Published:Updated:

ஊடல் ஓகே, ஆனால் டெக்ஸ்ட் சண்டை கூடவே கூடாது... ஏன்?

இரா.செந்தில் குமார்

இணையம் வழியாக ஏந்திச் செல்லப்பட்ட வெள்ளைக்கொடிகள் இதுவரை ஏற்கப்பட்டதே இல்லை என்பதுதான் யதார்த்த உண்மை.

Couple
Couple ( Representational Image )

திருக்குறளில் முதல் குறள் எதுவெனக் கேட்டால், சின்ன குழந்தைகள் முதற்கொண்டு 'அகர முதல எழுத்தெல்லாம்' எனச் சரியாகச் சொல்வார்கள். அதுவே கடைசிக் குறள், அதாவது 1330-வது குறள் எதுவெனக் கேட்டால் ஒருசிலர் தவிர்த்து பெரும்பாலானோர் திருதிருவென முழிப்பார்கள். 'ஊடுதல் காமத்துக்கு இன்பம்' எனத் தொடங்கும் அந்தக் குறள், காதலர்களுக்கு, இணையர்களுக்கு இடையேயான ஊடல் குறித்தானது. அதாவது, ஊடலுக்குப் பிறகு ஒன்று சேர்கையில், ஏற்கெனவே இருக்கும் காதல் உணர்வு இன்னும் அதிகரிக்கும் என்பதுதான் அக்குறளில் வள்ளுவன் நமக்குச் சொல்ல வரும் கருத்து.

இணையம் வழியாக ஆயிரம் ஹார்ட் எமோஜிக்களை அள்ளி வீசினாலும், சிறு ஸ்பரிசத்துக்கு அது ஈடாகாது.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு சொல்லப்பட்டது இன்றளவும் எவ்வளவு சரியாக இருக்கிறது பாருங்கள். எப்போதும் கொஞ்சிக்கொண்டோ, பரஸ்பரம் அன்பு பாராட்டிக்கொண்டோ இருப்பதுகூட சிறு சலிப்பை ஏற்படுத்திவிடுமாம். அதனால் உறவுகள் வலுப்பெற, இணையர்கள் அவ்வப்போது ஊடலும் கொள்ள வேண்டும். அது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் என்றாலும் சரி, இன்றைய இணைய காலம் என்றாலும் சரி.

விஷயத்துக்கு வருவோம். இன்றைக்கு, பெரும்பாலான உரையாடல்கள் இணையம் வழியாகத்தான் நடைபெறுகின்றன. 'சமையலுக்கு என்ன காய்கறி வாங்குவது' என்பதில் தொடங்கி 'வீட்டுக்கு வர லேட் ஆகும்' வரை எல்லாம் வாட்ஸ்அப், மெசேஞ்சர் வழியாகத்தான் பரிமாறப்படுகின்றன. இத்துடன் நின்றுவிட்டால் பரவாயில்லை. இணையர்களுக்கு இடையேயான ஊடல்கள்கூட மெசேஞ்சர் வழியாகவும் டெக்ஸ்ட் வழியாகவும் இருந்தால் அதன் விளைவுகள் எப்படியிருக்கும்?! மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம் சொல்கிறார் கேளுங்கள்..!

love
love

''நிச்சயம் மோசமானதாகத்தான் இருக்கும். இணையம் வழி ஊடலோ, சண்டையோ கூடாதென்பதற்கான முதற்காரணம், நீங்கள் என்ன தொனியில் ஒரு விஷயத்தைச் சொல்ல வருகிறீர்கள் என்பது உங்கள் துணைக்கு சரியாகக் கடத்தப்படாது என்பதே. உதாரணமாக, 'விருப்பமான ஒரு பொருளை வாங்கித் தருகிறாயா?' என உங்கள் இணையர் டெக்ஸ்ட்டில் கேட்டு, 'ஓகே' என ஒற்றை வார்த்தையில் நீங்கள் பதில் டெக்ஸ்ட் அனுப்பினால்... 'சரி' எனச் சொன்னதுகூட தவறாகப் புரிந்துகொள்ளப்பட வாய்ப்பு உண்டு. 'என்னது... ஓகேவா... அப்போ எனக்கு வாங்கிக் கொடுக்க உனக்கு விருப்பம் இல்ல. அதான், ஒரு வார்த்தையில பதில் சொல்ற' என அடுத்து ஒரு பதில் வரலாம். 'நான் ஓகேன்னுதானே சொன்னேன், மாட்டேன்னா சொன்னேன்' என நீங்கள் அதற்கு மறுபதில் தருவீர்கள். 'மாட்டேன்னு வேற சொல்லுவியா நீ' என இந்த டெக்ஸ்ட் உரையாடல் தொடர்ந்தால், அங்கே ஒரு கலவரம் நிச்சயம்.

'ஓகே' என ஒற்றை வார்த்தையில் நீங்கள் பதில் சொன்னதற்கு வேலையோ, மற்ற ஏதோவொரு சூழலோ காரணமாக இருக்கலாம். 'கண்டிப்பா வாங்கித் தர்றேன், நானே உனக்கு வாங்கித் தரலாம்னு நினைச்சேன்' என டைப் செய்ய நேரம் இல்லாமல்கூட அந்த 'ஓகே'யைச் சொல்லியிருக்கலாம். முழுமையான மனநிறைவோடு நீங்கள் அந்த 'ஓகே'யைச் சொல்லியிருந்தாலும், அது வெறும் ஒற்றைச் சொல்லாகத்தான் உங்கள் இணையருக்குக் கடத்தப்பட்டிருக்கும். அதில் இருக்கிற உங்களுடைய காதல், பாவம் காற்றில் அலைந்துகொண்டிருக்கும். இதே வார்த்தையை முகம் பார்த்து நேரடியாகச் சொல்லும்போது, நாம் சிரித்துக்கொண்டே சொன்னால் அது நல்ல ஓகேவாகவும், சோகத்தோடு சொன்னால் அதற்கேற்ற எதிர்வினையும் வரும். ஆனால், இணையத்தில் நீங்கள் மகிழ்ச்சியான மனநிலையோடு சொன்னால்கூட, அது சரியாகப் புரிந்துகொள்ளப்படாது.

டெக்ஸ்ட் வழியான உரையாடல்கள் நடந்த சண்டைக்கு அழிக்க முடியாத ஓர் ஆதாரமாக மிஞ்சிவிடுகின்றன.

வாட்ஸ்அப்பில் ஒரு பொருளை கேட்டதற்கே இவ்வளவு பிரச்னை வருகிறது என்றால், ஊடலையும் சண்டையையும் மெசேஞ்சரில் போட்டுக்கொண்டிருந்தால், என்னவெல்லாம் நிகழ வாய்ப்பிருக்கிறது தெரியுமா? நேரடியாக முகம் பார்த்து ஊடல்கொள்ளும்போதும் சண்டையிடும்போதும், அது பெருமளவுக்குக் கட்டுப்படவும், நமக்குப் பிடித்த முகமாக இருப்பதால் அந்தக் கோபம் குறையவும் அதிக வாய்ப்பிருக்கிறது. இணையத்தில் இதற்குச் சுத்தமாக வாய்ப்பில்லை. அந்த உரையாடலில் ஒருவர் தன்னைச் சார்ந்தே சிந்திப்பார், எதிர்முனையில் இருப்பவரின் நிலையை அவரால் புரிந்துகொள்ள முடியாது.

ஐந்து நிமிடத்தில் முடிய வேண்டிய ஊடலும் சண்டையும் இணையம் வழியாக நிகழும்போது, பல மணி நேரங்கள்கூட எடுக்கும். அப்போதும்கூட சமாதானத்துக்கு வராமல் போகவும் வாய்ப்புண்டு. இதுவே நேருக்கு நேராக நடக்கும்போது, இருவரில் யாராவது ஒருவர் சமாதான முயற்சியில் இறங்குவார். அதனால் ஊடலோ, சண்டையோ ஒரு முடிவுக்கு வந்துவிடும்'' என்றவர் தொடர்ந்தார்.

love
love

''சண்டை நடந்த அந்நேரம், அது குறித்துப் பேசமுடியாதுதான். சிறு நெருடல் இருக்கும்தான். சிறிது நேரம் ஆனாலும்கூட, நேரடியாகப் பேசிவிடுவதான் நல்லது. இணையம் வழியாக ஏந்திச் செல்லப்பட்ட வெள்ளைக்கொடிகள் இதுவரை ஏற்கப்பட்டதே இல்லை என்பதுதான் யதார்த்த உண்மை. இப்படிச் சமாதான தூதுவிட்டு அதற்கான பதில் உடனே வராவிட்டால், அதுவும் தேவையற்ற மன அழுத்தத்தை உண்டாக்கிவிடும். பல சண்டைகள் உருவாவதற்கே இந்த உடனடி பதில் வராமைதான் காரணம். அப்படி இருக்கும்பட்சத்தில் சண்டையின்போதோ, சமாதானத்தின்போதோ பதில் வருவதற்குக் காலதாமதமானால் அது உறவில் இன்னும் பிளவை உண்டாக்கும். எதிர் இருப்பவர் பதில் தர தாமதமானதற்கு பல உண்மையான, நியாயமான காரணங்கள் இருந்தாலும்கூட, அதை நமக்குப் புரியவைக்க முற்பட்டாலும்கூட, நம் மனம் அதை ஏற்காது. அதுவே நேரடியாக என்றால் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.

அடுத்த பிரச்னை, டெக்ஸ்ட் வழியான உரையாடல்கள் நடந்த சண்டைக்கு அழிக்க முடியாத ஓர் ஆதாரமாக மிஞ்சிவிடுகின்றன. கோபத்தில் உதிர்த்த வார்த்தைகளை, அடிக்கடி எடுத்துப் பார்த்துக் கவலைப்படுவது அல்லது அது குறித்து அடிக்கடி சிந்திப்பது என இருந்தால், அது காயத்தை இன்னும் சுரண்டிக்கொண்டிருப்பதற்கு சமம். இது உறவுக்கிடையில் மேலும் மேலும் விரிசலை உண்டாக்கிவிடும். அதனால், இணைய வழியாக நிகழும் ஊடல்களும் சண்டைகளும் ஒரு தவறான பாதையை நோக்கிச் செல்வதுபோல் தோன்றினால் உடனடியாக நிறுத்திக்கொள்வது எனக் காதலர்களும் இணையர்களும் பரஸ்பரம் பேசி முடிவுசெய்து கொள்வது நல்லது.

Psychologist Swathik Sankaralingam
Psychologist Swathik Sankaralingam

முக்கியமாக, நேரடியான சமாதானத்தில், கைப்பிடித்து, தோள் சாய்ந்து அன்போடு ஒரு விஷயத்தைச் சொல்ல முற்படுகையில், அது புரிந்துகொள்ளப்படவும் ஏற்கப்படவும் அதிக வாய்ப்பிருக்கிறது. இணையம் வழியாக ஆயிரம் ஹார்ட் எமோஜிக்களை அள்ளி வீசினாலும், சிறு ஸ்பரிசத்துக்கு அது ஈடாகாது. அதனால் முக்கியமான விஷயங்களை எல்லாம் நேரடியாகப் பேசுவதே சிறந்தது. இணையர்களுக்கிடையில் மட்டுமல்ல, நண்பர்களுடன், உறவினர்களுடன், வேலையிடத்தில் இருப்பவர்களுடன்கூட தனிப்பட்ட விஷயங்களை நேரடியாகப் பேசிவிடுவதுதான் நல்லது'' என்கிறார் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.