லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

இல்லாத காதல்... ஈர்ப்புக்கு என்ன காரணம்? - பின்னணியும் தீர்வுகளும்!

இல்லாத காதல்... ஈர்ப்புக்கு என்ன காரணம்?
பிரீமியம் ஸ்டோரி
News
இல்லாத காதல்... ஈர்ப்புக்கு என்ன காரணம்?

தன் தனிப்பட்ட வாழ்க்கை சந்தோஷ மானதாக இருந்தால்கூட அதைக் கைவிட்டு விட்டு அந்த நபருடன் வாழ்க்கையைத் தொடர்வதற்கான செயல்களில் ஈடுபடத் தொடங்குவார்கள்.

அந்தப் பெண்ணுக்கு 43 வயது. கணவர், குழந்தைகள் என சந்தோஷமான வாழ்க்கை. திடீரென்று தன் அலுவலக உயரதிகாரிக்கு தன் மேல் மையல் உள்ளதாக அந்தப் பெண் நம்பத் தொடங்கினார். தனக்காகத்தான் அவர் அலுவலகத்துக்கு சீக்கிரம் வருகிறார், தனக்குப் பிடித்த நிறத்தில் சட்டை அணிகிறார், தன்னைப் பார்த்து எப்போதும் சிரிக்கிறார் என்ற எண்ணங்கள் இவருக்குள் தோன்ற ஆரம்பித்தன. இதனால் குடும்ப வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாத நிலை ஏற்பட்டு, ‘என் குடும்பத்தைவிட்டு வந்துவிடுகிறேன். தன்னை ஏற்றுக்கொள்ள முடியுமா’ என்று அவரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டார்.

இதைக் கேட்டதும் அதிர்ச்சியானார் உயரதிகாரி. காரணம், அதுபோன்ற எண்ணத் துடன் அந்தப் பெண்ணிடம் அவர் அணுகியதேயில்லை. இதைச் சொன்ன பிறகும் அந்தப் பெண் நம்புவதாக இல்லை. இறுதியில் அந்தப் பெண்ணின் குடும்பத் தினருக்கு தகவல் தெரிவித்துவிட்டார். மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு தன் கணவருடன் வாழ்க்கையைத் தொடர்கிறார் அந்தப் பெண்.

இல்லாத காதல்... ஈர்ப்புக்கு என்ன காரணம்? - பின்னணியும் தீர்வுகளும்!
இல்லாத காதல்... ஈர்ப்புக்கு என்ன காரணம்? - பின்னணியும் தீர்வுகளும்!

ஒரு நபர் மீது காதல் கொள்வது இயல்பான விஷயம். ஆனால், தன் மேல் ஈடுபாடே இல்லாத ஒரு நபர் தன்னை விரும்புகிறார் என்று நினைத்துக்கொள்வதை மனநல மருத் துவத்தில் ‘எரோட்டோமேனியா’ (Erotomania) குறைபாடு என்கின்றனர்.

இந்தப் பிரச்னை பற்றி விரிவாகப் பேசு கிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் ஆர்.வசந்த்.

`` ‘எரோட்டோமேனியா’ பிரச்னையில் தன் மீது மற்றொரு நபர் காதல் கொண்டிருக்கிறார் என்று நம்ப ஆரம்பிப்பார்கள். `என் மீது இருக்கும் காதலினால்தான் இதையெல்லாம் செய்கிறார்' என்று நினைக்கத் தொடங்கு வார்கள். காதல் என்ற உணர்வில் இது வராது. ‘எரோட்டோமேனியா’ என்பது ஒரு மனநலக் குறைபாடு. காதல் தொடர்பான `மாயத் தோற்றம்' (Delusion of love) என்றும் கூறுவார்கள்.

யாருக்கு ஏற்படலாம்?

உணர்வுரீதியாக நிலையற்று இருப்பவர்கள், குழந்தைப் பருவத்தில் உளவியல்ரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், பெற்றோரின் கண்காணிப்பு கிடைக்காமல், எப்போதும் அன்புக்கு ஏங்குபவர்கள், மனநலப் பிரச்னை களால் பாதிக்கப்பட்டவர்கள்...

இல்லாத காதல்... ஈர்ப்புக்கு என்ன காரணம்? - பின்னணியும் தீர்வுகளும்!
இல்லாத காதல்... ஈர்ப்புக்கு என்ன காரணம்? - பின்னணியும் தீர்வுகளும்!

எப்படி பாதிக்கும்?

பொதுவாக தன்னைவிட உயர்ந்த பதவியில், உயர்நிலையில் இருப்பவர்கள் தன்னை விரும்புவதாக நினைத்துக்கொள்வார்கள். `எனக்கு சிவப்பு நிறம் பிடிக்கும் என்பதால்தான் அவர் இன்று சிவப்பு நிற உடையணிந்து வந்திருக்கிறார்' என்பது போல அந்த நபரின் செயல்பாடுகள் அனைத்தும் இவர்களுக்காக நடப்பது போலவே நினைத்துக்கொள்வார்கள்.

அந்த நபரை சோஷியல் மீடியாவில் பின் தொடர்வது, அவர்களின் செயல்களைக் கவனிப்பது, அந்தச் செயல்களுக்கு புதிய அர்த்தம் கொடுப்பது என இது மனநலப் பிரச்னையாக மாற ஆரம்பிக்கும். அந்த நபர் திருமணமானவராக இருந்தாலும், வேறு கமிட்மென்ட் உள்ளவராக இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு தன்னிடம் வந்துவிடுவார் என்றும் எதிர்பார்ப்பார்கள்.

எதிர்பார்ப்புகள் பூர்த்தியடையாத நிலையில் அந்த நிராகரிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. சில சமயங்களில் அவர்கள் அந்த நபரிடம் வன்முறையில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது.

 ஆர்.வசந்த்
ஆர்.வசந்த்

தீவிரம் என்ன?

தன் தனிப்பட்ட வாழ்க்கை சந்தோஷ மானதாக இருந்தால்கூட அதைக் கைவிட்டு விட்டு அந்த நபருடன் வாழ்க்கையைத் தொடர்வதற்கான செயல்களில் ஈடுபடத் தொடங்குவார்கள். தன் குடும்பத்துடன் இணைந்து இருப்பது, நேரம் செலவழிப்பதைத் தவிர்ப்பார்கள். அந்த நபரின் செயல்பாடுகளைச் சுற்றியே, இவர்களின் எண்ணமும் செயல் பாடும் இருக்கும். இது அவர்களின் ஒட்டு மொத்த இயல்பு வாழ்க்கையையே பாதிக்கும்.

தீர்வு எளிது!

இந்தப் பிரச்னையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு குடும்பத்தினர், பெற்றோர் ஆதரவு அதிகம் தேவை. இது மனநலப் பிரச்னை என்பதைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு ஆதர வாக இருந்து சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளக் கூடாது.

உடலில் சில ரசாயன சமநிலையின்மை யினால் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. இதற்கான மருந்துகள், அறிவாற்றல் நடத்தை சிகிச்சையும் (Cognitive Behavioural Therapy) வழங்கப்படும்போது பிரச்னை சரியாக வாய்ப்புள்ளது. பிரச்னையின் தீவிரத்தையும், சிகிச்சை அவர்களுக்கு எப்படி உதவுகிறது என்பதையும் பொறுத்து அதை எவ்வளவு காலத்துக்கு எடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்படும்.’’

என்ன செய்ய வேண்டும்?

பாதிக்கப்பட்டவரிடம் முதலில் விஷயத்தைத் தெரிவிக்க வேண்டும். பிறகும் மாற்றம் இல்லை என்றால் அவர்களின் நண்பர்கள், குடும்பத் தினரிடம் விஷயத்தைத் தெரிவிக்க வேண்டும். அவர்கள் உதவியோடு சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

காதலா... மனநலக் குறைபாடா?

எரோட்டோமேனியா குறைபாட்டில், தன்னை விரும்புவதாக நினைக்கும் அந்த நபரே, தனக்கு அவர்மீது காதல் இல்லை என்று தெளிவாகச் சொன்ன பிறகும், அதை நம்பமாட்டார்கள். தன்னை அவர் விரும்புகிறார் என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ளவே மாட்டார்கள்.