குறிஞ்சி நிலத் தலைவி ஒருவர் தன் தோழியிடம், ``ஒருநாள் நம் திணைக்கொல்லையில் இருக்கும் ஊஞ்சலில் நான் ஆடிக்கொண்டிருந்தேன். அப்போது அந்த வழியே ஆடவன் ஒருவன் வந்தான். அவன் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அவனுக்கும் என் மீது ஈர்ப்பு ஏற்பட்டதால் என்னைக் கடைக்கண்ணால் கண்டான். என் ஊஞ்சலை அவனைச் சிறிது நேரம் ஆட்டும்படி கேட்டேன். அவனும் அதையே எதிர்பார்த்திருந்ததைப்போல உடனே சரி என்றான். அவன் ஊஞ்சலை ஆட்ட நான் சுகமாக ஆடினேன். ஒருகட்டத்தில் ஊஞ்சலிலிருந்து நழுவி விழுவதைப்போல நான் பாசாங்கு செய்ய, அவன் என்னை தன்னுடைய கரங்களில் தாங்கி மார்புடன் அணைத்துக்கொண்டான். அவன் மார்பை விட்டு விலக மனமில்லாமல், மயங்கியதுபோலவே அவன் மார்பில் மாலையாகக் கிடந்தேன்" என்கிறாள். தாம்பத்திய உறவுக்கு முந்தைய ஃபோர்ப்ளேவிலும் இப்படி மார்புடன் அணைத்துக்கொள்வதும், மாலையாகக் கிடப்பதும் நிகழும். அது மட்டும் போதாது, தாம்பத்திய உறவுக்குப் பிந்தைய ஆஃப்டர்ப்ளேவிலும் அணைத்துக்கொள்ளுதல் வேண்டும் என்கின்றன சில ஆராய்ச்சி முடிவுகள்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அணைப்பை வைத்தே, அவர்கள் புதிதாகத் திருமணமானவர்களா அல்லது திருமணமாகிப் பல வருடங்கள் கடந்துவிட்டனவா என்பதைக் கண்டறிந்து விடலாம் என்பார்கள் பாலியல் மருத்துவர்கள். அதாவது, தாம்பத்திய உறவு முடிந்தபிறகும் அணைத்தபடியே படுத்துக்கிடந்தால் அவர்கள் புதிதாகத் திருமணமானவர்கள். உறவு முடிந்தபிறகு மனைவிக்கு முதுகைக் காட்டியபடி கணவன் தூங்க, மனைவியோ தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தால் அவர்களுக்குத் திருமணமாகி சில பல வருடங்கள் கடந்துவிட்டன என்று அர்த்தம். உறவுக்கு முந்தைய விளையாட்டுகள்போல உறவுக்குப் பிந்தைய விளையாட்டுகளும் செக்ஸில் இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் தாம்பத்தியம் ருசிக்கும் என்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.
``விந்து முந்துதல் போலவே உலகளவில் ஆண்களுக்கு இருக்கிற இன்னொரு பிரச்னை `மனைவி உச்சக்கட்டம் அடைந்துவிட்டாளா, இல்லையா என்பதை எப்படிக் கண்டறிவது' என்பதுதான். பெரும்பான்மையான ஆண்கள் உறவு முடிந்ததும் திரும்பிப்படுத்துத் தூங்க ஆரம்பித்துவிடுவார்கள். பெண்களுக்கோ `இதுல எனக்கு சந்தோஷம் கிடைச்சுதா, இல்லையா' என்ற யோசனையுடன் தூக்கம் வராமல் தவித்துக்கொண்டிருப்பார்கள். என்றைக்காவது உறவுக்குப்பிறகு மனைவியை கவனித்துப் பார்த்தால் மட்டுமே நான் மேலே குறிப்பிட்டுள்ள `உச்சக்கட்டம் அடைந்தாளா, இல்லையா' என்கிற கேள்வி கணவனுக்குள் எழும். அது அவ்வளவு சுலபமல்ல. ஒருவேளை மனைவியிடம் `உச்சக்கட்டம் அடைந்தாயா' என்று கேட்டு, அதற்கு அவள் `இல்லையென்று' சொல்லிவிட்டால் என்ன செய்வது என்கிற பயத்திலேயே பல ஆண்கள் இந்தக் கேள்வியைக் கேட்க மாட்டார்கள். இதைபோலவே பெண்களில் பலருக்கும் உச்சக்கட்டம் என்றால் என்ன என்பதே தெரியாமல் `சந்தோஷமாத்தான் இருந்தேன்' என்று சொல்லிவிடுவார்கள். சிலர் கணவன் மனம் நோகக்கூடாது என்பதற்காக ஆர்கஸம் அடைந்துவிட்டதைப்போல நடந்துகொள்வார்கள். இப்படிப்பட்ட தம்பதிகளுக்கான தீர்வு ஆஃப்டர்ப்ளேதான்.

இதுவும் ஃபோர்ப்ளே மாதிரிதான். ஒருவேளை உங்களுக்கு `விந்து முந்துதல்' பிரச்னை இருந்து, அதனால் மனைவி உச்சக்கட்டம் அடையவில்லையென்றால், உறவு முடிந்தபிறகும் தொடுதல், அணைத்தல், முத்தமிடுதல் என்று இருந்தால், மனைவி ஆர்கஸம் அடைய வாய்ப்புகள் அதிகம். முடிந்தால் உறவுக்குப் பிறகு இருவரும் சேர்ந்து குளிக்கலாம். அது இன்னமும் நெருக்கத்தை ஏற்படுத்தும். கூடவே மனைவியைப் பலமுறை உச்சக்கட்டத்தை அடைய வைக்கவும் செய்யும். ஒருவேளை கணவன் - மனைவி இருவரும் ஆர்கஸமடைந்திருந்தாலும்கூட ஆஃப்டர்ப்ளே செய்வது அன்பை அதிகரிக்கும்'' என்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.
வாசகர் கேள்வி: எனக்கு வயது 36. திருமணமாகி 15 வருடங்களாகின்றன. செக்ஸில் ஈடுபடும்போது எனக்கு உச்சநிலை வருவதில்லை. மனமும், உடலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டாலும் வருவதில்லை. முன்விளையாட்டு, பகல் பொழுதில் அவ்வப்போது சீண்டல், முத்தம், கட்டிப்பிடித்தல் என விளையாடினாலும் செக்ஸ் செய்யும்போது உச்சநிலை வருவதில்லை. இது ஏன் டாக்டர்?

டாக்டர் பதில்: ``நீங்கள் ஆணா, பெண்ணா என்பது தெரியாததால், நீங்கள் குறிப்பிட்டிருக்கிற பிரச்னைக்கு ஆண், பெண் இருவருக்குமான தீர்வையும் சொல்லிவிடுகிறேன். நீங்கள் பெண் என்றால், இந்தப் பிரச்னை பெரும்பாலான பெண்களுக்கு இருப்பதுதான். இதற்குத் தீர்வு, பெண்ணுறுப்பின் கிளிட்டோரிஸ் பகுதியைத் தூண்டிவிடுவதுதான். வழக்கமான தாம்பத்திய உறவை முடித்தபிறகு உங்கள் கணவரை கிளிட்டோரிஸை தூண்டிவிடச் சொல்லுங்கள். ஆர்கஸம் கிடைத்துவிடும். உங்கள் கணவருக்கும் `இப்படிச் செய்தால் மனைவிக்கு ஆர்கஸம் கிடைக்கும்' என்பது தெரிய வரும்.
நீங்கள் ஆண் என்றால், நீங்கள் `anejaculation' என்கிற பிரச்னையுடன் இருக்கிறீர்கள். விந்துவே வெளியே வராது. உங்களுக்குச் சிகிச்சை அவசியம். நீங்கள் உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டும். இந்தப் பிரச்னைக்கு நீரிழிவு, நரம்புகள் பாதிப்பு, ஹார்மோன் குறைபாடு, மனஅழுத்தம், பதற்றம், விறைப்பின்மை, சிறுநீரக பிரச்னை எனப் பல காரணங்கள் இருக்கின்றன. காரணத்தைக் கண்டறிந்து சரி செய்துவிட்டால் உச்சக்கட்டம் அடைய முடியும்.

காமத்தின் உள்ளும் புறமும் பற்றித்தான் இந்தத் தொடரில் பேசிக்கொண்டிருக்கிறோம். கூடவே தாம்பத்திய உறவில் காமம் சார்ந்து சந்திக்கிற சிக்கல்களுக்கு நிபுணர்களுடன் இணைந்து தீர்வுகளையும் தேடிக்கொண்டிருக்கிறோம். உங்கள் துணையிடம்கூட பகிரத் தயங்குகிற பிரச்னைகளுக்கான பதில்கள் நிச்சயம் இருக்கும். இந்தத் தொடரின் வழி உங்கள் அந்தரங்க கேள்விகளை அனுப்ப விரும்புகிறவர்கள் uravugal@vikatan.com என்ற மின்னஞ்லுக்கு அனுப்பலாம்.
மரியாதை செய்வோம்!