அலசல்
Published:Updated:

தேய்ந்து வருகிறதா தம்பதியர் நெருக்கம்..? - ரொமான்ஸ் ரகசியங்கள் இவைதான்!

ரொமான்ஸ் ரகசியங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ரொமான்ஸ் ரகசியங்கள்

‘ஒரு முத்தம் வேண்டும்’ என்பதில் ஆரம்பித்து, ‘ஹக் மீ’ வரை, கேட்கத் தோணும்போதெல்லாம் தயங்காமல் கேட்டு, பெற்று, திருப்பிக் கொடுங்கள்

காதல் திருமணமோ, அரேஞ்சுடு மேரேஜோ... ஆரம்ப வருடங்களில் டாப் கியரில் இருக்கும் ரொமான்ஸ், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துகொண்டே வர ஆரம்பிக்கும். வேலைப்பளு, குடும்ப கமிட்மென்ட்கள், குழந்தை என அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதையும் மீறி, சலிப்படையா காதலையும், ரொமான்ஸையும் தொடரும் தம்பதிகள் சிலர் இருக்கிறார்கள்தானே? அந்த சிலரில் ஏன் இல்லை நாம் என்று தோன்றுகிறதா? சிறிய மெனக்கெடல்கள் போதும்... உங்கள் ரொமான்ஸையும், காதலையும் புதுப்பித்துக்கொண்டே இருக்கலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை இங்கே...

நேரம் ஒதுக்குங்கள்!

உங்கள் துணையுடன் செலவிட தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். 10 நிமிடங்கள் கூட போதும்... ஆனால் அந்நேரம் அவர்களுக்கானதாக மட்டும் இருக்க வேண்டும். நாள் ஆரம்பிக்கும்போதோ, நாளின் முடிவிலா அவர்களுடன் பேசுங்கள். உங்களின் அன்றைய நாள் பற்றிய திட்டத்தையோ, நாள் எப்படி முடிந்தது என்பது பற்றியோ அப்போது பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கைத்துணையின் அன்றைய மனநிலையை அறிந்துகொள்ளுங்கள். இதை தொடர்ந்து கடைப்பிடிக்கும்போது, ஒவ்வொரு நாளும் அந்த 10 நிமிடங்களுக்காக நீங்களும் உங்கள் இணையும் காத்திருக்க ஆரம்பிப்பீர்கள்.

தேய்ந்து வருகிறதா தம்பதியர் நெருக்கம்..? - ரொமான்ஸ் ரகசியங்கள் இவைதான்!

தயங்காமல் கேளுங்கள்!

‘ஒரு முத்தம் வேண்டும்’ என்பதில் ஆரம்பித்து, ‘ஹக் மீ’ வரை, கேட்கத் தோணும்போதெல்லாம் தயங்காமல் கேட்டு, பெற்று, திருப்பிக் கொடுங்கள். இவையெல்லாம் உங்கள் ரொமான்ஸை புதுப்பித்துக்கொண்டே இருக்கும்.

செல்போனை தவிருங்கள்!

செல்போனுக்கான நேரத்தை விட குறைவான நேரத்தையே வாழ்க்கைத்துணையுடன் செலவிடுகிறோம் என்பதை ஆய்வுகள் சொல்ல வேண்டியதில்லை; நாமே அறிந்ததுதான். உங்களுக்கு இடையில் செல்போன் இல்லாத நேரம் என்ற ஒன்றை உருவாக்குங்கள். அது சாப்பிடும்போது இருக்கலாம், இருவரும் பேசும்போது இருக்கலாம், அல்லது படுக்கையறையாக இருக்கலாம். உங்கள் கவனத்தை சிதறடித்துக்கொண்டே இருக்கும் அந்த ஒளிர்திரையின் தொந்தரவு இல்லாமல், உங்கள் துணையுடன் பேசுங்கள். இது இடைவெளியைக் குறைக்க கைக்கொடுக்கும் சிறந்த பிராக்டீஸ்.

காதலின் ஆரம்ப நாள்களை மீட்டெடுங்கள்!

காதலித்தபோது அல்லது திருமணமான புதிதில், ரொமான்டிக்காக நீங்க செய்த விஷயங்கள், சென்ற இடங்கள், கொடுத்த பரிசுகள் என இவற்றையெல்லாம் இப்போது மீண்டும் ரிப்பீட் செய்யுங்கள். கேண்டில் லைட் டின்னர் செல்வது, ஒவ்வொரு சனிக்கிழமையும் தியேட்டருக்கு செல்வது, சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுப்பது... எல்லாம் மீண்டும் நடக்கட்டும்.

புதிய விஷயங்களை முயற்சியுங்கள்!

இருவரும் சேர்ந்து ஹாரர், த்ரில்லர் படங்களை பார்ப்பது, ஸ்கூபா டைவ் செய்வது, ரோலர் கோஸ்டரில் பயணிப்பது போன்ற... ஹார்மோனைத் தூண்டி த்ரில்லையும், மகிழ்ச்சியையும் அதிகரிக்கும் விஷயங்களை செய்யுங்கள். அந்நேரத்தில் வாழ்க்கைத்துணை பயப்படும்போது, கையைப் பிடித்துக்கொள்வது, அணைத்துக்கொள்வது என நீங்கள் காட்டும் அக்கறையால் நடனமாடத் தொடங்கும் காதல் மற்றும் மகிழ்ச்சி ஹார்மோன்கள்... 10 ஸ்பூன் ரொமான்ஸை அள்ளிக்கொட்டும்!

உறவில் புதியவற்றை தேடுங்கள்!

தாம்பத்திய உறவு ஒரே மாதிரியே இருந்தால் சலித்துவிடும். எனவே, செக்ஸில் புதியவற்றை தேடுங்கள், செயல்படுத்துங்கள். அதேபோல, இருவரும் பரஸ்பரம் ஒருவரது விருப்பத்தை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்; நிறைவேற்றுங்கள். இதனை நேரடியாகக் கேட்காமல், ஒரு கேம் ஆக விளையாடினால் இன்னும் சிறப்பான அனுபவமாக இருக்கும்.

உதாரணத்துக்கு, ஒரு பேப்பரில் 12 கட்டங்களாகப் பிரித்து வரைந்து கொள்ளுங்கள். அதில் 6 கட்டங்களில் உங்கள் ஆசைகள், விருப்பங்களை எழுதி, 6 கட்டங்களில் அதேபோல் வாழ்க்கைத்துணையை எழுதச் சொல்லுங்கள். அவற்றையெல்லாம் இருவரும் செயல்படுத்துங்கள். திருமணமாகி வருடங்கள் ஆகியிருந்தாலும், இந்த புது அனுபவங்கள் நிச்சயமாக செக்ஸில் அடுத்த கட்டத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும்.

வாக்குறுதி கொடுங்கள்!

கண் விழிக்கும்போது நெற்றி முத்தம், இரவு உறங்கச் செல்லும் முன்பு ஒரு லவ் யூ... இப்படி தினமும் கடைப்பிடிக்கக்கூடிய ரொமான்ஸ் வாக்குறுதி ஒன்றை ஒருவருக்கு ஒருவர் கொடுத்துக் கொள்ளுங்கள். அதை தினமும் பின்பற்றுங்கள். பின்னர் ரொமான்ஸ் தேயுமா என்ன?!

செக்ஸ் சீக்ரெட்ஸ்!

குழந்தை, குடும்பம் என்ற ஓட்டத்தில், கிடைத்த நேரத்தில் உறவு என்றில்லாமல், செக்ஸுக்கு என மூடு கிரியேட் செய்யுங்கள். பளிச் படுக்கையறை, மெல்லிய ஒளி, கவர்ச்சி ஆடை, வாழ்க்கைத்துணைக்கு பிடித்த பர்ஃப்யூம் என்று செயல்படும்போது, செக்ஸில் இயந்திரத்தன்மை நீங்கி சுவாரஸ்யம் அதிகரிக்கும். மகிழ்ச்சி இரட்டிப்பாகும். மனம் இளமையாக உணரும்.

இதுவும் ரொமான்ஸ்தான்!

வாழ்க்கைத்துணை உங்களுடன் பேசும் போதுதான் அவரது மனநிலையை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. அவரது நடவடிக் கைகளை கொஞ்சம் கவனித் தாலே, அவர் மூடு அவுட்டில் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம். அவர் சொல்லாமலேயே, ‘ஏன் டல்லா இருக்க?’ என்று கண்டுபிடித்துக் கேட்டுவிட்டால்.. அதுவும் ரொமான்ஸ்தான் தெரியுமா?! ‘உனக்கு எப்படித் தெரியும்..?’ என்று ஆச்சர்யமாகி அவர் உங்களை திருப்பிக் கேட்கும் போது, ‘நம்மை இவன்/இவள் எந்தளவுக்கு கவனிக்கிறான்/ள்’ என்று அவர் மனதில் லவ் ததும்ப ஆரம்பித்துவிடும். ‘நீ எப்போ, எதை பண்ணுவ, அப்படி பண்ணினா என்ன அர்த்தம்னு எனக்குத் தெரியாதா?’ என்று கேட்டு ஒரு ஹக், ஒரு கிஸ் கொடுத்துவிட்டால்...

ரொமான்ஸ் ஆரம்பம்! கொண்டாடுங்கள் காதலை!