லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

பாலுறவுக்கு ஏற்ற வயது... சட்டம், மருத்துவம், சமூகம் சொல்வதென்ன? - பேசாததைப் பேசுவோம்!

பேசாததைப் பேசுவோம்
பிரீமியம் ஸ்டோரி
News
பேசாததைப் பேசுவோம்

#Lifestyle

பெண்கள் பாலுறவுக்கு இசைவு தெரிவிக்கும் வயது (Age of sexual consent) வரையறை குறித்து பல்வேறு தளங்களில் உரையாடல்கள் நிகழ்ந்து வருகின்றன. உலக நாடுகளில் 12 முதல் 21 வரை வெவ்வேறு விதமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இந்த வயது, இந்தியாவில் 18 ஆக உள்ளது. அதை 16 ஆகக் குறைக்க வேண்டும் என்று ஒரு தரப்பும், 18 வயதிலிருந்து குறைக்கக் கூடாது, வேண்டுமென்றால் அதிகரிக்கலாம் என்று அதற்கு எதிர்த்தரப்பும் கூறி வருகின்றன.

இந்த நிலையில், இது பற்றி விகடன் இணையதளத்தில் விரிவாகக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதன் சுருக்கப்பட்ட வடிவம் இங்கே. பாலியல் இசைவு வயது குறித்து பல்துறை நிபுணர்கள் சொல்வது என்ன?

தீபா கணேஷ், பெண்கள்நல சிறப்பு மருத்துவர்

‘‘பெண்ணுக்கு உடல்ரீதியாக அடிப்படையான வளர்ச்சிகள் 18 வயதில்தான் நிறைவு பெறுகின்றன ஆகவேதான் பிறப்புறுப்பில் மேற்கொள்ளப்படும் முக்கிய மான அறுவைசிகிச்சைகள் பெரும்பாலும் 18 வயதுக்குப் பிறகு, செய்யப் படுகின்றன. மேலும், உளவியல் ரீதியாகப் பாலுறவுக்குத் தயாராவதற்கும், போதிய விழிப்புணர்வுடன் இயங்குவதற்கும் ஏற்புடையதாக இருக்கும் என்பதால்தான் 18 வயதை பரிந்துரைக்கிறோம். பாதுகாப்பற்ற உடலுறவால் தொற்றுக்கு ஆளாகும் பதின்வயதுப் பெண்களுக்கு சிகிச்சை அளித்திருக்கிறேன். பாலுறவு பற்றிய சரியான புரிந்துணர்வு மற்றும் எச்சரிக்கையுணர்வு அவர்களிடத்தில் இல்லை என்பதை உணர முடிகிறது.

பாலுறவுக்கு ஏற்ற வயது... 
சட்டம், மருத்துவம், சமூகம் சொல்வதென்ன? - 
பேசாததைப் பேசுவோம்!

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கு மிக இளம் வயதில் உடலுறவு கொள்வதும் முக்கியக் காரணியாக இருக்கிறது. மேலும், கருத்தடை சாதனங்கள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாது பயன்படுத்தும்போது அது தோல்வியுற்று கரு உண்டாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. பருவமடைந்ததுமே பாலுறவுக்கான உந்துதல் ஏற்படுவது இயல்புதான். அதில் தவறில்லை. ஆனால், மருத்துவரீதியாக 18 வயதுக்குப் பிறகு பாலுறவில் ஈடுபடுவதே ஆரோக்கியமானது.’’

தீபா கணேஷ் - ஷாலினி
தீபா கணேஷ் - ஷாலினி

ஷாலினி, உளவியல் நிபுணர்

‘‘பாலியல் இசைவு வயது வரையறை என்பது, 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்ணைக் காதலிக்கிற ஆணை `போக்சோ' சட்டத்தில் தண்டிப்பதற்காகப் பல நேரங்களில் பயன்படுத்தப் படுகிறது. ஆண்-பெண் இரு வரும் காதலித்தாலும் ஆண் தண்டனைக்குத் தள்ளப்படுவதால், 18 என்கிற வயதை 16 ஆக மாற்றலாம். 16 வயதில் அறிவுத்திறன் வளர்ச்சி முழுமையடைவதால்தான், பல நாடுகளில் பாலுறவுக்கான இசைவு தெரிவிக்கும் வயதை 16 ஆக நிர்ணயித்திருக்கிறார்கள். தனக்கான பாலியல் தேர்வை அந்த வயதில் ஒரு பெண்ணால் முடிவு செய்ய முடியும் என நம்புகிறார்கள். நம் நாட்டிலோ அதில் பதற்றம் இருக்கிறது. பெண்ணின் பாலியல் தேர்வில் சரி, தவறு என்று எதுவுமே இல்லை. கற்பு நெறியைத் தூக்கிப்பிடித்து திருமணத்துக்கு முந்தைய உடல்ரீதியான உறவை மறுக்கும் கலாசார அமைப்பி லிருந்துதான் சரி, தவறு என்கிற பார்வை உருவாகிறது. பெண்ணின் ஒப்புதலோடு மேற்கொள்ளப்படும் உறவுதான் அது. என்றாலும், அவள் ஏதோவொன்றை இழக்கிறாள் என்று கருதுவது நமது இந்திய மனநிலை.

அதற்காக, 18 வயதுக்கு முன்பே உடலுறவு கொள்ளுங்கள் என்று யாரும் சொல்லவில்லை. ஆனாலும், அது நடந்துகொண்டிருக் கிறது. அதற்காக அது குற்றம் ஆகிவிடாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறோம். ஆகவேதான் பாலியல் இசைவு வயதை 16 ஆகக் குறைக்கும்படி கூறுகிறோம்.’’

அஜிதா, வழக்கறிஞர்

‘‘காதல் வயப்பட்டு 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையிடம் உறவுகொள்ளும் ஆண், `போக்சோ' சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார். ஒருவேளை அந்த ஆண், 18 வயதுக்குக் குறைவானவராக இருந்தாரெனில் சிறார் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு அவர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படுவார். இதில் தொடர்புடைய அப்பெண் குழந்தை, தனது சம்மதத்தின் பெயரில்தான் இந்த உடலுறவு நிகழ்ந்தது என்று தெரிவித்தாலும் சட்டபூர்வமாக அது செல்லுபடியாகாது. ஏனென்றால் 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு பாலியல் உறவுக்கான சம்மதம் தெரிவிக்கும் உரிமையில்லை.

தமிழ்நாட்டில் மட்டும் `போக்சோ' சட்டத்தின் கீழ் ஆண்டுக்கு சராசரியாக 1,500 வழக்குகள் பதியப்படுகின்றன. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கெதிராகக் கொண்டு வரப்பட்ட மிகச்சிறந்த சட்டம் போக்சோ. ஆனால், 18 வயதுக்கு முன்பு காதல் உறவில் ஈடுபடுகிறவர்கள்கூட இச்சட்டத்தின்படி குற்றவாளியாகக் கருதப்படுவர். எனவே, காதல் உறவு கொள்கிறவர்களையும், பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறவர்களையும் பிரித்துப் பார்க்கும்படி சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.’’

அஜிதா - கீதா நாராயணன் - மோகன் நூகுலா
அஜிதா - கீதா நாராயணன் - மோகன் நூகுலா

கீதா நாராயணன், சமூகச் செயற்பாட்டாளர்

‘‘பதின்வயதுப் பெண்களுக்குப் பாலுறவுக்கான உந்துதல் ஏற்படுவது இயற்கைதான். ஆனால், மிகவும் இளம் வயதில் உறவு சார்ந்து எடுக்கிற முடிவுகள் தவறாவதற்கான வாய்ப்புகள் அதிகம். உளப்பூர்வமாக நெருக்கம் உண்டாகாமல் ஓர் உறவுக்குள் செல்ல முடியாது. இந்த நிலையில், தனது தேர்வு தவறாகும்போது அதிலிருந்து வெளியேறுவது கடினம் என்பதை பெண் குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். எனவே, பாலுறவு தேர்வை பொறுப்புணர்வுடன் மேற்கொள்வதற்கு வயது முதிர்ச்சியும், 18 என்ற வயது வரையறையும் தேவை.

வளரிளம் பருவம் என்பது ஒட்டுமொத்த வாழ்க்கைக்கான அடித்தளத்தை எழுப்புவதைப் போன்றது. அந்த வயதில் பாலுறவு ரீதியான கவனச்சிதறல் ஏற்படுவது ஆரோக்கியமானதல்ல. தங்களுக்கான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளும் வரையில் எந்தத் திசைதிருப்பமும் இல்லாமல் மனதை நேர்க்கோட்டில் கொண்டு செல்லக் கற்றுக்கொடுக்க வேண்டும். அதன் பிறகு, அவர்கள் தங்கள் விருப்பத்துக்கேற்ற இணையைத் தேடிக்கொள்ளலாம். பள்ளிகளில் பாலியல் கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டியதும் முக்கியம்.’’

பாலுறவுக்கு ஏற்ற வயது... 
சட்டம், மருத்துவம், சமூகம் சொல்வதென்ன? - 
பேசாததைப் பேசுவோம்!

மோகன் நூகுலா, மானுடவியல் ஆய்வாளர்

‘‘உடலைப் புனிதப் படுத்திப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லைதான். ஆனால், குறிப்பிட்ட வயதுவரை பாலுணர்ச்சியைக் கட்டுப்படுத்தப் பழக வேண்டும் என்று சொன்னால் அது பிற்போக்குவாதமாகப் பார்க்கப்படுவதைத் தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உலக அளவில் செக்ஸுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்த சமூகங்கள் அத்தனையும் பெரும் வீழ்ச்சியைத்தான் சந்தித்திருக்கின்றன. முற்போக்கு வாதம் என்கிற பெயரில் நமது சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களை அடியோடு மறுக்கிற போக்குதான் இன்றைக்கு நிலவி வருகிறது.

இன்றைக்கும் மனித இனம் ஆண் - பெண் உறவை முழுமையாகக் கையாளத் தெரியாமல் திணறி வருகிறது. காபி குடிப்பதைப்போல் அல்ல காமம். அது மிகவும் உணர்வுபூர்வமானது. தான் விரும்பும் நபருடன் உறவுகொள்ளும் உரிமை அனைவருக்கும் இருக்கிறதுதான். ஆனால், அதற்கான வயது வரையறை அவசியம். பக்குவப்படுதல் என்பது ஒவ்வொருவரது சூழலைப் பொறுத்து மாறுபடும். எனவே, சராசரியாகத் தெளிவான முடிவை நோக்கி நகர 25 வயதாவது தேவை என்பதை என் கருத்தாக முன்வைக்கிறேன்.

உங்கள் கருத்து என்ன?

விகடன் இணையதளத்தில் பாலியல் இசைவு வயது பற்றிய வாக்கெடுப்பு ஒன்று நடத்தியிருந்தோம். அதன் முடிவு...

பாலுறவுக்கு ஏற்ற வயது... 
சட்டம், மருத்துவம், சமூகம் சொல்வதென்ன? - 
பேசாததைப் பேசுவோம்!

உலக நாடுகள் சிலவற்றில் பெண்களுக்கான சட்டபூர்வ பாலியல் இசைவு வயது

பாலுறவுக்கு ஏற்ற வயது... 
சட்டம், மருத்துவம், சமூகம் சொல்வதென்ன? - 
பேசாததைப் பேசுவோம்!

ஆஃப்கானிஸ்தான், ஈரான், குவைத், லிபியா, மாலத்தீவு, ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, சூடான், ஏமன் - திருமணம் செய்திருக்க வேண்டும்.