Published:Updated:

ஆபாச படங்கள் பார்ப்பது செக்ஸ் வாழ்க்கையை பாதிக்குமா? காமத்துக்கு மரியாதை - S2 E2

Porn Addiction (Representational Image) ( Photo by Donald Tong from Pexels )

தங்களுடைய பாலியல் பிரச்னைகளுக்கு ஆபாசப்படங்களில் தீர்வு தேடுபவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆபாசப்படங்களைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்குத் தீமை நடக்க வாய்ப்பிருக்கிறது. இதனால், போர்னோகிராபி இண்டியூஸ்டு எரெக்டைல் டிஸ்ஃபங்ஷன் (PIED) என்றொரு பிரச்னை வரலாம்.

ஆபாச படங்கள் பார்ப்பது செக்ஸ் வாழ்க்கையை பாதிக்குமா? காமத்துக்கு மரியாதை - S2 E2

தங்களுடைய பாலியல் பிரச்னைகளுக்கு ஆபாசப்படங்களில் தீர்வு தேடுபவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆபாசப்படங்களைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்குத் தீமை நடக்க வாய்ப்பிருக்கிறது. இதனால், போர்னோகிராபி இண்டியூஸ்டு எரெக்டைல் டிஸ்ஃபங்ஷன் (PIED) என்றொரு பிரச்னை வரலாம்.

Published:Updated:
Porn Addiction (Representational Image) ( Photo by Donald Tong from Pexels )

ஆபாசப்படங்கள் பார்ப்பது நல்லதா, கெட்டதா; அதனால் தீமைகள் ஏதாவது நிகழுமா; அது பாலியல் கல்வியா என்கிற கேள்விகள் பலரிடம் இருக்கின்றன. அவற்றுக்கான பதில்களை விளக்கமாகச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜ்.

``ஆபாசப்படங்களை ஒருமுறையேனும் பார்க்காதவர்களே இல்லை என்கிற காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அமெரிக்காவின் பல்கலைக்கழகமொன்றில் ஆபாசப்படங்கள் பார்ப்பதால் கிடைக்கிற நன்மை, தீமைகள் குறித்த ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

பாலியல் மருத்துவர் காமராஜ்
பாலியல் மருத்துவர் காமராஜ்

அப்போதுதான் தெரிந்ததாம், அந்தப் பல்கலைக்கழகத்தில் ஆபாசப்படங்கள் பார்க்காதவர்கள் யாருமே இல்லை என்பது. அது சிலமுறையா அல்லது பலமுறையா என்பதில் மட்டும்தான் வித்தியாசம் இருந்திருக்கிறது. இது ஏதோ அமெரிக்காவில் மட்டுமென்றோ, அந்தப் பல்கலைக்கழகத்தில் மட்டுமென்றோ நினைத்துவிட வேண்டாம். ஸ்மார்ட்போன் காரணமாக உலகம் முழுக்க கிட்டத்தட்ட இந்த நிலைதான்.

தங்களுடைய பாலியல் பிரச்னைகளுக்கு ஆபாசப்படங்களில் தீர்வு தேடுபவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது.

தவிர, ஆபாசப்படங்களைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்குத் தீமை நடக்க வாய்ப்பிருக்கிறது. இதனால், போர்னோகிராபி இண்டியூஸ்டு எரெக்டைல் டிஸ்ஃபங்ஷன் (PIED) என்றொரு பிரச்னை வரலாம்.

சினிமாவில் 50 பேரை ஒரு கதாநாயகன் அடித்து நொறுக்குவார். ஆனால், யதார்த்தம் அப்படி கிடையாதே... இதைப்போலவே, ஆபாசப்படங்கள் பார்க்கும்போது கிடைக்கிற அளவுக்கதிகமான கிளர்ச்சி, செக்ஸின் மீது வருகிற வெறியூட்டும் தன்மை மனைவியுடன் உறவுகொள்ளும்போது கிடைக்காது. இதனால், தான் தாம்பத்திய வாழ்க்கைக்கு ஃபிட் இல்லையோ என்கிற தாழ்வு மனப்பான்மை ஆணுக்கு வந்து விடுகிறது. சிலருக்கு, `அந்தப் படத்தில் வருகிற பெண்ணுக்கு இருப்பதுபோன்ற உறுப்பின் அளவு என் மனைவிக்கு இல்லையே', `அந்த நாயகனுக்கு இருப்பதுபோன்ற உறுப்பின் அளவு எனக்கு இல்லையே' என்கிற வருத்தம் வந்துவிடுகிறது. இது ஒருகட்டத்தில், தம்பதியருக்கு இடையே சண்டை சச்சரவை ஏற்படுத்தி விடுகிறது.

Addiction (Representational Image)
Addiction (Representational Image)
Photo by cottonbro from Pexels

அடிக்கடி ஆபாசப்படங்களைப் பார்த்து சுய இன்பம் செய்யும் ஆண்களின் இல்வாழ்வில் மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் எண்ணிக்கை இயல்பைவிடக் குறைந்து விடும். இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

ஆபாசப்படத்தால் தீமை நிகழ்வதற்கே மிக அதிகமான வாய்ப்பிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை, இது ஊறுகாய் அளவில் உங்கள் திருமண வாழ்க்கையில் இடம்பெற்றால் பரவாயில்லை எனலாம். ஆனால், அந்த எல்லையில் யாருமே நிற்பதில்லை. அவ்வப்போது பார்ப்பது என ஆரம்பித்து, அடிக்கடி பார்ப்பது எனத் தொடர்ந்து, ஒருகட்டத்தில் ஆபாசப்படங்கள் பார்க்காமல் இருக்க முடியாது என்கிற அளவுக்கு அடிமையாகி விடுகிறார்கள் என்பதே உண்மை. இதுவொரு மனநோய்.

இன்னும் சிலர், ஆபாசப்படங்கள் பார்ப்பதை ஒருவகையான பாலியல் கல்வி என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஆபாசப்படங்களுக்கும் பாலியல் கல்விக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆபாசப்படங்கள் பாலியல் கல்விக்கு எதிரானவை. பாலியல் கல்வி என்பது, எப்படி செக்ஸ் வைத்துக்கொள்வதென்று சொல்லித் தருவதில்லை. படித்தவர்கள்கூட இப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

Addiction (Representational Image)
Addiction (Representational Image)
Photo by Daniel Reche from Pexels

பாலியல் கல்வி, ஆணும் பெண்ணும் பரஸ்பரம் அவர்களுடைய உறுப்புகளையும் உணர்வுகளையும் எப்படி மதிப்பது என்று சொல்லித்தரும். அதை முறையற்ற வழிகளில் அனுபவித்தால் பால்வினை நோய்கள் வரும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தும். தவிர, வளரிளம் பருவத்தில் ஆரம்பித்து எல்லா வயதில் இருப்பவர்களும் பாலியல் தொடர்பாக தங்களுக்கு எழுகிற சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொள்வதற்கான வழி இந்தப் பாலியல் கல்வி. ஆபாசப்படங்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு உங்கள் உள்ளங்கையில் இருந்தாலும் அதைத் தவிர்ப்பதே நல்லது'' என்று முடிக்கிறார் டாக்டர் காமராஜ்.