Published:Updated:

'இதயம்' vs 'ப்யார் ப்ரேமா காதல்'... Love vs Relationship குழப்பங்கள்... எது சரி? #AllAboutLove - 4

இந்த எபிசோடில் பார்க்கப் போகும் விஷயத்துக்குள் போவதற்கு முன் முக்கியமான ஒரு கேள்வி. காதலுக்கும் ரிலேஷன்ஷிப்புக்கும் என்ன வித்தியாசம் என நினைக்கிறீர்கள்? பதில்களை புல்லட் பாயின்ட்ஸ் போல மனசுக்குள் பட்டியிலிட்டுவிட்டுத் தொடருங்கள்.

ஏற்கெனவே சொன்னதுபோல காதல் ஓர் உணர்வு. எமோஷன். ஆய்த எழுத்து படத்தில் சுஜாதா எழுதி சூர்யா சொல்லும் ஈஸ்டிரோஜன், ஆஸ்டிரோஜன் என அதில் பல ஹார்மோன்களின் வேலைகளும் உண்டு. நமக்கு வரும் கோபம், வெறுப்பு, ஆசை, மகிழ்ச்சி போல காதலும் ஓர் உணர்வு. அந்த உணர்வு சில சமயம் வாழ்நாள் முழுக்க கூடவே வரும். சில சமயம், சூழ்நிலைகள் பொறுத்து குறிப்பிட்ட காலம் மட்டுமே இருக்கும். சுருக்கமாகச் சொன்னால், காதலென்பது அது இஷ்டத்துக்கு வந்து போகும் ஒரு எமோஷன்.

ஆனால், ரிலேஷன்ஷிப் அப்படியல்ல. அது பல விஷயங்களைச் சேர்த்து நாமே கட்டும் ஒரு பொட்டலம். காதல், கனவு, ஒருவர் மீது ஒருவர் வைக்கும் நம்பிக்கை, மதிப்பு, மரியாதை, எதிர்பார்ப்பு என இன்னும் ஏகப்பட்ட விஷயங்கள் அடங்கிய தொகுப்பு. சொல்லப்போனால், கொஞ்சம் ஏமாற்றம், அட்ஜெஸ்ட்மென்ட் போன்றவையும் சேர்ந்ததே ரிலேஷன்ஷிப். அது காதலின் அடிப்படையில் அமைவது நல்லதென்றாலும் காதல் மட்டுமே ரிலேஷன்ஷிப்புக்குப் போதாது.

Tamil love movies
Tamil love movies

உதாரணமும் சொல்லிவிடுகிறேன். 2கே கிட்ஸ்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற படம் `பியார் ப்ரேமா காதல்'.

அதில், ஹரிஷ் கல்யாணுக்கு ரைஸா மீது முதலில் வருவது காதல். அதை ரைஸாவிடம் அவர் வெளிப்படுத்திய பின் இருவரும் ஒரு ரிலேஷன்ஷிப்புக்குள் நுழைகிறார்கள். அங்கே அது `லிவிங் டுகெதர்' வகை உறவு. அப்படியே 30 ஆண்டுகள் பின்னோக்கி போனால் ஹரிஷுக்கு இருந்த அதே எமோஷன்தான் `இதயம்' படத்தில் முரளிக்கும்.

ஆனால், அதை அவர் கடைசிவரை ஹீராவிடம் சொல்லவே மாட்டார். பரீட்சை அட்டையை வைத்து `பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா' எனத் தட்டித் தட்டி பாடல் மட்டும் பாடிக்கொண்டிருப்பார். அங்கே ஹீரோவும் ஹீராவும் எந்த ரிலேஷன்ஷிப்பிலும் இருக்கவில்லை. அப்படியே 10 ஆண்டுகள் அங்கிருந்து தள்ளி வந்தால் `அலைபாயுதே'.

அதில் மாதவனுக்கு ஷாலினியைப் பார்த்தவுடன் பிடித்துவிடுகிறது. விடாமல் அவரைத் தேடிக் காதலிக்கிறார். தன்னைத் தேடி ஊர் ஊராகச் சுற்றி தன்னிடம் வரும் மாதவனைப் பார்த்ததும் ஷாலினிக்கும் தன் காதல் புரிகிறது. உடனே தாலி கட்டிவிட்டு திருமணம் என்ற ரிலேஷன்ஷிப்புக்குள் நுழைகிறார்கள்.

இன்னும் பத்தாண்டுகள் தள்ளி வந்தால் 2011-ல் வெளியான `விண்ணைத் தாண்டி வருவாயா'. அதில் சிம்புவும் காதலிக்கிறார்; த்ரிஷாவும் காதலிக்கிறார். ஆனால், த்ரிஷாவின் சூழ்நிலையும், அவர் மனநிலையும் சிக்கலானது. அதனால் அங்கே எந்த ரிலேஷன்ஷிப்பும் சாத்தியமாகவில்லை. முடிவில், த்ரிஷா வேறொருவரைத் திருமணம் செய்துகொள்கிறார். இந்த 4 கதைகளிலும் இருக்கும் ஒற்றுமை காதல். வித்தியாசம் ரிலேஷன்ஷிப்.

ரிலேஷன்ஷிப் என்பதை காதலின் நீட்சியாகப் பார்க்கலாம். ஆனால், திருமணம் அல்லது லிவிங் டுகெதர் உட்பட எந்த ரிலேஷன்ஷிப்புக்கும் உத்தரவாதம் தரும் ஒன்றாகக் காதலைப் பார்க்கக் கூடாது. ஒருவர் வந்து உங்கள் மீது காதலிருப்பதாகச் சொன்னால் அதை நீங்கள் ஏற்கலாம்; உங்களுக்கும் காதலிருப்பதாகச் சொல்லலாம். இருவரும் அதை அங்கிருந்து நகர்த்தி ஒரு ரிலேஷன்ஷிப்புக்குள் போகலாம். இங்கே நான் சொல்லியிருப்பது இரண்டு வெவ்வேறு விஷயங்கள் என்பதை உணர்கிறீர்களா?

ஒன்று, ஒருவர் தன் காதலை வெளிப்படுத்தும்போது நீங்கள் சொல்லும் பதில். இன்னொன்று ரிலேஷன்ஷிப்புக்கு நீங்கள் சொல்லும் பதில். இரண்டும் வேறு வேறு. காதல் இருந்தாலே அங்கே ரிலேஷன்ஷிப் என்பது கட்டாயமல்ல. காதலை ஏற்றுக்கொண்டு பின்னும், உங்கள் சூழ்நிலையோ, வேறு காரணமோ சொல்லி ரிலேஷன்ஷிப்புக்கு நோ சொல்லலாம், `விண்ணைத் தாண்டி வருவாயா’ ஜெஸ்ஸி போல.

Marriage, boy friend/girl friend, Living together, friends with benefits, Open Relationship தொடங்கி ஏகப்பட்ட புதுப்புது ரொமான்டிக் ரிலேஷன்ஷிப் வகைகள் இப்போது பேசவும்படுகின்றன, பின்பற்றவும் படுகின்றன. ரிலேஷன்ஷிப் என்பது இரண்டு தனி நபர்களுக்கு இடையே போட்டுக்கொள்ளப்படும் ஒப்பந்தம் போல. (கையெழுத்து போடுவார்களா என்றெல்லாம் கேட்கக் கூடாது). அங்கே காதல் இருக்கலாம்; அல்லது அது வெறும் ஈர்ப்பாக இருக்கலாம். ஆனால், இருவரும் ஏற்றுக்கொண்டு செய்துகொள்ளும் ஒப்பந்தம். 

காதலுக்கு ஆமாம் சொல்ல யோசிக்கத் தேவையில்லை. அதை உணர்வு ரீதியாக அணுகிவிடலாம். ஆனால், ரிலேஷன்ஷிப்புக்குள் ஓகே சொல்லும் முன் யோசிக்க வேண்டியிருக்கிறது. பல காரணிகளைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. அப்படியெல்லாம் யோசிக்காமல் காதலிக்கும் ஜோரிலே ரிலேஷன்ஷிப்புக்குள் நுழைந்தவர்களில் பெரும்பாலானோர் பின்னர் கஷ்டப்படுவதைத்தான் நாம் அதிகம் பார்க்கிறோம்.

Love quotes
Love quotes
Mettrie L
இந்த மூணுல உங்க காதல் எந்த வகை?! - #AllAboutLove - 2

டீன் ஏஜ் பருவத்தினர் அல்லது காதலைப் பற்றி போதிய முதிர்ச்சி அடையாதவர்களுக்கு எல்லாமே காதல்தான். தங்களுக்கு ஒரு துணை தேடத் தொடங்கும் இவர்களுக்குத் தேவை காதல்... காதல்... காதல் மட்டுமே. அவர்கள் காதலிக்கும் நபர் இவரையும் காதலிக்க வேண்டுமென்றோ, இவர்கள் சொல்லும் கருத்தை மதிக்க வேண்டுமென்றோ நினைக்க மாட்டார்கள். தங்கள் எமோஷனல் உணர்வு மட்டுமே போதுமென வாழ்பவர்கள். இவர்களுக்கு வீட்டிலும் ரிலேஷன்ஷிப் பற்றிய புரிதல் ஏற்பட வழியிருந்திருக்காது. வீட்டிலிருக்கும் பெரியவர்கள் எவ்வளவு துன்பத்திலிருந்தாலும், அங்கே எவ்வளவு சண்டைகள் நடந்து ஒருவர் காயப்பட்டிருந்தாலும், இருவரும் ஒன்றாக வாழும்வரை அதற்குக் காரணம் அன்பு, காதல் என நினைப்பவர்கள். பெரியவர்கள் இருவர் பிரிந்துவிட்டால் இருவருக்கும் காதல் இல்லை என முடிவு செய்துவிடுவார்கள். காதல் இருந்தாலும், ஒத்துவராமல் பிரியலாம் என்ற கான்செப்ட்டே இவர்களுக்குத் தெரியாது. காரணம், இவர்களுக்கு ரிலேஷன்ஷிப் பற்றிய புரிதலைச் சொல்வது வீடு அல்ல; சினிமாக்கள்தான். சினிமாவில் எப்போது அதைச் சரியாகச் சொல்லியிருக்கிறார்கள்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காதலுக்கும் ரிலேஷன்ஷிப்புக்கும் இருக்கும் வித்தியாசங்களைப் பற்றிய புல்லட் பாயின்ட்ஸ் கேட்டிருந்தேனே. என்னுடையவை இவைதான்.

1. உங்க மீது அன்பு கொண்டிருக்கும் எல்லோரும் உங்களுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க வேண்டிய அவசியமில்லை.

2. ரிலேஷன்ஷிப்பிலிருக்கும் எல்லோரும் காதலிக்கிறார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. 

3. வாழ்க்கையின் நெருக்கடிகளில் இருந்து மீள மற்றும் இன்னும் பல காரணங்களுக்காக ஒரு தற்காலிக ரிலேஷன்ஷிப்புக்குள் நுழைபவர்கள் இருக்கிறார்கள். ஆனால், காதல் அப்படி வந்துவிடாது.

4. ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் தங்கள் இணையைத் தவறாக நடத்தும் வாய்ப்புண்டு. ஆனால், காதலில் அப்படிச் செய்ய முடியாது. செய்தால் அது காதலாக முடியாது.

5. ஒருவரை ஏமாற்றி கூட ஒரு ரிலேஷன்ஷிப் சாத்தியமாகலாம் (வேடிக்கையான உண்மை என்னவென்றால் நம் நாட்டில் பல திருமணங்களே அந்த வகையில்தான் வரும்). காதலில் சாத்தியமில்லை. ஏமாற்றி காதலிக்க வைக்கலாம்; ஆனால் காதலிக்க முடியாது.

Love காதல்
Love காதல்
Pixabay
`திருமலை' விஜய் செய்தது காதலா? #AllAboutLove - 3

6. ரிலேஷன்ஷிப்பில் போகப் போக இணையைப் பற்றி அக்கறை ஆப்ஷனாக இருக்கலாம். காதலில் அது தானாக நடந்துவிடும். 

7. காதலுக்கு எந்த நிபந்தனையும் இருக்காது. ரிலேஷன்ஷிப்புக்கு, அதன் வகையைப் பொறுத்து நிபந்தனைகள் இருக்கலாம்.

8. காதல் ஒரு கலை. ரிலேஷன்ஷிப் ஒரு சயின்ஸ். இது புரிந்துவிட்டாலே போதும். 

உண்மையைச் சொன்னால் காதலிப்பது எளிது. ஆனால், ஆரோக்கியமான, வெற்றிகரமான ஒரு ரிலேஷன்ஷிப் எளிதல்ல. அடுத்த வாரம், ஒரு ரிலேஷன்ஷிப்புக்கு ஓகே சொல்லும் முன் எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும் எனப் பார்ப்போம்.

- காதலிப்போம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு