Published:Updated:

நெத்திக்கட்டி பெரியப்பாவும் வியாபாரி மாமாவும்... மறக்க முடியா உறவிது! #LetsCelebrateRelations

old man
old man ( Representational image )

சொந்தக்காரர்கள் எல்லாரும் பெரியப்பாவுக்கு விழுந்து விழுந்து மரியாதை கொடுப்பதற்கு, அவர் எவ்வளவு தகுதியானவர் என்று வளர்மதி அக்கா கல்யாண விஷயத்தில்தான் புரிந்தது.

நெத்திக்கட்டி பெரியப்பா ஒரு வீட்டுக்கு வருகிறார் என்றால், அந்த வீட்டில் இருக்கிற பையனுக்கோ பொண்ணுக்கோ கல்யாண யோகம் வந்துவிட்டது என்று அர்த்தம். நல்ல ஆறடி உயரத்தில், ஆஜானுபாகுவாக இருப்பார் பெரியப்பா. தோள்பட்டை அவ்வளவு அகலம். எப்போதும் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டைதான் அணிவார். பெரியப்பாவின் பெயர் என் வயது தலைமுறைக்குத் தெரியவே தெரியாது. நெற்றியில் மூணு பட்டை விபூதி, நடுவில் ஆரம்ப கால ஒரு ரூபாய் காயின் சைசுக்கு குங்குமப்பொட்டு வைத்திருப்பார். கலப்பட குங்குமமோ என்னவோ, குங்குமப்பொட்டு வைக்கும் இடத்தில் நெற்றி கறுத்து, புடைத்துப்போய் இருக்கும். அந்த வீக்கத்தை வைத்துதான் பொடிசுகள் நாங்கள், அவருக்கு நெத்திக்கட்டி பெரியப்பா என்று பட்டப்பெயர் வைத்தோம்.

Relations
Relations

ஓர் அத்தைப் பெண்ணின் கல்யாண விஷயமாகப் பேசுவதற்காக பெரியப்பா அவர்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது, பெரியப்பாவின் பட்டப்பெயரைச் சொல்லி என்னையொத்த ஃபிராக்குகள் கெக்கலிக்க, அம்மா என் தொடையில கிள்ளியதை இப்போது நினைத்தாலும் வலிக்கும். அப்படியொரு விஷக்கிள்ளு. ஸோ, சின்னப்பிள்ளைகள்கூட பெரியப்பாவுக்கு மரியாதை கொடுத்தே ஆக வேண்டுமென்பது எங்கள் வீட்டில் எழுதப்படாத சட்டம்.

மேட்ரிமோனியல்கள் இப்போது இருக்கிற அளவுக்கு சமூகத்திடம் செல்வாக்குப் பெற்றிராத காலம் அது. அதனால், வேலையில் விடுப்பு எடுத்துக்கொண்டுகூட அக்காவுக்கான இணையைத் தேடத் தொடங்கினார் பெரியப்பா.
திருமணம்
திருமணம்

சொந்தக்காரர்கள் எல்லாரும் பெரியப்பாவுக்கு விழுந்து விழுந்து மரியாதை கொடுப்பதற்கு அவர் எவ்வளவு தகுதியானவர் என்று, வளர்மதி அக்கா கல்யாண விஷயத்தில்தான் எனக்குத் தெரிந்தது. அக்காவுக்கு மூல நட்சத்திரம். ஆணி மாத மூலம், புரட்டாசி மாத மூலம் என்கிற மூல நட்சத்திரத்தைப் பிரித்து மேய்கிற ஜோசியக்காரர்கள் எல்லாம் இல்லாத காலகட்டம் அது. அதனால், அக்காவின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு ஆசை ஆசையாக வருகிற மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள், அக்காவின் ஜாதகத்தைப் பார்த்தவுடனே 'வீட்டுக்குப் போய் தகவல் சொல்கிறோம்' என்று கிளம்பிவிடுவார்கள். அக்கா பாவம், அன்றைய இரவு தலை வரைக்கும் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு அழும். போதாக்குறைக்கு அக்காவின் அம்மா வேறு, வளர் அக்கா மூல நட்சத்திரத்தில் பிறந்தது அவருடைய குற்றம்தான் என்கிற ரேஞ்சுக்கு கரித்துக்கொட்டிக்கொண்டிருக்கும்.

இந்த நேரத்தில்தான் அப்படியொரு சம்பவம் நடந்தது. அக்காவைப் பெண்பார்க்க ஒரு குடும்பம் வந்தது. மாப்பிள்ளையின் அம்மாவுக்கு அக்காவை ரொம்பவே பிடித்து விட்டது. மாப்பிள்ளையின் அப்பாவுக்கோ ஜாதகங்களில் நம்பிக்கை கிடையாது. இரு வீட்டாரும் பேசி நிச்சயத்துக்கு நாள் குறித்துவிட்டுச் சென்றார்கள். இவையெல்லாமே நெத்திக்கட்டி பெரியப்பாவின் ஏற்பாட்டின்படிதான் நடந்தன.

தான் முன்நின்று செய்துவைத்த பிள்ளைகளின் குடும்ப வாழ்க்கையில் ஏதாவது பிரச்னை என்றால், அதைத் தீர்ப்பதற்கு பெரியப்பா ஓடோடி வந்துவிடுவார்.

நிச்சயத்துக்கு இரண்டு தினங்களுக்கு முன், மாப்பிள்ளையின் அப்பா பாத்ரூமில் வழுக்கிவிழுந்து தலையில் அடிபட, சூழ்நிலையே மாறிவிட்டது. மாப்பிள்ளையின் அப்பா எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் மாப்பிள்ளையின் அம்மா, வளர்மதி அக்காவை வேண்டவே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அக்காவின் குடும்பம் ஒரு நாள் முழுக்க சோறு தண்ணி இல்லாமல் அழுதது. பெரியப்பாதான் நாள் முழுக்க கூடவே இருந்து மொத்தக் குடும்பத்தையும் சமாதானப்படுத்தினார்.

அதன்பிறகு, நெத்திக்கட்டி பெரியப்பா சன்னதம் வந்தவர்போல ஆகிவிட்டார். மேட்ரிமோனியல்கள் இப்போது இருக்கிற அளவுக்கு சமூகத்திடம் செல்வாக்குப் பெற்றிராத காலம் அது. அதனால், வேலையில் விடுப்பு எடுத்துக்கொண்டுகூட அக்காவுக்கான இணையைத் தேடத் தொடங்கினார் பெரியப்பா. இத்தனைக்கும் பெரியப்பா அரசு உத்யோகஸ்தர்.

old man
old man
Representational image

இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. வளர்மதி அக்காவின் தங்கையைப் பெண் கேட்டு வரன்கள் வர ஆரம்பித்தன. அக்காவின் குடும்பம் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்க ஆரம்பித்தது. இந்த நேரத்தில்தான் நெத்திக்கட்டி பெரியப்பாவின் தேடலுக்கு ஒரு நல்ல முடிவு கிடைத்தது. ஆம், வளர்மதி அக்காவுக்கான வரன் வேட்டையில் தொடர்ந்து களத்தில் இருந்த பெரியப்பாவுக்கு, இரண்டு வருடங்களுக்கு முன் வளர்மதி அக்காவுக்கு நிச்சயம் செய்வது வரை வந்து நின்றுபோன மாப்பிள்ளை வீட்டாரைப் பற்றிய தகவலொன்று கிடைத்திருக்கிறது. அதாவது, பாத்ரூமில் வழுக்கி விழுந்த அந்த மனிதர், ஒரு வருடத்துக்கு முன் தூக்கத்திலேயே இயற்கை எய்திவிட்டார் என்று. அடுத்த நாளே அந்த வீட்டுக்குச் சென்ற பெரியப்பா, அக்காவை வேண்டாம் என்று சொல்லிவிட்டுச் சென்ற மாப்பிள்ளையின் அம்மாவுக்கு ஆறுதல் சொல்ல, நெகிழ்ந்துபோன அந்தப் பெண்மணி, 'என் ரெண்டாவது பையனுக்கு உங்க வளர்மதியைத் தர்றீங்களா' என்று கேட்க, அடுத்த ஒரு மாதத்தில் அக்காவின் கல்யாணம் ஜாம் ஜாமென நடந்தது.

வளர்மதி அக்காவின் தங்கை ஒரு காதலில் விழ, அதையும் லவ் கம் அரேன்ஜ்டு மேரேஜ் ஆக்கினார் பெரியப்பா. தான் முன்நின்று செய்துவைத்த பிள்ளைகளின் குடும்ப வாழ்க்கையில் ஏதாவது பிரச்னை என்றாலும், அதைத் தீர்ப்பதற்கு பெரியப்பா ஓடோடி வந்துவிடுவார்.

அவரவர் வாழ்க்கை, அவரவர் விருப்பம் என்கிற கலாசாரம் வந்தபிறகு, எந்தக் கல்யாண மண்டபத்திலும் நெத்திக்கட்டி பெரியப்பா போன்ற ஓர் உறவை நான் சந்திக்கவே இல்லை.

சொந்தக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகளின் கல்யாணத்தை நிச்சயிப்பதோடு பெரியப்பாவின் வேலை நின்றுவிடாது. பன்னீர் தெளிப்பவர்களில் ஆரம்பித்து, சமையல்காரர்கள், பந்தி பரிமாறுபவர்கள், மொய் எழுதுபவர்கள் என எல்லாரிடமும் 'கும்பிட்டுக் கூப்பிடணும்', 'சாப்பாட்டுல ஒரு குறை வந்துடக்கூடாது', 'பார்த்துப் பார்த்துப் பரிமாறணும்', 'கணக்கு சரியா இருக்கணும்' என்று எச்சரித்தபடியே மண்டபத்தின் எல்லா பக்கமும் வளைய வருவார். இதற்கெல்லாம் கைம்மாறாக பெரியப்பாவுக்குக் கிடைத்தது மரியாதை மட்டுமே. தன்னுடைய இந்த இயல்புக்காகவே சொந்தங்களின் மத்தியில் கடைசி மூச்சு வரைக்கும் ஒரு சக்ரவர்த்திக்கான மரியாதையுடன் வாழ்ந்து மறைந்தார் பெரியப்பா.

அவரவர் வாழ்க்கை, அவரவர் விருப்பம் என்கிற கலாசாரம் வந்தபிறகு, எந்தக் கல்யாண மண்டபத்திலும் நெத்திக்கட்டி பெரியப்பா போன்ற ஓர் உறவை நான் சந்திக்கவே இல்லை. இப்படியோர் உறவு நம்முடைய குடும்பங்களில் இருந்து மறைந்தேவிட்டது என்று ஐந்தாறு வருடங்களுக்கு முன் முடிவுக்கே வந்துவிட்டபோதுதான், மறுபடியும் இதே உறவைச் சந்தித்தேன்.

அருப்புக்கோட்டை பந்தல்குடியில், ஓர் உறவினர் வீட்டுத் திருமணம். வேட்டி, சட்டை, நெற்றியில் திருநீறு சகிதம் ஒரு மனிதர் மணமேடையில் ஆரம்பித்து, பந்தி ஏரியா, மொய் ஏரியா என எல்லாப் பக்கத்திலும் பெரியப்பாவின் அதே வசனங்களுடன் எல்லாரையும் வேலை வாங்கிக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து நெத்திக்கட்டி பெரியப்பாவைப்போலவே இன்னொரு கேரக்டர்.

பக்கத்தில் நின்றிருந்த இளைஞனிடம், 'அவரு யாரு தம்பி' என்றேன். 'அவரா ஒதனி... அவரு நம்ம வியாபாரி மாமா' என்றவரிடம், 'அவரு பேரு என்ன தம்பா' என்றேன். 'அது... 'என்று இழுத்தவர், 'தெரியல ஒதனி. நம்ம ஊர்ல விளையற பயிறு, சிறுதானியங்களை மாமாதான் மொத்தமா வாங்கி வெளியூர்களுக்கு அனுப்புவாரு. அதனால, நம்ம சொந்தக்காரங்க எல்லாரும் அவரை இப்படித்தான கூப்பிடுவாங்க' என்றார்.

LetsCelebrateRelations
LetsCelebrateRelations

நெத்திக்கட்டி பெரியப்பாவுக்கும் வியாபாரி மாமாவுக்கும் பெயர் என்னவாக இருந்தாலென்ன, அந்த உறவு நம் குடும்பங்களில் பல உறவுகளை இணைக்கிற ஒரு பாலம். நம் வீட்டுப் பிள்ளைகளின் திருமணத்தை நிச்சயிக்கிற நடமாடும் சொர்க்கம். உங்கள் குடும்பங்களில் இப்படியோர் உறவு இன்னமும் இருக்கிறதா நண்பர்களே... இருந்தால் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு