கட்டுரைகள்
Published:Updated:

சுற்றம் நட்பும் சூழாமல்...

சுற்றம் நட்பும் சூழாமல்...
பிரீமியம் ஸ்டோரி
News
சுற்றம் நட்பும் சூழாமல்...

கொரோனா எல்லாத்தையும் தடுத்திடுச்சு.

கொரோனா கிளப்பிய பீதி, அதையடுத்த ஊரடங்கு உத்தரவு என ஒரே இரவில் மாறிப்போனது இயல்பு வாழ்க்கை.கல்யாண நாள் கனவில் கவுன்ட் டௌன் ஏக்கத்துடன் காத்திருந்த பல ஜோடிகளுக்கும் ஆடம்பரமின்றி, ஆரவாரமின்றி, அமைதியாக நடந்துமுடிந்த திருமணம் மறக்கவே முடியாத நிகழ்வாகியிருக்கும். எப்படியெல்லாமோ நடந்திருக்க வேண்டிய திருமணங்கள் எப்படியாவது நடந்தால் போதும் என்ற நிலையில் முடிந்திருக்கின்றன. ஊரடங்கு நேரத்தில் தமிழ்நாடு முழுக்க வீட்டிலும் கோயில்களிலும் சிம்பிளாகத் திருமணம் முடித்த சிலரிடம் பேசினோம். `மறக்க முடியாத அனுபவ’த்தில் ஆரம்பித்து ‘மொய் போச்சே’ மொமென்ட் வரைக்கும் அவர்களின் விதவிதமான ஷேரிங்ஸ் அண்ட் ஃபீலிங்ஸ்..!
சுற்றம் நட்பும் சூழாமல்...

துரைத் திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி மணக்கோலத்தில் நின்றுகொண்டிருந்தார்கள் கைத்தறி நகர் கார்த்திக்கும் வண்டியூர் உமாவும். அருகில் மணமக்களின் பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள் தவிர வேறு யாருமில்லை. மணப்பெண்ணின் சகோதரர் சுப்ரமணியன், “ஆறு மாசத்துக்கு முன்னாடியே மார்ச் 26-ம் தேதி கல்யாணம்னு முடிவு செஞ்சுட்டோம். திருமணத்துக்கு ரெண்டு நாளுக்கு முன்னாடிதான் ஊரடங்கை அறிவிச்சாங்க. அதனால, கல்யாணத்தைத் தள்ளி வைக்கவும் முடியல. மண்டபம், மளிகைச் சாமான், கட்டில், பீரோன்னு கொடுத்த அட்வான்ஸையும் வாங்க முடியல. குறிச்ச தேதியில திருமணத்தை நடத்தியது மட்டும்தான் மனசுக்குத் திருப்தியா இருக்கு. நிலைமை சரியானதும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் விருந்து வைக்கணும்’’ என்றார் பெருமூச்சோடு.

சுற்றம் நட்பும் சூழாமல்...

மார்ச் 30-ம் தேதி தேனி பெரியகுளம் சுப்பிரமணியன் சுவாமி கோயிலில், எளிமையாகத் திருமணம் முடித்த அழகர் ராஜா பயங்கர அப்செட் மூடில் இருந்தார். “மண்டபத்துல ஜாம்ஜாம்னு நடந்திருக்க வேண்டிய கல்யாணம். இப்படி சிம்பிளா நடத்த வேண்டியதாப் போச்சு. அதெல்லாம்கூடப் பரவாயில்லைங்க. மொய் மூலமா கிடைக்க வேண்டிய வருமானமெல்லாம் போச்சே...” என்றார் சோகமாக.

வீட்டிலேயே திருமணம் செய்துகொண்ட காஞ்சிபுரம் கோவிந்தராஜும் சிம்பிள் கல்யாணத்தால் வருத்தமாகத்தான் பேசினார். ‘`மூணு மாசத்துக்கு முன்னாடியே அக்கா மக இளவரசியை எனக்கு நிச்சயம் செஞ்சுட்டாங்க ப்ரோ.

கல்யாணத்தை அய்யம்பேட்டை கைலாசநாதர் கோயில்லேயும், வரவேற்பு நிகழ்ச்சியை மண்டபத்துலயும் ஏற்பாடு செய்திருந்தோம். நான் வீட்டிற்குக் கடைசிப் பிள்ளைங்கிறதால எல்லா விஷயத்திலும் தாராளமா செலவு செஞ்சிருந்தாங்க. ஆனா, கல்யாண தேதி நெருங்க நெருங்க கொரோனாக் கெடுபிடிகளும் அதிமாகிடுச்சு. மண்டபத்துல 50 பேருக்கு மட்டும்தான் அனுமதின்னு சொன்னாங்க. பிறகு அதற்கும் அனுமதியில்ல. தேதியை மாத்தக்கூடாதுன்னு வீட்ல சொல்லிட்டாங்க. 10 கி.மீ தொலைவுல இருந்த மணப்பெண்ணை எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வர்றதுக்கே காவல்துறையில முன் அனுமதி வாங்கினோம். எப்படியோ கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது. நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் செல்போன்ல கல்யாண வீடியோவை அனுப்பி வெச்சேன். நாடு இயல்பு நிலைக்குத் திரும்பினதும் ரிசப்ஷன் வைக்கணும்’’ என்றார் ஆதங்கமாக.

சுற்றம் நட்பும் சூழாமல்...

ரோடு பொன் சங்கருக்கும் ராகவிக்கும் கொரோனா எஃபெக்ட்டால் மணமகன் வீட்டில், 25 பேர் வாழ்த்த சிம்பிளாகத் திருமணம் நடந்திருக்கிறது. மணமகனின் தந்தை சின்னச்சாமி, “மூவாயிரம் பேருக்குப் பத்திரிகை கொடுத்து, கல்யாண ஏற்பாடுகளைத் தடபுடலா செஞ்சிருந்தோம். கொரோனா பயம் வந்தவுடனே கல்யாணத்துக்கு வர்றவங்களுக்கு சானிட்டைசர், கிளவுஸ், மாஸ்க் கொடுக்கணும்னு முடிவு செஞ்சி, 10 லிட்டர் சானிட்டைசர் வாங்கி வச்சிருந்தோம். மணமக்களுக்கு யாரும் கைகொடுக்கவோ, கிஃப்ட் கொடுக்கவோ வேணாம்னு வேற சொல்லியிருந்தோம். இதுக்கு நடுவுல எங்க மாவட்ட நிர்வாகம் சார்புல குறைவான கூட்டத்துடன் திருமணத்தை நடத்துங்கன்னு சொன்னாங்க. திருமணத்துக்கு வர்றவங்க நலனும் முக்கியமில்லையா..! ரெண்டு வீட்டாரும் பேசி, எங்க வீட்லயே கல்யாணத்தை நடத்தி முடிச்சிட்டோம். மணமக்கள்கூட மாஸ்க் போட்டுக்கிட்டுதான் தாலி கட்டினாங்க” என்று சிரிக்கிறார்.

சுற்றம் நட்பும் சூழாமல்...

புரோகிதரும் மேளதாளக்காரர்களும் வர மறுத்துவிட, கோயில் பூசாரி, கோயில் ஸ்பீக்கரில் மேளதாளம் ஒலிக்கவிட, தன் அண்ணன் கல்யாணத்தை அமர்க்களப்படுத்தியிருக்கிறார் திருவாரூர் அண்டக்குடியைச் சேர்ந்த வனம் சபரிமணி. இவர் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர். ``எங்க குடும்பத்துல நடக்குற முதல் திருமணம்ங்கிறதனால, பிரமாண்டமா நடத்த நினைச்சோம். ஊரடங்கால எங்க ஊர் கோயில்ல கல்யாணத்தை நடத்தினோம். அதுக்கே, தாசில்தார், காவல்துறை அனுமதின்னு முழி பிதுங்கிடுச்சி. கல்யாணத்தை நடத்தி வைக்க, ஏற்கெனவே நாங்க புக் பண்ணி வச்சிருந்த புரோகிதர் வர மறுத்துட்டார். மேளம் வாசிக்குறவங்களும் வரலை. கடைசியில கோயில் பூசாரியை வச்சிக்கிட்டு, ஸ்பீக்கர்ல மேளதாளம் ஒலிக்கவிட்டுக் கல்யாணத்தை நடத்தினோம். மொத்தம் 50 பேர்தான் கலந்துகிட்டாங்க. வீட்லயே மூணு மீட்டர் இடைவெளியில டேபிள் போட்டு, சாப்பாடு போட்டோம்’’ என்கிறார்.

சுற்றம் நட்பும் சூழாமல்...

ங்களுடையது எளிமையான காதல் திருமணம் என்பதால், தங்கள் மகன் ஹரீஷின் திருமணத்தைக் கேரள செண்டை மேளம், நடனம், இசைக்கச்சேரி என கிராண்டாகச் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார்கள் தங்கச்சிமடம் ராஜேந்திரன் - செல்லமீனாள் தம்பதியர். ஆனால், ஊரடங்கு அதை சிம்பிளாக நடத்த வைத்திருக்கிறது. ‘`திருமணத்துக்கு முதல் நாள் இரவு 1 மணிக்கு மணப்பெண்ணுக்காக பியூட்டிஷியனைக் கூப்பிடப் போனப்போ, அந்த நள்ளிரவு நேரத்திலும் கொரோனா தடுப்புப் பணிகளுக்காகக் காவல் காத்துக்கிட்டிருந்தாங்க போலீஸார். அவர்களோட தன்னலம் பாராத உழைப்புக்காக திருமணத்துக்காக சமைச்ச விருந்தை அவங்களை வற்புறுத்தி சாப்பிட வெச்சோம்’’ என்கிறார்கள். மணமகன் ஹரீஷ், ‘`சவுதியில் என்கூட வேலைபார்த்த என் ஃபிரெண்ட்ஸ் யாருமே கல்யாணத்துக்கு வர முடியல’’ என்று வருத்தப்பட, மணமகள் நிஷாயினியோ, ‘`எங்க அண்ணனுக்கு என்னோட திருமணத்தை கிராண்டா நடத்தணும்னு விருப்பம். அதுக்காக சிங்கப்பூர்ல அவர் பார்த்திட்டிருந்த வேலையைக்கூட ரிசைன் பண்ணிட்டு வந்து திருமண வேலைகள்ல ஈடுபட்டார். ஆனா, கொரோனா எல்லாத்தையும் தடுத்திடுச்சு’’ என்கிறார் சோகமாக.

சுற்றம் நட்பும் சூழாமல்...

``ஞாயிற்றுக்கிழமை கல்யாணம் வெச்சா எல்லாரும் வருவாங்கன்னு மார்ச் 22-ம் தேதி ஃபிக்ஸ் பண்ணினோம். கடைசியில எங்க ரெண்டு குடும்பம் மட்டும்தாங்க கலந்துக்க முடிஞ்சது’’ என்று வருத்தப்படுகிறார்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த புதுமணத் தம்பதி செந்தில்நாதனும் சத்தியபிரியாவும். ``மறவமங்கலத்துல இருக்கிற பெண் வீட்டுக் குலதெய்வக் கோயில்ல திருமணத்தை நடத்தினோம். காலையில திருமணத்தை முடிச்சுட்டு 8 மணிக்கெல்லாம் ஊருக்குத் திரும்பிட்டோம். நாங்க ரெண்டு வேன்ல வந்ததால போலீஸார் விசாரணை செஞ்சாங்க. விஷயத்தைச் சொல்லி மாஸ்க், சானிட்டைசரையெல்லாம் எடுத்துக்காட்டினோம். வாழ்த்து சொல்லி அனுப்பி வெச்சாங்க’’ என்கிறார் மணமகன் செந்தில்நாதன்.

சுற்றம் நட்பும் சூழாமல்...

கோவை காளயம்பாளையத்தைச் சேர்ந்த மீனாட்சி, “ஈரோட்டைச் சேர்ந்த கருப்புசாமிக்கும் எனக்கும் மூணு மாசத்துக்கு முன்னாடியே மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க. 144 அறிவிப்பு வந்தவுடனேயே, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எங்க வீட்டுக்குக் கிளம்பி வந்துட்டாங்க. கல்யாணமும் நல்லபடியா நடந்துச்சு’’ என்றவர், ``உணவு, மண்டபம், மேக் அப்புக்குக் கொடுத்த அட்வான்ஸ்ல பாதிப் பணத்தைத்தான் தருவோம்னு சொல்லிட்டாங்க. அதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு’’ என்கிறார் வருத்தமாக.

சுற்றம் நட்பும் சூழாமல்...

கோவை காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்த டாக்டர் சரண்யாதேவிக்கும், பாண்டிச்சேரியைச் சேர்ந்த டாக்டர் விக்னேஷுக்கும்கூட கோயிலில்தான் திருமணம் நடந்திருக்கிறது. மணமகளின் தந்தை சண்முகம், ‘`மாப்பிள்ளை கொல்கத்தாவில் மெடிக்கல் கோர்ஸ் படித்துவருகிறார். அவர் விமானம் மூலம் சென்னை வந்த அடுத்த நாள் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. அங்கிருந்து பாண்டிச்சேரி சென்றுவிட்டார். பிறகு கோவை மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்டு, காந்திமாநகரில் உள்ள ஒரு கோயிலில் எளிமையாகத் திருமணம் நடத்தினோம். மாப்பிள்ளை வீட்டில் இருந்து 9 பேர் மட்டும்தான் கோவை வந்தனர்’’ என்றார். மணமகள் சரண்யாதேவி ‘`நாங்கள் எதிர்பார்த்த எதுவுமே நடக்கவில்லை. ஆரம்பத்தில் சற்று வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால், திருமணம் முடிந்தவுடன் மிகவும் திருப்தியாக உணர்கிறோம்” என்றார்.

வீட்டில் நடந்த பாடலாசிரியர் வீட்டுக் கல்யாணம்!

பாடலாசிரியர் விவேகாவின் அண்ணன் செல்வராஜின் மகள் திருமணமும் தாம்பரத்தில் இருக்கிற அவர்களுடைய வீட்டில்தான் நடந்தது. “என் பொண்ணுக்கு மார்ச் 30-ம் தேதி கல்யாணம் நடத்தணும்னு முடிவெடுத்த நேரத்துல, கொரோனா வைரஸ்பற்றியோ, ஊரடங்கு பற்றியோ நாங்க கனவுலகூட நினைச்சுப் பார்க்கலை. கல்யாண மண்டபத்துல ஆரம்பிச்சு ஐஸ்கிரீம் ஸ்டால் வரைக்கும் அட்வான்ஸ் கொடுத்திட்டேன். நான் முப்படைத் தீர்ப்பாய வழக்கறிஞர் சங்கத் தலைவர்ங்கிறதால, மூத்த நீதிபதிகள் எல்லாரையும் என் பொண்ணு கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணியிருந்தேன். பிரின்ட் பண்ணுன ஆயிரம் இன்விடேஷன்ல கிட்டத்தட்ட 500 இன்விடேஷன்ஸ் கொடுக்கவும் செஞ்சுட்டேன். எங்க சொந்த ஊர் சாத்தனூரில் இருக்கிற சொந்தக்காரர்களுக்கு இன்விடேஷன் கொடுத்துக்கிட்டிருக்கிறப்போதான் மக்கள் ஊரடங்கு அறிவிக்கிறாங்க. ஒரு நிமிஷம் என்ன பண்றதுன்னே புரியல. கொடுத்தது போக மிச்சமிருந்த இன்விடேஷன்களை அப்படியே எடுத்துட்டு வீட்டுக்கு வந்துட்டேன். முதலில் கல்யாணத்தை மூணு மாசம் தள்ளி வெச்சுக்கலாம்னு யோசிச்சோம். அப்புறம் வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற பிள்ளையார் கோயில்ல கல்யாணம் பண்ணலாம்னு யோசிச்சோம். ஆனா, கூட்டம் சேர்ந்திடுமே... என் மனைவி, என் தம்பி கவிஞர் விவேகா, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எல்லோரும் கலந்து பேசி, மேரேஜ் ஃபிக்ஸ் ஆன அதே 30-ம் தேதி என் வீட்டிலேயே சிம்பிளா கல்யாணத்தைப் பண்ணிடலாம்னு முடிவு செஞ்சோம்.

சுற்றம் நட்பும் சூழாமல்...

மறுநாள், அதாவது திங்கட்கிழமை மார்க்கெட்டுக்குப் போயி பூ, பழம், தேங்காய், மஞ்சள், குங்குமம்னு ஒரு கல்யாணத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கிட்டு வந்துட்டோம்; கூடவே முகக் கவசங்களும் ஹேண்ட் சானிட்டைசரும். அதுக்கு அடுத்த நாள்ல இருந்து நாங்க இன்விடேஷன் வச்சவங்க எல்லாருக்கும் போன் பண்ணி வீட்டிலேயே சிம்பிளா கல்யாணம் பண்றதா இருக்கோம்னு தகவல் சொன்னோம். ‘பொண்ணு வீட்ல அஞ்சு பேரு, மாப்பிள்ளை வீட்ல அஞ்சு பேர். ஆக மொத்தம் பத்துப் பேர் மட்டும்தான் கல்யாணத்துல கலந்துக்கப் போறோம். தப்பா நினைச்சுக்காதீங்க. இந்த ஊரடங்கு முடிஞ்சதும் நேர்ல வந்து மணமக்களை வாழ்த்துங்க’ன்னு சொன்னோம். எல்லாரும் புரிஞ்சுக்கிட்டாங்க.

சுற்றம் நட்பும் சூழாமல்...

முகூர்த்தம் அன்னிக்கி அதிகாலை கார் எடுத்துட்டுப் போயி ஐயரை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தேன். செல்போன்ல நாதஸ்வரம், கெட்டி மேளம் ஒலிக்க வைச்சுட்டு, சந்தனத்துக்குப் பதிலா கையில சானிட்டைசர் அப்ளை பண்ணிக்கிட்டு, முகத்துல மாஸ்க் போட்டுட்டு ரெடியானோம். பந்தக்காலைக்கூட வீட்டுக்குள்ளேயே மணல் மூட்டையில் செருகி நிறுத்திட்டோம். எல்லா சம்பிரதாயங்களையும் வீட்டுக்குள்ளேயே எவ்வளவு எளிமையா செய்ய முடியுமோ அவ்வளவு எளிமையா செஞ்சு, கல்யாணத்தை நல்லபடியா முடிச்சோம். எங்க குடும்பத்துல அடுத்து வரப்போற அத்தனை தலைமுறைகளுக்கும் இவ்வளவு எளிமையாவும் கல்யாணம் பண்ணலாம்கிறதுக்கு எங்க பொண்ணோட கல்யாணம் ஒரு உதாரணமா இருக்கப்போகுது.”

சுற்றம் நட்பும் சூழாமல்...

ரூர் புகழியூர் கண்டியம்மன் திருக்கோயிலில், திருவள்ளுவர் படம் முன்பு திருக்குறள்கள் சொல்லி பிரபாகரனுக்கும் அருளரசிக்கும் திருமணம் நடந்திருக்கிறது. கொரோனா பிரச்னை தலைத்தூக்கியவுடனே ‘என் திருமணத்துக்கு யாரும் வர வேண்டாம்’ என்று போட்டோ கார்டு தயார் செய்து, அதை சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்திருக்கிறார் பிரபாகரன். இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர், சோப்பு நீரால் கைகால்களைக் கழுவிக்கொண்டு கோயிலுக்குள்ளே வர, அவர்களுக்கு பிரபாகரன் முகக்கவசம் வழங்கியிருக்கிறார். காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த பிரபாகரன், ’’முகிலன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள், எங்களை அலைபேசியில் வீடியோ கால் மூலம் அழைத்து வாழ்த்தியது நெகிழ்ச்சியாக இருந்தது’’ என்கிறார் பூரிப்பாக.

சுற்றம் நட்பும் சூழாமல்...

ரூர் சித்தலவாய் பகுதியைச் சேர்ந்த வக்கீல் உமேஷ்வரனுக்கும் திவ்யாவுக்கும்கூட ஊரடங்கு நேரத்தில்தான் திருமணம் நடந்திருக்கிறது. ’’திவ்யாவோட கிராமத்துல உள்ள பெருமாள் கோயில்லதான் எங்க கல்யாணம் நடந்துச்சு. அரசியல், நீதித்துறை ஆளுமைகளை அழைச்சு, அவங்க ஆசியோட தான் என் திருமணத்தை நடத்தணும்னு ஆசைப்பட்டோம். ஆனா, பாதுகாப்பா நடத்தி முடிச்சிட்டோம். சுபநிகழ்ச்சிகளை எளிமையாக நடத்துறதும் நல்லவிஷயம்தான்’’ என்கிறார் அழுத்தமாக.