Published:Updated:

`ரோஸ்' ராதை, `ஜாக்' ஹரி... டைட்டானிக் போஸில் அறுபதாம் கல்யாணப் பத்திரிகை!

டைட்டானிக் தம்பதி
டைட்டானிக் தம்பதி

"எங்களோட அறுபதாம் கல்யாண டைட்டானிக் போஸ் இன்விடேஷனை டிசைன் செஞ்சவர் எங்க வருங்கால மாப்பிள்ளை!"

மூத்த தம்பதியர் அன்னியோன்னியமாக இருப்பதைப் பார்க்கும்போது, திருமணம் எனும் அமைப்பின் மீதான இளைஞர்களின் நம்பிக்கை இன்னும் அதிகரிக்கும். ஹரிஹரன் - ராதா தம்பதியின் அறுபதாம் கல்யாணத்தின் `வெடிங் இன்விட்டேஷ’னை பார்க்கையில் அப்படியோர் உணர்வுதான் நமக்கு தோன்றியது. 'டைட்டானிக்' நாயகனும் நாயகியும்போல ஓர் அருவியின் அருகே போஸ் கொடுக்கிறார்கள் இருவரும். முகங்களிலும் இருபதின் உற்சாகம்.

ஹரிஹரன் - ராதா தம்பதி மும்பை வாழ் தமிழர்கள். ஹரிஹரன் ஒரு நாடகக் கலைஞர். 'சந்தோஷி க்ரியேஷன்ஸ்' என்ற பெயரில் டிராமா ட்ரூப் ஒன்றை நடத்தி வருகிறார். டப்பிங் கலைஞரும் என்பதால், ஹார்லிக்ஸ், ஹிமாலயா என விளம்பரங்களுக்கு பின்னணிக் குரலும் கொடுத்து வருகிறார். தொலைபேசியில் இந்தத் தம்பதியைத் தொடர்புகொண்டோம்.

டைட்டானிக் தம்பதி
டைட்டானிக் தம்பதி

"நம்ம ஊர் குற்றாலம் மாதிரியே, மும்பையில் நாசிக் காட்னு ஓர் இடம் இருக்கு. ரெண்டு கிலோ மீட்டர்ல எக்கச்சக்க அருவிகள் இருக்கும். நாலு வருஷத்துக்கு முன்னாடி எங்க 25வது கல்யாண நாள் வந்துச்சு. அப்போ அங்கே குடும்பத்தோடு பிக்னிக் போயிருந்தோம். அப்போதான் என் வீட்டம்மாவும் நானும் 'டைட்டானிக்' ஹீரோ ஹீரோயின் மாதிரி நின்னு போட்டோ எடுத்துக்கிட்டோம்.

இப்போ அறுபதாம் கல்யாண இன்விட்டேஷன்ல அந்த போட்டோவையும் வைக்கலாம்னு தோணிச்சு. அதுல எங்க கைகள்ல 'ரோஸ் ராதை, ஜாக் ஹரி' மெஹந்தி டாட்டூ சூப்பர்ல?!’’ என்று கலகலக்கிறார் ஹரிஹரன்.

"இவர் மட்டுமில்லீங்க, இவரோட மொத்தக் குடும்பமும் ரொம்ப ஜாலி, கேலின்னுதான் இருப்பாங்க. இவங்களோடு சேர்ந்து சேர்ந்து நானும் இவர் மாதிரியே ஆயிட்டேன்’’ என்கிறார் ராதா ஹரிஹரன்.

அறுபதாம் கல்யாணம்
அறுபதாம் கல்யாணம்

ஹரிஹரன் தொடர்ந்தார். "எங்களோட அறுபதாம் கல்யாண இன்விட்டேஷனை டிசைன் செஞ்சவர் எங்க வருங்கால மாப்பிள்ளை. எங்கப் பொண்ணுக்கு மே 4-ம் தேதி கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணியிருந்தோம். கொரோனாவால கல்யாணத்தை டிசம்பர் மாசத்துக்குத் தள்ளி வெச்சுட்டோம்’’ என்பவரைத் தொடர்ந்தார் ராதா.

"எங்க அறுபதாம் கல்யாணத்தை திருக்கடையூர்ல செஞ்சுட்டு, பொண்ணு கல்யாணத்தையும் தமிழ்நாட்ல சொந்த ஊர்ல வெச்சுக்கலாம்னு நினைச்சோம். கொரோனாவால அந்தப் பிளான் எதுவும் நடக்கலை. எண்பதாம் கல்யாணத்தையாவது கோயில்ல நடத்தணும்’’ என்றவர் தொடர்ந்தார்,

"என் புகுந்த வீடு சந்தோஷமான இடம்னு சொல்லியிருந்தேன் இல்லியா... நாத்தனார் எனக்கு தலையலங்காரம் செய்ய, ஓர்ப்படி மேக்கப் செய்ய, பெரிவங்க வாழ்த்தனு அப்படியே 29 வருஷத்துக்கு முன்னாடி போயிட்டேங்க’’ என்று சில நாள்களுக்கு முன்னர் நடந்த தங்கள் அறுபதாம் கல்யாண தினத்தை நினைவுகூர்கிறார்.

டைட்டானிக் போஸ் இன்விடேஷன்
டைட்டானிக் போஸ் இன்விடேஷன்

வெற்றிகரமாக வாழ்ந்தவர்களுக்கு அழகே அடுத்த தலைமுறையினருக்கு அந்த ரகசியத்தைச் சொல்வதுதானே... அதை ஹரிஹரன் செய்தார். "வாழ்க்கைத்துணையை அப்படியே ஏத்துக்கத் தெரிஞ்சிருக்கணும். துணை இப்படியிருக்கணும், அப்படியிருக்கணும், இதெல்லாம் செய்யணும்னு எதிர்பார்க்காம என் துணைக்கு நான் இப்படியிருக்கணும், இதெல்லாம் செய்யணும்னு நினைச்சுட்டா தினம் தினம் திருமண நாள்தாங்க. நமக்குப் பொருத்தமான துணையைத்தான் இயற்கை நமக்குக் கொடுக்கும் என்ற நம்பிக்கை வேணும்.

கொரோனா வார்டில் இயற்கை மருத்துவரின் ஒரு நாள்!

நான் சப்ளையர் வேலையில் ஆரம்பிச்சு, பிரபல ஆங்கிலப் பத்திரிகையொன்றில் பிரின்டிங் வேலைவரைக்கும் செஞ்சிருக்கேன். அதுக்கப்புறம்தான் டிராமா ட்ரூப் ஆரம்பிச்சேன். வேலை நிமித்தமா எத்தனையோ பெண்கள் எனக்கு போன் பண்ணுவாங்க. ராதாவுக்கு என் வேலை பத்தி தெரியாது. ஆனா, என்னைத் தெரியும். ஒருநாள்கூட சந்தேகப்பட்டு கேள்வி கேட்டதில்ல.

என் குடும்பத்துலேயும் பிரச்னைகள் வந்திருக்கு. திருமணமான புதுசுல என் அம்மாவுக்கும் மனைவிக்கும் பிரச்னைகள் வந்திருக்கு. அது எனக்குத் தெரிஞ்சாலும், `என்ன மாமியாரும் மருமகளும் இன்னிக்கு அன்பா இருந்தீங்க போலிருக்கே’ன்னு கேட்பேன். ரெண்டு பேர்ல யாராவது ஒருவர் சிரிச்சிடுவாங்க. வீடு கூலாயிடும். சூழலை மாத்துற டயலாக்கை சட்டுனு போட்டு சமாளிச்சிடுவேன்.

"துணை இப்படியிருக்கணும் அப்படியிருக்கணும், இதெல்லாம் செய்யணும்னு எதிர்பார்க்காம என் துணைக்கு நான் இப்படியிருக்கணும், இதெல்லாம் செய்யணும்னு நினைச்சுட்டா தினம் தினம் திருமண நாள்தாங்க..."
ஹரிஹரன்
மகனுக்காக 10 நாள் கொரோனா வார்டில் தங்கியிருந்த `ஆண் தேவதை’ மாதேஷ்!

திருமணத்தைப் பொறுத்தவரைக்கும் கனவு காணுங்க. அதே நேரம் உங்களுக்குத் தீர்மானிக்கப்பட்டதை ஏத்துக்கோங்க. லவ் பண்ணின பொண்ணு கிடைக்கலைன்னா அவளைக் கொலை பண்றது, இல்லன்னா தற்கொலை பண்ணிக்கிறது, பழகினப்போ எடுத்த போட்டோஸை வெச்சுட்டு மிரட்டுறதெல்லாம் பாவம். அது ரெண்டு குடும்பங்களை நிலைகுலைய வெச்சுடும்." என்று முடித்தார் ஹரிஹரன்.

அடுத்த கட்டுரைக்கு