தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

எந்தச் சூழலிலும் திருமணத்தைத் தள்ளிப்போட வேண்டாம்! - எச்சரிக்கும் நிபுணர்கள்

எந்தச் சூழலிலும் திருமணத்தைத் தள்ளிப்போட வேண்டாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
எந்தச் சூழலிலும் திருமணத்தைத் தள்ளிப்போட வேண்டாம்!

மருத்துவ ரீதியில் பார்த்தால் 20 வயதிலிருந்து 28 வயது வரை கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றுக் கொள்வது ஆகச் சிறந்தது

குடும்பம் என்கிற குறுகிய அமைப்புக் குள் இருந்த பெண்கள் கல்வியறிவு பெற்று பொதுவெளிக்கு வந்துள்ளனர். பொருளாதார ரீதியில் தற்சார்புடன் வாழ்கின்றனர். இது மிகவும் ஆரோக்கிய மான சமூக மாற்றம் என்றாலும், பல் வேறு காரணங்களுக்காக திருமணத்தைத் தள்ளிப்போடும் போக்கும் பெண்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதற்கான காரணிகள் குறித்தும் இதனால் உண்டாகும் உடல் மற்றும் உளவியல் சார்ந்த பிரச்னைகள் குறித்தும் அலசுவோம்...

எந்தச் சூழலிலும் திருமணத்தைத் தள்ளிப்போட வேண்டாம்! - எச்சரிக்கும் நிபுணர்கள்

திருமணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று குழந்தைப்பேறு. தாமதமாக கர்ப்பம் தரிக்கும்போது உடல் ரீதியாக பல்வேறு பிரச்னை களை எதிர்கொள்ள வேண்டி யிருக்கும் என்கிறார் சென்னை யைச் சேர்ந்த பெண்கள்நல மருத்துவர் கவிதா கௌதம்...

“பெண்ணின் திருமண வயது 18-ல் இருந்து 21- ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மருத்துவ ரீதியில் பார்த்தால் 20 வயதிலிருந்து 28 வயது வரை கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றுக் கொள்வது ஆகச் சிறந்தது. 28 வயதைத் தாண்டிய பிறகு கரு முட்டையின் உற்பத்தித் திறன் குறைய ஆரம்பிக்கும். வயது கூடக்கூட கர்ப்பம் தரிப்பதில் சவால்கள் மிகுதியாகின்றன என்பதுதான் உண்மை. தற்போதெல்லாம் 25 வயதைத் தாண்டிய பிறகுதான் திருமணம் குறித்தே யோசிக்கிறார்கள். திருமணமானாலும் பணிக்குச் செல்லும் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தள்ளிப்போடுகிறார் கள். வயது அதிகரிப்பதன் விளைவாக கரு முட்டைகளின் உற்பத்தித்திறன் மட்டுமன்றி அவற்றின் தரமும் குறைவதால் கர்ப்பம் தரிப்பதில் பல்வேறு இடர்களை சந்திக்க நேரிடுகிறது.

கவிதா கௌதம்
கவிதா கௌதம்

28 வயதைத் தாண்டிக் கருத்தரிப்பவர்களில், 10 - 20 சதவிகிதம் பேருக்கு கரு கலைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும் குழந்தை `டௌன் சிண்ட்ரோம்' மற்றும் மரபு ரீதியான நோய்களோடு பிறக்கக்கூடும். கர்ப்பகாலத்தில் சர்க்கரைநோய் மற்றும் ரத்த அழுத்த நோய்க்கு ஆளாக நேரிடலாம். சுகப்பிரசவத்துக்கான வாய்ப்புகளும் குறையும்” என்றவர் தாமதமாக குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவில் இருப்ப வர்கள் முன்கூட்டியே கருமுட்டைகளைப் பதப்படுத்தி வைத்துக் கொள்ளலாம் என்கிறார்.

“30 -35 வயதுக்கு மேல்தான் குழந்தை பெற்றுக் கொள்ளப்போகிறோம் என்று உறுதி யாக முடிவெடுத்து விட்டால் 25 வயதிலேயே கருமுட்டைகளை பதப்படுத்தி வைத்துக் கொள்ளலாம். எத்தனை ஆண்டுகள் பதப் படுத்தி வைத்திருந்தாலும் அக்கருமுட்டை களின் வயது 25 ஆகத்தான் இருக்கும். இப்படிப் பதப்படுத்தப்படும் கருமுட்டை களைக் கொண்டு, சோதனைக்குழாய் மூலம் குழந்தையை உருவாக்கி கர்ப்பப்பைக்குள் வைத்துவிடலாம். சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் கருமுட்டைகளை பதப்படுத்தி வைக்கும் மையங்கள் செயல்படு கின்றன. இதற்கு 1 - 2 லட்சம் ரூபாய் வரையில் செலவாகலாம். ஆரோக்கியமான முறையில் குழந்தைப்பேறு இருக்க வேண்டுமென்றால் அதிகபட்சமாக 28 வயதுக்குள் குழந்தையைப் பெற்றெடுப்பதுதான் முறையானதாக இருக்கும்” என்கிறார் கவிதா கௌதம்.

கீதா நாராயணன்
கீதா நாராயணன்


நடுத்தர வர்க்கத்தில்தான் தாமதமாகத் திருமணம் செய்யும் பழக்கம் பெருகி வருவ தாகக் கூறுகிறார் சமூகச் செயற்பாட்டாளர் கீதா நாராயணன்...

“ஏழைக்குடும்பங்களைப் பொறுத்தவரை 20 வயதுக்கு முன்பே திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். பள்ளிக்கூடம் படிக்கும் போதே காதலித்து, வீட்டை விட்டுச் சென்று திருமணம் செய்து கொள்கிற பெண்களும் இருக்கிறார்கள். இதனைக் குற்றச்செயலாகக் கருதத் தேவையில்லை. அங்குள்ள சூழல் அப்படி இருக்கிறது. நடுத்தரக் குடும்பங்களைப் பொறுத்தவரையில் நன்றாகப் படிக்க வைத்து அலுவலகப் பணிக்குச் செல்லும் நிலைக்கு ஆளாக்குகி றார்கள். அலுவலகப் பணிக்குச் செல்கிற பெண்களுக்கு மிகப் பெரிய சுதந்திர வெளி கிடைக் கிறது. இயல்பாக எதிர்ப் பாலினத்தாருடன் நட்பு கொள்கின்றனர். வீட்டில் பார்க்கிற முன் பின் தெரியாத நபரைத் திருமணம் செய்வதைக் காட்டிலும் தன் நட்பு வட்டத்தில் உள்ள ஆணைத் தேர்ந் தெடுத்துக் கொள்ளும் மனநிலை உருவாகிறது.

பெண்களின் பொருளாதார ரீதியிலான எதிர்பார்ப்பும் இன்றைக்குப் பெருகியிருக்கிறது. முன்பெல்லாம் மாப்பிள்ளை பார்க்கும்போது எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லையா, பொறுப்பாக குடும்பத்தை வழிநடத்திச் செல்வாரா என்றுதான் பார்த்தார்கள். இப்போது சொந்த வீடு இருக்கிறதா, கார் இருக்கிறதா என்று பொருளாதார சிந்தனையை முதன்மைப்படுத்தி மாப்பிள்ளை பார்க்கி றார்கள். இதன் காரணமாகவும் வரன் அமைய கால தாமதம் ஆகிறது” என்கிறார் கீதா நாராயணன்.

சித்ரா அரவிந்த்
சித்ரா அரவிந்த்

திருமணத்தைத் தள்ளிப்போடுவதால் உளவியல் ரீதியில் எதிர்கொள்ள வேண்டிய பாதிப்புகளைப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்...

“முன்பு பெண்கள் பொருளாதார ரீதியாக ஆணைச் சார்ந்திருந்தனர். இன்று அவர்களே பொருளீட்டும் இடத்துக்கு வந்து விட்டனர். திருமணத்துக்கு முன்னரான உடல் சார்ந்த தேவைகளையும் போக்கிக் கொள்ளும் சாத்தியம் இன்றைய சமூக சூழலில் உருவாகி விட்ட நிலையில், உடலுறவுக்காகத் திருமணம் செய்ய வேண்டிய தேவை இல்லாமல் போய் விட்டது. இந்த இரு காரணங்களால் திருமணத் துக்கான தேவையே இல்லை என்கிற உணர்வுக்குள் ஆட்பட்டுள்ளனர். வாழ்க்கை யில் செட்டில் ஆகிவிட்ட பிறகு தான் திருமணம் என முன்பு ஆண்கள் செய்ததைத் தற்போது பெண்கள் செய்து கொண்டிருக் கின்றனர். பொருளாதாரத்தில் தன்னிறைவு கொள்வதில் தவறு கிடையாது. அதற்காக திருமணத்தைத் தள்ளிப் போடத் தேவை இல்லை. 21 - 25 வயதில் இணையர் மீதான எதிர்பார்ப்பு குறைவாகவே இருக்கும். வயது கூடக்கூட இணையர் மீதான எதிர்பார்ப் பும் கூடுவதால் அதற்கேற்ற நபரைத் தேர்ந்தெடுப்பதில் கால தாமதம் ஆகிறது. தனக்கென ஒரு சுதந்திரமான வெளியினை அமைத்துக் கொண்டுள்ளவர்கள் அதற்குள் இன்னொரு வரை இணைத்துக் கொள்வதில் தயக்கம் காட்டுவதும் இதற்கு ஒரு காரணம். தன்னிச்சை யாகவே வாழ்நாள் முழுவதும் இயங்கி விட முடியும் என்று நினைக்கிறார்கள்.

எதிர்காலத்தைப் பற்றிய திட்டமின்றி இன்றைக்காக வாழ்ந்தாலே போதும் என்கிற சிந்தனைகூட திருமணத்தை நிராகரிக்கும் மனநிலையை வளர்க்கிறது. பொறுப்புகளை எடுத்துக்கொள்ளத் தயங்கும் மனநிலையின் விளைவாக குழந்தை வளர்ப்பதையே பெரும் பொறுப்பாக நினைத்து அதை எடுத்துக்கொள்ள பயப்படுகிறார்கள். இது தவறு.

திருமணம் என்கிற அமைப்பு அனைத்து விதங்களிலும் இன்றியமையாதது. பொருளா தார பாதுகாப்பு, காமம் ஆகியவற்றைக் கடந்து, ஒருவருக்கொருவர் துணை, உணர்வு ரீதியான தேவைகள் ஆகியவற்றையும் திருமண உறவின் மூலம்தான் பெற முடியும். உடல் தேவைக்காக மட்டும் பழகுகிறவர்கள் உணர்வுரீதியான தேவைகளுக்கு வர மாட்டார்கள். வாழ்வின் சகலத்துக்கும் உண்டான ஒரு துணையைத் தேர்ந்தெடுப்பதன் அவசியம் இதுதான். நிரந்தரத் துணை இல்லாவிட்டால் நாம் அன்பு, அக்கறைக்காக ஏங்க வேண்டியிருக்கும். காமத்தைத் தாண்டியும் உணர்வு ரீதியான பிணைப்பு மிகத் தேவையானது. அது இல்லாத நிலையில் மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும். சராசரியாக 25, 26 வயதில் திருமணம் புரிவது சிறந்தது. திருமண உறவில் பொறுமையும் சகிப்புத் தன்மையும் வேண்டும். விட்டுக் கொடுப்பதன் வழியே நமக்கு நிறைய திரும்பக் கிடைக்கும் என்கிற நம்பிக்கையோடு இந்த உறவுக்குள் நுழைய வேண்டும்” என்கிறார் சித்ரா அரவிந்த்.