Published:Updated:

``எனக்கு முன்னாடி அவ போயிடணும்... அல்லது ரெண்டு பேரும் சேர்ந்து போயிடணும்!’’

பார்கவி - லாமாயா
பிரீமியம் ஸ்டோரி
பார்கவி - லாமாயா

பார்கவியின் பாசப்போராட்டம்

``எனக்கு முன்னாடி அவ போயிடணும்... அல்லது ரெண்டு பேரும் சேர்ந்து போயிடணும்!’’

பார்கவியின் பாசப்போராட்டம்

Published:Updated:
பார்கவி - லாமாயா
பிரீமியம் ஸ்டோரி
பார்கவி - லாமாயா

‘பவர்ஃபுல்’ என்ற ஆங்கில வார்த்தைக்கு ‘பார்கவி’ என்று அகராதியில் அர்த்தம் மாற்றலாம். சென்னை, மாடம்பாக்கத் தில் வசிக்கும் பார்கவி... தாயுமானவர், தந்தையுமானவர். நட்பு வட்டத்திலும் அக்கம் பக்கத்திலும் ‘லட்டுக்குட்டி’ அம்மா வாகப் பிரபலமானவர்.

அற்ப காரணங்களுக்காக வாழ்க்கையை சபிக்கிற யாரும், பத்து நிமிடங்கள் பார்கவியுடன் பேசிக்கொண்டிருந்தால் வாழ்தல் வரமென உணர்வார்கள். பாசிட்டிவிட்டியின் மொத்த உருவமான பார்கவியின் உலகம் அவரின் மகள் லாமாயா மட்டுமே. சிங்கிள் பேரன்ட்டின் வாழ்க்கை சவாலானது என் றால், சிறப்புக் குழந்தையின் தாயாகவும் அந்த வாழ்க்கையை எதிர்கொள்வது அதையும் தாண்டியது. அந்த வகையில் பார்கவி நிச்சயம் ‘ஆச்சர்ய அம்மா’.

``இவதான் லாமாயா. என் லட்டுக்குட்டி. 13 வயசாகுது. ‘லாமாயா’ன்னா சம்ஸ்கிருதத்துல பேச்சாற்றல்மிக்கவள்... லட்சுமி, சரஸ்வதி கடாட்சம் நிறைஞ்சவள்னு அர்த்தம்... என் லட்டுக்குட்டி நிச்சயம் ஒருநாள் பேசுவா... என்னை அம்மான்னு கூப்பிடுவா...’’ நொடிக் கொரு முத்தமும் கட்டியணைக்கிற ஸ்பரிசமும் பார்கவியின் பாசம் உணர்த்துகின்றன.

``லாமாயா கிஃப்ட்டடு சைல்டு. அவளுக்கு செரிப்ரல் பால்சி பிரச்னை இருக்கு. குளோபல் டெவலப்மென்ட்டல் டிலேனு சொல்ற பிரச்னையும் இருக்கு. தலைல நீர் கோத்திருக்கு. அவளால பேசவோ, நடக்கவோ முடியாது...’’ வீல்சேரில் அமர்ந்திருக்கும் லட்டுவை அறி முகப்படுத்தும் பார்கவி, மகளுக்கும் சேர்த்து நிறைய பேசுகிறார்.

``பூர்வீகம் காஞ்சிபுரம். ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடிச்சிட்டு ட்ரைடென்ட், மேரி பிரவுன் உள்பட பெரிய ரெஸ்டா ரன்ட்டுகள்ல செஃப்பா வேலை பார்த்திட்டிருந் தேன். உடம்பு சரியில்லாமப் போனதால ஐடி கம்பெனிக்கு மாறினேன். காதல், கல்யாணம்னு என் வாழ்க்கை தடம்புரண்டது அங்கேதான். லவ் கம் அரேன்ஜ்டு மேரேஜ். எல்லாப் பெண் களையும்போல மனசு கொள்ளாத கனவு களோடுதான் கல்யாண வாழ்க்கையில அடி யெடுத்து வெச்சேன். ஆனா ஒன்றரை வருஷத் துலயே எல்லாம் முடிஞ்சுபோகும்னு நினைக்கலை.

``எனக்கு முன்னாடி 
அவ போயிடணும்...  அல்லது
ரெண்டு பேரும் சேர்ந்து போயிடணும்!’’

கல்யாணமாகி ஒரு வருஷம் கழிச்சு கர்ப்பமானேன். குழந்தை பிறந்த முதல் பதினஞ்சு நிமிஷத்துக்கு அவ அழவே இல்லை. யூரின் போகலை. அப்பவே ஏதோ பிரச்னைனு புரிஞ்சிடுச்சு. பிறந்த மூணாவது நாள் அவளுக்கு மஞ்சள் காமாலையும் வந்தது. அவ உடம்புல நிறைய பிரச்னைகள் இருக்கும், ஸ்பெஷல் சைல்டா இருப்பான்னு டாக்டர்ஸ் சொன்னாங்க. குழந்தை பிறந்ததும் எனக்கும் என் கணவருக்கும் செய்த கேர்யோடைப்பிங் டெஸ்ட்டுல குழந்தைக்கு 15-வது குரோமோ சோம்ல பிரச்னை இருந்ததைக் கண்டு பிடிச்சாங்க. எல்லாரும் குழந்தையைக் கருணைக்கொலை பண்ணச் சொன்னாங்க. எங்கப்பாவும் அம்மாவும் ‘குழந்தை எப்படி இருந்தாலும் நாங்க பார்த்துக்கறோம்’னு எனக்கும் குழந்தைக்கும் ஆதரவா நின்னாங்க. அவங்களாலதான் நாங்க ரெண்டு பேரும் இன்னிக்கு உயிரோட இருக்கோம்..’’ வரு டங்கள் கடந்தும் வார்த்தைகளிலும் வாழ்க்கை யிலும் வலி மிச்சமிருக்கிறது பார்கவிக்கு. குழந்தையின் உடல் நலம் குறித்த அதிர்ச்சியில் இருந்தே மீளாதவருக்கு, கணவரின் போக்கு பேரிடியாக இருந்திருக்கிறது.

``நானும் என் அம்மா, அப்பாவும் குழந்தைக் கான ட்ரீட்மென்ட், ஆஸ்பத்திரினு அலைஞ்சிட்டிருந்தோம். குழந்தையையும் பார்த்துக்கிட்டு, போலீஸ் ஸ்டேஷன், கேஸ்னு அலைஞ்சுக்கிட்டு அந்த வாழ்க்கை எனக்கு ரொம்ப கொடுமையா இருந்தது. அவர் தரப்புலேருந்து விவாகரத்து கேட்டாங்க. நான் அதுக்கு மறுத்தேன். என் குழந்தையை எப்படிப் பார்த்துக்கப்போறோம்ங்கிற மிரட்சி ஒரு பக்கம்... ஆசை ஆசையா காதலிச்சு அத்தனை எதிர்பார்ப்புகளோட ஆரம்பிச்ச வாழ்க்கை, இப்படி சூன்யமாயிடுச்சேங்கிற ஏமாற்றம் இன்னொரு பக்கம்... மனசு தடுமாறி ரெண்டு தடவை தற்கொலைக்கு முயற்சி செய்து காப்பாற்றப்பட்டேன்.

இந்தக் கவலையும் மன அழுத்தமும் அதிக மானதுல குழந்தையை சரியா கவனிக்க முடியாமப் போச்சு. இதுக்கிடையில நாங்க நிரந்தரமா பிரிஞ்சுட்டோம். இனியும் நான் இப்படியே இருக்கிறது எனக்கோ, குழந்தைக்கோ நல்லதில்லைனு முடிவெடுத்து, காஞ்சிபுரத்துல என் அம்மா, அப்பா வீட்டு லேருந்து என் குழந்தையோடு சென்னைக்கு வந்தேன். என் குழந்தையோட உலகமே வீல்சேர்ல முடங்குச்சு. ஆனாலும் நான் கவலைப்படலை. அவளை மாடம்பாக்கத்துல ஒரு ஸ்பெஷல் ஸ்கூல்ல சேர்த்தேன். சிங்கள் மதரான எனக்கு குடியிருக்க வீடு கொடுக்க யாரும் தயாரா இல்லை. ‘வாழாவெட்டி’னு முகத்துக்கு நேரா பேசினாங்க. ‘இவ ஒழுங்கா இருந்திருந்தா அவன் ஏன் விட்டுட்டுப் போயிருக்கப் போறான்’னு கேட்டாங்க. என் குழந்தையைச் சேர்த்திருந்த ஸ்பெஷல் ஸ்கூல்ல வேலை பார்த்திட்டிருந்த நவநீதம் டீச்சர் அவங்க வீட்டு லயே ஒரு போர்ஷனை எங்களுக்கு கொடுத்தாங்க. ஸ்கூலை நடத்தற ரமேஷ், சாந்தி ரமேஷ் தம்பதி, ஸ்பெஷல் குழந்தைகளுக்கு அரசு கொடுக்குற நிதி உதவிகளைச் சொல்லி அதெல்லாம் கிடைக்க உதவினாங்க.

பார்க்குறவங்க எல்லாம் ‘நீ ஏன் உன் வாழ்க்கையை வீணாக்கிட்டிருக்கே... குழந்தையை ஏதாவது ஹோம்ல சேர்த்துட்டு உன் லைஃபை பாரு’ன்னு சொன்னாங்க. நான் அப்படி நினைச்சிருந்தா குழந்தையைக் கருணைக்கொலை செய்யச் சொன்னபோதே சம்மதிச்சிருந்திருப்பேனே... லாமாயாதான் என் உலகம்... அவ இல்லாத ஒரு நொடியைக் கூட என்னால கற்பனை செய்து பார்க்க முடியாது...’’ உருகவைப்பவர் அப்படித்தான் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்.

``லட்டுக்குட்டிக்கு தினமும் ராத்திரியில ஃபிட்ஸ் வரும். வாரத்துல ரெண்டு, மூணு நாள் அது ரொம்ப தீவிரமா வரும். நைட் டெல்லாம் தூங்க மாட்டா. பல வருஷமா இப்படித்தான். நான் தொடர்ந்து 4 மணி நேரம் தூங்கி பல வருஷங்களாச்சு. எனக்கும் உடம்புல நிறைய பிரச்னைகள் இருக்கு. சிசேரியன் பண்ணதுல வந்த முதுகுவலி, அப்புறம் நடந்த ஆக்ஸிடென்ட், அதுக்காக நடந்த ஆபரேஷன்னு ஏகப்பட்ட பிரச்னைகள். ரெண்டு தோள்பட்டைகள்லயும் லிகமென்ட் டேர் இருக்கு. பாப்பா கிட்டத்தட்ட 45 கிலோ இருக்கா. அவளைத் தூக்கி உட்கார வைக்கிறது, குளிப்பாட்டறது, சாப்பாடு கொடுக்கிறதுன்னு எல்லாம் நான்தான் பண்ணணும். அவளைத் தூக்கும்போது என் தோள்பட்டை எலும்பு அப்படியே இறங்கிடும். அந்த எலும்பை மெதுவா தூக்கி வெச்சிட்டு வேலையைப் பார்க் கணும். பெயின் கில்லர்ல தான் வாழ்க்கை ஓடிட் டிருக்கு...’’ வலியுடன் வாழ்ந்து பழகியவரின் பேச்சில் அவ்வளவு வலிமை.

``கிட்டத்தட்ட 13 வரு ஷங்களா நான் சிங்கிள் பேரன்ட்டா தான் இருக்கேன். ரிட்டையர் மென்ட்டுக்கு பிறகு என் அம்மா, அப்பாவும் எங்க கூடவே இருக்காங்க. ஜீவனாம்சம் என்ற பெயர்ல பெயருக்கு ஒரு தொகையைக் கொடுத்த தோடு சரி, என் முன்னாள் கணவர் தரப்புலேருந்து என் குழந்தைக்கு எந்த சப்போர்ட்டும் இல்லை. செஃப்பா இருந்ததால எனக்கு சின்னதா ஒரு கஃபே ஆரம்பிக்கணும்னு ஆசை. ஆனா, பொருளாதார நிலைமை அதுக்கு இடம்கொடுக்கலை. எனக்கு கைவினைக்கலைகள் செய்யத் தெரியும். விதம்விதமான ஜுவல்லரி பண்ணுவேன். என் குழந்தையைவிட்டு ஒரு நிமிஷம்கூட நான் நகர முடியாது. அதனால என் எல்லாக் கனவுகளையும் தள்ளிவெச்சிட்டு, ‘லட்டு ஜுவல்லரி’ என்ற பெயர்ல ஆன்லைன் ஜுவல்லரி பிசினஸ் பண்ணிட்டிருக்கேன். லட்டுக்குட்டி இப்ப கொஞ்சம் கொஞ்சமா தவழவும் முட்டிப்போடவும் முயற்சி பண்றா. அவ நடக்க ஆரம்பிச்சிட்டாலே என் கஷ்டங்கள் எல்லாம் பறந்துடும். அவளை எல்லா இடங்களுக்கும் கூட்டிட்டுப் போகணும். அவ பேச ஆரம்பிச்சு என்கூட நிறைய சண்டை போடணும். என்னை அம்மான்னு கூப்பிடணும். எல்லாத்துக்கும் அடம் பிடிக்கணும்...’’ கண்களின் ஈரம் மறைத்து கனவுகள் சொல்லும் பார்கவிக்கு, இந்தச் சமூகத்துக்குச் சொல்லவும் சில விஷயங்கள் உள்ளன.

``எனக்கு முன்னாடி 
அவ போயிடணும்...  அல்லது
ரெண்டு பேரும் சேர்ந்து போயிடணும்!’’

``குழந்தையை வீல்சேர்ல வெச்சுக் கூட்டிட்டுப்போகும்போது எதிர்ல வர்ற சிலர் எங்களைப் பார்த்துட்டு தலையில அடிச்சுட்டுப் போவாங்க. கார், டூ வீலர்ல போறவங்க எங்க மேல இரக்கமே காட்ட மாட்டாங்க. வீல்சேருக்கு வழியே விட மாட்டாங்க. குழந்தைங்களைக் கூட்டிட்டு எதிர்ல வர்றவங்க என் குழந்தையைப் பார்த்ததும் தன் குழந்தையோட கண்களை மூடுவாங்க. இதெல்லாம் எங்களுக்கு எவ்வளவு வலிக்கும்னு யோசிச்சிருப்பீங்களா?

சிங்கிள் பேரன்ட்டை தப்பா பேசாதீங்க. அவங்களை விதம் விதமான பெயர்வெச்சுக் கூப்பிடாதீங்க. சிங்கிள் பேரன்ட்டின் வாழ்க்கை சவாலானது. அதுலயும் என்னை மாதிரி ஸ்பெஷல் குழந்தைகள் வெச்சிருக்கிற வங்க வாழ்க்கை ரொம்பவே போராட்ட மானது. அவங்க வலியைப் புரிஞ்சுக்கோங்க. எங்களுக்குத் தேவை உங்க இரக்கமில்லை. மரியாதைதான். எங்களைப் பார்த்ததும் ஒதுங்கிப்போறதோ, எங்களை ஒதுக்குறதோ வேண்டாம்...’’ நியாயமான கோரிக்கையை வைப்பவருக்கு அநியாயமான ஆசை யொன்றும் இருக்கிறது.

``ஸ்பெஷல் குழந்தைகளை வெச்சிருக்குற என்னை மாதிரி எல்லா பேரன்ட்ஸுக்கும் இருக்குற ஆசைதான் எனக்கும்... எனக்கு முன்னாடி அவ போயிடணும்... அல்லது நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து போயிடணும்.’’

கடைசி வார்த்தையிலும் கலங்க வைக்கிற பார்கவிக்கு நாம் சொல்ல நினைப்பது ஒன்று தான்.

அற்புதங்கள் நிகழும்... அதுவரை நம்பிக்கையை இழக்காதீர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism