``தாம்பத்திய உறவு தொடர்பான சந்தேகங்களுக்கு, ஒரு தலைமுறைக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டால் போதாது. இந்த சந்தேகங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் வந்துகொண்டே இருக்கின்றன. இது நான் என் அனுபவத்தில் தெரிந்துகொண்ட உண்மை. அதனால், தீர்வுகளை அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருக்க வேண்டிய கடமை என்னைப் போன்ற மருத்துவர்களுக்கு இருக்கிறது. அதிலும் முதலிரவில் முழுமையான தாம்பத்திய உறவில் ஈடுபட முடியவில்லையென்றால் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக இன்றைய இளம் தலைமுறையினரும் அச்சம் கொள்கிறார்கள்.
சொன்னால் அதிர்ச்சியடைவீர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியிருக்கிற இளம் தம்பதியர்களில் 75 சதவிகிதத்தினர், தாம்பத்திய உறவுகொள்ள முடியாததையே காரணமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்'' என்கிற பாலியல் மருத்துவர் காமராஜ், இதுகுறித்து விளக்கமாகப் பேச ஆரம்பித்தார்.

``பெற்றோர் செய்து வைத்த திருமணம் என்றாலும் சரி, காதல் திருமணமாக இருந்தாலும் சரி, இளம் தம்பதியினர் ஆர்வத்துடன் காத்திருப்பது முதலிரவுக்காகத்தான். முதலிரவுக்காகவும், முதல் உறவுக்காகவும் ஏங்குவதே மனித இயல்பு. இப்படி நிகழ்ந்தால் அவர்கள் இயல்பாக இருக்கிறார்கள் என்பதே அர்த்தம். ஆனால், திருமணமான அனைத்து தம்பதியினருக்குமே முதலிரவு முழுமையாக நிகழ்ந்திருக்கும்; தாம்பத்திய உறவு சக்ஸஸ்ஃபுல்லாக நிறைவுற்றிருக்கும் என்று சொல்ல முடியாது. அதென்ன `சக்ஸஸ்ஃபுல்' என்கிறீர்களா? `டீப் பெனட்ரேஷனுடன் தாம்பத்திய உறவு' நிகழ்ந்தால் மட்டுமே சக்ஸஸ்ஃபுல்லாக தாம்பத்திய உறவு நிகழ்ந்திருக்கிறது என்று அர்த்தம்.
உங்களுக்கு ஓர் உண்மை தெரியுமா? 95 சதவிகித முதலிரவுகள் தோல்வியில்தான் முடிகின்றன. தொடர்ந்து ஒரு வாரம் முயற்சி செய்தால், இவர்கள் முழுமையான தாம்பத்திய உறவை அனுபவித்துவிடுவார்கள். இந்தப் பிரச்னைக்கான தீர்வை தெரிந்துகொள்வதற்கு முன்னால், இதற்கான காரணங்களைச் சொல்லிவிடுகிறேன்.
முதன்முறையாக உறவுகொள்கிற பெண்ணுறுப்பின் உறவுப்பாதையானது ஒரு விரல் சுற்றளவு மட்டுமே இருக்கும். இதன் வழியாகத்தான் மனிதகுலமே பிறக்கிறது என்றாலும், திருமணமான புதிதில் அந்த அளவுக்கு இறுக்கமாகத்தான் இருக்கும். ஆனால், உறவுப்பாதை எலாஸ்டிக் தன்மை கொண்டது. இது முதல் காரணம். இந்த இறுக்கம் இயல்பானதும் சுலபமாகச் சரியாவதும்கூட.

இரண்டாவது காரணம்தான் மிக முக்கியமானது. தாம்பத்திய உறவுபற்றிய நாலெட்ஜ் இல்லாதவர்கள், `மொத தடவை கடுமையா வலிக்கும்; கொஞ்சம் ரத்தம் வரும்; பல்லைக் கடிச்சிட்டு பொறுத்துக்கணும்' என்று இளம் பெண்களை பயமுறுத்தி விடுவார்கள். இதில், `செக்ஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு மருத்துவ புத்தகங்களை வாசிக்க வேண்டும்' என்கிற தெளிவுள்ள பெண்கள் தானும் தப்பித்து, தன் திருமண வாழ்க்கையையும் காப்பாற்றிக்கொள்வார்கள். இதுபற்றிய நாலெட்ஜ் இல்லாதவர்கள், இந்த பயத்துடனே முதலுறவில் ஈடுபடுவார்கள்.
விளைவு, அவர்களுடைய பெண்ணுறுப்பு இறுகி, சுவர்போல் நின்று தாம்பத்திய உறவைத் தடுத்துவிடும். இதன் காரணமாக, உறவில் ஈடுபட முடியவில்லை என்றால், உடனே அதற்கான நிபுணரைச் சந்தித்துவிடுங்கள். ஒரே வாரத்தில் பிரச்னை சரியாகிவிடும். இன்றைக்கு நூறு தம்பதியரில் நான்கு தம்பதியருக்கு இந்த பிரச்னை வருகிறது. இதில் மூவர் விவாகரத்து வரை சென்று விடுகிறார்கள்'' என்று வருத்தப்பட்டவர், அடுத்து ஆண்களுடைய பிரச்னை பற்றி பேச ஆரம்பித்தார்.

``தன்னால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியவில்லை என்பது ஓர் ஆணுக்கு எப்போது முதன்முதலாகத் தெரியும் தெரியுமா? முதலிரவு அறையில்தான். அது சம்பந்தப்பட்ட ஆணுக்குக் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும். மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்தும் முழுமையான உறவு நிகழவில்லையென்றால், பதற்றம், பயம், தூக்கமின்மை என்று தவித்துப்போவார்கள் ஆண்கள். மனைவியைப் பார்த்தாலே பயப்படுவார்கள். இரவு வந்தாலே, `ஆபீஸ் வேலையிருக்கு; ஃபிரெண்டை பார்க்கப்போறேன்; தலைவலிக்குது' என்று உறவைத் தவிர்க்க காரணம் சொல்ல ஆரம்பிப்பார்கள். சில மனைவிகள் `டாக்டர், இவர் செக்ஸ் வெச்சுக்க வேண்டாம். பக்கத்துல வந்து உட்கார்ந்தா போதும்; கையைப் பிடிச்சுக்கிட்டா போதும்' என்பார்கள். ஆனால், அவர்களுக்குள் இருக்கிற பதற்றம் காரணமாகச் சம்பந்தப்பட்ட ஆண்களால் இதைச் செய்ய முடியாது. இது மருத்துவரீதியிலான பிரச்னை மட்டுமே. இதில் ஆணுடைய குற்றம் எதுவுமில்லை. `ஆண்மையற்றவன்; என்னை ஏமாற்றிவிட்டான்' என்று சிலர் விவாகரத்து வரை சென்று விடுகிறார்கள். இந்தப் பிரச்னையையும் ஒரே வாரத்தில் சரி செய்துவிடலாம். ஒருமுறை சரி செய்துவிட்டால், வாழ்நாள் முழுமைக்கும் மகிழ்ச்சியாகத் தாம்பத்திய உறவில் ஈடுபடலாம்'' என்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.
தொடர்ந்து மரியாதை செய்வோம்!