கட்டுரைகள்
Published:Updated:

டாக்ஸிக் உறவு... பிரிந்து வாழ்வது நல்லது!

டாக்ஸிக் உறவு
பிரீமியம் ஸ்டோரி
News
டாக்ஸிக் உறவு

டாக்ஸிக் உறவில், டாக்ஸிக் நபர் பிரச்னை மற்றும் வன்முறை முடிந்த பின்பு, மீண்டும் அமைதியாகவும், பாசமாகவும் மாறிவிடுவார்

பெரும்பாலும் இந்தச் சமுதாயம், தம்பதியரைச் சேர்ந்து வாழுங்கள் என்றுதான் சொல்லும். ஆனால் இந்தக் கட்டுரை சேர்ந்து வாழாதீர்கள் என்று சொல்லப்போகிறது. ஆம்... டாக்ஸிக் உறவில் (Toxic relationship) சேர்ந்து வாழாதீர்கள்.

காதலர்களுக்குள் டாக்ஸிக் உறவு இருந்தால், பிரிந்துவிடுவது நல்லது என்று ஏற்கெனவே பேசியிருந்தோம்.திருமண உறவில் இணைவதற்கு முன்பான பிரிவு என்பது தாங்கிக்கொள்ளக்கூடிய ஒன்றாக இருக்கும். திருமண உறவில் இப்படி ஆகிவிட்டால் சகித்துக்கொண்டு வாழச் சொல்லி உறவுகளும் வற்புறுத்தும், நண்பர்களும் வலியுறுத்துவார்கள். ஆனாலும் அது ஆபத்தானதுதான்.

டாக்ஸிக் உறவு... பிரிந்து வாழ்வது நல்லது!

அதென்ன டாக்ஸிக் உறவு? தன் இணையை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் ஒருவர் துன்புறுத்துவார். அது தொடர்ந்துகொண்டே இருக்கும். அந்த உறவின் மூலம் மகிழ்ச்சி, நிம்மதியைவிட வலியும் கவலையும் அதிகம் இருக்கும். அதுதான் டாக்ஸிக் உறவு.

பிரச்னைகளுக்குப் பிரிவு என்பது தீர்வாகாது. ஆனால் டாக்ஸிக் உறவில் வன்முறைகள் மற்றும் பிரச்னைகள் எல்லை மீறும்போது, பிரிவே நல்லது.

டாக்ஸிக் ரிலேஷன்ஷிப் பற்றியும், அதிலிருந்து பிரிவதற்கான அவசியம் பற்றியும் விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த். ‘‘டாக்ஸிக் உறவு என்பது திடீரென்று உருவாவதில்லை. உறவில் இருக்கும் ஒரு நபரே அதற்குக் காரணமாகிறார். பொதுவாக நார்சிசிஸ்டிக் பர்சனாலிட்டி டிஸார்டர் (Narcissistic personality disorder), பார்டர்லைன் பர்சனாலிட்டி டிஸார்டர் (Borderline personality disorder) போன்ற ஆளுமைக் கோளாறுகள் இருப்பவர்களால்தான் பெரும்பாலும் ஓர் உறவு டாக்ஸிக் உறவாக மாறுகிறது. இவர்கள் தங்களின் இணையை அதிகம் துன்புறுத்துவார்கள். தவிர, மது மற்றும் போதைப்பொருள்கள் பயன்படுத்துபவர்களாலும் உறவு டாக்ஸிக் ஆக மாறும்.

Iசித்ரா அரவிந்த்
Iசித்ரா அரவிந்த்

குழம்பும் மனம்

டாக்ஸிக் உறவில், டாக்ஸிக் நபர் பிரச்னை மற்றும் வன்முறை முடிந்த பின்பு, மீண்டும் அமைதியாகவும், பாசமாகவும் மாறிவிடுவார். இதனால் பாதிக்கப்பட்ட இணையர் இவரை முழுவதுமாக நம்பிவிடுவார். ஒருவேளை டாக்ஸிக் நபர்மீது சந்தேகம் எழுந்தாலும், அவர் பாசமாக மாறும்போது, பாதிக்கப்பட்டவருக்கு ‘நாம்தான் அவரைத் தவறாக நினைக்கிறோமா’ என்று தன்மீதே சந்தேகம் எழும். இதனால் குற்றவுணர்வு ஏற்பட்டு, அவரைத் திருத்துவதைக் கடமையாக நினைத்துச் செய்யத் தொடங்கிவிடுவார்.

பாதிக்கப்பட்டவரின் அறிகுறிகள்

அடி, ரத்தக்காயங்கள் போன்ற வன்முறைகளை எதிர்கொள்வது, அவற்றை மறைக்கப் பொய் கூறுவது, வாழ்க்கைத்துணை குறித்த பதற்றம், ஆளுமையில் வித்தியாசம் ஏற்படுவது, தன்னம்பிக்கையின்மை, வாழ்க்கைத்துணை தன்னை விட்டுப் பிரிந்துவிடுவாரோ என்ற பயம், வாழ்க்கைத்துணைக்குப் பிடித்த மாதிரி எப்போதும் நடக்க நினைப்பது, எப்போதும் ஒருவிதத் தவிப்புடன் இருப்பது ஆகியவை அறிகுறிகள். டாக்ஸிக் உறவால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

டாக்ஸிக் உறவு... பிரிந்து வாழ்வது நல்லது!

பிரிவே சிறந்த முடிவு

டாக்ஸிக் உறவில் நீண்ட நாள்களாக உடல், மனம் மற்றும் உணர்வு சம்பந்தமான வன்முறைகள் நடந்துகொண்டே இருக்கும். தான் டாக்ஸிக் உறவில் இருக்கிறோம் என்பதைப் பெரும்பாலும் அவரால் ஆரம்பத்தில் உணரமுடிவதில்லை. அவர் உணர்வதற்குள்ளேயே வருடங்கள் உருண்டோடியிருக்கும். சில நேரங்களில், டாக்ஸிக் உறவில் பிரிதலும், பிரிதல் முடிவும்கூட பழிவாங்குதலிலும் கொலைகளிலும் முடியலாம். இந்த மாதிரியான சூழலில், பாதிக்கப்பட்டவருக்குப் பாதுகாப்பு மிக முக்கியம்.

பிரிந்த பின்பு வாழ்க்கை

பாதிக்கப்பட்டவர் டாக்ஸிக் உறவில் இருந்து வெளிவந்த பிறகு, தனக்குப் பிடித்த வேலை, பொழுதுபோக்கு, நண்பர்களோடு வெளியே செல்வது, யோகா பயிற்சிகள் என்று ஈடுபடலாம்.

அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், உளவியல் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை (Cognitive Behavioral Therapy), தளர்வு நுட்பம் (Relaxation Therapy) போன்ற உளவியல் பேச்சு சிகிச்சைகள் வழங்கப்படும்.

சேர்ந்து வாழ்வது நல்லது. வன்முறை நிறைந்த டாக்ஸிக் உறவாக இருந்தால், பிரிந்து வாழ்வது மிக மிக நல்லது!