Published:Updated:

அத்துமீறும் கணவர்கள்... அனுமதிக்கும் மனைவிகள்... முதல்புள்ளியே... முற்றுப்புள்ளியாகட்டும்!

இயலாமையும் பதற்றமும் வார்த்தை வன்முறையும் ஆண்களுக்கு வெளியுலகிலும் நிகழும். ஆனால், அங்கு அவர்கள் கை ஓங்க மாட்டார்கள்.

பிரீமியம் ஸ்டோரி

‘பிக் பாஸ் போட்டியாளர்’ அபிஷேக் ராஜாவின் முன்னாள் மனைவி தீபா, அபிஷேக் தன்னை அடித்துக் கொடுமைப்படுத்திய தகவலை வீடியோ ஒன்றில் பகிர்ந்திருந்தார். கூடவே, ‘உங்கள் கணவர் முதல்முறை அடிக்கும்போதே எதிர்ப்பைத் தெரிவியுங்கள். அப்போது விட்டுவிட்டால் அவர் உங்களை அடிப்பது வாடிக்கை யாகிவிடும்...’ என்று ஆண்களின் உளவியலையும் போட்டு உடைத்திருந்தார்.

கல்வி, பொருளாதாரம், நல்ல பின்புலம் என எதுவுமே கை ஓங்கும் ஆண்களுக்கு அது தவறென கற்றுத்தராதது ஆச்சர்யம். கணவனாக இருப்பதையே கை ஓங்குதலுக் கான அங்கீகாரமாக நினைத்துக்கொள்கிறார்கள் பலரும்.

மனைவியை, கணவன் அடிப்பதற்கான உளவியல் பின்னணி குறித்து மனநல மருத்துவர் ஷாலினியிடம் கேட்டபோது, ``சுயமரியாதை இல்லாதபோதும், இயலாமையிலும், ‘என் மனைவி என்னை மதிக்கலையோ’ என்ற பதற்றத்திலும் பல ஆண்கள் கை ஓங்கிவிடுகிறார்கள். ‘உங்க கணவர் அடிக்கிறதுக்கு முன்னாடி என்ன நடந்துச்சும்மா’ என்றால், ‘கோபத்துல அவரையும் அவர் குடும்பத்தையும் திட்டிட்டேன் டாக்டர்’ என்பார்கள். ‘அவ தப்பு பண்ணா. அதான் அடிச்சேன்’ என்பார்கள் கணவர்கள்.

இயலாமையும் பதற்றமும் வார்த்தை வன்முறையும் ஆண்களுக்கு வெளியுலகிலும் நிகழும். ஆனால், அங்கு அவர்கள் கை ஓங்க மாட்டார்கள். அதாவது, ஓங்க முடியாது என்பதில் தெளிவாக இருப்பார்கள்.

பல ஆண்களால் ‘அதிகார ஆளுமை நிறைந்த பெண்களை’ சமாளிக்கவும் சகித்துக்கொள்ளவும் முடிவதில்லை. இங்கே அதிகார ஆளுமை நிறைந்த பெண்கள் என்று நான் குறிப்பிடுவது படித்து, கைநிறைய சம்பாதிக்கும் பெண்களை மட்டுமல்ல. ‘அன்னதானம் எல்லாருக்கு மானது. அதை நாங்க சாப்பிடக் கூடாதுன்னு தடுக்க நீங்க யாரு...’ என்று கேள்வி கேட்கத் தெரிந்த பெண்களையும் சேர்த்தே சொல் கிறேன். இப்படிப்பட்ட பெண், வாழ்க்கை இணையாகிவிட்டால், அவர் யதார்த்தமாக நியாயத்தைப் பேசினாலும் கையை ஓங்கி விடுகிறான் ஆண்.

அத்துமீறும் கணவர்கள்... அனுமதிக்கும் மனைவிகள்... முதல்புள்ளியே... முற்றுப்புள்ளியாகட்டும்!

இன்னொரு பக்கம், ‘என் தாத்தாவுக்கும் என் அப்பாவுக்கும் அடங்கி நடந்த பெண்கள், எனக்கு ஏன் அடங்கி நடக்கவில்லை’ என்ற குமுறலையும் கை ஓங்குவதன் மூலம் வெளிப் படுத்துகிறார்கள். மனைவியை அடிப்பது தவறென கணவனுக்கு நன்றாகவே தெரியும்.

அபிஷேக் ராஜாவின் முன்னாள் மனைவி கூறியிருப்பதுபோல முதல் தடவையே அதைக் கண்டியுங்கள். மகனோ, அண்ணன், தம்பியோ அல்லது நண்பனோ, மனைவியை கை ஓங்கு கிறவராக இருந்தால் அந்தக் காட்டுமிராண்டித் தனத்தைச் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப் பும் பெண்களுக்கு இருக்க வேண்டும்.

இந்த மனநிலைக்கு என்னதான் தீர்வு?

‘அடிப்பது கணவனின் உரிமைகளில் ஒன்று’ என நம்பும் பெண்கள் இந்தக் காலத்திலும் இருக்கிறார்கள். அடிப்பது வன்முறை என உணராத ஆண்களும் பலர் இருக்கிறார்கள். அம்மாவை அடிக்கிற அப்பாவைப் பார்த்து வளர்ந்தவர்கள் அவர்கள். பெண்ணை அடிப்பது சட்டப்படி தவறு. அதற்குத் தண்டனை உண்டு என்பதைப் புரிந்துகொண்டு திருந்துவது மட்டுமே இதற்கான தீர்வு’’ என்கிறார் ஷாலினி.

பாலினச் சமத்துவம் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்!

“பெண் மீதான ஆணின் வன்முறை செயல்கள், அவர் திருமண வயதை நெருங்கிய உடனோ அல்லது திருமண பந்தத்துக்குள் நுழைந்த பிறகு திடீரென்றோ வெளிப்படாது. சிறு வயதிலிருந்தே இருக்கும் கோப குணத்தின் வெளிப்பாடுதான், பிற்காலத்தில் வன்முறை எண்ணங்கள் உருவாகக் காரணமாகிறது” என்கிற உளவியல் ஆலோசகர் சித்ரா அர்விந்த், ஆண் பிள்ளைகளை வளர்க்கும் முறையில் வீட்டிலிருந்தே பாலின சமத்துவம் மலர்வதற்கான ஆலோசனைகளைக் கூறுகிறார்.

“பெண் என்பவள் பணிந்து செல்பவள், ஆண் என்பவன் ஆதிக்கம் செலுத்தக்கூடியவன் என்ற பிற்போக்கு எண்ணத்தை எந்தச் சூழலிலும் இருபால் குழந்தை களுக்கும் ஏற்படுத்தவே கூடாது. கணவன் தன் மனைவியை அடிப்பது, திட்டுவதுபோன்ற காரியங்களையும், தம்பதியர் அடிக்கடி சண்டை யிடுவதையும் பிள்ளைகள் முன்னிலையில் செய்யும்பட்சத்தில், ‘இதெல்லாம் தப்பில்லைபோல...’ என்ற எண்ணம் பிள்ளைகள் மனதில் பதிய வாய்ப்புள்ளது.

இவற்றைத் தவிர்த்து, வேலைக்குச் செல்வது, வீட்டு வேலைகள், நிதித் திட்டமிடல், குழந்தை வளர்ப்பு உட்பட எல்லா விஷயங்களையும் கணவன் - மனைவி பகிர்ந்து செய்வதுடன், எல்லா வற்றிலும் இருவருக்குமே சரிசமமான உரிமை இருக்கிறது என்பதை, தங்கள் இல்லறத்தின் மூலம் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும். இத்தகைய சூழலில் வளரும் பெரும்பாலான ஆண் பிள்ளைகளுக்கு, ஆணாதிக்க சிந்தனை ஏற்படாது.

‘இது ஆண்களுக்கான விளையாட்டு; இது பெண் களுக்கான விளையாட்டு’ என்று விளையாட்டிலேயே வேற்றுமையை விதைப்பது, ‘ஆம்பளைப்புள்ள கோபப்படுறது சகஜம்’ என்பதுபோன்ற பாலினரீதியான எதிர்மறை சிந்தனைகளைப் பிள்ளைகளின் மனதில் ஏற்படுத்தக் கூடாது.

சிறு வயதில் தனக்குப் பிடிக்காத காரியத்தைச் செய்த சகோதர, சகோதரிகளை அடிக்கும் ஆண் குழந்தை களுக்கு, ‘எந்தச் சூழலிலும் யார்மீதும் கை ஓங்கக் கூடாது; பெண் பிள்ளைகளை அடிப்பது குற்றச்செயல்’ என்பதைக் கண்டிப்புடன் உணர்த்த வேண்டும்.

WWF சண்டை நிகழ்ச்சியைப் பார்ப்பதும், பப்ஜி மாதிரியான செல்போன் கேம்ஸில் அதிக நேரம் செலவிடுவதும் பிள்ளைகளுக்குக் கோபகுணத்தைத் தூண்டுவதற்கு வாய்ப்புள்ளதால், இவற்றைத் தவிர்க்கச் செய்ய வேண்டும்.

ரவுடித்தனம் செய்கிற, பெண்களைக் கேலி, கிண்டல் செய்பவர்களை நாயகர்களாகக் காட்சிப்படுத்தும் சினிமாக்களை அதிகளவில் பார்த்து ரசிக்கும் ஆண் குழந்தைகளுக்கு, ‘நாமும் இதுபோன்று இருந்தால்தான் நம் வயதிலுள்ள பெண்களுக்கு நம்மைப் பிடிக்கும்போல’ என்ற எண்ணத்தைப் பிற்காலத்தில் ஏற்படுத்தக்கூடும். இத்தகைய படங்கள் பார்ப்பதைத் தவிர்க்கச் செய்வதுடன், சினிமாவுக்கும் நிஜ வாழ்க்கைக்குமான வேறுபாடுகளைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும்” என்கிறார் சித்ரா அர்விந்த்.

காவல்துறையை எவ்வாறு நாடுவது?

“கணவர் அடிக்கிறார் என ஒரு பெண் எங்களிடம் புகார் கொடுத்தால், அவரின் கணவரை அழைத்து விசாரிப்போம். குடும்பத் தகராறு என்றால் அவருக்கு கவுன்சலிங் கொடுத்து, தம்பதியர் தொடர்ந்து இணைந்து வாழ வழிவகை செய்வோம். ஆனால், மனைவியைக் கடுமையாகத் தாக்கி யிருந்தாலோ அல்லது வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியிருந்தாலோ, பாதிக்கப்பட்ட பெண், தன் கணவருக்குச் சட்டரீதியான தண்டனையைப் பெற்றுக்கொடுக்க நினைத்தால், முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்து அந்த ஆணுக்குச் சிறைத்தண்டனை வாங்கிக் கொடுக்கும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

பாதிக்கப்பட்ட பெண்ணால் நேரில் வந்து புகார் கொடுக்க இயலாத நிலையில், ‘100’, ‘181’, ‘1091’ ஆகிய உதவி எண்களைத் தொடர்புகொள்ளலாம். தேடி வந்து உதவி செய்வோம்’’ என்கிறார் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் சத்யவாணி.

அத்துமீறும் கணவர்கள்... அனுமதிக்கும் மனைவிகள்... முதல்புள்ளியே... முற்றுப்புள்ளியாகட்டும்!

சட்டம் என்ன சொல்கிறது?

“கணவர் அடித்துத் துன்புறுத்தினால் பெண்கள் முதலில் நாட வேண்டியது காவல் நிலையத்தைதான். அங்கு முறையான, விரைவான விசாரணை நடக்க வில்லையெனில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் செய்ய லாம்.

அதன் பிறகும், விசாரணைப் போக்கில் திருப்தி இல்லையெனில், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை நாடலாம். ‘குறிப்பிட்ட காலத்துக் குள் விசாரணையை முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என நீதிமன்றம் சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு உத்தரவிடும். அதன் பின்னர், அந்த வழக்கு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனியாக நடக்கும். இது தொடர்பான இலவச சட்ட உதவி தேவை யெனில், மாநில மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவைப் பெண்கள் அணுகலாம். எந்தச் செலவுமின்றி, விரைவாகவே அவர்களுக்கான நீதி கிடைக்க வழிவகை செய்யப்படும்.

நேரடியாகக் காவல் நிலையத்தை அணுக விருப்பமில்லாதபோது, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் சமூக நலத்துறையை அணுகி, குடும்ப வன்முறைத் தடைச்சட்டத்தின் கீழ் புகார் மனு கொடுத்து நிவாரணமும் கோரலாம். அந்தச் சமூக நலத்துறையின் சார்பாகவே, நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மனைவியை அடிக்கும் கணவர்களை இனியும் சகித்துக்கொண்டிருக்கத் தேவையில்லை” என்று அழுத்தமாகக் கூறுகிறார் திருவள்ளூரைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜயலட்சுமி.

மக்கள் என்ன சொல்கிறார்கள்?

‘மனைவியை கை ஓங்கும் கணவர் களின் எண்ணிக்கை’ குறித்த வாக் கெடுப்பை அவள் விகடன் ஃபேஸ் புக்கில் நடத்தினோம். அதன் முடிவு இதோ...

அத்துமீறும் கணவர்கள்... அனுமதிக்கும் மனைவிகள்... முதல்புள்ளியே... முற்றுப்புள்ளியாகட்டும்!

கை ஓங்கும் ஆண்கள் காணாமல் போவார்கள்!

தேசிய குடும்பநல கணக்கெடுப்பின்படி, 2015-16-ல் 52 சதவிகிதப் பெண்கள் ‘அடிப்பது கணவர் உரிமை’ என்றிருக்கிறார்கள். ஆண்களில் 42 சதவிகிதம் பேர் ‘அடிப்பது எங்கள் உரிமை’ என்றிருக்கிறார்கள். பத்து வருடங்களுக்கு ஒரு முறை எடுக்கப்படுகிற கணக்கெடுப்பு இது.

2016-க்குப் பிறகான இந்த ஐந்து வருடங் களில், மனைவியை அடித்தால் காவல்துறையும் சட்டமும் சம்பந்தப்பட்ட ஆணின் வீட்டுவாசலில் நிற்கும் என்கிற பயத்தை ஊடகங்களும் சமூகமும் ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன. அதனால், அடுத்த கணக்கெடுப்பில் கை ஓங்கும் ஆண்கள் காணாமல் போவார்கள் என்று நம்புவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு