காதல ருழைய ராகப் பெரிதுவந்து
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற
அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்
மக்கள் போகிய வணிலாடு முன்றிற்
புலப்பில் போலப் புல்லென்
றலப்பென் றோழியவ ரகன்ற ஞான்றே.
`தலைவனும் நானும் சேர்ந்திருந்தபோது, திருவிழாக்காலத்தில் ஊர் எப்படி மகிழ்ந்திருக்குமோ அப்படி மகிழ்ந்திருந்தேன் நான். அவன் என்னைப் பிரிந்த பிறகோ திருவிழா முடிந்த பிறகு வெறிச்சோடிய வீடு போல கிடக்கிறேன். அந்த வீட்டின் முற்றத்தில், தலைவனுடைய நினைவுகள் அணில்போல விளையாடிக்கொண்டிருக்கின்றன.'
தலைவனும் தலைவியும் கூடியிருப்பது எத்துணை மகிழ்ச்சியானது என்பதை அகத்திணைப் பாடலொன்றில் `அணிலொடு முன்றிலார்' இப்படி விவரித்திருப்பார்.

மனமொத்த இணை கூடியிருப்பது சங்க காலத்தில் மட்டுமல்ல, எக்காலத்திலும் திருவிழா மகிழ்ச்சிதான். சங்ககாலத் தலைவன் பொருளீட்டுவதற்காகத் தலைவியைப் பிரிந்திருப்பான். பிரிந்தவர் சேரும்போது திருவிழா மகிழ்ச்சி வருவதில் ஆச்சர்யமில்லை. ஆனால், தலைவன் மவுன்ட் ரோட்டிலும், தலைவி தி.நகரிலும் வேலைபார்த்துக்கொண்டு, தினம் தினம் சந்தித்துக்கொண்டிருந்தால்... திருவிழா மகிழ்ச்சி வருமா? `வரும்' என்கிறார் டாக்டர் டி.வி.அசோகன்.
``தம்பதியருக்கு நடுவே சலிப்புத் தட்டாத காமம் இருந்தால் எல்லாருடைய வீடுகள்லேயும் திருவிழா நடக்கும். அதுக்கு `இன்னிக்குதான் மொத தடவை' அப்படிங்கிற எண்ணம் வேணும். `மாசத்துக்கு ஒரு தடவையாவது', `வாரக் கடைசியிலயாவது'ன்னு டார்கெட் வெச்சுக்கிட்டு ஈடுபடறதில்ல காமம். அது கண்ணாடி வளையல்கள்ல பட்டுநூல் சுத்துற மாதிரி... பலமுறை அதை அனுபவிச்சிருந்தாலும் ஒவ்வொரு முறையும் ரசனையோடதான் அந்தப் பட்டுநூலை சுத்தணும். இன்னிக்குத்தான் மொத தடவைங்கிற ஃபீலும் கிடைக்கும்; கூடவே திருவிழா மகிழ்ச்சியும்...

இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லணும்னா, முத்தமோ, அணைப்போ, முன் விளையாட்டுகளோ, சூழலோ, சிணுங்கலோ, சிரிப்போ அல்லது தலைக்கோதலோ உங்க துணைக்கு எது பிடிக்குதோ அதிலிருந்து ஆரம்பியுங்க. சில ஹோட்டல்கள்ல `என்ன சார் வேணும்'னு கேட்கிறதே சாப்பிடலாமா, வேணாமாங்கிற மனநிலையை ஏற்படுத்திடும். சில ஹோட்டல்கள்ல `எங்க ஹோட்டல்ல மட்டன் சுக்கா நல்லா இருக்கும். சாப்பிட்டுப் பாருங்க'ன்னு சொல்றப்போவே சாப்பிடலாம்கிற ஆசை வரும். இங்க சாப்பாடுங்கிறது உதாரணம்தான். சாப்பாடுப்பத்தி சொன்னதாலேயே பரிமாறுற இடத்துல மனைவியை வைச்சு யோசிக்கணும்னு அவசியமில்லை. அங்க கணவனும் இருக்கலாம். காமத்துக்கு கணவன், மனைவி பேதமெல்லாம் தெரியாது. அந்த உணர்வுக்கு முன்னாடி இருவருமே சமம்தான்.
காமம், தம்பதிக்கு தம்பதி மாறுபடும்கிறதால, எழுத்தாளர் பாலகுமாரன் சொன்ன மாதிரி `அதுவாகிப்போயும்' அனுபவிக்கலாம். அதாவது, ஒரு வேலையை வேலையா செய்யுறதுன்றது `இதுக்கு சம்பளம் கொடுப்பாங்க; பாராட்டுவாங்க' அப்படிங்கிற எதிர்பார்ப்போட செய்றது. லயிச்சு செய்றவங்களுக்கோ அந்த வேலையைச் செய்றதே மகிழ்ச்சிதான். காமத்தையும் இப்படித்தான் எந்த எதிர்பார்ப்பில்லாம லயிப்போட எதிர்கொண்டால் அதுவாகியே போகலாம்.

சிலருக்கு உறவுக்கு முன்னாடி பேச பிடிக்கும்; சில பேருக்கு படம் பார்க்கிறது பிடிக்கும். அது குலுங்க குலுங்க சிரிக்க வெக்கிற படமா அல்லது போர்ன் மூவியாங்கிறதை சம்பந்தப்பட்ட தம்பதிதான் முடிவெடுக்கணும். நாமெல்லாம், செக்ஸ் வெச்சுக்கிறதுக்கு உடம்பை தேய்ச்சுக் குளிச்சிட்டா மட்டும் போதும்னு நினைச்சுகிட்டிருக்கோம். உடம்பும் மனசும் ஒண்ணா சேர்ந்து தயாராக வேண்டிய திருவிழா அது.
`அவளை/அவனை காதலிச்சதால அவன்/அவள் மேல காமம் வந்துச்சா; இல்ல அவன்/அவள் மேல காமம் வந்ததால காதல் வந்துச்சா' - இந்த சந்தேகம் ரொம்ப நாளா நம்ம மனங்கள்ல இருக்கு. கொடியசைந்ததும் காற்று வந்ததா; காற்று வந்ததும் கொடி அசைந்ததாங்கிற வரிகளுக்கு என்ன பதிலோ, அதுதான் இதுக்கும்... விரும்பின நபர் கிடைக்காம போனா அது காதல்; விரும்பின நபர் கிடைச்சிட்டா காமம். நான்கு சுவர்களுக்கு வெளியே இருக்கிறதால காதலுக்கு நெறிமுறைகள் இருக்கு. உள்ளே இருக்கிறதால காமத்துக்கு நெறிமுறைகள் இல்லை. அதனாலேயே காமம்னு சொல்றதுக்குக்கூட பலர் தயங்குறாங்க. காமம் இமேஜ் பார்க்காத நடிகர் மாதிரி. ஒவ்வொரு முறையும் அது புதுப்புது அனுபவங்கள் கொடுக்கும்'' என்றவரிடம், விகடன் வாசகர் ஒருவரின் கேள்வியை முன்வைத்தோம்.

வாசகர் கேள்வி: ``அவளும் நானும் பேசிக்கிட்டே இருக்கோம்... இது காதலா, காமமா?''
டாக்டர் அசோகன் பதில்: ``நீங்க ரெண்டு பேரும் ஏதோவொரு டாபிக் பத்தி பேசுறப்போ செக்ஸ் பத்தியும் பேசியிருக்கலாம். ஆனாலும், அவங்க மனசுல உங்க மேல இருக்கிறது வெறும் நட்பா மட்டுமே இருக்கலாம். சாப்பிட்டியா, நல்லா தூங்குனியான்னு சாதாரணமா பேசுவாங்க. ஆனா, உங்க மேல ஈடுபாடு இருக்கலாம். அதனால, பேசிக்கிட்டே இருக்கிறதை வெச்சு காமமா, காதலாங்கிறதைக் கண்டுபிடிக்க முடியாது. உங்களுக்கு ஓர் உதாரணம் சொல்ல விரும்புறேன். `மெளனராகம்' படத்துல ரேவதி, மோகனை விரும்ப ஆரம்பிச்ச பிறகு காபி போட்டு வைப்பாங்க; லஞ்ச் சாப்பிட வரலேன்னதும் உரிமையா கோவிச்சிப்பாங்க. அவங்களே டைவர்ஸ் கேட்டிருந்தாலும், மோகனை லவ் பண்ண ஆரம்பிச்சதும் அவங்களோட கண்களே `நான் உன்னை விட்டுட்டுப் போக மாட்டேன்டா'ன்னு அடம் பிடிக்கும். மோகனுக்கோ ரயிலேத்தி விடுற சாக்குல கடைசியா ஒருதடவை ரேவதியைப் பார்த்துடணும்கிற ஆசை. வீட்டுக்கு வந்து நானே உன்னைக் கூட்டிட்டுப் போய் ரயிலேத்துறேன் என்பார். `என்னை அனுப்பி வெக்க வர்றியா நீ' அப்படிங்கிற கோவத்துல ரேவதி, `நானே போய்ப்பேன்'னு சொல்லிடுவாங்க. அந்தப் படத்துல இந்த போர்ஷனைப் பார்த்தீங்கன்னா, ரேவதியும் மோகனும் வாழ்க்கையோட அடுத்தகட்டத்துக்குப் போக ரெடியாயிடுவாங்க. அதைச் செயலால, உணர்வாலன்னு வெளிப்படுத்தவும் ஆரம்பிப்பாங்க. இதையெல்லாமே சொல்லித் தெரிஞ்சுக்க முடியாது. புரிஞ்சுக்கணும். உங்க விஷயத்துலேயும் இப்படித்தான். இப்படியொரு கேள்வியைக் கேட்டிருக்கிறதால உங்களுக்கு அவங்க மேல விருப்பமிருக்கிறது தெரியுது. அப்போ, நீங்களே அவங்ககிட்ட உங்க மனசை வெளிப்படுத்தலாம். `வெட்கத்தை விட்டு சொல்றேன். எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு'ன்னு ரீல் ரேவதிகள் சொல்வாங்க. ரியல் ரேவதிகள் சொல்ல மாட்டாங்க.''
இந்தத் தொடரில், தாம்பத்திய உறவில் காமம் சார்ந்து சந்திக்கிற சிக்கல்களுக்கு நிபுணர்கள் தீர்வு வழங்கவிருக்கிறார்கள். உங்கள் துணையிடம்கூட பகிரத் தயங்குகிற பிரச்னைகளுக்கான பதில்கள்கூட நிச்சயம் கிடைக்கும். இந்தத் தொடரின் வழி உங்கள் அந்தரங்க கேள்விகளை அனுப்ப விரும்புகிறவர்கள் uravugal@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

மரியாதை செய்வோம்!