லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

விவாகரத்து... சிக்கித் தவிப்பவர்களுக்கு கைகொடுக்கும் ‘கின்ட்சுகி’!

சிக்கித் தவிப்பவர்களுக்கு கைகொடுக்கும் ‘கின்ட்சுகி’!
பிரீமியம் ஸ்டோரி
News
சிக்கித் தவிப்பவர்களுக்கு கைகொடுக்கும் ‘கின்ட்சுகி’!

விவாகரத்துதான் தீர்வுனு முடிவெடுக்கிற பலருக்கும் அதுக்கான சரியான வழிகாட்டுதல் இல்லை. சினிமாவுல காட்டறதுதான் டைவர்ஸ்னு நினைச்சுக்கிறாங்க.

‘வீழ்வேன் என்று நினைத்தாயோ...’

கதவு திறந்து வரவேற்கும் இந்துவின் சிரிப்போடு, சட்டென கவனம் ஈர்க்கிறது இந்த வார்த்தைகளைத் தாங்கிய அவரது டாட்டூ. சென்னையைச் சேர்ந்த இந்து கோபால், ‘புராஜெக்ட் கின்ட்சுகி’ என்ற பெயரில் ஸ்டார்ட்அப் நிறுவனம் நடத்துகிறார். விவாகரத்து மற்றும் குடும்ப வன்முறைக்குள்ளான பெண்களுக்கு உதவும், வழிகாட்டும் நிறுவனம் இது.

‘`ஜப்பானிய மொழியில ‘கின்ட்சுகி’ன்னா உடைஞ்சுபோனதை தங்கத்தை வெச்சு ஒட்டறதுனு அர்த்தம். என்னுடைய வாழ்க்கையில நான் உடைஞ்சுபோய் நின்னபோது ஒரு ஃபிரெண்ட் இந்த வார்த்தையை அனுப்பி னாங்க. அதனாலதான் என் கம்பெனிக்கும் அதையே பெயரா வெச்சேன்...’’ தன்னம்பிக்கை தளும்புகிறது இந்துவின் பேச்சில்.

‘`திருச்சியில பிறந்து சென்னையில வளர்ந் தேன். பி.காம் படிச்சிட்டு, பெங்களூர்ல வேலை பார்த்திட்டிருந்தேன். 23 வயசுலயே வீட்ல என் கல்யாணப் பேச்சை ஆரம்பிச் சிட்டாங்க. எனக்குப் பிடிக்காத ஒருத்தருக்கோ, வெளிநாட்டு மாப்பிள்ளைக்கோ கல்யாணம் பண்ணிவெச்சிடுவாங்களோன்னு எனக்கு பயம். அதனால ஏற்கெனவே அறிமுகமாகி, பழகின என் ஃப்ரெண்டையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என் வயசுல, எனக்குப் பிடிச்ச ஒருத்தரோட அந்த லைஃப் ரொம்ப ஜாலியா இருக்கும்னு நினைச்சேன். ஆனா அப்படி இல்லை...’’ எதிர்பார்ப்பு பொய்த்துப் போன திருமண உறவில் உடல், மனரீதியான வன்முறைகளின் உச்சத்தை அனுபவித்திருக் கிறார் இந்து.

விவாகரத்து... சிக்கித் தவிப்பவர்களுக்கு கைகொடுக்கும் ‘கின்ட்சுகி’!

‘`கல்யாண வாழ்க்கையில பிரச்னை வர ஆரம்பிச்சதும் அதையெல்லாம் சரிபண்ண எல்லா முயற்சிகளும் எடுத்தேன். விவாகரத்து தான் தீர்வுனு முடிவு பண்ணி, அதுக்கான வேலைகளை ஆரம்பிச்ச பிறகும்கூட கோர்ட் கொடுக்கிற கவுன்சலிங்கும் எடுத்துக்கிட்டேன். ஆனா, எந்த முயற்சியும் உதவலை. 2023-லயும் விவாகரத்துங்கிறது வெளிப்படையா பேசக் கூடாத ஒரு விஷயமா இருக்கு. பிரச்னைகள் இல்லாத வீடுகளே இல்லை. கணவன் மனை வியை அடிக்கிறதோ, மனைவி கணவனை அடிக்கிறதோ நடக்குது. ஆனா, அவங்களைப் பொறுத்தவரை இதெல்லாம் நாலு சுவர் களுக்குள்ள நடக்கிற விஷயம், வெளியே பேசினா தப்பு’னு யாரும் பேசறதில்லை.

விவாகரத்துதான் தீர்வுனு முடிவெடுக்கிற பலருக்கும் அதுக்கான சரியான வழிகாட்டுதல் இல்லை. சினிமாவுல காட்டறதுதான் டைவர்ஸ்னு நினைச்சுக்கிறாங்க. ஒருமுறை அடிச்சாலே குடும்ப வன்முறைதானா அல்லது ரத்தம் வர்ற அளவுக்கு அடிச்சாதான் குடும்ப வன்முறையா, அடிச்சாதான் வன்முறை... இப்படி நிறைய குழப்பங்கள் நிறைய பேருக்கு இருக்கு. ஆனா குடும்ப வன்முறைங்கிறது உடல்ரீதியா, உணர்வுரீதியா, மனரீதியா, பாலியல்ரீதியா, பொருளாதார ரீதியா... எப்படி வேணா இருக்கலாம்ங்கிற விழிப்பு உணர்வு இங்கே இல்லை... '' யதார்த்த சூழலின் நிஜம் உணர்த்தும் இந்து, தன் விவாகரத்து விஷயத்தில் சந்தித்த பிரச்னைகள், குழப் பங்கள், கஷ்டங்கள் மற்ற பெண்களுக்கும் வரக்கூடாது என்ற எண்ணத்திலேயே ஸ்டார்ட் அப் முயற்சியை ஆரம்பித்திருக்கிறார்.

‘`விவாகரத்துனு முடிவெடுத்ததும் என் விஷயத்துலயும் வக்கீலை எப்படி அணுகறதுங் கிறதுல ஆரம்பிச்சு விவாகரத்தை நோக்கின ஒவ்வொரு ஸ்டெப்புமே புதுசா இருந்தது.ஒவ்வொரு விஷயத்தையும் நான் தனியாதான் ஹேண்டில் பண்ணேன். அப்பதான் தெரபிங் கிற விஷயம் எனக்குத் தெரிய வந்தது. ‘நடந்த எல்லாத்துக்கும் நீதான் காரணம்... எல்லா தப்பும் உன்மேலதான்’னு பேசறவங்களுக்கு மத்தியில, ‘உங்களுக்கு இப்படியெல்லாம் நடந் திருக்கா’னு அக்கறையா கேட்டு என்னை தைரியமா பேசவெச்சவங்க தெரபிஸ்ட்தான். அவங்ககிட்ட பேச ஆரம்பிச்சபிறகுதான் எனக்கே ஒரு தெளிவு வந்தது. என் திருமண வாழ்க்கையில எனக்கு நடந்த விஷயங்கள் எல்லாம் அத்துமீறல்னு புரிஞ்சது. பிரச்னைகள் வரலாம்... அதையெல்லாம் சரிசெய்யணும்னா கணவன்-மனைவி ரெண்டு பேரும் முயற்சி செய்யணும்... ஒருத்தர் மட்டுமே எல்லாத்தையும் சரியாக்கிட முடியாதுனு புரிஞ்சது.

2018-ல 27 வயசுல எனக்கு விவாகரத்து நடந்து முடிஞ்சது. ஒரு மாறுதலுக்காக வேலையை பெங்களூருக்கு மாத்திக்கிட்டுப் போனேன். விவாகரத்து ஒருவிதமான சுதந் திரத்தைக் கொடுத்தாலும், அதுக்குப் பிறகான தனிமையை எதிர்கொள்றது கஷ்டம்தான். எனக்கு 30 வயசானபோது `ஐ'ம் 30... சிங்கிள்... டிவோர்ஸ்டு  அண்டு டிப்ரெஸ்டு'னு சோஷி யல் மீடியாவுல போட்டேன். அதுக்கப்புறம் பலரும் என் வாழ்க்கையிலயும் இப்படி நடந்திருக்குனு சொன்னாங்க. அவங்கள்ல பலரும் சோஷியல் மீடியாவுல தங்களை ரொம்ப சந்தோஷமான நபர்களா வெளிப் படுத்திக்கிட்டவங்களா இருந்தாங்க. வெளி உலகத்துக்கு அவங்க காட்ட விரும்பின முகம் அது... சோஷியல் மீடியாவை வெச்சு ஒருத்த ரோட வாழ்க்கையை ஜட்ஜ் பண்ணக் கூடாதுங்கிற பெரிய தெளிவு அப்பதான் வந்தது. அப்படி என்கிட்ட பேசினவங்க சிலருக்கு என்னால முடிஞ்ச உதவிகளைப் பண்ணிட்டிருந்தேன். தனிப்பட்ட முறையில இப்படி உதவறதுக்கு பதிலா நாம ஏன் ஒரு ஃபோரம் ஆரம்பிக்கக்கூடாதுனு யோசிச்சேன். ‘இனிமே என் வாழ்க்கை என்னவாகப் போகுது... இன்னொரு கல்யாணம் நடக்குமா’னெல்லாம் யோசிச்சிட்டிருந்த போது அடுத்தவங்களுக்கு வழிகாட்டற இந்த வேலை என் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தைக் கொடுத்தா ஃபீல் பண்ணேன். வக்கீல், தெரபிஸ்ட், தற்கொலை மீட்பு ஆலோசகர் கள்னு பலரோட எண்களையும் வாங்கி, பகிர ஆரம்பிச்ச முயற்சி, இன்னிக்கு ஸ்டார்ட்அப் கம்பெனியா வளர்ந்திருக்கு.

விவாகரத்து மற்றும் குடும்ப வன்முறைக்கு வழிகாட்டற கம்பெனினு சொன்னதுமே, ‘அப்போ நீங்க எல்லாருக்கும் டைவர்ஸ் வாங்கிக் கொடுத்துடுவீங்களா, விவாகரத்தை நார்மலைஸ் பண்றீங்களா'ன்னுதான் பலரும் கேட்கறாங்க. என் நோக்கம் அதுவல்ல. ஆனா வன்முறை நிறைஞ்ச உறவுக்குள்ள சிக்கி வெளியே வர முடியாம தவிக்கிறவங்களுக்கும், விவாகரத்து ஆகப் போகுது, ஆனதும் என்ன செய்யறதுனு தெரியலைனு கேட்கறவங்களுக் கும், விவாகரத்துக்குப் பிறகு வெளியே வர முடியாமல் தவிக்கிறவங்களுக்கும் வழிகளைக் காட்டறேன். இந்த ஸ்டார்ட் அப் மூலமா உதவிகள் கேட்கறவங்ககிட்ட சின்னதா ஒரு கட்டணம் வாங்கறேன். வக்கீலுக்கோ, கவுன் சலிங்குக்கோ, தெரபிக்கோ செலவு பண்ண முடியாத பெண்களுக்கு உதவறதுக்குதான் அந்தக் கட்டணம். இப்போதைக்கு தமிழ் பேசற தமிழ்நாட்டுப் பெண்களுக்கு மட்டும் பண்ணிட்டிருக்கேன். அடுத்து இந்த முயற்சியை ஆண்களுக்கும் விரிவுபடுத்தறது, குடும்ப வன்முறையிலேருந்து வெளியே வந்த பெண்களுக்கு வேலைவாய்ப்புக்கு உதவறதுனு நிறைய திட்டங்கள் இருக்கு...’’ தன்னலமின்றி யோசித்தவர் விஷயத்தில் முதல் கோணல் முற்றும் கோணல் என்பது பொய்த்திருக்கிறது.

‘`முதல் திருமணத்துலேருந்து வெளியே வந்ததும், சமுதாயம் என்ன கேட்குமோ, நாளைக்கு எனக்கு குழந்தை பிறக்காமப் போயிடுமோனெல்லாம் யோசிச்சு அவசரமா இன்னொரு கல்யாணம் பண்ணக்கூடாதுங் கிறதுல தெளிவா இருந்தேன். எனக்குப் பிடிச்ச, என்னை நல்லா புரிஞ்சுக்கிட்ட ஒருத் தரைதான் கல்யாணம் பண்ணணும்னு இருந் தேன். 2022-ம் வருஷம் அப்படியொரு நப ரோடு எனக்கு கல்யாணமாச்சு. பிரச்னை, குடும்ப வன்முறைகள்னு உங்க வாழ்க்கை யிலயும் கஷ்டங்கள் இருந்தா, இதையெல்லாம் எப்படி வெளியே பேசறது, யார் புரிஞ்சுப்பாங்க, இனிமே லைஃப்ல என்ன இருக்குனு முடங்கிடாதீங்க. வெளியே பேசுங்க, உதவி கேளுங்க. உங்க பிரச்னைகளைப் புரிஞ்சுகிட்டு யாராவது வழிநடத்தினா நல்லாருக்கும்னு நினைச்சா என்னை தொடர்பு கொள்ளுங்க.. நிபுணர்களோட தொடர்பு மட்டும் கொடுத்து உதவினீங்கன்னா போதும்னு நினைக்கிறவங் களும் என்னை அணுகலாம்...’’ உள்ளன்போடு சொல்கிறார் இந்து.

உடைந்ததை ஒட்டவைப்போம்... தங்கத்தால்!