Published:Updated:

“அன்பா இல்லைன்னாலும்... ஒதுக்காம இருங்க!”

ஜெய்சங்கர்
பிரீமியம் ஸ்டோரி
ஜெய்சங்கர்

- மனம் குமுறும் மாற்றுத்திறனாளி தம்பதியர்...

“அன்பா இல்லைன்னாலும்... ஒதுக்காம இருங்க!”

- மனம் குமுறும் மாற்றுத்திறனாளி தம்பதியர்...

Published:Updated:
ஜெய்சங்கர்
பிரீமியம் ஸ்டோரி
ஜெய்சங்கர்
‘‘உடம்புல குறைங்கிறதால குடும்பமும் சமூகமும் எங்களை ஒதுக்கிடுச்சு. ஒயர்க்கூடை பின்னி அரை வயிறு பசியாத்திக்கிறோம். கிடைக்கிற கொஞ்ச நஞ்ச வருமானமும் மருந்து, மாத்திரைக்கே சரியாப் போயிடுது. `ஒதுக்கப்பட்ட ஏழைக்குக் கைக்கூலி காயம்தான்’னு நெதமும் கத்துக்கொடுக்குது இந்த உலகம்... தற்கொலை பண்ணிக்கலாம்னு நெனைக்கிறப்பல்லாம் குழந்தை முகத்தைப் பார்த்து உசுரை மீட்டுக்குறோம்” - பால்முகம் மாறாத பாலகனை இழுத்தணைத்து, உச்சிமுகர்ந்தபடியே உளக் குமுறல்களைக் கொட்டினார் ஜெய்சங்கர். மாற்றுத்திறனாளிகளான காதல் தம்பதியர் ஜெய்சங்கர் - சித்ரா வசிக்கும் அந்த சின்னஞ்சிறு வீடெங்கும் துயரத்தின் இருள் கவிழ்ந்திருக்கிறது. அந்த அடர்ந்த இருளிலும் நம்பிக்கை விளக்காக ஒளிர்கிறான் பாலகன் ‘தீபன்’!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே எடத்தனூர் - தென்முடியனூர் கிராமக் கூட்டுரோடு பகுதி ஜெ.பி.நகரில் பத்துக்கு பத்து பரப்பேகொண்ட வாடகை வீட்டில் வசிக்கிறார்கள் இந்தத் தம்பதியர். இருவருக்குமே வயது 31. ஜெய்சங்கர் மூன்று அடி உயரமுடையவர். பிறக்கும்போதே வலது கால் வளைந்திருந்ததால், நடப்பதற்கே சிரமப்படுகிறார். அவரின் காதல் மனைவி சித்ரா, பிறந்ததிலிருந்தே எழுந்து நடந்தது கிடையாது. கால்களில் பிரச்னை... 31 ஆண்டுகளாகக் குழந்தையைப்போலத்தான் தவழ்கிறார். துயரம் தோய்ந்த இருவரையும் நம்பிக்கையை நோக்கி இணைத்தது, காதல்!

ஜெய்சங்கர்தான் முன்வந்து பேசினார்... ‘‘சொந்த ஊர் செங்கம் பக்கத்துல சாமந்திபுரம். ஐ.டி.ஐ படிச்சிருக்கேன். ஊனமாகப் பிறந்ததால் வீட்டுக்கும் சுமையாப் போயிட்டேன். தண்டராம்பட்டில் ஹாஸ்டல்ல தங்கி பள்ளிப் படிப்பை முடிச்சேன். படிக்குற இடத்துல எல்லாம் ‘குள்ளா குள்ளா’னு கேலி செய்வாங்க. 2011-ல புதுச்சேரியில ஒரு டிரஸ்ட்டில் தங்கி ஐ.டி.ஐ படிச்சுக்கிட்டு இருந்தேன். ஒருமுறை அப்பா செல் நம்பருக்கு போன் பண்ணப்ப ஒரு பொண்ணு பேசிச்சு... ‘இந்த நம்பரு உங்ககிட்ட எப்படி வந்துச்சு’ன்னு கேட்டேன். கோபமான அந்தப் பொண்ணு, ‘ஒழுங்கா நம்பரை சரி பாருங்க... பொண்ணுங்ககிட்ட பேசுறதுக்குன்னே வந்திடுறாங்க. போனை வந்து எடுக்குறதுக்குள்ள எனக்கு உடம்புவலி, உசுரு போயிருச்சு. நானே ஒரு மாற்றுத்திறனாளி’னு கோபமா பேசினாங்க. பதறிப்போய், ‘சாரிங்க, நானும் ஒரு மாற்றுத்திறனாளிதாங்க’னு சொல்லிட்டு போனைவெச்சுட்டேன்.

“அன்பா இல்லைன்னாலும்... ஒதுக்காம இருங்க!”

எனக்கு கண்ணுல கண்ணீர் முட்டிக்கிச்சு... என்னை நினைச்சு வருத்தப்படுறதா, ஒரு போனை எடுக்கக்கூட முடியாம கஷ்டப்படற அந்தப் பொண்ணை நினைச்சு பரிதாபப்படுறதான்னு தெரியலை. அப்புறம் அந்த நம்பருக்கு போன் பண்ணலை. குடும்பமே என்னை ஒதுக்கின போதெல்லாம் அன்புக்காக ஏங்கித் தவிச்ச சூழல் அது” என்று கண்கலங்கிய ஜெய்சங்கர், தனது காதல் கைகூடிய அழகான தருணத்தையும் சொன்னார்...

‘‘என்னவோ தெரியலை... அந்தக் குரல் மட்டும் மனசுக்குள்ள அடிக்கடி கேட்டபடியே இருந்துச்சு. ஆறு மாசம் போச்சு. ‘அந்தப் பொண்ணும் நம்மளைப்போல மாற்றுத் திறனாளிதானே... மனம்விட்டுப் பேசிப் பார்ப்போம். ஒருவேளை ரெண்டு பேருக்குமே ஆறுதல் கிடைக்கலாம்’னு தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு போன் பண்ணினேன். போனை எடுத்தவங்க, கண்டபடி திட்டிட்டு, ‘இந்த சின்னியம்பேட்டை சித்ராகிட்ட உன் வேலையை காட்டாதே ராஸ்கல்... வெளுத்துப் புடுவேன்’னு போனை கட் பண்ணிட்டாங்க. வாழ்க்கைபூரா ‘ஒண்ணுத்துக்குமே பிரயோஜனமில்லாதவன்... நீயெல்லாம் பூமிக்கு பாரம்’னு வாங்கின திட்டுகளுக்கு மத்தியில முதல் முதலா சந்தோஷத்தைக் கொடுத்துச்சு சின்னியம்பேட்டை சித்ராவோட திட்டு... திட்டுற கோவத்துல அவங்க ஊர் பேரையும் சொல்லிட்டதுதான் எங்க காதல் கதையோட ட்விஸ்ட்” என்றவரை செல்லமாக முறைத்துவிட்டு, திரும்பிக்கொண்டார் ‘சின்னியம்பேட்டை’ சித்ரா! தொடர்ந்தார் ஜெய்சங்கர்...

“சின்னியம்பேட்டை பக்கத்து ஊராப் போச்சா... எப்படியாவது சித்ராவைப் பார்க்கணும்னு மனசு தவிச்சுது. அடிக்கடி போன் பண்ணினேன். ஒருகட்டத்துல பேச ஆரம்பிச்சாங்க. என்னை மாதிரியே சித்ராவும் குடும்பத்தினரால புறக்கணிக்கப்பட்டவங்கதான். உட்கார்ந்த இடத்துலயே சிறுநீர், மலம் கழிக்கணுங்கிறதால அவளை கரிச்சுக் கொட்டிக்கிட்டே இருந்திருக்காங்க. அதனால, 2005-ல் வீட்டுலருந்து வெளியேறுன சித்ரா, திருவண்ணாமலையில மாற்றுத் திறனாளிகளுக்கான டிரஸ்ட்டில் தங்கி வேலை பார்த்துக்கிட்டிருந்தாங்க.

நானும் ஐ.டி.ஐ முடிச்சுட்டு கோயம்புத்தூருக்கு வேலைக்குப் போயிட்டேன். பழகி அஞ்சு வருஷமாகியும் என் காதலை சித்ராகிட்ட சொல்லலை. 2015 புத்தாண்டுல சித்ராகிட்ட காதலைச் சொல்லிட்டேன். ‘லவ் செட்டாகாது’னு சொல்லி அவாய்ட் பண்ணினாங்க. நான் விடாமப் பேசினேன்... மூணு மாசத்துக்கு அப்புறம் சம்மதிச்சாங்க. ரெண்டு பேரும் வீட்டுல பேசினோம். ‘வௌங்காத ரெண்டு பேரும் சேர்ந்து என்னத்தக் கிழிக்கப்போறீங்க?’னு திட்டிட்டு கை கால் நல்லாயிருக்கிற சொந்தக்காரப் பொண்ணை எனக்குக் கல்யாணம் பண்ணிவெக்கப் பேசி முடிச்சாங்க. திடீர்னு கல்யாணப் பொண்ணு என்னைத் தனியா கூப்பிட்டு, ‘தயவு செஞ்சு கல்யாணத்தை நீயே நிறுத்திடு. குள்ளனைக் கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பமில்லை. மீறிக் கல்யாணம் நடந்தா ஓடிப்போயிடுவேன்’னு சொல்லிச்சு.

“அன்பா இல்லைன்னாலும்... ஒதுக்காம இருங்க!”

இதுதான் சந்தர்ப்பம்னு 2015, ஏப்ரல் 6-ம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குச் சித்ராவை அழைச்சுக்கிட்டுப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். கல்யாணக் கோலத்துல இருந்த எங்களை நோக்கி வேக வேகமா வந்தாங்க சித்ராவோட அம்மா... ஆசீர்வாதம்தான் பண்ண வந்தாங்களோன்னு குனிஞ்சு நின்னோம். ரெண்டு பேரையும் அடி பின்னிட்டாங்க. அப்புறம், கையில இருந்த கொஞ்சம் காசைவெச்சு தண்டராம்பட்டு பகுதியில் 300 ரூபாய் வாடகை வீட்டில் குடும்பம் நடத்த ஆரம்பிச்சோம். பேக்கரியில மாசம் 1,500 ரூபாய் சம்பளத்துல வேலை கிடைச்சுது. முதல் குழந்தை நிக்கலை. ரெண்டு வருஷம் கழிச்சு சித்ரா திரும்பவும் கருத்தரிச்சாங்க. எங்க ரெண்டு பேரு வீட்டுலருந்தும் யாரும் வரலை. ஹவுஸ் ஓனர் முனியம்மாதான் வளைகாப்பு செஞ்சுவெச்சாங்க.

எங்க வாழ்க்கையில விளக்கேத்த வந்ததா நெனைச்சு பையனுக்கு `தீபன்’னு பேருவெச்சோம். அவனுக்கும் பொறந்தப்ப ஒரு கால் லேசா வளைஞ்சுதான் இருந்துச்சு. பதறிப்போனோம். ஆபரேஷன் பண்ணின பிறகு இப்போதான் ஓரளவு நல்லா இருக்கான். பையன் பிறந்த ஒரு வருஷத்துக்குள்ள சித்ராவுக்கு தைராய்டு பிரச்னை வந்துருச்சு. உடம்பு ஊதிப்போய் முடக்குவாதம் வந்துடுச்சு. படுத்த படுக்கையாகிட்டாங்க. அவங்களைப் பார்த்துக்கிறதுக்காகவே பேக்கரி வேலையிலருந்து நின்னுட்டேன். மூணு வருஷத்துக்கு அப்புறம் இப்பத்தான் அவங்களால உட்கார முடியுது. எடத்தனூர்- தென்முடியனூர் கூட்ரோட்டுல இருக்கிற இந்த வீட்டுக்கு வந்து ரெண்டு வருஷம் ஆகப்போகுது.

“அன்பா இல்லைன்னாலும்... ஒதுக்காம இருங்க!”

சாப்பாட்டுக்கே வழியில்லை. மருத்துவச் செலவுக்கு ரொம்ப கஷ்டப்படுறோம். பக்கத்து வீட்டு அக்காகிட்ட ஒயர்க்கூடை பின்னுற தொழிலைக் கத்துக்கிட்டோம். குழந்தைகளுக்கான லஞ்ச் பேக், ஸ்டார் கூடை, பூஜை கூடைனு பின்னுறோம். வாரத்துக்கு ரெண்டு பை வித்தாலே பெரிய விஷயம். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை எனக்குக் கிடைக்கலை. பலமுறை மனு எழுதியும் பிரயோஜனமில்லை. சித்ராவுக்கு மட்டும் மாசம் ஆயிரம் ரூபாய் வருது. பாத்ரூம் வசதியும் இல்லை. ஒதுக்குப்புறமாகத் தான் போகணும். சித்ரா காலைக் கடன்களைப் போனா நான்தான் சுத்தப்படுத்தி, ஒதுக்குப்புறமான இடத்துல கொண்டுபோய்ப் போடுவேன். இதனால அக்கம்பக்கத்துல அருவருப்பா பார்க்குறாங்க. எங்க மேல அன்பா இல்லைன்னாலும், ஒதுக்காம இருக்கலாம். முடக்குவாதப் பிரச்னைக்கு, புதுச்சேரி ஜிப்மருக்குப் போகச் சொன்னாங்க. நான் எப்படி சித்ராவை இங்கருந்து ஜிப்மருக்கு கூட்டிக்கிட்டுப் போக முடியும்... கலெக்டர் ஐயா, எம்.எல்.ஏ சாருனு பல பேர்கிட்ட உதவி கேட்டேன். மஹூம்... யாரும் உதவலை.

நாங்க என்ன பாவம் செஞ்சோம்? குழந்தையோட எதிர்காலத்தை நெனைச்சாலே பயமா இருக்கு. பலமுறை தற்கொலை முடிவுக்குப் போயிட்டோம். குழந்தை முகத்தைப் பார்த்துதான் முடிவை மாத்திக்கிட்டோம். யாராவது எங்களுக்கு உதவி பண்ணுங்க... பெருசால்லாம் எதுவும் வேணாம். சித்ராவுக்கு மருத்துவச் சிகிச்சை கொடுத்து, அவளைக் காப்பாத்திக் கொடுங்க... பையனைப் படிக்க வெக்கணும். அவன் பெரியவனாகி, எங்களை மாதிரி பிறந்தவங்களுக்கு உதவி பண்ணணும். அதுக்காகத்தான் இந்த உசுரைப் பிடிச்சு வெச்சிருக்கோம்’’ என்றார் மனைவி, குழந்தையை அணைத்தபடி!

நம்பிக்கையின் முன்பாக ‘நம் பிம்பங்கள்’ ஒன்றுமே இல்லை... காத்திருங்கள், கதவருகே எட்டிப் பார்க்கும் வெளிச்சம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism