Published:Updated:

``இனி நீங்க படமெடுக்காதீங்கன்னு சொன்னாங்க என் மனைவி!'' - இயக்குநர் பி.வாசு

இயக்குநர் பி.வாசு

இதழில் வெளியாகும் தொடரின் நீட்சியாக விகடன் இணையதளத்திலும் இந்த ஆண்களைப் புரிந்துகொள்ளும் சூத்திரத்தை பலதுறை பிரபலங்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகள் வாயிலாக தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் இயக்குநர் பி.வாசு.

``இனி நீங்க படமெடுக்காதீங்கன்னு சொன்னாங்க என் மனைவி!'' - இயக்குநர் பி.வாசு

இதழில் வெளியாகும் தொடரின் நீட்சியாக விகடன் இணையதளத்திலும் இந்த ஆண்களைப் புரிந்துகொள்ளும் சூத்திரத்தை பலதுறை பிரபலங்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகள் வாயிலாக தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் இயக்குநர் பி.வாசு.

Published:Updated:
இயக்குநர் பி.வாசு

`பெண் மனது ஆழமானது’ என்று ஆணுக்கு சொல்லியிருக்கிற இந்த சமூகம், ஆண் மனது எப்படிப்பட்டது என்று பெண்ணுக்குச் சொன்னதாகவே தெரியவில்லை. தான் நேசிக்கிற ஒரு காரணத்துக்காகவே, `அவர் ரொம்ப நல்லவர்’ என்று சர்ட்டிஃபிகேட் கொடுப்பதற்கும், பொள்ளாச்சி சம்பவம் போல ஆபத்தில் மாட்டிக் கொள்வதற்கும், ஆண்களைப்பற்றிய சரியான புரிந்துணர்வு பெண்களுக்கு இல்லாததுதான் காரணம். அந்த வகையில் ஆண்களைப் பற்றி பெண்களுக்கு முழுமையாகப் புரிய வைத்துவிட வேண்டும் என்பதற்காக அவள் விகடனில் `ஆண்களைப் புரிந்துகொள்வோம்' என்கிற தொடரை எழுத ஆரம்பித்திருக்கிறோம்.

இந்தத் தொடர் ஆண்களின் தவறுகளை மட்டுமல்ல; அவர்கள் உலகத்து அவஸ்தைகளையும் பேசும். சென்ற இதழ்களில், பிளேபாய் மற்றும் சாக்லெட் பாய் இயல்புகளையும், பெண்களின் மார்பகத்தை உற்றுப்பார்க்கிற ஆண்களைப்பற்றியும், குடும்ப வன்முறைகள், உருவகேலி, உருகி உருகிக் காதலித்தவன் திருமணத்துக்குப் பிறகு பாராமுகம் காட்டுவது ஏன் ஆகியவை குறித்தும் பேசியிருந்தோம். இந்த இதழில் `ஆண்கள் ஏன் வீட்டு வேலை செய்வதில்லை?' பற்றிப் பேசியிருக்கிறோம்.

இதழில் வெளியாகும் தொடரின் நீட்சியாக விகடன் இணையதளத்திலும் இந்த ஆண்களைப் புரிந்துகொள்ளும் சூத்திரத்தை பலதுறை பிரபலங்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகள் வாயிலாக தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் இயக்குநர் பி.வாசு.

ஆண்கள் ஏன் வீட்டு வேலைகள் செய்வதில்லை; குடும்பத்தலைவிகளின் உழைப்பை ஏன் அவர்கள் மதிப்பதில்லை; வேலைபார்க்கும் பெண்களின் கணவர்கள்கூட வீட்டு வேலைகளை ஏன் தங்கள் தினசரி கடமைகளில் ஒன்றாக நினைப்பதில்லை ஆகியவற்றுக்கான நிபுணர்களின் பதில்களை அவள் விகடன் இதழில் எழுதியிருக்கிறோம். இதே கேள்விகளை இயக்குநர் பி.வாசு அவர்களிடமும் கேட்டோம்.

Relationship
Relationship

``ஆண்கள் வீட்டு வேலைகள் செய்வதென்பது அவங்களுடைய வீட்டுச் சூழ்நிலைக்கேற்ப மாறும் என்பது என்னோட கருத்து. 40 பேர் இருந்த கூட்டுக்குடும்பத்துல பிறந்தவன் நான். அத்தனை பேருக்கும் பெண்களால சமைக்க முடியாதுன்னு வேலைக்கு ஆள் வெச்சார் அப்பா. இதைத்தாண்டி வீட்டுப் பெண்கள் ஒரு பாயசம் வெச்சாகூட அத்தை தேங்காய்த் துருவி பாலெடுத்தா, சித்தி சேமியாவை வறுத்துட்டு இருப்பாங்க. என் மனைவிக்கு நல்லா சமைக்கத் தெரியும். ஆனா, அப்பாவைப் பார்த்து வளர்ந்ததால என் வீட்லேயும் சமையலுக்கு ஆள் வெச்சிருக்கேன்.

அப்பாவைப் பார்த்து நான் கத்துக்கிட்ட இன்னொரு நல்ல விஷயமும் இருக்கு. அம்மாவை `ங்க’ போட்டுத்தான் பேசுவார் அப்பா. கோபப்படுறப்போகூட, `என்ன நீங்க இப்படிப் பண்ணிட்டீங்களே’ன்னு சொல்வார். அப்பாவைப் பார்த்து வளர்ந்ததால, கல்யாணமாகி இந்த 35 வருஷத்துல என் மனைவியை நான் `டி’ போட்டுப் பேசினதில்ல.

அப்பா காலத்துல எங்க வீட்ல சமையல் வேலை பார்த்துக்கிட்டிருந்தவர் பேரு முத்தையா. இப்ப அவருக்கு 83 வயசாச்சு. என் கூடத்தான் இருக்கார். இப்ப அவர் சமைக்கிறதில்ல. அப்பா இருந்த வரைக்கும் அவுட்டோர் போறப்போ அவர் கால்கள்ல விழுந்துட்டு போவேன். இப்போ முத்தையா கால்ல விழுந்துட்டுப் போறேன். எங்க வீடுகள்ல சமையல் செய்றவங்களை வீட்ல ஒருத்தராத்தான் நாங்க நடத்துறோம்.

இயக்குநர் பி.வாசு.
இயக்குநர் பி.வாசு.

என் மனைவியைப் பத்தி ஒரு வரியில சொல்லணும்னா, ரொம்ப அறிவானவங்க. என்னுடைய `மெல்லப் பேசுங்கள்’ படம் வெளியானப்போ எங்களுக்குக் கல்யாணமாகி சில மாசங்கள்தான் ஆகியிருந்துச்சு. படத்தோட புரொஜெக்‌ஷன் பார்த்துட்டு வெளியே வந்தவங்க, கார்ல உட்கார்ந்துட்டு அழ ஆரம்பிச்சிட்டாங்க. படத்தோட சோகமான முடிவைப் பார்த்துட்டுதான் அழறாங்கன்னு நான் அவங்களை சமாதானம் செஞ்சேன். அதுக்கு அவங்க சொன்னது இப்போ வரைக்கும் என் காதுல ஒலிச்சுட்டிருக்கு. ``நாயகியின் பாவாடை புடவையைத்தாண்டி வெளியே தெரியுது. இதைக்கூட கவனிக்காம என்ன டைரக்டர் நீங்க? உங்க அசிஸ்டென்ட்ஸ் எல்லாம் இதைக் கவனிக்கலையா? பாரதிராஜா, பாலசந்தர், மகேந்திரன் மாதிரி இயக்குநர்களுக்கு மத்தியில படம் பண்ணியிருக்கீங்க. அவங்க அளவுக்கு பண்ணலைன்னாலும், நல்லா பண்ணியிருக்கலாமே. இனிமே நீங்க டைரக்ட் பண்ண வேண்டாம்"னு சொன்னாங்க.

அப்படியே ஆடிப்போயிட்டேன். அந்தளவுக்கு அறிவான, தைரியமான மனைவி. ``என் படத்துக்கு உன்னை நான் ரசிகையாக்கிக் காட்டுறேன்'னு அந்த இடத்துலேயே சொன்னேன். அதுக்கப்புறம் 10 வருஷங்கள் கழிச்சு `சின்னதம்பி’ படம் பார்த்துட்டு `ஐயம் யுவர் ஃபேன்’னு சொன்னாங்க. இப்படிப்பட்ட மனைவியை ஜஸ்ட் சமையல்கட்டுக்குள்ள மட்டும் முடக்க முடியுமா?

ஆனா, அவங்களுக்குப் பிடிச்சு எங்களுக்கு சமைச்சுத் தர்ற ஸ்பெஷல் உணவுகள் நிறைய இருக்கு. அப்படி அவங்க சமைக்கிறப்போ, சாப்பிட்டவுடனே பாராட்டிடுவேன். `மலபார் போலீஸ்’ படப்பிடிப்பு அப்போ அவங்க சமைச்ச `மாம்பழ மோர்க்குழம்பை’ சாப்பிட்ட நடிகர் ஜெய்கணேஷ், என்கிட்ட அவங்களோட நம்பர் வாங்கிப் பாராட்டினார். அன்னிக்கு, நான் வீட்டுக்கு வந்தப்போ அவங்க முகம் அவ்ளோ பிரகாசமா இருந்துச்சு. சமையலும் உழைப்புதான். அதுக்கான அங்கீகாரம் அவங்களுக்கு அன்னிக்கு கிடைச்சது இல்லையா... என்னோட மகன் சக்தி நல்லா சமைப்பான். மாசத்துக்கு ரெண்டு ஞாயிற்றுக்கிழமை வீட்ல அவனோட சமையல்தான்.

கடைசியா ஒரு விஷயம், வீட்டு வேலைகளுக்கும் சமையலுக்கும் ஆள் வெக்கிறது எல்லா கணவருக்கும் சாத்தியமில்லதான். முடிஞ்சவங்க வைக்கலாம். முடியாதவங்க வீட்டு வேலைகள்ல பங்கெடுத்துக்கலாம். அதுவும் முடியலைன்னா, அட்லீஸ்ட் அவங்க உழைப்புக்கான மரியாதையாவது கொடுத்துடணும்கிறது என்னோட கருத்து.''

ஆண்கள் ஏன் வீட்டு வேலை செய்வதில்லை என்பதற்கான உளவியல் காரணங்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.