Published:Updated:

`என்னோட தாழ்வு மனப்பான்மை போக ஜீவிதாதான் காரணம்!'' - நடிகர் டாக்டர் ராஜசேகர் #AangalaiPurindhuKolvom

``இதெல்லாம் ஏன் சொல்றேன்னா, காதல் மனைவி நினைச்சா தாழ்வு மனப்பான்மையில இருக்கிற தன் கணவனை அதுல இருந்து மீட்டு எடுக்கிறதோட அவனை சமூகத்துல பெரிய ஆளா உயர்த்தவும் முடியும்கிறதுக்கு நானே உதாரணம்னு உங்களுக்குத் தெரியப்படுத்ததான்." - ராஜசேகர்

`பெண் மனது ஆழமானது’ என்று ஆணுக்கு சொல்லியிருக்கிற இந்த சமூகம், ஆண் மனது எப்படிப்பட்டது என்று பெண்ணுக்குச் சொன்னதாகவே தெரியவில்லை. தான் நேசிக்கிற ஒரு காரணத்துக்காகவே, `அவர் ரொம்ப நல்லவர்’ என்று சர்ட்டிஃபிகேட் கொடுப்பதற்கும், பொள்ளாச்சி சம்பவம் போல ஆபத்தில் மாட்டிக் கொள்வதற்கும், ஆண்களைப்பற்றிய சரியான புரிந்துணர்வு பெண்களுக்கு இல்லாததுதான் காரணம். அந்த வகையில் ஆண்களைப் பற்றி பெண்களுக்கு முழுமையாகப் புரிய வைத்துவிட வேண்டும் என்பதற்காக அவள் விகடனில் `ஆண்களைப் புரிந்துகொள்வோம்' என்கிற தொடரை எழுத ஆரம்பித்திருக்கிறோம்.

இந்தத் தொடர் ஆண்களின் தவறுகளை மட்டுமல்ல; அவர்கள் உலகத்து அவஸ்தைகளையும் பேசும். சென்ற இதழ்களில், பிளேபாய் மற்றும் சாக்லெட் பாய் இயல்புகளையும், பெண்களின் மார்பகத்தை உற்றுப்பார்க்கிற ஆண்களைப்பற்றியும், குடும்ப வன்முறைகள் குறித்தும் பேசியிருந்தோம். இந்த இதழில் `உருவகேலி' பற்றிப் பேசியிருக்கிறோம். இதழில் வெளியாகும் தொடரின் நீட்சியாக விகடன் இணையதளத்திலும் இந்த ஆண்களைப் புரிந்துகொள்ளும் சூத்திரத்தை பலதுறை நிபுணர்களின் கருத்துகள் வாயிலாக தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம்.

அப்படி இந்த வாரம் நடிகரும் இயக்குநருமான டாக்டர் ராஜசேகர்.

`இந்த இரண்டும்தான் கணவனை மனைவியிடம் கை ஓங்க வைக்கிறது!' - குடும்ப வன்முறை குறித்து கோபிநாத்

ருவகேலி ஆண்களுக்கும் நடக்கிறது. அதனால் ஆண்களும் தாழ்வு மனப்பான்மைக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். `அவனுக்கென்ன ஆம்பளை’ என்ற பார்வையுடனே ஆணை இந்தச் சமூகம் அணுகுவதால், அவனுடைய அந்தரங்க தாழ்வு மனப்பான்மை பெரும்பாலும் வெளித்தெரிவதில்லை. ஆனால், முன்னந்தலையில் முடிகொட்டிப் போவதில் ஆரம்பித்து ஆணுறுப்பின் அளவு வரை ஆணுலகத்து தாழ்வு மனப்பான்மை ஏராளம்.

தன்னுடைய தாழ்வு மனப்பான்மை பற்றியும் மனைவி ஜீவிதாவால் தான் அதிலிருந்து மீண்டது பற்றியும் நடிகரும் இயக்குநருமான டாக்டர் ராஜசேகர் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

மனைவி ஜீவிதாவுடன்
மனைவி ஜீவிதாவுடன்

``நான் பார்க்க வாட்டசாட்டமா இருந்தாலும் வேற விதமான தாழ்வு மனப்பான்மை இருந்துச்சு. மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்ல படிச்சிட்டிருந்தப்போ எனக்கு சரளமா இங்கிலீஷ் பேசத் தெரியாது. கூடவே திக்குவாய் வேற. எங்கப்பா பேரு வரதராஜன். எனக்கோ `வ’ங்கிற எழுத்தைச் சொல்றப்போ பயங்கரமா திக்கும். ஆனா, `ம’ வரிசையில வர்ற வார்த்தைகள் திக்காது. அதனால, எங்கப்பா பேரை சொல்ல வேண்டிய இடங்கள்ல மிஸ்டர் வரதராஜன்னு சொல்லுவேன். எங்க வீடு வைஷ்ணவா காலேஜ் பக்கத்துல இருந்துச்சு. அந்த காலேஜ் பேரை சொல்லி டிக்கெட் கேட்க முடியாது. எக்ஸ்ட்ரா காசுகொடுத்து டெர்மினஸ்க்கு டிக்கெட் எடுத்துட்டு நான் இறங்க வேண்டிய ஸ்டாப்பிங்ல இறங்குவேன்.

சினிமாவுல நடிக்கிறதுக்கு முயற்சி பண்ணதைக்கூட ஃபிரெண்ட்ஸ்கிட்ட சொன்னதில்ல. சரியா பேசவே வராத நீ சினிமாவுல நடிக்கப் போறியான்னு கிண்டல் பண்ணிடு வாங்களோன்னு பயம். நடிக்க வந்தப்புறமும் இந்தப் பிரச்னை இருந்துச்சு. தெலுங்குல நடிக்க வந்ததுக்கப்புறம் `நீங்க தமிழ் நடிகர். அதான் திக்குது’ன்னு சொன்னாங்க. `எனக்குத் தமிழ் பேசறப்போவும் திக்கும்’னு சொல்வேன். ஜீவிதா என் வாழ்க்கையில வந்ததுக்கப்புறம் இது எல்லாமே மாறுச்சு.

ஆண்களைப் புரிந்துகொள்வோம் - 3: அணைத்தாலும் வேண்டாம், அடிக்கிற கை!

எனக்கு வாய்ச்ச மனைவி தங்கம் மாதிரி. என்னோட எல்லா தாழ்வு மனப்பான்மையில இருந்தும் என்னை மீட்டு எடுத்தா. ஜீவிதா பக்கத்துல இருந்தா யானை பலம் வரும் எனக்கு. அவ விளையாட்டாகூட என்னோட தாழ்வு மனப்பான்மையை அதிகப்படுத்துனதில்ல. ஜீவிதாவை தவிர, வேற யாரை கல்யாணம் பண்ணியிருந்தாலும் இந்நேரம் விவாகரத்து ஆகியிருக்கும். இதெல்லாம் ஏன் சொல்றேன்னா, காதல் மனைவி நினைச்சா தாழ்வு மனப்பான்மையில இருக்கிற தன் கணவனை அதுல இருந்து மீட்டு எடுக்கிறதோட அவனை சமூகத்துல பெரிய ஆளா உயர்த்தவும் முடியும்கிறதுக்கு நானே உதாரணம்னு உங்களுக்குத் தெரியப்படுத்ததான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நம்ம ஊர்ல தலையில முடியில்லாதவங்களை பெரியவங்களே `சொட்டை’ன்னு பாடிஷேமிங் செய்வாங்க. மீசை, தாடி வளர்ச்சியில்லாத, வாட்டசாட்டமான உடம்புவாகில்லாத ஆண்களுக்கும் இதே நிலைமைதான். இதே கேலியை சொந்த மனைவி விளையாட்டா சொன்னாக்கூட கணவனுக்கு வாழ்க்கையே வெறுத்துடும். இப்படியில்லாம மனைவி அனுசரணையா நடந்துக்கணும்னா, கணவன் அந்த அளவுக்கு உண்மையானவனா, பாசக்காரனா இருக்கணும்.

டாக்டர் ராஜசேகர் (File Pic)
டாக்டர் ராஜசேகர் (File Pic)
ஆண்களைப் புரிந்துகொள்வோம்! : 4 - கணவரின் நண்பர்களை மனைவிக்குப் பிடிப்பதில்லையே... ஏன்?

இன்னிக்கு இருக்கிற பெரும்பாலான அம்மாக்களும் மனைவிகளும் வொர்க் டென்ஷன், ஹார்மோன் இம்பேலன்ஸ் காரணமாத்தான் தங்கள் வீட்டு ஆண்களுக்கு வழுக்கை விழுதுங்கிறதை நல்லாவே புரிஞ்சு வெச்சிருக்காங்க. அந்த வகையில இந்தக் காலத்து ஆண்கள் கொடுத்து வெச்சவங்கதான். இதைத்தவிர, உங்க வீட்டு ஆண்களுக்கு ஏத்த விக் வாங்கித் தர்றது, வாட்ட சாட்டமா தெரியறதுக்கான டிரெஸ்ஸிங் டிப்ஸ் கொடுக்கிறதுன்னு ஹெல்ப் பண்ணலாம். ஆணுறுப்பு அளவு பத்தின விஷயத்துக்கு செக்ஸ் கல்வி மட்டும்தான் தீர்வு. அதை முறைப்படி கொடுத்துட்டா, அந்தரங்க விஷயங்கள்ல கணவன் மனைவியையோ, மனைவி கணவனையோ நிச்சயம் பாடி ஷேமிங் செய்யவே மாட்டாங்க.’’

ஆண்களின் தாழ்வு மனப்பான்மைக்கான காரணங்களையும் தீர்வுகளையும் இந்த இதழ் அவள் விகடனில் செக்ஸாலஜிஸ்ட் கார்த்திக் குணசேகரன் விளக்கமாகப் பேசியிருக்கிறார். கட்டுரையை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு