Published:Updated:

``என் மகளும் எதிர்காலத்தில் பெண்மைக்கேயான வலிகளைத் தாங்கணுமானு நினைக்கும்போது..!" - மாரி செல்வராஜ்

மகளுடன் மாரி செல்வராஜ்
மகளுடன் மாரி செல்வராஜ்

தகப்பன் பாசமும் கலைஞன் மனசும் ஓர் உயிருக்குள் சேர்ந்திருந்தால், அது தன் குட்டி மகளின் மீது எப்படியெல்லாம் பித்தேறி பாசத்தைப் பொழியும் என்பதற்கு மாரி செல்வராஜின் முகநூல் கடிதங்கள் சிறந்த உதாரணம்!

நவ்வி என்கிற நாஸ்தென்காவிற்கு,

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருந்து அப்பா எழுதும் மூன்றாவது கடிதம்.

...

அப்பா உனக்கொரு ஆட்டுக்குட்டியை ஒரு நாள் பரிசளிப்பேன். இந்த வரியை எழுதத் தோன்றிய அடுத்த நிமிடமே உன்னைப் பார்க்கவேண்டும் போலிருந்தது. அம்மாவை வீடியோ காலில் அழைத்தேன். அம்மா உன்னைக் காட்டினாள். நீ நல்ல உறக்கத்தில் இருந்தாய். உன் மென் மயிர் அசைய உறங்கும் உறக்கத்தை இன்னொரு தேசத்தில், இன்னொரு தேதிக்குள், இன்னொரு கிழமைக்குள் இருந்து பார்க்கிற அந்த உணர்வு நிச்சயமாகவே பெரும் பரவசம் தரக்கூடியதாக இருந்தது நவ்வி.

- மாரி செல்வராஜ்,

டாலஸ், டெக்ஸாஸ் மாகாணம்.

Director Mari Selvaraj and his daughter
Director Mari Selvaraj and his daughter

`பரியேறும் பெருமாளி'ல் அப்பா - மகள் உறவை ஆணவக்கொலையிலிருந்து பாசத்துடன் தப்பிக்கவைத்த இயக்குநர் மாரி செல்வராஜ், தன் ஒன்றரை வயது மகளுக்கு எழுதிய முகநூல் கடிதமொன்றிலிருந்து எடுக்கப்பட்ட சில வரிகள்தான் மேலே இருப்பவை. தகப்பன் பாசமும் கலைஞன் மனசும் ஓர் உயிருக்குள் சேர்ந்திருந்தால், அது தன் குட்டி மகளின் மீது எப்படியெல்லாம் பித்தேறி பாசத்தைப் பொழியும் என்பதற்கு மாரி செல்வராஜின் முகநூல் கடிதங்கள் சிறந்த உதாரணம்.

'உங்கள் நவ்வி பாப்பா பற்றி நிறைய எழுதியிருக்கிறீர்கள்; மகள்களின் உலகம் விரிவடைந்து வருவதைப் பற்றிக் கொஞ்சம் பேசுங்களேன்...' என்றோம், சர்வதேசப் பெண் குழந்தைகள் தினத்துக்கான சிறப்புப் பகிர்வாக.

``எனக்குத்தான், அவ என் மகள்னு தெரியும். அவளுக்கு, தான் ஒரு பெண் குழந்தைன்னு இன்னமும் தெரியாது. அவளை, என் மகள் என்பதைத் தாண்டி சக உயிராத்தான் நான் பார்க்கிறேன். அவ என்னைப் பார்த்து சிரிச்சா, நான் சிரிப்பேன்னு அவளோட அந்தச் சின்ன இதயம் நம்புறது, காலையில எழுந்தவுடன் என்னைப் பார்த்துச் சிரிக்கிறது, நான் நடந்தா என் பின்னாடியே தானும் தத்தித் தத்தி நடந்து வர்றது, நான் ஓடினா என் பின்னாடியே ஓடி வர்றது, நான் கெஞ்சுறப்போ மறுத்துட்டு நான் எதிர்பார்க்காதப்போ முத்தம் கொடுக்கிறது, இவன் என்னை ஆசையாக தூக்கிக்குவான்னு நம்பி தன்னைத் தூக்கச் சொல்றது, நான் வெளியூர் போயிட்டா அவளுக்குத் தெரிஞ்ச உடல்மொழியில் என்னைத் தேடுறது... அப்பப்பா... ஒரு பிஞ்சு உயிர் நம்மை நம்புறதும் தேடுறதும் சொர்க்க அனுபவம்!'' - பிரியம் வழிந்தோடச் சொல்கிறார் மாரி செல்வராஜ்.

அவ நான் செய்றதைப் பார்த்துக்கிட்டிருக்காங்கிறது தெரிஞ்சதுக்கப்புறம், நான் மிகச் சரியானதை மட்டுமே செய்யணும்கிற பயம் வந்துடுச்சு.''
மாரி செல்வராஜ்

ரஷ்ய எழுத்தாளர் தாஸ்தோவ்ஸ்கியின் 'வெண்ணிற இரவுகள்' நாவலில் வருகிற கதாநாயகியின் பெயர், நாஸ்தென்கா. மாரி செல்வராஜின் மகளுக்கு இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தது, இயக்குநர் ராம்.

``நான் செய்றதையெல்லாம் நவ்வியும் செய்வா. அவ நான் செய்றதைப் பார்த்துக்கிட்டிருக்காங்கிறது தெரிஞ்சதுக்கப்புறம், நான் மிகச் சரியானதை மட்டுமே செய்யணும்கிற பயம் வந்துடுச்சு. ஏன்னா, எந்தக் களங்கமும் படியாத ஒரு புது உயிர் நம்மை அப்படியே ஃபாலோ பண்றது எவ்வளவு அற்புதமான விஷயம்!

இதுவரை நான் சொன்னதெல்லாம், ஒரு மகளா நவ்வி எனக்குக் கொடுத்த சந்தோஷங்கள். இனி நான் சொல்லப்போறது, மகளை எப்படி வளர்த்தெடுக்கணும்னு ஒரு தகப்பனா நான் என்னிடம் வளர்த்துவரும் பொறுப்புகள், பக்குவம்.

 Girl Child Day
Girl Child Day

பெண் கருக்கொலைகள், சிசுக்கொலைகள் பார்த்த மண்ணில், பெண் குழந்தை தினம் கொண்டாடுறோம் என்பது பெருமையான தருணம். கல்வி, சத்துணவு, சட்ட உரிமைகள்னு பெண்களுக்கு இவையெல்லாம் மறுக்கப்பட்ட காலம் முடிந்து, அவங்களுக்கான உரிமைகள் அனைத்தும் அவங்களை வந்து சேர்ந்துட்டிருக்கு இப்போ. அதை இன்னும் அழுத்தமா எடுத்துச் சொல்றதுக்கான ஒரு நாளாக, பெண் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுறோம்.

`பாலின வேறுபாடெல்லாம் கிடையாது ராசாத்தி... நீ ஓடி வா, மேல வா...'னு உலகெங்கும் ஒலிக்க ஆரம்பிச்சிருக்கிற குரல்கள்ல, நம்மில் பலரின் குரலும் கலந்திருக்கு. உலகம் முழுக்கப் பூத்துக்கிடக்கிற பெண் குழந்தைகளையும், என் நவ்வியையும், தங்களோட உரிமைகளுக்காக அவங்க போராடத் தேவை இல்லாத ஓர் எதிர்காலம் வரவேற்கும் என்ற நம்பிக்கை, மனசில் இதமா மிதக்குது. ஒரு தகப்பனா, நான் அதுக்கு எப்படித் துணையாக இருக்கப்போறேன் நவ்வி..?!

என் நவ்வியை சக உயிர் என்பதைத் தாண்டி, ஒரு மகளாகப் பார்க்கிறப்போ, என் மனதுக்குள்ளே சில அச்சங்கள் வர்றதை என்னால தவிர்க்க முடியலை. என் மனைவி பிரீயட்ஸ் வலி பத்தி பேசுறப்போ, 'அய்யோ... என் மகளும் சில வருஷங்களுக்குப் பிறகு இந்த வலியைத் தாங்கிக்கணுமா?'னு மனசுக்குள்ள ஒரு வலி வருது. மனைவியோட வலிக்கு வார்த்தைகள்ல எப்படி ஆறுதல் சொல்றோமோ, அதே மாதிரி மகளுக்கும் ஜஸ்ட் வார்த்தைகள்ல மட்டும்தான் ஆறுதல் சொல்வோமான்னு யோசிச்சிருக்கேன். இல்ல நவ்வி... அந்த நாள்கள்ல உன் வேலைகளை, பொறுப்புகளைப் பகிர்ந்துக்கிட்டு உனக்குத் தேவையான ஒய்வைக் கொடுக்கும் உறவுகள் உனக்குக் கிடைக்கும். அதில் ஒருத்தனா நான் இருப்பேன்.

மகளுடன் மாரி செல்வராஜ்
மகளுடன் மாரி செல்வராஜ்

இப்போ என் மகளை நான் குளிப்பாட்டறேன்; டிரெஸ் பண்ணிவிடறேன். இதையெல்லாம் இன்னும் எத்தனை காலத்துக்குச் செய்ய முடியும்? மகள்கள் வளர வளர அப்பா - மகளுக்கு நடுவே ஓர் இடைவெளி வரும்; வரணும்னு இங்கே சில வழக்கங்கள் இருக்கு. அதுக்கப்புறம் மகள்களுக்கு அப்பாக்களைத் தாண்டி ஒரு கல்யாண வாழ்க்கை இருக்கு. அப்போ நவ்வி பாப்பா என்னைவிட்டுப் பிரியத்தானே செய்வா?! என் பாப்பா என்கிட்டே ஷேர் பண்ண முடியாத விஷயங்களும் அவளுக்கு நடக்கும்ல?! இப்படி நான் யோசிக்கிறதையெல்லாம், 'இதெல்லாம் ஓவரா இருக்கே'ன்னுகூட சிலர் சொல்லலாம். ஆனா, இவையெல்லாமே என் மனசுக்குள் ஓடிக்கொண்டிருக்கிற எண்ணங்கள்; என் அகம்சார்ந்த பிரச்னைகள். இதையெல்லாம் மீறி, 'அப்பா, அதெல்லாம் நான் பார்த்துக்குவேன்'னு தம்ப்ஸ் அப் காட்டுற பொண்ணா என் நவ்வி வளர்ந்து நிப்பா என்ற நம்பிக்கை, என் தகப்பன் தவிப்புகளைத் தணிச்சு தைரியம் கொடுக்குது.

சில புறம்சார்ந்த பிரச்னைகளும், நவ்வி வளர வளர என் மனசில் ஊர்ந்துவருது. இந்த உலகத்தைப் பத்தி நமக்குச் சில கருத்துகள் இருக்குமில்லையா? அந்த முன் முடிவுகளை எல்லாம் உடைச்சு, நவ்விக்கு ஓர் அழகான உலகத்தை நான் காட்டப்போறேன். அது எப்படின்னு இப்போ எனக்குத் தெரியலை. ஆனா, அதையும் நவ்வியே எனக்குச் சொல்லிக்கொடுப்பா. 'இப்படிச் செய்ப்பா'னு அவளுக்குச் சொல்லத் தெரியாதுதான். ஆனா, 'இதெல்லாம் அழகுப்பா'னு அவ சொல்லும்போது, அந்த அழகுகளை அவ வழி முழுக்க அடுக்க நான் தானாவே கத்துக்குவேன்.

ரஷ்ய எழுத்தாளர் தாஸ்தோவ்ஸ்கியின் 'வெண்ணிற இரவுகள்' நாவலில் வருகிற கதாநாயகியின் பெயர், நாஸ்தென்கா. மாரி செல்வராஜின் மகளுக்கு இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தது, இயக்குநர் ராம்.

அவளுக்கு அத்தனை சுதந்திரமும் கொடுப்பேன். இந்த உலகம் அதையெல்லாம் எப்படிப் பார்க்கும்னு ஓர் உறுத்தல் என் மனசுல இல்லாமல் போகாதுதான். 'நான் சரியானதைச் செய்றேன், சந்தோஷமா இருக்கேன்ப்பா'னு நவ்வியே அந்த உறுத்தலை அழிச்சு எனக்குத் தெளிவைக் கொடுப்பா. இப்போ குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்ல. அந்த மனஉளைச்சல் எனக்கும் இருக்கு. அதுக்காக, அவ வெளியைச் சுருக்கிடமாட்டேன். அவளை ஆசைப்படி சுதந்திரமா நடக்கவிட்டு, ஒவ்வோர் அடியிலும் பாதுகாப்பா பின்தொடர்வேன்.

'கேர்ள் பவர்' காட்ட வளர்ந்துவரும் எல்லா பெண் குழந்தைகளுக்கும், என் நவ்விக்கும்... பெண் குழந்தை தின வாழ்த்துகள்!

`நோக்கம் நிறைவேறிடுச்சு... எந்தவொரு வருத்தமும் இல்லை!'- தேசிய விருது குறித்து மாரி செல்வராஜ்
பின் செல்ல