Published:Updated:

கணவன் - மனைவியாகப் பிரிந்தாலும் பெற்றோராக இணைந்திருங்கள்!

குழந்தை
பிரீமியம் ஸ்டோரி
குழந்தை

கணவன் - மனைவியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் குழந்தை வளர்ப்பில் இருவருக்கும் உள்ள சரிசமமான பங்கினை உணர வேண்டும்.

கணவன் - மனைவியாகப் பிரிந்தாலும் பெற்றோராக இணைந்திருங்கள்!

கணவன் - மனைவியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் குழந்தை வளர்ப்பில் இருவருக்கும் உள்ள சரிசமமான பங்கினை உணர வேண்டும்.

Published:Updated:
குழந்தை
பிரீமியம் ஸ்டோரி
குழந்தை

திருமண உறவில் முரண்பாடுகள் ஏற்பட்டு இணையராக வாழ்வைத் தொடர முடியாத சூழலில் விவாகரத்து கோருவது ஆண் - பெண் இருவரது தனிப்பட்ட உரிமை சார்ந்தது. அப்படியிருந்தாலும், விவாகரத்தின் பொருட்டு அத் திருமண உறவின் மூலம் பெற்ற குழந்தைகள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகக்கூடாது என்பதில் நமது சட்ட அமைப்பு தீவிர முனைப்பு காட்டுகிறது. கணவன் - மனைவிக்குத் தான் விவாகரத்தே தவிர, பெற் றோருக்கு அல்ல என்பதைத்தான் சட்ட, உளவியல் ஆலோசகர்கள், குழந்தைகள் உரிமை செயற் பாட்டாளர்கள் என அனைவரும் முன் வைக்கின்றனர். விவாகரத்துக்குப் பின்னரான குழந்தை வளர்ப்பு குறித்து நமது சட்டம் என்ன கூறுகிறது என சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கத்திடம் கேட்டோம்...

 சுதா ராமலிங்கம்
சுதா ராமலிங்கம்

குழந்தைகள் முன் காழ்ப்புணர்ச்சிகளைக் காட்டாதீர்கள்

“கணவன் - மனைவிக்குள் ஏற்படும் பிரச்னைகள் குழந்தைகளை நிச்சயம் பாதிக்கும். ஒருமித்து வாழும்போது தான் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும். அப்படியே பிரியக்கூடிய சூழல் வந்தாலும், பக்குவத்தோடு பிரிய வேண்டும். குழந்தைகள் முன்பு தங்களின் காழ்ப்புணர்ச்சிகளை வெளிக்காட்டா மல், இருவரும் சரிசமமாக அன்பைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இல்லை யென்றால் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என்ற நோக்கில்தான் சட்டம், விவாகரத்துக்குப் பிறகான குழந்தை வளர்ப்பை அணுகுகிறது. விவாகரத்துக்குப் பிறகான குழந்தை வளர்ப்பு The Guardians and Wards Act-க்குள்தான் அடங்குகிறது. அப்படியிருந்தாலும் இதனை சட்டரீதியாக மட்டுமே பார்க்க முடியாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்புகளிலேயே கூறப் பட்டிருக்கிறது. குழந்தைகள் நலம், விருப்பம் சார்ந்துதான் குழந்தை யாரிடம் இருக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்படுகிறது. விவாகரத்துக்குப் பிறகான குழந்தை வளர்ப்பைப் பொறுத்தவரை ஒவ்வொரு வழக்கும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக் கிறது. இவை அனைத்துமே குழந்தைகளின் வளமான வாழ்வுக்கான உத்தரவாதத்தைக் கோருபவைதான்.

கணவன் - மனைவியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் குழந்தை வளர்ப்பில் இருவருக்கும் உள்ள சரிசமமான பங்கினை உணர வேண்டும். சமீபத்தில்கூட சென்னை நீதிமன்றத்தில் நடந்த விவாகரத்து வழக்கில், விவாக ரத்துக்குப் பின் குழந்தையைப் பார்க்க வருகிற முன்னாள் இணையரை விருந்தினர் போல் நடத்த வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார் நீதிபதி. கணவன் - மனைவியாக அவர்கள் பிரிந்தாலும் பெற்றோராகப் பிரிய முடியாது என்கிற அர்த்தத்தில்தான் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்” என்கிறார் சுதா ராமலிங்கம்.

கணவன் - மனைவியாகப் பிரிந்தாலும் பெற்றோராக இணைந்திருங்கள்!

ஈகோவுக்குக் கொடுக்கும் முக்கியத் துவத்தைக் குழந்தைக்குக் கொடுப்ப தில்லை!

“இந்தியச் சூழலில் திருமணம் என்பது இரண்டு தனி மனிதர்கள் ஒன்றிணைவதல்ல. இரண்டு குடும்பங்கள் ஒன்றிணைவது. விவாகரத்தின் காரணமாக குழந்தை களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். விவாகரத்தான பிறகு அம்மா - அப்பா இருவருடனும் குழந்தை உற வாடும். இரண்டு பேரும் சேர்ந்து அக்குழந்தையுடன் உறவாடும் சாத்தியங்கள் இல்லாமல் போகிறது. இது குழந்தைக்கு பெரிய இழப்பாக மாறுகிறது. குழந்தையிடம் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக மற்றவர் மீதான தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறார்கள். தாய் - தந்தை இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் இன்னொருவர் மீது குற்றம்சாட்டுவது குழந்தையை மன அழுத்தத்துக்கு ஆளாக்கும். பெற் றோர் மட்டுமல்ல, அவர்களின் குடும்பத் தாரும் இச்செயலை திட்டமிட்டோ அல்லது தெரியாமலோ செய்கின்றனர். ஏற்கெனவே பெற்றோர் பிரிந்து விட்ட துக்கத்தில் இருக்கும் குழந்தைக்கு அது மேலும் வாதையாக இருக்கும்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் நப்பின்னை...

கணவன் - மனைவியாகப் பிரிந்தாலும் பெற்றோராக இணைந்திருங்கள்!

‘`திருமண உறவு தோல்வியடைந்த பிறகு குழந்தைகளுக்காக வாழச்சொல்லி நிர்பந்திப்பதும் நியாயமல்ல. இந்தப் பிரிவு இயல்பானது என்பதை பெற்றோர் தம் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். கணவன் - மனைவியாக தாங்கள் பிரிந்துவிட்டாலும் பெற்றோராகச் சேர்ந் திருப்போம் என்கிற நம்பிக்கையைக் குழந்தைக்குக் கொடுக்க வேண்டும். அந்த நம்பிக்கைதான் அவர்களை தாழ்வுமனப்பான்மைக்குள் கொண்டு செல்லாது. விவாகரத்துக்குப் பின் மறு மணம் செய்து கொண்டால் அதை ஏற்கும் மனநிலையில் குழந்தை இருக் கிறதா என்று பார்க்க வேண்டும். அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு குழந்தையைத் தயார்படுத்திய பிறகே மறுமணம் புரிய வேண்டும். ஒருமித்த கருத்தோடு குழந்தைகளுக்காக முடி வெடுக்கும் நிலைக்கு பெற்றோர் வர வேண்டும். அப்போதுதான் பெற்றோரின் பிரிந்திருக்கிற முடிவை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு குழந்தைகள் வருவார்கள்” என்றவர், தான் எதிர்கொண்ட இரண்டு உண்மைச் சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டார்...

நப்பின்னை
நப்பின்னை

“சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் தம்பதியர் விவாகரத்து செய் தனர். 5-ம் வகுப்பு படிக்கும் தங்களின் ஆண் குழந்தைக்கு தங்களது பிரிவு பற்றி புரியவைக்கும்படி என்னிடம் கூட்டி வந்தார்கள். அந்தக் குழந்தையிடம் `எப்படி இருக்கே...' என்றேன். `ரெண்டு சிங்கங்கள்கிட்ட மாட்டிக்கிட்ட கோமாளி மாதிரி இருக்கேன்' என்ற பதிலைக் கேட்டு திகைத்துவிட்டேன். அக்குழந்தை எந்த அளவுக்கு பாதிக்கப் பட்டிருந்தால் இப்படியோர் உவமை யைக் கூறியிருக்கும்? இதை அந்தப் பெற்றோரிடம் சொன்னதும் அவர்கள் அந்த உவமையை நினைத்துப் பெருமைப் பட்டார்களே தவிர அந்தக் குழந்தை யின் வேதனையைப் புரிந்து கொள்ள வில்லை. படிப்பறிவு பெற்று உயர்ந்த இடத்தில் இருக்கிறவர்கள்கூட தங்களது ஈகோவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத் தைக் குழந்தைக்குக் கொடுப்பதில்லை.

விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்த இன்னொரு தம்பதியரின் பெண் குழந்தைக்கு கவுன்சலிங் கொடுத்தேன். அவளுக்கு வரையப் பிடிக்கும் என்று சொன்னதால் வரையச் சொன்னேன். அவள் அப்பா, அம்மா மற்றும் மகள் இருக்கும் ஒரு குடும்பப்படத்தை வரைந்து இதே மாதிரி என் குடும்பமும் இருக்க வேண்டும் என்று சொன்னபோது நெகிழ்ந்து விட்டேன். பெற்றோரிடம் இதைச் சொன்னதும் அவர்களும் நெகிழ்ந்து விவாகரத்து வழக்கை திரும்பப் பெற்றனர். எனவே, குழந்தை யின் மனநிலையைப் புரிந்து கொள் ளாமல் கணவன் - மனைவி இருவரும் தங்களது ஈகோவை மட்டும் முன் நிறுத்திக்கொண்டிருப்பது தவறானது” என்கிறார் நப்பின்னை.

அ.தேவநேயன்
அ.தேவநேயன்

பெற்றோரின் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது!

“பெற்றோருக்கு இடையிலான பிளவு தனிப்பட்ட முறையிலும் சமூக ரீதியிலும் குழந்தைகளை பல்வேறு விதங்களில் பாதிக்கிறது” என்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் உரிமைச் செயற் பாட்டாளர் அ.தேவநேயன்...

“குழந்தைகளின் விருப்பத்தைத் தாண்டி அவர்களுக்கு எந்தெந்த வயதில் என்னென்ன தேவை என்று பார்ப்பதைத் தான் குழந்தையின் சிறந்த நலன் (Best interest of the children) என்கிறோம். பெற்றோரது அரவணைப்பு மற்றும் பாதுகாப்பைவிடவும் குழந்தைக்குச் சிறந்த நலன் கிடையாது. அதுதான் குழந்தையின் ஆளுமையைத் தீர்மானிக் கிறது. பெற்றோருக்கிடையே பிளவு இருக்கிறது என்றால் அக்குழந்தைக்கு முழுமையான அரவணைப்பு கிடைக் காது. நாம் என்னதான் அவர்கள் கேட்டதை யெல்லாம் வாங்கிக் கொடுத்தாலும் அவர்களுடன் தரமான நேரத்தை செலவு செய்வதுதான் முக்கியம். அன்பை பொருளால் நிவர்த்தி செய்ய முடியாது. குடும்பமாக உரையாடுவது, பயணப்படுவது என உறவாடுவதுதான் முக்கியம்.

நம் குழந்தைகளின் நடத்தை எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறோமோ அதற்கு முன் மாதிரியாக நாம் வாழ்ந்து காட்ட வேண்டும். பெற்றோரிடம் உறவுச் சிக்கல் இருக்கிற குழந்தைகள், இருவரிடமும் ஒவ்வொரு மாதிரி பேசி பணம் பெற்று பொருள் சார்ந்தவர்களாக மாறுவார்கள். உறவுச்சிக்கல் கொண்டவர்களின் குழந் தைகள்தான் நிறைய தீய பழக்கங்களுக்கு ஆளாகிறார்கள். பள்ளிப்பருவத்திலேயே மது, புகைப்பழக்கத்துக்கு ஆளாகிறார்கள், முறையாக பள்ளிக்குச் செல்லாமல் ஏமாற்று கிறார்கள். 18 வயதுக்கு மேல் அதை உணர்கையில், அதெல்லாம் தவறு என்று அவர்களுக்குப் புரிய வரும். அப்போது எதையும் மாற்ற முடியாத சூழலில் அவர்கள் இருப்பார்கள்.

2007-ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட ஆய்வறிக்கையில் 53 சதவிகித குழந்தைகள் ஏதேனும் ஒரு வகையில் பாலியல் வன் முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறவர்களில் பெரும்பாலானவர்கள் உறவினர்கள், அண்டை வீட்டார், குடும்ப நண்பர்களாகத்தான் இருக் கிறார்கள். இந்தப் பாலியல் சீண்டல் ஒரே நாளில் நடப்பதில்லை. பெற்றோரிடமிருந்து அன்பு கிடைக்கப்பெறாத குழந்தைகளிடம் அன்பு காட்டி, அவர்கள் விருப்பப்பட்டதை வாங்கிக் கொடுத்து அதன் பின்னரே இச்செயலில் ஈடுபடுகின்றனர்.

குழந்தைகளின் நலனைக் கருத்தில்கொண்டு அக்கறையோடு சரிவிகித உணவு வழங்கப்பட வேண்டும். பெற்றோர் அதில் கவனம் செலுத்தும் போது ஆரோக்கியமான உணவையே சாப்பிடக் கொடுப்பார்கள். கேடு விளைவிக்கும் தின் பண்டங்களை வாங்கி உண்பதைக் கண்டிப் பார்கள். உறவுச் சிக்கல் நிலவும் குடும்பத்தில் குழந்தைகளிடம் பெற்றோர் அளிக்கும் பணம் தாராளமாக இருக்கும் என்பதால் உடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுப் பொருள்களை வாங்கிச் சாப்பிட்டு உடல் நலத்தையும் கெடுத்துக் கொள்வார்கள். பெற்றோருக்கிடை யிலான பிளவு, குழந்தைகளின் கல்வி, உடல் நலம், உளவியல் என அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது” என்றவர் இதற்கான தீர்வையும் முன் வைத்தார்.

“இணையரை மரியாதையோடு நடத்த வேண்டும். குழந்தை பெறுவதன் மூலம் ஒரு சந்ததியை உருவாக்குகிறோம் என்கிற பொறுப்பு உணர்வு இருவருக்குள்ளும் தேவை. அதற்காக, பிடிக்காத திருமண உறவில் குழந்தைக்காக சகித்துக் கொண்டு வாழ வேண்டியதில்லை. குழந்தையின் சிறந்த நலன் பாதிக்காத வகையில் உறவாட வேண்டும். 18 வயதுக்கு முன் குழந்தை கள் என்ன கற்றுக் கொள்கிறார்களோ அதுதான் அவர்களின் ஆளுமையைத் தீர்மானிக்கும். எது சரி, எது தவறு என்று சொல்லிக் கொடுக்க பெற் றோர் தேவை. அந்த இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது” என்கிறார் தேவநேயன்.