
நல்ல நண்பருடன் இருக்கும்போது எண்டார்பின், செரட்டோனின், டோபமைன், ஆக்ஸிடோசின் போன்ற ஹார்மோன்கள் மூளையில் சுரக்கும்.
நட்பு... வாழ்க்கையில் பலரும் விரும்பும், வேண்டும் உன்னத பந்தம். நம்பிக்கையான நட்பு கிடைப்பது என்பது ஆசீர்வாதம்
தான். இரு தனிப்பட்ட மனிதர்களுக்கு இடையேயான இந்த உறவில், ஒருவருக்கு ஒருவர் பகிரும் அன்பும் அக்கறையும் அடிப்படை. ஜாலி, கேலி எல்லாம் சந்தோஷ போனஸ். ‘அவன் என்னை மாதிரியே...' என்று ஒத்த இயல்புகளால் நண்பர்கள் ஆகிறவர்களும் உண்டு. ‘அவ எனக்கு நேரெதிர்...' என்று இரண்டு எதிர்ரெதிர் துருவங்கள் நட்பால் இணைவதும் உண்டு. வாழ்க்கை முழுக்க எத்தனையோ முகங்களைக் கடந்தாலும், சிலர்தான் நண்பர்களாக ஆயுள் முழுக்க உடன் பயணிப்பார்கள். கஷ்ட, நஷ்டங்களில் உடன் நிற்பார்கள்.
மனித வாழ்க்கையில் நட்பு எவ்வளவு முக்கியம் என்பது பற்றியும், நல்ல நட்பு செய்கிற மேஜிக் பற்றியும் பேசுகிறார், சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் மினி ராவ்...

‘‘மனிதன் ஒரு சமூக விலங்கு. அவனை ஆற்றுப்படுத்துவதில் நட்புக்கு மிகமிக முக்கிய இடமுண்டு. நட்பு என்பது அரவணைப்பு, நம்பிக்கை, உறுதுணை என அனைத்தையும் கொடுக்கும் ஓர் உறவு. இப்படிப்பட்ட புனிதமான நட்பு அனைவருக்கும் முக்கியமானது... ஆரோக்கியமானதும்கூட. வழிகாட்டியாகவும், நல்ல உறுதுணையாகவும் ஒரு நட்பு அமையும் போது நம் சுயமரியாதையும் தன்னம்பிக்கையும் உயரும். சுதந்திரம் விரியும்.
நல்ல நண்பருடன் இருக்கும்போது எண்டார்பின், செரட்டோனின், டோபமைன், ஆக்ஸிடோசின் போன்ற ஹார்மோன்கள் மூளையில் சுரக்கும். இவற்றில் எண்டார்பின் பாசிட்டிவ் எனர்ஜியைக் கொடுக்கும். செரட்டோனின் மனச்சோர்வு மற்றும் பதற்றத்திலிருந்து காக்கும். ஆக்ஸிடோசின் நம்மை சந்தோஷமாக வைத்திருக்கும். டோபமைன் நம்பிக்கையை ஊட்டும்.
நல்ல நண்பரிடம் நம்முடைய சுக துக்கங்களைப் பகிரலாம், மனம் விட்டுப் பேசலாம், பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம், ஆறுதல் தேடலாம். மொத்தத்தில் நல்ல நண்பர் நமக்கு நல்ல தெரப்பிஸ்ட் ஆகவும் இருப்பார்'' என்கிற மினி ராவ், நட்பை ஆரோக்கியமாக நீட்டிக்கச் செய்வதற்கான டிப்ஸையும் பகிர்கிறார்.

‘‘ஒரு நட்பு நீடிக்க அவர்களுடன் எப்போதும் தொடர்பிலேயே இருப்பது மிக மிக அவசியம். அதற்காக அவர்களை நேரில்தான் சந்திக்க வேண்டும் என்பதில்லை. சின்ன மெசேஜ்கூட நமது நட்பை வலுவாக்கும்.
ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன். எனவே நண்பருக்கு உதவி தேவைப்படும்போது, எந்தக் காரணம் சொல்லியும் தட்டிக்கழிக்காமல் அவருக்குத் துணையாக இருக்க வேண்டும்.
நட்பை மேலும் ஆழமாக்க நண்பர்களின் குடும்பத்தாரோடு பழகலாம். அடிக்கடி நண்பர்களைச் சந்திக்காவிட்டாலும், வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையாவது சந்தித்து நட்பு பாராட்டுங்கள்.
எப்போதும் நண்பரைப் பற்றிப் பிறரிடம் புறம் பேசாதீர்கள். அப்படிப் புறம் பேசி, அது மற்றொருவர் மூலம் உங்கள் நண்பருக்குத் தெரியவந்தால், நட்பில் பெரிய விரிசல் விழலாம். நண்பன் ஏதாவது தவறு செய்தால், அதை ஊதிப் பெரிதாக்காமல் பக்குவமாகப் பேசித் திருத்த முயலுங்கள்.
நட்பில் உண்மையும் நேர்மையும் மிக மிக முக்கியம். எனவே நட்பில் போலியாக இருக்காதீர்கள்.’’

நட்புனா என்னன்னு தெரியுமா..?
சராசரியாக ஒரு மனிதனுக்கு 3-5 நெருக்கமான நண்பர்களும், 10-15 நண்பர்களும், 100-150 பழக்கமானவர்களும் இருப்பார்கள் என்கிறது ஓர் ஆய்வுத் தகவல்.
நல்ல நட்பு இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும், வாழ்க்கையில் வெற்றிகரமானவராகவும் இருப்பார்களாம்.
மனிதர்கள் மட்டுமல்ல; விலங்குகளும் நட்பு பாராட்டுமாம். அவை பிற இன விலங்குகளுடன்கூட நட்பை வளர்க்குமாம்.
நம்பகமான நட்பு 18 வயதிலிருந்து 26 வயதுக்குள் உருவாகுமாம்.
பேசத் தொடங்கும் முன்பே குழந்தைகள் நட்பை வளர்க்கத் தொடங்கிவிடுகிறார்களாம்.