Published:Updated:

``அந்த நேரத்தில் நானும் கலங்கிவிட்டேன்!'' - ரேபிட் செஸ் சாம்பியன் கோனேரு ஹம்பி ஷேரிங்ஸ்

கோனேரு ஹம்பி
கோனேரு ஹம்பி

"குழந்தை பிறந்து ஒரு வயது ஆகும்வரை என் மகளைத் தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்கவில்லை. அந்த நேரத்தில் என் குழந்தைதான் மற்ற எல்லாவற்றையும்விட முக்கியமாக இருந்தாள்."

ரஷ்ய நாட்டின் மாஸ்கோவில் நடைபெற்ற உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் பிரிவில் வெற்றி வாகை சூடியிருக்கிறார் இந்தியாவைச் சேர்ந்த கோனேரு ஹம்பி. விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இந்தப் பட்டத்தைப் பெற்ற ஒரே இந்தியர் இவர்தான் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோனேரு ஹம்பி, திருமணத்துக்குப் பிறகு குழந்தை பெற்றுக்கொள்வதற்காக இரண்டு ஆண்டுகள் பிரேக் எடுத்துவிட்டு மீண்டும் தற்போது விளையாட்டில் களமிறங்கியிருக்கிறார்.

கோனேரு ஹம்பி
கோனேரு ஹம்பி

இரண்டு வயதேயாகும் தன் மகள் அஹானாவை விஜயவாடாவிலிருக்கும் தன் பெற்றோரிடம் விட்டுவிட்டு இப்போது போட்டிகளில் பங்கேற்கச் செல்கிறார். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் விளையாடத் தொடங்கியிருக்கும் ஹம்பி, தன் விளையாட்டையும் குடும்பத்தையும் எப்படி பேலன்ஸ் செய்கிறார் என்பது பற்றிப் பேசியிருக்கிறார்.

"நான் பிரேக் எடுத்துத் திரும்பிய பிறகு ஓராண்டு மிகவும் கடினமாக இருந்தது. விளையாட்டிலிருந்து பிரேக் எடுப்பதை விரும்பாத நான், குழந்தையை ப்ளான் செய்யும்போது மருத்துவக் காரணங்களுக்காக சில மாதங்கள் பெட் ரெஸ்டில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. குழந்தை பிறந்து ஒரு வயது ஆகும்வரை என் மகளைத் தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்கவில்லை. அந்த நேரத்தில் என் குழந்தைதான் மற்ற எல்லாவற்றையும்விட முக்கியமாக இருந்தாள். மகளுக்கு ஒரு வயது ஆன பிறகுதான் மீண்டும் செஸ் போர்டைத் தொட்டேன்.

Koneru Humpy
Koneru Humpy
`ஜியோங்கியின் தவறான ஆட்டம்; டை பிரேக்!'- எப்படி சாம்பியன் ஆனார் கோனேரு ஹம்பி?!

மீண்டும் விளையாடத் தொடங்கியபோது என்னென்ன போட்டிகள் நடக்கின்றன, யார் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று விளையாட்டு தொடர்பாக எந்த அப்டேட்டும் இல்லாமல் மிகவும் பின்தங்கியிருந்தேன். அதன் பிறகு மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. குழந்தையைக் கவனித்துக்கொள்ளும்போது கிடைக்கும் கொஞ்ச நேரத்தைக்கூட விளையாட்டுக்காகச் செலவழித்தேன். அந்த நேரத்தில் தூக்கத்தைக்கூட அதிகம் இழந்திருக்கிறேன். கடினமான அனைத்துத் தருணங்களையும் கடந்து இறுதியில் வெற்றியை ருசிக்கும்போது பட்ட கஷ்டமெல்லாம் மறந்தே போய்விட்டது" எனும் ஹம்பி தன் குடும்பம்தான் அவருக்குப் பக்கபலமாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

"என் கணவர்தான் எனக்கு முழு பக்கபலமாக இருக்கிறார். வீட்டிலிருந்துகொண்டு வீட்டு வேலைகளை மட்டுமே பார்க்க வேண்டும் என்று சொல்லும் கணவர் அல்ல அவர். என் சுதந்திரத்தை அனுமதிப்பவர். நான் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று எப்போதும் உத்வேகம் அளித்துக்கொண்டே இருப்பார். என்னுடன் சேர்ந்து வீட்டு வேலைகளிலும் பங்கெடுத்துக்கொள்வார்.

உணர்ச்சிமிக்க தருணங்களைக் கடப்பதற்காக மனதளவில் மட்டுமல்லாமல் உடலளவிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதனால் தினமும் 45 நிமிடங்களாவது உடற்பயிற்சியில் ஈடுபடுவேன்.
செஸ் சாம்பியன் கோனேரு ஹம்பி

அடுத்ததாக என் அப்பா, என் சிறுவயதிலிருந்தே என் பயிற்சியாளர் அவர்தான். ஒவ்வொரு போட்டியாளருக்கும் எதிராக என்னென்ன வியூகங்களை வகுக்க வேண்டும் என்பதை அவர்தான் சொல்லித் தருவார். உளவியல் ரீதியான ஆலோசனைகளையும் அளிப்பார். இப்போது போட்டிகளுக்காக நான் பல்வேறு நாடுகளுக்குப் பயணிக்கும்போது குழந்தையை என் பெற்றோரிடம்தான் விட்டுச் செல்கிறேன். அவளும் அவர்களோடு எளிதாக ஒட்டிக்கொள்கிறாள். முன்பெல்லாம் போட்டிகளுக்குச் செல்லும்போது என் பெற்றோர்தான் என்னுடன் வருவார்கள். ஆனால், இப்போது என் மகளுக்கு அவர்கள் தேவைப்படுகிறார்கள்!" என்கிறார்.

போட்டிகளில் பங்கேற்பதற்காகக் குழந்தையைவிட்டுப் பிரிந்து பல்வேறு இடங்களுக்குச் செல்வதைப் பற்றிப் பேசுகையில், "என் மகள் சற்று வளர்ந்துவிட்டதால் அவளுக்கு சில விவரங்கள் தெரிகின்றன. ரேபிட் செஸ் போட்டிக்காக ரஷ்யாவுக்குக் கிளம்புவதற்காகப் பெட்டியை அடுக்கிக்கொண்டிருப்பதைப் பார்த்ததுமே, நான் எங்கோ அவளை விட்டுச் செல்லப் போகிறேன் என்று அழ ஆரம்பித்துவிட்டாள். அந்த நேரத்தில் நானும் சற்று கலங்கிவிட்டேன். இதுபோன்ற கடினமான தருணங்களைக் கடந்தால்தான் வெற்றியைப் பெற முடியும் என்று என்னை நானே தேற்றிக்கொண்டு பயணத்தைத் தொடங்கினேன்.

Chess
Chess
Pixabay

வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டால் கிடைக்கும் நேரத்தில் வீடியோ காலில் மகளுடன் பேசுவேன். நிறைய போட்டிகள் இருக்குமென்பதால் பேசுவதற்கு அதிக நேரமும் கிடைக்காது. சில நேரங்களில் நான் போட்டி முடிந்து வந்து அழைக்கும்போது அவள் தூங்கியேவிடுவாள்.

இதுபோன்ற உணர்ச்சிமிக்கத் தருணங்களைக் கடப்பதற்காக மனதளவில் மட்டுமல்லாமல் உடலளவிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதனால் தினமும் 45 நிமிடங்களாவது உடற்பயிற்சியில் ஈடுபடுவேன்" என்கிறார்.

செஸ் சாம்பியனான நீங்கள் உங்கள் மகளுக்கு செஸ் விளையாட்டைக் கற்றுக்கொடுக்கிறீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த ஹம்பி, "இன்னும் கற்றுக்கொடுக்கத் தொடங்கிவில்லை. ஆனால் நான் விளையாடுவதைப் பார்த்த என் மகள், செஸ் காய்களில் ஒன்றான `பிஷப்' என்ற வார்த்தையை மட்டும் எப்படியோ கற்றுக்கொண்டுவிட்டாள். அதனால் நான் ஏ, பி, சி, டி கற்றுக்கொடுக்கும்போது `பி ஃபார் பிஷப்' என்றுதான் எப்போதும் சொல்லுவாள்" என்று தன் குழந்தையின் மழலையைச் சிலாகிக்கிறார் ஹம்பி.

Koneru Humpy
Koneru Humpy
"அந்தக் கிறுக்கல்கள்தான் என் பொக்கிஷம்!”

குழந்தை பெற்ற பிறகு மீண்டும் விளையாட்டுப் போட்டிகளுக்குத் திரும்பிய மேரி கோம், செரினா வில்லியம்ஸ் போன்ற வீராங்கனைகள்தான் அதிகம் தன்னை ஈர்த்தவர்கள் என்றும் சொல்லியிருக்கிறார் கோனேரு ஹம்பி!

அடுத்த கட்டுரைக்கு