களை நேசிக்கிற, நீங்கள் நேசிக்கிற ஒரு பெண் துணையாக வர வேண்டும். நீங்கள் எழுதியிருக்கிறபடி, `எனக்குக் குழந்தைகளை வளர்க்க வேண்டும்' என்பது உங்கள் விருப்பமென்றால், அதற்கு சட்டப்படி குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கலாம். உங்கள் பிரச்னைக்கு, மனநல மருத்துவரிடம் மனம்விட்டுப் பேசுவதுதான் சரியான தீர்வைத் தரும் என்பது என் கருத்து.''

அடுத்த கட்டுரைக்கு