Published:Updated:

உங்கள் ரிலேஷன்ஷிப் பற்றி பெற்றோர்களிடம் எப்போது சொல்லலாம், கூடாது?#AllAboutLove - 15

இந்தியச் சூழலில், காதலிலும் ரிலேஷன்ஷிப்பிலும் பெற்றோர்களின் தலையீடு அல்லது பங்கு தவிர்க்க முடியாதது. எனவே, இந்தத் தொடரில் அவர்களுக்கென ஓர் அத்தியாயம் எழுதியே ஆக வேண்டுமென்பது ஆரம்பத்திலே முடிவு செய்ததுதான். இன்று அதைப் பார்த்துவிடலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முதலில் ஒரு டிஸ்க்ளெய்மர்.

நாம் இந்தத் தொடரில் பேசும் விஷயங்கள் எல்லாமே 18 வயதுக்கு மேல், தங்கள் வாழ்க்கையைத் தங்களால் சமாளிக்கும் திறன் பெற்றவர்கள் கொள்ளும் காதல் மற்றும் ரிலேஷன்ஷிப்களைப் பற்றியவைதான். 18 வயதுக்குள்ளிருப்பவர்களுக்கும் காதல் வரலாம் என்றாலும் அதைப் பற்றி நாம் பேசவில்லை. 18 வயது என்பதைவிட, தங்கள் சொந்தக்காலால் நிற்கத் தொடங்கியவர்கள் என்று சொல்லலாம். காதலும் ரிலேஷன்ஷிப்பும் அப்படியொரு வாழ்க்கை கிடைத்த `பிரிவிலேஜ்’ ஆட்களுக்கு மட்டுமே ஆனது இல்லைதான். இருந்தாலும், நாம் இதுவரை பேசிய பிரச்னைகளும் தீர்வுகளும் பெரும்பாலும் அப்படி அமைந்ததால் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

Marriage
Marriage
Pixabay

இந்தியர்களின் ரிலேஷன்ஷிப்பை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.

  • தொடக்க நிலை. ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் இருவருமே ஒருவரையொருவர் முழுமையாகப் புரிந்துகொள்ளாத நிலை. அந்த ரிலேஷன்ஷிப்பின் எதிர்காலம் குறித்து தெளிவற்ற நிலை எனச் சொல்லலாம்.

  • சீரியஸ் ரிலேஷன்ஷிப். இதில், இருவரும் திடமாக முடிவெடுத்திருப்பார்கள். திருமணம்தான் அடுத்து என்ற நிலையிலிருப்பவர்கள். அதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருக்கும் ஜோடி.

  • மூன்றாவதாக, திருமணமாகி ஒன்றாக வாழ்க்கையைத் தொடங்கியவர்களைச் சொல்லலாம்.

  • மூன்றாவது நிலையை இப்போது விட்டுவிடலாம். முதல் இரண்டு நிலைகளில் இருப்பவர்கள் தங்கள் ரிலேஷன்ஷிப்புக்குள் எப்போது பெற்றோரைக் கொண்டு வர வேண்டும், அவர்களிடம் எவற்றையெல்லாம் பகிர வேண்டும், எவற்றையெல்லாம் பகிரக் கூடாது, அவர்களால் கிடைக்கும் நன்மைகள் என்ன, பிரச்னைகள் என்ன என்பதையெல்லாம் இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

முதலில், முதல் நிலை பார்ட்னர்கள். இந்தச் சூழலில் இருப்பவர்களுக்கு அவர்களுக்குள்ளேயே நிறைய புரிதல் குறைபாடுகள் இருக்கும் வாய்ப்பு நிறைய உண்டு. அப்படியிருந்தால், அதற்குள் அவர்கள் பெற்றோர்களிடம் விஷயத்தைக் கொண்டு செல்வது இன்னும் பிரச்னைகளை உண்டு செய்யும். `உங்க அம்மா ஏன் என்னை இப்படிச் சொன்னாங்க?’, `உன் அண்ணணுக்கு என்ன பிரச்னை நான் கிரிக்கெட் விளையாடுறதுல?’ எனக் காதலிப்பவர்கள் பற்றிய அவர்கள் குடும்பங்களின் சிக்கல்களையும் சேர்த்து சமாளிக்க வேண்டியிருக்கும். மேலும், அவரவர் பார்ட்னரைப் பற்றிப் புரிந்துகொள்ளும் முன், குடும்பங்கள் சொல்லும் கருத்துகளையும் சேர்த்து யோசிக்கத் தொடங்குவார்கள். இது நிச்சயம் பாதகமாகத்தான் முடியும்.

ஒருவர், ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருக்க காதலைத் தவிர வேறு எந்தக் காரணம் இருந்தாலும் அது நிம்மதியைத் தராது.

உதாரணமாக, ஒரு பெண்ணுக்கு, தன் பார்ட்னர் கரியர் விஷயத்தில் எவ்வளவு திவீரமாக இருக்கிறார் என்பதில் சந்தேகம் என வைத்துக் கொள்வோம். அதை அவரிடம் பேசியோ, அவர் நடவடிக்கைகளை வைத்தோ அவர் தெரிந்துகொள்ளும் முன் அவர் அம்மா `அவன் வேலைக்கெல்லாம் போவான்னு எனக்குத் தோணல’ எனச் சொல்லிவிட்டால், அந்தப் பெண்ணும் அப்படியே நினைக்க வாய்ப்புகள் அதிகம்.

தொடக்க நிலையிலே, வீட்டில் ரிலேஷன்ஷிப்பை பற்றி சொல்லி பெற்றோர்கள் சம்மதிக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். ஒருவேளை, பின்னர் அந்த ரிலேஷன்ஷிப் ஒத்து வராமல் போனால், நிம்மதியாக பிரேக் அப் கூட செய்ய முடியாது. அம்மா என்ன நினைப்பார்களோ, அப்பா என்ன சொல்வாரோ என்ற பயத்தில் அதைத் தொடரவே முயற்சி செய்வார்கள். ஒருவர், ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருக்க காதலைத் தவிர வேறு எந்தக் காரணம் இருந்தாலும் அது நிம்மதியைத் தராது. எத்தனை நாள்களுக்கு அப்பா, அம்மாவுக்காக அந்த ரிலேஷன்ஷிப்பில் இருக்க முடியும் என நினைக்கிறீர்கள்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனவே, நீங்கள் ஒரு ரிலேஷன்ஷிப்பிலும், உங்கள் பார்ட்னர் மீதும் உறுதியான முடிவு எடுக்கும் வரை பெற்றோர்கள் அல்லது மற்ற உறவினர்களிடம் சொல்ல வேண்டுமா என்பதை யோசித்துக் கொள்ளுங்கள். `எங்க வீட்டுல இந்தப் பிரச்னை இல்லை’ எனச் சொல்பவர்கள் இருக்கலாம். அவர்களும் அவர் பெற்றோரின் தலையீடு ரிலேஷன்ஷிப்பைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். `நீங்க லவ் பண்றதுல பிரச்னை இல்லை. ஆனா, வீக் எண்ட் அந்தப் பையன நம்ம வீட்டுக்கு வரச் சொல்லிடு’ எனச் சொல்லும் பெற்றோர்கள் இருக்கலாம். அப்படிச் செய்வது உங்கள் பார்ட்னருக்கு பிரச்னையா என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவர் உங்களைத்தான் காதலிக்கிறாரே தவிர, உங்கள் குடும்பம் முழுவதையும் இப்போதே ஏற்றுக்கொண்டு, அவர்களுடன் நேரம் கழிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லைதானே?

அஷ்வின் - ஷிவாங்கி
அஷ்வின் - ஷிவாங்கி

பெற்றோர்களும் இந்தக் காலத்து பிள்ளைகளைப் புரிந்து நடந்துகொள்வது நல்லது. `குக் வித் கோமாளி’ ஷிவாங்கியை இங்கே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அது நிஜமோ, ஸ்கிரிப்டடோ… அந்தத் தொடரில், ஷிவாங்கிக்கு அஷ்வின் மீது க்ரஷ். அதைப் பொது வெளியில் ஷிவாங்கி வரம்பு மீறாமல் வெளிப்படுத்தியது சுவாரஸ்யம். அதில் மிக முக்கியமானது, ஷிவாங்கியின் அம்மா அஷ்வினை எதிர்கொண்ட விதம்தான். `ரொம்ப தொல்லை கொடுக்கிறாளாப்பா’ என அவர் சொன்னதை தமிழ்நாடே கொண்டாடியது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் வந்து சொல்லும் காதல், க்ரஷ், ரிலேஷன்ஷிப் கதைகளைக் கேளுங்கள். அவர்கள் வயது, மெச்சூரிட்டி பொறுத்து தேவையான உதவிகளைச் செய்யுங்கள். சரியானவற்றை ஆதரியுங்கள். தவறென நினைப்பது பற்றி வெளிப்படையாக உரையாடுங்கள். காதல் தொடரில் பெற்றோர்களுக்கு இதற்கு மேல் சொல்வது சரியாகாது. அதனால் போதும்.

பெற்றோர்களால் வரும் பிரச்னைகளைப் பற்றிச் சொல்லும் அதே சமயம், பிள்ளைகளும் பெற்றோர்களைச் சிக்கலில் மாட்டிவிடாமல் இருப்பதும் அவசியம். காதலர்களுக்கு இடையே வரும் சண்டைகளுக்கு அவர்களை பஞ்சாயத்து செய்ய இழுக்க வேண்டாம். இது, உங்கள் பார்ட்னர் மீது பெற்றோர்களுக்குத் தவறான அபிப்பிராயம் வர ஏதுவாக்கிவிடும். பின்னர், அதை வைத்தே அவர்களும் ரிலேஷன்ஷிப்பை வேண்டாம் எனச் சொல்ல வாய்ப்புண்டு.

இப்போது, இரண்டாம் நிலையிலிருக்கும் சீரியஸ் ரிலேஷன்ஷிப்புக்கு வருவோம். இவர்கள் நிச்சயம் ஒரு கட்டத்தில் பெற்றோர்களிடம் விஷயத்தைச் சொல்லியே ஆக வேண்டும். பெற்றோர்களுக்கு இந்த ரிலேஷன்ஷிப்பில் விருப்பம் இருக்கலாம்; சில பிரச்னைகள் இருக்கலாம். அவற்றை பார்ட்னர் இருவரும் கேட்டே ஆக வேண்டும். ஆனால், அவரவர் பெற்றோரிடம் அவரவர் பேச வேண்டும். `எங்க அம்மாகிட்ட நான் பேச மாட்டேன்ப்பா... நீயே வந்து பேசு’ இன்னொருவரை இழுத்துவிடுவது `எஸ்கேப்பிசம்’. அது நீண்டகால நிம்மதிக்கு உதவாது. தனியாக வாழ்க்கையைத் தொடங்கவிருக்கும் இரண்டு பேர், பல பிரச்னைகளை ஒன்றாகச் சமாளிக்க வேண்டி வரும். ஆரம்பத்திலே பிரச்னைகளைக் கண்டு ஓடினால், எப்படி ஒருவரும் நன்றாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கை இரண்டு வீட்டுக்கும் வரும்?

ரிலேஷன்ஷிப்
ரிலேஷன்ஷிப்
pixabay
Ghosting, Benching, Caking... ரிலேஷன்ஷிப்பில் இதெல்லாம் என்ன தெரியுமா? #AllAboutLove - 13

பெற்றோர்களிடம் பேசும்போது, அவர்கள் கருத்துகளைத் திறந்த மனதோடு கேளுங்கள். திருமணம் எப்போது என்பது பற்றி உங்கள் மனதில் ஒரு டைம்லைன் இருக்கும். பெற்றோர்களுக்கு அதில் வேறு ஐடியா இருக்கும். வீட்டில் இருக்கும் மற்ற நபர்கள், பணம் என அதற்கு நியாயமான காரணங்களும் இருக்கலாம். அவற்றையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டு, பார்ட்னருடன் கலந்து பேசி முடிவு செய்வது நல்லது. யார் கேட்டாலும், அந்த வேண்டுகோளில் நியாயம் இருக்கிறதா, அவர்கள் எண்ணம் இருவரும் சேர்ந்து வாழ்வது என்பதுதானா என மட்டும் பார்த்தால் போதும்.

சரி பேசுகிறோம். ஆனால் சாதி, மதம், அந்தஸ்து என வழக்கமான சினிமா பெற்றோர்கள் போல அவர்கள் பேசினால் என்ன செய்வது? அது உங்கள் முடிவுதான். எது சரி, எது தவறு என உங்களுக்குத் தோன்றுகிறதோ அதன்படி செய்யுங்கள். நீங்கள் எவ்வளவு உறுதியாக இருக்கிறீர்கள், எவ்வளவு சரியான நபரைத் தேர்தெடுத்திருக்கிறீர்கள் என்பதைப் பெற்றோர்களுக்குப் புரிய வைப்பது அவசியம் என்று மட்டும்தான் சொல்கிறேன்.

உங்கள் பிறந்த நாளை மறந்த பார்ட்னரை என்ன செய்யலாம்? #AllAboutLove - 14

சில சமயம், மூன்றாவதாக ஒருவர் உள்ளே வந்து பேசினால் பிரச்னை தீரலாம். உதாரணமாக, தாய் மாமாவோ, பெரியப்பா மகனோ... இப்படி ஒருவர். பெற்றோர்களிடம் இன்னொருவர் வந்து பேசி பார்க்கும்போது `இந்தத் திருமணத்தை மத்தவங்க ஏத்துக்கிறாங்க’ என்ற உணர்வு பெற்றோர்களுக்கு வரலாம். பிரச்னை, `மத்தவங்க என்ன நினைப்பாங்களோ’ என்றாக இருந்தால் இந்த ஐடியா உதவலாம்.

ரிலேஷன்ஷிப் என்பது இரண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம். ஆனால், (இந்தியாவில்) திருமணம் என்பது இரண்டு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பார்கள்... ஒரு ரிலேஷன்ஷிப் திருமண உறவாக மாறுவதில் இங்கே நிறைய தனிப்பட்ட, குடும்பம் சார்ந்த, சமூக சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் தாண்டிதான் வாழ வேண்டியிருக்கிறது. ஆனால், இந்தப் போராட்டத்தில் உங்கள் காதலைத் தொலைத்துவிடாதீர்கள். அது இல்லாமல் போனால் சமூகமோ, குடும்பமோ நினைத்தால்கூட உங்கள் மகிழ்ச்சியைத் திருப்பித் தர இயலாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு