Published:Updated:

தாம்பத்யம் போரடிக்கிறதா? இவற்றையும் நீங்கள் முயன்று பார்க்கலாம்! - காமத்துக்கு மரியாதை - 11

``உங்களுக்கு ஓர் உண்மை தெரியுமா கணவர்களே... உங்கள் மனைவியை உச்சக்கட்டத்துக்குக் கொண்டு செல்வதற்குச் சுலபமான, சரியான வழி இதுதான்.

`படுக்கையறையில ஏதோ சரியில்லை. அதான், புருஷனும் பொண்டாட்டியும் எப்பப்பாரு சிடுசிடுன்னு இருக்குதுங்க' - தாம்பத்தியத்தின் சூட்சுமம் தெரிந்த வயதான பெண்கள் சொல்கிற வார்த்தை இது. படுக்கையறையில், மனைவியிடம் கணவனுடைய எதிர்பார்ப்போ அல்லது கணவனிடம் மனைவியின் எதிர்பார்ப்போ நிறைவேறாதபோது, அதை நேரடியாகச் சொல்ல முடியாமல் ஒருவர் மேல் ஒருவர் சிடுசிடுவென எரிந்து விழுந்துகொண்டிருப்பார்கள். இந்த நிறைவேறாத எதிர்பார்ப்பில் ஒன்றுதான் `ஓரல் செக்ஸ்' (Oral Sex).

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by cottonbro from Pexels
ஆர்கஸம் தெரியும்; எக்ஸ்ட்ரா வஜைனல் ஆர்கஸம் தெரியுமா? - காமத்துக்கு மரியாதை - 7

மூடிய அறைக்குள், கணவன் - மனைவிக்கு இடையேயான காமத்தில் எந்த எல்லைகளும் கிடையாது என்பது உண்மைதான். அதே நேரம் பரஸ்பரம் எதிர்பார்ப்பில் பரஸ்பர விருப்பமும் இருக்க வேண்டுமல்லவா? இந்த இடத்தில்தான் ஓரல் செக்ஸ் தம்பதிகளிடையே பிரச்னையாகி விடுகிறது. ஓரல் செக்ஸ் அசிங்கம், தவறு என்றொரு காலம் இருந்தது. இப்போதோ, செக்ஸில் விதவிதமாக ஃபேன்டஸி எதிர்பார்க்கிற தலைமுறையின் காலம். இந்த நிலையில், ஓரல் செக்ஸ் தாம்பத்திய வாழ்க்கையை எந்தளவுக்கு மகிழ்ச்சியாக வைத்திருக்கும் என்பதையும், இதைச் செய்யும்போது எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் இளம் தலைமுறையினருக்குச் சொல்ல வேண்டிய கடமையிருக்கிறது. இதற்காக பாலியல் மருத்துவர் காமராஜிடம் பேசினோம்.

```பல காலம் ஒரே துணையுடன் காமம் அனுபவிக்கையில் அலுப்புத் தட்டவே செய்யும். அதனால் வெரைட்டி எதிர்பார்க்க ஆரம்பிப்பார்கள், குறிப்பாக ஆண்கள். அதிலொன்றுதான் ஓரல் செக்ஸ். உங்களுக்கு ஓர் உண்மை தெரியுமா கணவர்களே... உங்கள் வாழ்க்கைத்துணையான பெண்ணை உச்சகட்டத்துக்குக் கொண்டு செல்வதற்குச் சுலபமான, சரியான வழி இந்த ஓரல் செக்ஸ்தான். ஆண்கள் சுலபமாக உச்சகட்டம் அடைந்துவிடுவார்கள். பெண்கள் உச்சகட்டம் அடைவது கடினம். அதை தன் மனைவிக்கு ஏற்படுத்த வேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட ஆணுக்கு செக்ஸ் குறித்த அறிவு நிரம்ப இருக்க வேண்டும்.

பாலியல் மருத்துவர் காமராஜ்
பாலியல் மருத்துவர் காமராஜ்

ஆணுறுப்பு த்ரீ இன் ஒன் வேலைபார்க்கக் கூடியது. சிறுநீரை வெளியேற்றும்; விந்துவை வெளியேற்றி குழந்தை பெற்றுக்கொள்ள உதவும்; இதன் மூலம் தாம்பத்திய உறவையும் அனுபவிக்கலாம். குறிப்பாக உச்சகட்டத்தை. ஆனால், பெண்ணின் பிறப்புறுப்பில் மேலேயுள்ள மூன்று வேலைகளுக்கும் தனித்தனிப் பகுதிகள் இருக்கின்றன. சிறுநீர் வெளியேறுவதற்குத் தனி வழி, குழந்தைப்பிறப்புக்கு தனி வழி, தவிர உச்சகட்டம் அடைவதற்கான க்ளிட்டோரிஸ் என்று தனிப்பகுதியே இருக்கிறது. பெண்ணுறுப்பில் இது சின்னபகுதி என்றாலும் உச்சகட்டத்தைப் பொறுத்தவரைக்கும் ஆணுறுப்புக்குச் சமமானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தாம்பத்திய உறவு வைத்துக்கொள்கிறார்கள்; குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என்றாலும், பெரும்பாலான பெண்கள் வாழ்க்கையில் உச்சகட்டத்தை அடைந்திருக்கவே மாட்டார்கள். காரணம் பெரும்பாலான ஆண்களுக்கு செக்ஸ் பற்றிய சரியான தெளிவு இருப்பதில்லை. அதுபற்றிய சரியான புத்தகங்களை அவர்கள் படிப்பதும் இல்லை. அப்படியே சில ஆண்களுக்குப் பெண்ணின் உச்சகட்டத்துக்கான க்ளிட்டோரிஸ் பற்றித் தெரிந்தாலும் 'நான் உச்சகட்டத்தை அடைஞ்சுட்டேன். அவ அடையலைன்னா எனக்கென்ன' என்கிற தவறான மனப்பான்மையுடன் இருந்துவிடுகிறார்கள். சரி, ஓரல் செக்ஸுக்கும் க்ளிட்டோரிஸுக்கும் என்ன சம்பந்தம் என்று பார்ப்போம்.

காமத்துக்கு மரியாதை
காமத்துக்கு மரியாதை

க்ளிட்டோரிஸை கணவர் நாவால் தூண்டினார் என்றால், மனைவிக்கு உச்சகட்டம் கிடைத்துவிடும். ஓரல் செக்ஸில் விருப்பமில்லாதவர்கள் நகமில்லாத சுத்தமான விரல் வைத்தும் செய்யலாம். நான் ஏற்கெனவே சொன்னதுபோல, ஓரல் செக்ஸ் ஆண்களுக்கு வெரைட்டியில் ஒன்று மட்டுமே.. பெண்களுக்கோ அது உச்சகட்டம் அடைவதற்கான சரியான வழி. இது தெரியாமல்தான் சிலர் திருமணம் தாண்டிய உறவில் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். அதற்கு பதில் தாம்பத்திய உறவில் ஈடுகிற பொசிஷன்களை மாற்றலாம் அல்லது பெட்ரூம், ஹால், ஷவருக்கடியில் என்று இடங்களை மாற்றிக் கொள்ளலாம். அல்லது ஓரல் செக்ஸும் செய்யலாம். வாழ்க்கை முழுக்க ஒரேயொரு துணை என்றாலும் போரடிக்காது'' என்றவர், ஓரல் செக்ஸ் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டிய விஷயங்களைப் பற்றியும் விவரிக்க ஆரம்பித்தார்.

``உறவில் ஈடுபடுபவர்களில் ஒருவருக்கு பால்வினை நோய்கள் இருந்தால், அது மற்றவருக்கும் தொற்றவே செய்யும். அந்த வகையில் வழக்கமான செக்ஸ் செய்யும்போது, என்னென்ன பால்வினை நோய்கள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறதோ அவையனைத்தும் ஓரல் செக்ஸ் செய்யும்போதும் வரலாம். அதே நேரம், ஓரல் செக்ஸ் செய்வதால் வரக்கூடிய பால்வினை நோய்கள் என்று தனியாக எதுவும் இல்லை.

Couple (Representational Image
Couple (Representational Image
Image by Free-Photos from Pixabay

ஓரல் செக்ஸ் பாதுகாப்பு என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். கருத்தரிக்க முடியாது என்ற வகையில் பாதுகாப்புதான். அதே நேரம் இது கணவன் - மனைவிக்கிடையே நடக்கிறது என்றால் பிரச்னையில்லை. மூன்றாம் நபருடன் ஈடுபட்டு, அவர் வேறு யாருடனாவது உறவு வைத்திருந்தால்... பால்வினை நோய்கள் வாய் மற்றும் முகப்பகுதியில் வந்துவிடலாம். ஹெச்.ஐ.வி வரக்கூடிய வாய்ப்புகூட இருக்கிறது. ஆணுறுப்பில் ஸ்மெக்மா என்றொரு திரவம் சுரக்கும். சுத்தமின்மை, பல உறவுகள் என்று இருந்தால், மிகவும் அரிதாகப் பெண்களின் தொண்டையில் கேன்சர் போன்ற பிரச்னை வரலாம் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்று வாழ்கிற தம்பதிகளிடையே ஓரல் செக்ஸினால் பிரச்னை வராது. அவர்கள் பிறப்புறுப்புகளைச் சுத்தமாக வைத்துக்கொண்டால் மட்டும் போதும்.

பொதுவாக பிறப்புறுப்பைச் சுத்தப்படுத்த சோப் பயன்படுத்த வேண்டாம் என்றுதான் இரு பாலினருக்குமே சொல்வோம். ஆனால், ஓரல் செக்ஸ் செய்யவிருக்கிறீர்கள் என்றால், பேபி சோப் பயன்படுத்தி உறுப்புகளைச் சுத்தம் செய்வது கட்டாயம். ஓரல் செக்ஸின்போது, கணவன் காண்டம் அணிந்துகொண்டால், மனைவிக்கு நல்லது. அதேபோல், கணவன் தன்னுடைய நாவில் `டங் டம்' (Tonguedom) அணிந்துகொள்ளலாம்.

வாசகர் கேள்வி: என் வயது 30. நான் மென்பொருள் நிறுவனத்தில் வேலைபார்க்கிறேன். கடந்த 6 வருடங்களாக நான் போர்ன் மூவி பார்த்து வருகிறேன். கிட்டத்தட்ட அதற்கு அடிமையாகவே இருந்தேன். அதைப் புரிந்துகொண்டவுடன் என்னை நானே கன்ட்ரோல் செய்துகொள்ள ஆரம்பித்திருக்கிறேன். இப்போதெல்லாம் போர்ன் மூவி பார்ப்பதைக் குறைத்துவிட்டேன். ஆனால், அதைப் பார்த்தால் மட்டும்தான் ஆணுறுப்பு விறைப்பு ஏற்படுகிறது. என்ன செய்வது டாக்டர்?

காமத்துக்கு மரியாதை
காமத்துக்கு மரியாதை
ஆடையில்லாமல் படுங்கள்; படுக்கையறையின் பவர்ஃபுல் டெக்னிக்! - காமத்துக்கு மரியாதை - 8

டாக்டர் பதில்: ``இது உலகம் முழுக்க இருக்கிற பிரச்னைதான். இதை `Porn-induced erectile dysfunction' என்று சொல்வோம். இதுவும் போதை மருந்து எடுப்பதுபோலதான். எப்போதாவது போர்ன் பார்க்கும்போது 'கிக்'காக ஃபீல் செய்வார்கள். அதையே தொடர்ந்து செய்துகொண்டிருக்கும்போது அதற்கு அடிமையாகிவிடுவார்கள். `இன்னும் கூடுதலா இன்னும் கூடுதலா' என்று பார்க்க ஆரம்பிப்பார்கள். ஒரு கதை, அழகான நடிகர்கள், பார்ப்பவர்களைத் தூண்டும்படியான காட்சிகள் என்று இருக்கிற ஒரு திரைப்படம் மட்டுமே அது. அதைத் தொடர்ந்து பார்த்துவந்தால் ஒருகட்டத்துக்கு மேல், அதைப்பார்த்தால்தான் ஆணுறுப்பில் விறைப்பே வரும். உங்கள் நிலைமையும் தற்போது இப்படித்தான் இருக்கிறது. நீங்கள் சொல்லியிருப்பதுபோல போர்னோ பார்ப்பதைப் படிப்படியாகக் குறைத்து வாருங்கள். பிரச்னை சரியாகிவிடும். ஒருவேளை தொடர்ந்து சரியாகவில்லையென்றால் பாலியல் மருத்துவரைச் சந்தியுங்கள். அவர்கள் இதற்கென இருக்கிற மருந்து, மாத்திரைகள் மூலம் உங்கள் பிரச்னையைச் சரி செய்வார்கள்.''

இப்படிப்பட்ட காமத்தின் உள்ளும் புறமும் பற்றித்தான் இந்தத் தொடரில் பேசப் போகிறோம்; தெரிந்துகொள்ளப் போகிறோம்; காமத்துக்கும் வக்கிரத்துக்கும் இடையேயான வித்தியாசத்தைத் தெரிந்துகொள்ளப் போகிறோம்; கூடவே தாம்பத்திய உறவில் காமம் சார்ந்து சந்திக்கிற சிக்கல்களுக்கு நிபுணர்களுடன் இணைந்து தீர்வுகளையும் தேடவிருக்கிறோம். உங்கள் துணையிடம்கூட பகிரத் தயங்குகிற பிரச்னைகளுக்கான பதில்கள் நிச்சயம் இருக்கும். இந்தத் தொடரின் வழி உங்கள் அந்தரங்க கேள்விகளை அனுப்ப விரும்புகிறவர்கள் uravugal@vikatan.com என்ற மின்னஞ்லுக்கு அனுப்பலாம்.

மரியாதை செய்வோம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு