Published:Updated:

அமெரிக்கர்கள் அனுசரிக்கும் 'நேச தினம்'! - நாமும் கொஞ்சம் பிரியம்பேசுவோமா... #NationalDayofCaring

நேசம்
நேசம்

இன்று (25-10-19) அமெரிக்கர்களுக்கு 'தேசிய நேச தினம்'

நம் நாட்டைப் பொறுத்தவரை குடும்ப உறவுகளில் இந்த நேச உணர்வு எந்தளவுக்குக் கெட்டிப்பட்டுப் போயிருக்கிறது என ஒவ்வொருவரின் சுயரிசோதனையிலும்தான் உணரமுடியும். ஆனால், நேசம் எங்கிருந்து தொடங்குகிறது என்பதை எளிதாகச் சொல்லிவிடலாம்.

நேசம்
நேசம்

'நானே விரக்தியிலிருக்கிறேன். எதற்காகப் போலிப் புன்னகை பொழியவேண்டும்? என் உணர்வை உள்ளபடி உங்களிடம் காட்டிக்கொள்வதில் என்ன தப்பு?' எனப் பலர் கேட்கப் பார்த்திருக்கிறேன். அவர்கள், சிநேகப் புன்னகையின் அருமை உணராதவர்கள்.

கடந்த வார மீட்டிங்கில் திட்டிய மேனஜர் தற்போது கடந்துபோகும்போது காட்டும் புன்னகையில் போலித்தனம் தெரிவதாக உணர்ந்தாலும், அதில் உள்ளூர ஒரு நேசமும் சிநேகமும் பொதிந்தே கிடக்கும். தொலைதூர ரயில்பயணக் களைப்பில் அவசரத்தோடும் தவிப்போடும் ஸ்டேஷனில் இறங்கும் சமயம் தாயொருத்தியின் மார்பில் சாய்ந்தபடி இருக்கும் குழந்தையின் முகம் பார்த்து நாம் ஒரு சிரிப்பை உதிர்த்தால், பதில் சிரிப்பில் அந்தக் குழந்தை நமக்குக் கொடுக்கும் உணர்வே, சிநேகம்.

மொழியும் வழியும் தெரியாத ஊரில்கூட, அடிக்கடி நாம் பார்க்கும் முகமும், சிநேகத்தின் விடையேதான். முதல் பார்வையின் 'ஹாய்', சிலநாள் பழகியதும் ஒரு 'கைக்குலுக்கல்', ஏதேனும் ஓர் உறவாக்கிக்கொண்ட 'அணைப்பு'... இவற்றில் நேசத்தின் பரிணாமம் புரியாமலா போகும்! நல்லவர்களே இல்லை எனத் தூற்றப்படும் பெருநகர வாழ்வின் மைந்தர்கள்தான் பேரிடர்களிலும் பெரும்சோகங்களிலும் முன்னின்றவர்கள்; நிற்கிறவர்கள்.

இது உற்றார், உறவினர் மட்டுமே வாழும் உலகில்லை; உள்ளோர் எல்லோரும் உற்றார் உறவினரே. நேசத்தை நாம் புரிந்துகொள்ளும் விதம்தான் இங்கே சரிசெய்யப்பட வேண்டியது. ஆதவற்றோர் இல்லங்கள் இயங்கிட நேசக்காரர்களின் துணைதானே நிற்கிறது என்பார்கள். நேசம்கொண்டு உயிரை அணுகினால், ஆதரவு இல்லங்களின் தேவை இல்லையே. இதை செயல்படுத்த நேசமும், கொஞ்சம் நிஜமும் நம்முள் நிலைக்கவேண்டும்.

நேசம்
நேசம்

முகவரி காட்டாத உயிர்களிடம் நாம் காட்டிப் பழகும் நேசம்தான் குழந்தை வளர்ப்பிலும் குடும்ப வாழ்விலும் நீடிக்கும். நாம் கற்கும் நேசப் பழக்கம், நம் குழந்தையின் உதிரத்திலேயே ஊறியிருக்கும். தலைமுறையாய் அது தழைத்தோங்கும். குழந்தை வளர்ப்பில் செய்யும் தவறுகள் வளர்ப்பின் குறையாகவும், பின்னாளில் குழந்தையின் குறையாகவுமே விரிவடையும். அதீத அன்பும், அதீத எச்சரிக்கையுணர்வும் பிள்ளைகளின் எதிர்காலத்தைத்தான் பாதிக்கும். பயமுறுத்தி வளர்ப்பதைவிட, அறிவுறுத்தி வளர்ப்பதிலேதான் குழந்தையின் எதிர்காலம் முழுமையடையும்.

பிள்ளையை அருகில் வைத்துக்கொண்டு பெருமைபேசுவதைத் தவிர்க்கும் தந்தை, இப்படியும் செய்யாவிட்டால் எப்படியும் முயலமாட்டானே எனத் திட்டித்திட்டியே வேலைதேட வைக்கும் தாய், சொல்லிக்கொண்டாற்போல பரஸ்பரம் பாசத்தை மறைத்து ஒளித்து வைத்துச் சண்டைபோட்டுச் சமாளிக்கும் சகோதரர்கள்... விரட்டிப் பாடுபடுத்துவதாய் நம்மை ஏமாற்றி, நாம் வெற்றிக் கோட்டைத் தொட்டுத் திரும்பிப்பார்க்கும்போது, நம்மை விரட்டிக்கொண்டே இவர்கள் எல்லாம் உடன் ஓடி வந்திருக்கிறார்கள் என்பதை தாமதமாகவே உணர்த்தும் ரத்த சொந்தங்கள் இவர்கள். தங்களுக்கு அதனால் நன்மையென்றாலும் நம்மிடம் நடிக்கத்தெரியாத நண்பர்கள்... இவர்களோடும், இவர்களைத் தேடியும் வாழுகின்ற வாழ்க்கைதான், ஒவ்வொருவருடையது.

நேசம்
நேசம்

கண்ணாடியின் கீறல்கூட பிம்பத்தைத் தவறாகவே காட்டும். உறவுகளைத் தவிர்க்காதீர், யாரையும் நம் உறவாக்கிக்கொள்ளத் தவறாதீர். வாழ்வு, அவ்வளவே!

அடுத்த கட்டுரைக்கு