Published:Updated:

Ghosting, Benching, Caking... ரிலேஷன்ஷிப்பில் இதெல்லாம் என்ன தெரியுமா? #AllAboutLove - 13

Relationship
News
Relationship ( Pixabay )

ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்துகொண்டே இன்னொருவரை பென்ச்சில் வைப்பதெல்லாம் சாதாரண காரியமல்ல. பென்ச்சில் இருக்கும் கேஷவ் மஞ்சரிக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தார்.

`கண்டதும் காதல்’ கூட சாத்தியம் என்பார்கள் சிலர். ஆனால், ரிலேஷன்ஷிப் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒருவர் ரிலேஷன்ஷிப்புக்குள் நுழைவது என்பது ஒரு மிகப்பெரிய பிராசஸ். நம்ம ஊர் பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்தில்கூட நிறைய படிகள் உண்டு. என்ன, அவை வாழப்போகும் இருவரைத் தவிர மற்ற அனைவரும் சேர்ந்து செய்வார்கள். அதை விட்டுவிடுவோம். இவ்வளவு சிக்கலான ஒரு பிராசஸில் `ஆம், இல்லை’யென்ற பைனரி முறை மட்டுமே சாத்தியமா? நிச்சயம் இல்லை. ரிலேஷன்ஷிப்பில் நிறைய பகுதிகள் உண்டு. இந்த ஒவ்வொரு `ஸோன் (Zone)’க்கும் மாடர்ன் ரிலேஷன்ஷிப்பில் தனித்தனி பெயர்கள் உண்டு. இந்தப் பெயர்கள் வைக்கும் முன்னரும் இவையெல்லாம் நடந்து கொண்டுதானிருந்தன. இப்போது பெயர் வைத்துவிட்டோம்; அவ்வளவுதான்.

இந்த அத்தியாயத்தில் `மாடர்ன் ரிலேஷன்ஷிப் டெர்ம்ஸ்’ சிலவற்றைப் பற்றி பார்ப்போம். அதை எளிமையாக விவரிக்க, உதாரணத்துக்கு, மதன் - மஞ்சரி என இரண்டு பேரை எடுத்துக் கொள்வோம். இருவரும் 5 வருடங்களாகக் காதலர்கள். கடந்த 2 ஆண்டுகளாக `லிவின்’ ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள். திடீரென, மஞ்சரிக்கு இந்த ரிலேஷன்ஷிப் பற்றிய பயம் வருகிறது. அதற்குக் காரணங்கள் இருக்கலாம்; இல்லாமலும் போகலாம். சில காலம் பிரிந்திருந்தால் இருவருக்கும் நல்லதென நினைக்கிறார். இதற்கு, On Ice என்று பெயர்.

Relationship
Relationship
Pixabay

ரிலேஷன்ஷிப்பில், எல்லாம் நல்லபடியாகப் போய்க்கொண்டிருக்கும். திடீரென இருவரில் ஒருவருக்கு ஒரு பயமோ தயக்கமோ வரலாம். இந்த வேகம் நல்லதல்ல எனத் தோன்றலாம். அப்போது ஒரு ஸ்பீடு பிரேக்கர் போல சின்ன இடைவெளியை விரும்பலாம். அதுதான் On Ice. சில சமயம், இருவருமே விரும்பி கூட இதைச் செய்வதுண்டு. சில சமயம் ஒருவர் மட்டுமே செய்வதுண்டு. இருவரும் பேசி எடுக்கும் பிரேக்கில் நன்மைகள் ஏராளம். ஆனால், ஒருவரின் முடிவாகும்போது அது ரிலேஷன்ஷிப்பை முழுமையாகப் பாதிக்கும் வாய்ப்புகள் உண்டு. அப்படியானால் அதைச் சரி செய்வது கடினம். மஞ்சரி, தன்னிச்சையாக முடிவெடுத்து மதனைவிட்டு சற்று தள்ளிப் போக முயற்சி செய்தார். அதாவது,On Ice ஸோனுக்குள் சென்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மஞ்சரியின் அலுவலகத்தில் பெண்கள் மிகக் குறைவு. அவள் வேலை பெரும்பாலும் ஆண்களுடனே. மஞ்சரியின் இயல்பான குணத்துக்கும், அவள் அழகுக்கும் எப்போதும் நிறைய பேர் அவளுடன் பழக ஆர்வமாக இருப்பார்கள். அதில் யாரையெல்லாம் மஞ்சரிக்குப் பிடித்தாதோ, அவர்களுடன் நிறைய சாட் செய்தாள். `ஸ்வீட் நத்திங்’ என்பார்களே. அப்படி நிறைய பேசுவாள். இதைத்தான் `Caking’ என்கிறார்கள்.

நமக்கு ஒருவரைப் பிடிக்கும். அவரிடம் நேரிலோ, மொபைல் சாட்டிலோ எவ்வளவு ஸ்வீட் ஆக இருக்க முடியுமோ, பேச முடியுமோ அப்படிச் செய்வோம். ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்களும் இல்லாதவர்களும் என யாருமே `கேக்கிங்’ செய்வதிலிருந்து தப்புவதில்லை. எந்த பாதகமுமில்லாமல், `எனக்கு உன்னைப் பிடிக்கும்’ என்பதை வெளிக்காட்ட இது உதவும். மஞ்சரி இப்படித்தான் அலுவலகத்தில் உடன் பணி புரியும் கேஷவுடன் `கேக்கிங்’ செய்ய ஆரம்பித்தார்.

Relationship
Relationship
Pixabay

இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். கேஷவ் ஒருநாள் நேரிடையாகவே மஞ்சரியிடம் புரொபோஸ் செய்துவிட்டார். மதனுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதால், உடனடியாக முடிவெடுக்க முடியாமல் மஞ்சரி தவித்தார். அதே சமயத்தில் அந்த புரொபோஸலை வேண்டாம் எனச் சொல்லவும் மஞ்சரிக்கு மனம் வரவில்லை. அதனால்தான், கேஷவை சில காலம் `Benching’ செய்ய முடிவெடுத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிரிக்கெட் டீமில் பார்த்திருப்போமே… 11 பேர்தான் ஆட முடியுமென்றாலும், 15 பேராவது டீமில் இருப்பார்கள். யாருக்காவது அடி பட்டாலோ, ஃபார்மில் இல்லாமல் போனாலோ அடுத்தவரை உள்ளே கொண்டு வருவார்கள். ஐ.டி நிறுவனங்களில்கூட `பென்ச்’ என்ற சொல்லாடல் உண்டு. ரிலேஷன்ஷிப்பிலும் இது உண்டு. ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும்போதே, வேறொருவர் புரொபோஸ் செய்திருக்கலாம். உடனே பதில் சொல்ல முடியாத நிலையில், அவரை `பென்ச்சிங்’ செய்யலாம். சில சமயம், `சிங்கிள்’ ஆக இருந்தாலும் தான் ரிலேஷன்ஷிப்புக்குத் தயாரா என்ற சந்தேகத்தில் இருக்கும் ஒருவர், அந்த முடிவை எடுக்கும்வரை புரொபோஸ் செய்தவரை பென்ச்சில் வைக்கலாம். அதைத்தான் மஞ்சரியும் செய்தார்.

Relationship
Relationship
Pixabay

ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்துகொண்டே இன்னொருவரை பென்ச்சில் வைப்பதெல்லாம் சாதாரண காரியமல்ல. பென்ச்சில் இருக்கும் கேஷவ் மஞ்சரிக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தார். அவருக்கு அது தொல்லையாகத் தெரியவில்லை. நேரில் சந்திக்கவும், சாட்டில் பேசவும் நிறைய நேரம் கேட்க, மஞ்சரியால் அவரைத் தவிர்க்க முடியவில்லை. கேட்டதைச் செய்தால் தற்போதைய ரிலேஷன்ஷிப்பில் சிக்கல் வரலாம் என பயந்தார். பென்ச்சிங்கில் ரிஸ்க் அதிகம். ஆனால், ரிஸ்க் எடுப்பது மாடர்ன் ரிலேஷன்ஷிப்பில் உண்மையாகவே ரஸ்க் சாப்பிடுவது போலத்தான் என்பதால் இந்த விஷயம் முன் எப்போதையும்விட அதிகம் நடக்கிறது.

பென்ச்சில் யாரை வைக்கிறோமோ அவரைப் பற்றி தன் பார்ட்னரிடம் பகிரவும் முடியாது. இதனால், ரிலேஷன்ஷிப்புக்குள் ரகசியம் எட்டிப் பார்க்கும். பின்னர், அது தொடர் கதையாகும். மதனுக்கும் மஞ்சரிக்கும் அது நடந்தது.

மஞ்சரியின் மீது மதனுக்கு சந்தேகம் வர ஆரம்பித்தது. இந்த ஃபீலிங் மதனுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆனால், அந்த எண்ணத்தை அவனால் தவிர்க்க முடியவில்லை. மஞ்சரி தன்னை காதலிக்கிறாள் என்பது மதனுக்கு நன்றாகத் தெரிந்தது. மதனும் காதலிக்கிறான். ஆனாலும், சொல்ல முடியாத ஒரு தவிப்பு. சந்தேகம். எல்லாம். இருவருக்கும் எப்போது வேண்டுமென்றாலும் பிரேக் அப் ஆகலாம் என்ற நிலைமை. இதை மதனால் ஏற்க முடியவில்லை. திடீரென மதன் வாழ்க்கையில் நிறைய பேர் வந்தார்கள். பெரும்பாலானோர் பெண்கள். அவர்களுடன் மதன் நேரம் அதிகம் செலவானது. எல்லோரும் நண்பர்கள் போலத்தான் என்றாலும், இதை Cushioning என்கிறார்கள். இதுவும் பென்ச்சிங் போல தோன்றும். ஆனால், இல்லை. ஒரு சீரியஸ் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும்போதே, தன்னைச் சுற்றி Cushion போல பலரை வைத்துக் கொள்ளுதலை இப்படிச் சொல்வார்கள். ஒருவேளை, மஞ்சரியுடனான ரிலேஷன்ஷிப் உடைந்துபோனால் மனதளவில் அதிகம் பாதிக்காமல் இருக்க இது உதவும் என நம்பி இப்படிச் செய்தார் மதன்.

இந்தச் சூழலில் ஒருநாள் மஞ்சரி திடீரென காணாமல் போனார். அவருக்கு மும்பையில் ஒரு வேலை கிடைப்பதாக இருந்தது மதனுக்குத் தெரியும். ஆனால், இப்படி சொல்லாமல் போவார் என எதிர்பார்க்கவேயில்லை. இருவரும் சமீபகாலம் அவர்கள் வாழ்க்கையில் நடந்ததைப் பகிரவில்லை. சொல்லாமலே காணாமல் போனார் மஞ்சரி. இதைத்தான் Ghosting என்கிறார்கள்.

எல்லாம் நல்லபடியாகப் போய்க்கொண்டிருக்கும். திடீரென, இருவரில் ஒருவர் காணாமல் போய்விடுவார். அது, பார்ட்னரைப் பிடிக்காமல் போனதால் இருக்கலாம். அல்லது வேறு காரணமாக இருக்கலாம். ஆனால், அதன்பின் அவரிடமிருந்து எந்தத் தகவலும் இருக்காது. `ஏன் போனாள்/போனான்’ என்றே தெரியாமல் இன்னொருவர் மதன் போல முழித்துக்கொண்டிருப்பார். கொஞ்சம் கொஞ்சம் `ஜெஸ்ஸீ’ போலவா எனக் கேட்டால், ஆம். அப்படித்தான். ஒருவரை முதலில் பிடித்து, பழகிய பின் பிடிக்காமல் போக நிறைய நியாயமான காரணங்கள் உண்டு அவற்றைச் சொல்லிவிட்டு பிரிவதுதான் நல்லது.

ஒரு புகழ்பெற்ற ட்வீட் இருக்கிறது. `என் `பாஸ்வேர்ட்’, ஃபேஸ்புக்ல எனக்கு லைக் போட்டிருக்கா.’

அவரின் முன்னாள் காதலியைத்தான் பாஸ்வேர்ட் என்கிறார். மஞ்சரியும் அதைச் செய்தார். மும்பை சென்று 6 மாதங்கள் கழித்து, ஒருநாள் மதனின் ஃபேஸ்புக் படத்துக்கு லைக் போட்டார். இதற்குதான் `ஹாண்டிங்’ எனப் பெயர். அதாவது, காணாமல் போன காதலி/காதலன், சில காலம் கழித்து வந்து சத்தமின்றி தரும் சிக்னல். மெஸெஜோ காலோ செய்யாமல், இப்படி லைக் மூலம் தன் வரவைக் காட்டுவது. உண்மையிலே பேச வேண்டுமென்றால், பேச முடியுமென்றால் இப்படி சிக்னல் தர மாட்டார்கள். இது போன்ற மாயவாத லைக்குகள் நம் வாழ்க்கையை இன்னும் நாசமாக்குவதற்காகத்தான் என்கிறார்கள் எக்ஸ்பெர்ட்ஸ். மதனும் எக்ஸ்பெர்ட் சொன்னதைக் கேட்டாரோ என்னவோ… மஞ்சரியின் லைக்கைக் கண்டு கொள்ளவில்லை.

இன்னும் நிறைய பெயர் சொல்கிறார்கள் மேற்கத்திய உலகில். ரிலேஷன்ஷிப்பே சிக்கலானது. இவர்கள் சொல்வதையெல்லாம் புரிந்துகொள்வது அதைவிட சிக்கலாக இருக்குமென்பதால் இதோடு விட்டுவிடலாம்.

மனம் திறந்து காதலிப்போம்… இணையரை மதித்து பழகுவோம்!

- காதலிப்போம்