சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

டேட்டிங்கின் ‘ரூட்டு தல’!

வருண் மன்னவா
பிரீமியம் ஸ்டோரி
News
வருண் மன்னவா

‘`டேட்டிங் போறப்போ, ‘என்ன படிச்சிருக்கீங்க?’, ‘எங்க வேலைபார்க் கிறீங்க?’ அப்படீங்கிறதைத் தாண்டி, உங்க பேஷன் பத்திப் பேச ஆரம்பிச்சீங் கன்னா, அந்த டேட் அடுத்தகட்டமா காதலுக்குப் போக நிறைய வாய்ப்பிருக்கு.

ன்கிட்ட வர்றவங்களுக்கு நான் தர்ற முக்கியமான கோச்சிங் இது. காமெடி பண்ணி கவர் பண்றதா நினைச்சு, ‘சாப்பிட்டு சாப்பிட்டு தூங்குறதுதான் என் பேஷன்’னு சொன்னா, நிச்சயமா அந்த டேட் முதல் படியிலேயே நின்னுடும் பாஸ், ஐ வார்ன் யூ’’ - ‘டேட்டிங் கோச்’ வருண் மன்னவா சொல்லச் சொல்ல, சீரியஸாக நோட் எடுத்துக்கொள்கிறார்கள் இளைஞர்கள்.

‘டேட்டிங் கோச்..?’ என்று மறுபடியும் வாசிக்கிறீர்களா? ஆம்! ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில், சித்தார்த்துக்கு லவ் பண்ண க்ளாஸ் எடுக்கும் சந்தானம் கேரக்டரின் ரியல் லைஃப் வெர்ஷன்... வருண் மன்னவா. ஹைதராபாத்தில் வசிக்கும் சென்னைப் பையன். ‘`ஹலோ பாஸ்’’ என பேச்சைத் தொடங்கினோம். தன் காதல் தோல்வியிலிருந்து சுவாரஸ்யமாகப் பேச்சை ஆரம்பித்தார் டேட்டிங் கோச்!

டேட்டிங்கின் ‘ரூட்டு தல’!

‘`ஃபைனான்ஸ் துறையில வேலைபார்க்கிறேன். டேட்டிங் கோச்சா இருக்கிறது, எனக்குப் பிடிச்ச, என்னோட பார்ட் டைம் ஜாப். இன்னைக்கு எத்தனையோ பேருக்கு ‘பொண்ணுங்ககிட்ட எப்படிப் பேசணும்’, ‘பசங்களோட எப்படிப் பழகணும்’னு டேட்டிங் கோச் பண்ணிக்கிட்டி ருக்கிற நான், காலேஜ் படிச்சப்போ காதலிச்ச பொண்ணுகிட்ட ஃபைனல் இயர் வரைக்கும் என் காதலைச் சொல்லமுடியாமத் தள்ளிப் போட்டவன். அவகிட்ட எப்படிப் பேசுறது, ஓ.கே சொல்லலைன்னா அவமானமாயிடுமேன்னு எக்கச்சக்க பயம், தயக்கம். ஒருவழியா, மெயில்ல ‘ஐ லவ் யூ’ சொன்னேன். ரிப்ளையே வரல. ஒருவேளை நான் நேர்ல தைரியமா சொல்லியிருந்தா அவ ஏத்துக்கிட்டிருக்கலாம்.

சென்னையில இருந்தவரைக்கும்தான் இப்படி ‘இதயம் முரளி’யா வலம்வந்தேன். வேலை காரணமா டெல்லி, ஹைதராபாத், குர்கான்னு டிராவல் பண்ண ஆரம்பிச்சதும், விதவிதமான கலாசாரம், நிறைய அனுபவங்கள்னு ஆளே மாறிப்போயிட்டேன். அங்கே அறிமுகமான நண்பர்களுக்கு எல்லாம், விளையாட்டா லவ் ஐடியாஸ் கொடுக்க ஆரம்பிச்சேன். அவங்க என்னை ஒரு லவ் சயின்டின்ஸ்ட்டாவே பார்க்க ஆரம்பிச்சதுடன், என்னையும் அதை நம்பவெச்சாங்க. இந்த நேரத்துலதான் ஒருத்தனைச் சந்திச்சேன். அவன்தான் என்னை டேட்டிங் கோச் ஆக்கியவன்’’ - பேச்சில் சின்ன சர்ப்ரைஸ் வைத்தவர், தொடர்ந்தார்.

‘`ஐஐடி-யில் வேலைபார்த்த பையன் அவன். பொண்ணு ஒருத்தி அவன்கிட்ட ‘லவ் யூ’ன்னு சொல்லியிருக்கா. இவன், ‘என் ஃபிரெண்ட்ஸ்கிட்ட பேசிட்டு வந்து சொல்றேன்’னு சொல்லி சொதப்பிட்டு வந்துட்டான். இப்படி, காதலை நேருக்கு நேரா சந்திக்கிற அந்தப் புள்ளியில, சிக்ஸர் அடிக்காம சொதப்புற பசங்கதான் இங்க நிறைய. அந்த மாதிரி பசங்களோட எதிர்கால நலன் கருதி(சிரிக்கிறார்), அதுவரை என் ஃபிரெண்ட்ஸுக்கு நான் கொடுத்துட்டுவந்த லவ் அட்வைஸை ஒரு புரொஃபஷனா ஆக்கலாம்னு முடிவெடுத்தேன்.

டேட்டிங்கின் ‘ரூட்டு தல’!

ஞாயிறுக்கிழமை நான் ஃப்ரீதான் என்பதால, ஆன்லைன்ல ‘புக் மை ஷோ’வுல ஞாயிறு மாலை 4 - 7 மணிவரைக்கும் டேட்டிங் டிப்ஸ் தருவேன்னு புக் பண்ணினேன். இது ஒரு ஈவென்ட். மாசத்துக்கு இப்படி ஒரு ஈவென்ட் நடத்தினேன். ஆறேழு மாசம்வரை ஒருத்தர், ரெண்டு பேர்தான் வந்தாங்க. அதுல, 30 வயசுல ஸ்டார்ட் அப் கோ- ஃபவுண்டர் ஒருத்தன் வந்தான். சென்னைப் பையன். வாழ்க்கையில ஒரு டேட்கூடப் போனதில்லைன்னு சொன்னான். அவனுக்கு டேட்டிங் கோச் பண்ணினேன். ஒரே வாரத்துல தன்னோட முதல் டேட்டுக்குப் போனான். அதுக்கப்புறம் அஞ்சாறு மாசத்துல ரெண்டு, மூணு டேட் பண்ணிட்டு, ‘யாரை என் லைஃப் பார்ட்னரா செலக்ட் பண்ணணும்னு இப்போ எனக்குத் தெளிவாயிடுச்சு’ன்னு சொன்னான். அவனைவிட எனக்கு செம ஹாப்பி ஆகிடுச்சு’’ என்கிற வருண், 25 முதல் 33 வயது வரையுள்ள வர்களுக்கு மட்டுமே, டேட்டிங் கோச்சிங் தருகிறார். ஹைதராபாத்தில் வசித்தாலும், எல்லா மாநில மொரட்டு சிங்கிள்ஸுக்கும் வாட்ஸ் அப் கால், வீடியோ கால், தன் முகநூல் பக்கம் எனத் தன் டேட்டிங் கோச் வேலையை சக்சஸ்ஃபுல்லாகச் செய்துவருகிறார்.

‘’பொதுவா சென்னை போன்ற மெட்ரோபாலிட்டன் சிட்டிகள்லகூட டேட்டிங் என்றால் தப்பான அபிப்ராயம் இருக்கு. டேட்டிங்னா செக்‌ஷுவல் ரிலேஷன்ஷிப்னு நினைச்சுக்கிறாங்க. அது தப்பு. ஓர் ஆணும் பெண்ணும் ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் தெரிஞ்சுக்க சந்திச்சுப் பேசறதுதான் டேட்டிங். ‘பாய்ஸ்’ படத்துல டேட்டிங் பாட்டு ஒண்ணு வரும். உண்மையில அது டேட்டிங்கே கிடையாது. அதை லவ் மாதிரிதான் காட்டியிருப்பாங்க. இதை பொண்ணுங்க சைடுல இருந்து யோசித்துப் பார்க்கும்போது, ‘பேசிப் பார்க்கலாம்னு வந்தாலே பசங்க அதை லவ்வுன்னு நினைச்சுக்கிட்டா என்ன பண்றது?’ன்னு அவங்களுக்குப் பதற்றம் வருமில்லையா? டேட்டிங் தப்பில்லை. டேட்டிங்கைத் தப்பாப் புரிஞ்சுக்கிற மனநிலைதான் தப்பு. டேட்டிங்ல பரஸ்பரம் பிடிச்சிருந்தா அடுத்தகட்டமா லவ் பண்ணலாம்; கல்யாணமும் பண்ணிக்கலாம். ஆனா, ஒரு பொண்ணு, பையனோட டேட்டிங் போறதாலேயே அவனை லவ் பண்ணியே ஆகணும்னு கட்டாயமில்ல.

ஓர் ஆணும் பெண்ணும் ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் தெரிஞ்சுக்க சந்திச்சுப் பேசறதுதான் டேட்டிங்.
டேட்டிங்கின் ‘ரூட்டு தல’!

டேட்டிங் வொர்க்‌ஷாப்ல, தோத்துடுவோமோ, நம்மளை ரிஜெக்ட் பண்ணிடுவாங்களோங்கிற பயத்தை எல்லாம் போக்குறதுதான் என்னோட முக்கியமான வேலை. ஒருவேளை, நீங்க கூப்பிடுற பொண்ணோ, பையனோ டேட் பண்ண வரலைன்னா, அதோட உங்க உலகம் நின்னுடப் போறதில்லை. அவங்களைவிட பெட்டரா ஒரு துணையை நிச்சயம் சந்திப்பீங்க. இருபதுகள்ல இருக்கிற பசங்க, கலர்தான் அழகுன்னு நினைக்கிறாங்க. அதுவே பொண்ணுங்க கலர் பார்த்தெல்லாம் காதல்ல விழறதில்ல. பொண்ணுங்களைப் பொறுத்தவரைக்கும், அவங்களுக்கு டேட் கிடைக்கிறது சுலபம். ஆனா, யாரை செலக்ட் பண்றது, தப்பான ஆளை செலக்ட் பண்ணிட்டா வாழ்க்கை போயிடுமே, எதிர்காலத்துல இவன் நம்மளை, நம்ம குழந்தையை எப்படிப் பார்த்துப்பான், வீடு வாங்குவானா, கார் வாங்குவானான்னு எல்லாம் ரொம்ப யோசிக்கிறாங்க. சாதாரண டேட் போறதுக்கெல்லாம் இவ்ளோ யோசிக்க வேண்டாம் கேர்ள்ஸ்’’ என்று சிரிப்பவர், ‘ஸ்பீடு டேட் ஈவென்ட்’ பற்றிச் சொன்னார்.

‘` ‘ஸ்பீடு டேட் ஈவென்ட்’ல பத்து டேபிள் இருக்கும். ஒவ்வொரு டேபிள்லேயும் ஒரு பொண்ணு உட்கார்ந்திருப்பாங்க. பத்து பாய்ஸ், பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை டேபிள் மாறி மாறி உட்கார்ந்து, அங்கேயிருக்கிற பொண்ணுங்க கிட்ட பேசுவாங்க. ஐ மீன் டேட் பண்ணுவாங்க. இந்த ஈவென்ட்ல சிலர் சங்கடமா, சங்கோஜமா ஃபீல் பண்ணலாம். அவங்களை ரிலாக்ஸ் பண்றதுதான் என் வேலை. ஒண்ணு தெரியுமா... இப்படி ஒரு ஈவென்ட்லதான் என் ஃபியான்ஸியை நான் மீட் பண்ணினேன்’’ என்று சின்ன வெட்கத்துடன் சொன்னவர்,

‘`அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். ஒரு நாளைக்கு நூறு மெசேஜ், ஐம்பது போன் கால்னு ஒருத்தரைத் தொந்தரவு செய்றது எல்லாம் டேட்டிங்கே கிடையாது’’ - ஸ்ட்ரிக்ட் குருவாகச் சொல்கிறார் வருண்.