Published:Updated:

“அம்மாவுக்கு நான் செய்துவைத்த மறுமணம்..!”

ரதி மேனன், திவாகர்
பிரீமியம் ஸ்டோரி
ரதி மேனன், திவாகர்

சிலிர்க்க வைக்கும் மகள்

“அம்மாவுக்கு நான் செய்துவைத்த மறுமணம்..!”

சிலிர்க்க வைக்கும் மகள்

Published:Updated:
ரதி மேனன், திவாகர்
பிரீமியம் ஸ்டோரி
ரதி மேனன், திவாகர்

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் முடிக்கும் தருணத்தில், ஒரு பெரிய பொறுப்பு முடிந்த நிம்மதியில் கண்கள் துளிர்க்க நிற்பார்கள். அது அப்படியே தலைகீழாக நடந்தால் எப்படி இருக்கும்?! ஆம்... கேரளா, பாலக்காட்டை சேர்ந்த ஆசிரியர் பிரதீசா, தன் அப்பாவின் மறைவுக்குப் பின் தனிமையில் இருந்த தன் 59 வயது அம்மாவுக்கு மறுமணம் செய்துவைத்தபோது... பிள்ளைப் பொறுப்பை முடித்ததொரு நிம்மதியிலும் நெகிழ்ச்சியிலும் நின்ற காட்சி... அபூர்வ அழகு. திருச்சூர், திரும்பாடி கோயிலில் மணப்பெண்ணான தன் அம்மா ரதி மேனன், மணமகன் திவாகர் கைகளை அவர் இணைத்து வைக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரல்!

பிரதீசாவிடம் பேசினோம். ``பெற்றோர், நான், தங்கை என்று அன்பான, மிகவும் ஃப்ரெண்ட்லியான குடும்பம் எங்களுடையது. ஒரு வருடத்துக்கு முன், அப்பா இறந்த இரண்டு மாதங்களில் அம்மாவின் 58-வது பிறந்தநாள் வந்தது. அப்போது அம்மாவுடன் நான், என் மகன் மட்டும்தான் இருந்தோம். இனி அம்மா தனியாகத்தான் இருக்க வேண் டுமா என என் மனதில் அலைகள் எழ ஆரம்பித்தன. அம்மாவுக்கு மறுமணம் செய்துவைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், அதை அம்மாவிடம் சொல்ல வில்லை. பாலக்காட்டில் என் கணவர் வீட்டில் இருந்த என்னால், பணிச் சுமையால் சில நாள்களில் அம்மாவுடன் போதிய நேரம் பேசக்கூட முடியவில்லை.

 ரதி மேனன்,  திவாகர்
ரதி மேனன், திவாகர்

இதற்கிடையே, அம்மாவுக்கு செரி மான பிரச்னை ஏற்பட்டு கிட்டத்தட்ட திருச்சூரில் உள்ள எல்லா மருத்துவர் களையும் பார்த்துவிட்டார். அப்போது தான் ஒரு டாக்டர், ‘அம்மாவுக்கு பிரச்னை உடம்பில் இல்லை, மனதில். கடுமையான மன அழுத்தமே இப் பிரச்னைகளுக்குக் காரணம்’ என்ற போது, நான் தவித்துப்போனேன். அம்மாவை எங்கள் வீட்டுக்கு அழைத்தபோது, மறுத்துவிட்டார். அப்போதுதான் அம்மாவின் மறுமணம் குறித்த எண்ணம் எனக்குத் தீவிர மடைந்தது. என் கணவரிடம் சொன்ன போது, முழுமனதுடன் ஆதரவு கொடுத் தார். ஆனால் அம்மா மறுத்தார். என் கணவர்தான் அம்மாவை சம்மதிக்க வைத்தார்’’ என்றவர், மறுமணம் மறுக்கப்படக்கூடாத முடிவு என்கிறார்.

‘`பொதுவாகவே, மறுமணத்தை ஆதரிப்பவள் நான். என்னுடன் பணி யாற்றும் பெண் ஒருவர் 39 வயதில் தன் கணவரை இழந்தபோது, ‘நீங்கள் மறுமணம் செய்துகொள்ளுங்கள்’ என அடிக்கடி கூறி வந்தேன்.

சமீபத்தில் அவர் மறுமணம் செய்து, இப்போது சிறப்பாக வாழ்ந்து வருகிறார். தனிமை ஒரு கட்டத்தில் மன அழுத்தத்தைக் கொடுக்கும். கடைசி வரை துணை இருப்பது எல்லா வகையிலும் சிறந்தது. உடல்நிலை, மனநிலை என எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒருவர் உடன் இருப்பது மன அழுத் தத்தை தள்ளிவைக்கும்.

“அம்மாவுக்கு நான் செய்துவைத்த மறுமணம்..!”

இளம் வயதில் தனிமையில் இருப்பதை சிலர் தேர்வாக, பெருமை யாக கருதலாம். அப்போது அவர்கள் உடல்நலன் எல்லாவற்றுக்கும் ஒத்துழைக்கும். தனியாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். வயதான பிறகு, எல்லாம் மாறும். துணை அத்தியாவசியமாகும். நம் மனம், எப்போதும் ஒரு நல்ல வாழ்க்கைத்துணை இருப்பதை விரும்பவே செய்யும். இந்தப் புள்ளியில் யோசித்துதான், நான், என் கணவர், என் சகோதரி குடும்பம் எல்லோரும் அம்மாவை மறுமணத்துக்கு சம்மதிக்க வைத்து, மேட்ரிமோனி சைட்டில் வரன் பார்த்தோம்’’ என்பவர், அங்குதான் தூரத்து உறவினரான திவாகரை தன் அம்மாவுக்கு ஏற்ற துணையாகக் கண்டடைந்திருக்கிறார்.

``இந்த முடிவைப் பற்றி யார் என்ன விமர் சனம் செய்தாலும் பரவாயில்லை என்றுதான் நினைத்தோம். உண்மையில் எதிர்ப்பு மிகக் குறைவாகவும், குடும்பம், உறவுகள், நண்பர்கள் என நாங்கள் எதிர்பாராத அளவுக்கு மட்டற்ற ஆதரவுமே கிடைத்தது. இன்னும் சொல்லப் போனால், அப்பாவின் சகோதரி தரப்பில் இருந்துதான், அம்மாவுக்கு வரன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

திருமணத்தின்போது கோயிலில் ஒரு பெண் என்னிடம் வந்து, ‘யாருக்குத் திருமணம்?’ எனக் கேட்டார். நான், ‘என் அம்மாவுக்கு..’ என்று சொன்னதும், அவர் என்னைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்தார்’’ என்றவர், அம்மாவின் திருமண அலங்காரம் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

“பொதுவாக 30+, 40+ வயதுகளில் மறுமணம் செய்யும் பெண்கள்கூட, அப்போது அலங்காரத்தை பெரும்பாலும் தவிர்த்து விடுவார்கள் அல்லது, முதல் மணம்போல மனமுவந்து செய்துகொள்ள மாட்டார்கள். என் அம்மாவிடம் அந்த மனத்தடையைக் களைந்தோம். `இது உங்கள் வாழ்க்கையில் சிறப்பான நாள். அதனால் இதயத்திலும், தோற்றத்திலும் நீங்கள் அழகாகவும், மகிழ்ச்சி யாகவும் இருக்க வேண்டும்’ என்றோம்.

கணவர் குழந்தையுடன் பிரதீசா
கணவர் குழந்தையுடன் பிரதீசா

கேரளப் புடவை, முல்லைப்பூ, அலங்காரம் என்று அம்மா நின்ற மணப்பெண் கோலம் அழகு. அந்த அழகான மணப்பெண்ணை நான் கைப்பிடித்து திருமணம் செய்துகொடுத்த தருணம், ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்ந்தேன்’’ என்கிறார் மகிழ்ந்து.

ரதி மேனன் கூறுகையில், “மறுமணம் குறித்து பிரசீதா சொன்னதும், மனதில் பயம்தான் வந்தது. புதிய வாழ்க்கை எப்படி இருக்கும், சரி வருமா எனப் பல்வேறு சிந்தனைகள். திவாகர் மனைவியை இழந்தவர். அவர் மனைவியை நான் நன்கு அறிவேன்; ஆனால் திவாகரை முன்னர் பார்த்ததில்லை. இருவரும் போனில் பேசி னோம். நம்பிக்கை ஏற்பட்டு மிச்ச காலத்தை ஒன்றாகப் பயணிக்க முடிவு செய்தோம்’’ என்றார்.

திவாகர் கூறுகையில், “புற்றுநோயால் என் மனைவி இறந்து இரண்டு ஆண்டுகளாகி விட்டன. மகள்கள் திருமணமாகி செட்டி லாகிவிட, தனிமைதான் துணை. பகல்பொழுது பணிகளில் ஓடிவிடும். வேலைகள் இல்லாத பொழுதுகளில் தனிமையின் பிடி கொடுமை யாக இருக்கும். ஒருகட்டத்தில் மறுமணம் செய்யலாம் என்று முடிவெடுத்தபோது, ரதி கிடைத்தார். திருமணத்தில் கைப்பிடித்து கொடுப்பது என்பது வழக்கமான சடங்குதான். என்றாலும், பிரசீதா எங்களைக் கைப்பிடித்து இணைத்துவைத்து, `ஆத்ம திருப்தியுடன் மகிழ்ச்சியாக வாழுங்கள்’ என்ற நொடி, மறக்க முடியாதது” என்றார் உணர்ச்சி பொங்க.

மகிழ்ந்திருங்கள்!