சுய இன்பம் என்றாலே, அது ஆண்களுக்கானது என்றே பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அது ஆண், பெண் இருவருக்குமானது. இன்றைய இளம் தலைமுறையினரில் பெரும்பாலானவர்களுக்கு இது நன்றாகவே தெரிந்திருக்கிறது. என்றாலும், அவர்களுக்கும்கூட, `சுய இன்பம் அனுபவிப்பது தப்போ'; `அதனால வேற ஏதாவது பிரச்னை வந்துடுமோ' என்கிற பயம் இருக்கிறது. பெண்களின் சுய இன்பம் குறித்துப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவரும் உலக சுகாதார அமைப்பின் பாலியல் உரிமைக்குழுவின் உறுப்பினருமான காமராஜ்.

``1940-களில் அமெரிக்காவில் நடந்த சம்பவம் இது. விலங்கியல் பேராசிரியரான டாக்டர் கின்சேவிடம், திருமணம் செய்யவிருக்கிற இளைஞர்களுக்கு பாலியல் குறித்த வகுப்புகள் எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. மாணவர்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்டார்கள். ஆனால், பேராசிரியர் கின்சேவால் அவற்றுக்கான பதில்களைச் சொல்ல முடியவில்லை. காரணம்... மாணவர்கள் கேட்ட கேள்விகள் தொடர்பான எந்த ஆராய்ச்சிகளும் அதுவரை அமெரிக்காவில் நடத்தப்படவில்லை. அதைவிட முக்கியமாக மனித பாலியல் தொடர்பான எந்த ஆய்வுகளும் அதுவரை நடைபெறவில்லை. அதில் சுய இன்பமும் ஒன்று. எத்தனை சதவிகிதம் பேர் சுய இன்பம் செய்கிறார்கள்; ஆண்கள் மட்டும்தான் செய்கிறார்களா; பெண்களும் செய்கிறார்களா என்பவை தொடர்பான ஆய்வு முடிவுகள் அப்போது அந்நாட்டிடம் இல்லை.
உடனே, 12,000 நபர்களை வைத்து மிகப்பெரிய அளவிலான பாலியல் ஆய்வு ஒன்றை மேற்கொண்டார் டாக்டர் கின்சே. அதன் முடிவில், தான் கண்டறிந்த பாலியல் முடிவுகளை ஒரு புத்தகமாக எழுதி 1949-ல் வெளியிட்டார். அந்தப் புத்தகத்தின் மூலம்தான் ஆண்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் பேரும், பெண்களில் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் பேரும் சுய இன்பம் செய்கிறார்கள் என்பது தெரியவந்தது. இதில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் கிட்டத்தட்ட 15 சதவிகிதம். திருமணத்துக்கு வெளியிலான உறவில் 9 சதவிகிதம் பேர் ஈடுபடுகிறார்கள் என்பதும் அந்த ஆய்வின் மூலம் வெளிப்பட்டது. அந்தக் காலத்தில் பழைமைவாதக் கொள்கைகளுடன் இருந்த அமெரிக்கா, இந்த ஆய்வின் முடிவைக் கண்டு அதிர்ந்துவிட்டது.

இந்த ஆய்வின் மூலம், 1940-களிலேயே 60 சதவிகித அமெரிக்கப் பெண்கள் சுய இன்பம் அடைந்து வந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறதல்லவா? தற்போதைய இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் பெண்களின் சுய இன்பம் குறித்த எந்தவொரு பெரிய ஆய்வு முடிவுகள் இல்லையென்றாலும், சிறிய பல ஆய்வுகளின் மூலம் கிட்டத்தட்ட அது 50 முதல் 60 சதவிகிதம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்திய ஆண்களைப் பொறுத்தவரை இது 90 முதல் 99 சதவிகிதம் வரை...
சுய இன்பம் செய்வதனால் பெண்களுக்கு உடல் ரீதியிலான பிரச்னை வராது. இன்றைக்குப் பல பெண்கள், கல்வி, வேலை உள்ளிட்ட பல காரணங்களுக்காகத் திருமணத்தைத் தள்ளிப் போடுகிறார்கள். பருவ வயதில் காதலும் அதையொட்டிய காமமும் ஆண், பெண் இருபாலருக்கும் இயல்பான ஒன்றுதான். இந்த உணர்வுக்கு வடிகாலாக சுய இன்பம் இருக்கும். அதனால், சமூகம் இதை இயல்பாக எடுத்துக்கொள்வதே சரி.

சுய இன்பம் மூன்று நிலைகளில் பெண்களைப் பாதுகாக்கும். காதல் உணர்வு காரணமாக, முதிர்ச்சியற்ற உறவுக்குள் சிக்கிக்கொண்டால் சம்பந்தப்பட்ட பெண்ணின் நிலைமை வாழ்நாள் முழுக்க வருத்தத்துக்குரிய ஒன்றாகிவிடும். அதை சுய இன்பம் தடுத்து விடும்.
அடுத்து தேவையற்ற கர்ப்பம். திருமணத்துக்கு முன்னர் கருத்தரித்துவிட்டால் இந்தியா போன்ற நாடுகளில் அந்தப் பெண்ணின் நிலைமையும் எதிர்காலமும் எப்படி இருக்கும் என்பதை நாம் அனைவருமே அறிவோம்.
மூன்றாவதாக ஹெச்.ஐ.வி உள்ளிட்ட பால்வினை நோய்கள் வராமல் தடுக்கப்படும்.
பெரும்பான்மை இந்திய ஆண்கள், தன் சந்ததியைப் பெருக்க காடுகளில் அவசர அவசரமாகப் பெண்ணுடன் இணை சேர்ந்த இயல்பிலிருந்து இன்னமும் மாறவில்லை. அதனால்தான், மனைவியின் உச்சக்கட்டம் குறித்த விழிப்புணர்வு பெரும்பான்மை இந்திய கணவர்களிடம் இருப்பதில்லை. `தான் அடைந்துவிட்டால் போதும்' என்கிற எண்ணத்துடன் நகர்ந்து விடுகிறார்கள்.

இதனால் கணவர் மீது வருத்தத்துடனும் கோபத்துடனும் இருக்கிற பெண்களைப் பார்க்க முடிகிறது. சுய இன்பம் அப்படிப்பட்ட பெண்களுக்கு நல்ல தீர்வாக இருக்கும். இளம் தலைமுறையினர் மத்தியில் பலருடைய விவாகரத்துக்கு தாம்பத்திய உறவில் உச்சக்கட்டம் கிடைக்காததும் ஒரு முக்கிய காரணம் என்பதால், அதற்கு மாற்றான சுய இன்பம் மூலம் உச்சக்கட்டம் அடைவது நல்லதுதானே?" என்கிறார் டாக்டர் காமராஜ்.