நெய்தல் நில தலைவியின் காம ஒழுக்கம் பற்றிய நற்றிணைப் பாடலொன்று.
தலைவி சிறுமியாக இருந்தபோது, மணலில் விளையாடிக்கொண்டிருக்கிறாள். அப்போது புன்னை மரத்தின் காயொன்றை மணலில் புதைத்துவிடுகிறாள். புன்னை முளைவிட, அதற்கு தான் அருந்தும் பாலையும் நெய்யையும் ஊற்றி வளர்க்கிறாள் அந்தச் சிறுமி. காலம் செல்கிறது. சிறுமி வளர்ந்து தலைவியாகிறாள். தலைவியின் நற்றாய், புன்னை மரத்தைத் தலைவியின் தங்கை என்று சொல்லி வளர்க்கிறாள். தான் வளர்த்த மரத்தின் தமக்கையாகவே வாழ்கிறாள் தலைவியும். பருவத்தே காதல் வயப்படுகிறாள். ஒருநாள் தலைவி வளர்த்த புன்னை மரத்தினடியில், அவளுடன் உறவாட விரும்புகிறான் தலைவன். அங்கு யாரும் இல்லாதபோதும் நாணத்துடன் மறுக்கிறாள் தலைவி. புரியாமல் தவிக்கிற தலைவனுக்கு, அருகிலிருக்கிற புன்னை மரம் தலைவியின் இளைய சகோதரி. அதனால்தான் தலைவி நாணமடைகிறாள் என்று பிறகு தெரியவருகிறது.

காதலோ, காமமோ பெண்ணுக்கு நாணம் போலவே சில விருப்பு, வெறுப்புகளும் உண்டு. உறவுக்கு முந்தைய விளையாட்டுகள் அவள் விருப்பத்துக்குரியவையாக இருக்கின்றன. அப்படியென்றால் வெறுப்புக்குரிய இடத்தில் என்ன இருக்கிறது? ஓரல் செக்ஸ் என்கிறார் மனநல மருத்துவர் ஷாலினி. அதுவும் பரஸ்பர பகிர்தலில் இல்லையென்றும், மனைவியை ஓரல் செக்ஸுக்கு கட்டாயப்படுத்தும்போதுதான் இந்த வெறுப்பு ஆரம்பிக்கிறது என்றும் சொல்பவரிடம் பேசினோம்.
``மனைவியுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டுமென்கிற விருப்பம் வந்தவுடன், ஆணுக்கு 5 நிமிடத்திலிருந்து 10 நிமிடங்கள் வரைக்கும் ஆணுறுப்பில் விறைப்பு ஏற்படும். (அபூர்வமாக ஒரு சிலருக்கு 30 நிமிடங்கள் வரைக்கும்கூட விறைப்பு இருக்கலாம்) இந்த 10 நிமிடங்கள் மட்டுமே தன்னுடைய வேலையென்று ஆண் நினைத்துக்கொண்டிருக்கிறான். அந்த 10 நிமிடங்களுக்கு முன்னாலும், `உன்னுடன் நான் செக்ஸ் வைத்துக்கொள்வதற்கு மூட் வருகிற அளவுக்கு நீ செக்ஸியாக இருக்க வேண்டியது உன் கடமை' என்கிற எண்ணம் இன்றைய இளம் கணவர்களிடம் அதிகரித்து வருகிறது. மேலைநாடுகளில் இருந்து வந்த இந்த மனப்பான்மை இப்போது இங்கும் வந்திருக்கிறது.

காரணம் பார்ன் மூவிஸ் பார்ப்பதுதான். கூடவே, இன்றைய ஆண்கள் மத்தியில் ஓரல் செக்ஸ் மீதும் விருப்பம் அதிகரித்திருக்கிறது. பிறப்புறுப்புகள் இணைவதில் அவர்களுக்கு ஆர்வம் குறைந்திருக்கிறது. மனைவியை ஓரல் செக்ஸ் செய்யச் சொல்லி வற்புறுத்துதல் அதிகரித்திருக்கிறது. ஒரு விஷயம் தெரிந்துகொள்ளுங்கள். பெரும்பாலான பெண்கள் ஓரல் செக்ஸை விரும்புவதில்லை. கணவரின் வற்புறுத்தலுக்காகவே அதைச் செய்துகொண்டிருக்கிறார்கள். ஓரல் செக்ஸ் பரஸ்பரம் இருக்கலாம். பல ஆண்கள் அதையும் செய்வதில்லை. அம்மா வீட்டுக்கு அடிக்கடி செல்கிற பெண்களிடம் பேசிப் பார்த்தால் இந்தப் பிரச்னை இருப்பது தெரியும். இதுதொடர்பான மன உளைச்சலுடன் கவுன்சலிங் வருகிற பெண்களின் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்திருக்கிறது" என்கிறார் டாக்டர் ஷாலினி.
வாசகர் கேள்வி: ``உங்கள் தொடரைத் தொடர்ந்து நானும் என் மனைவியும் படித்து வருகிறோம். பல விஷயங்களில் தெளிவு கிடைத்திருக்கிறது. காமம் என்று தொடங்கிவிட்டாலே நாங்கள் இரண்டு பேரும் முன் விளையாட்டுக்குப் பின்பு ஓரல் செக்ஸில் ஈடுபட ஆரம்பித்துவிடுகிறோம். இதில் ஏதும் தவறு இருக்கிறதா? இதனால் பின்னர் ஏதேனும் பாதிப்பு வருமா?"

டாக்டர் பதில்: உங்கள் விஷயத்தில் ஓரல் செக்ஸ் பரஸ்பரம் இருப்பதால் உளவியல்ரீதியாக எந்தப் பிரச்னையும் வராது. இருவரும் அந்தரங்க உறுப்பைச் சுத்தமாக வைத்துக்கொண்டால் உடல்ரீதியான பிரச்னையும் வராது.
இந்தத் தொடரில், தாம்பத்ய உறவில் காமம் சார்ந்து சந்திக்கிற சிக்கல்களுக்கு நிபுணர்கள் தீர்வு வழங்கவிருக்கிறார்கள். உங்கள் துணையிடம்கூட பகிரத் தயங்குகிற பிரச்னைகளுக்கான பதில்கள்கூட நிச்சயம் கிடைக்கும். இந்தத் தொடரின் வழி உங்கள் அந்தரங்க கேள்விகளை அனுப்ப விரும்புகிறவர்கள் uravugal@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

மரியாதை செய்வோம்!