Published:Updated:

கர்ப்பகாலத்திலும் தனிமை! -வாசகியின் வருத்தமும் நிபுணரின் விளக்கமும் #LetsSpeakRelationship

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship ( Representational Image )

``குணாதிசயங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க சம்பந்தப்பட்டவரின் மனநிலையுடன் தொடர்புடையதுதான்.''

``அம்மா, இரண்டு அண்ணன்கள், இரண்டு அண்ணிகள், மூத்த அண்ணனின் இரண்டு குழந்தைகள், அப்புறம் நான் என மிகவும் கலகலப்பான கூட்டுக் குடும்பம் எங்களுடையது. இதில் ஒரேயொரு குறை என் சின்ன அண்ணியின் யாரிடமும் பேசாத இயல்புதான். திருமணம் முடிந்து எங்கள் வீட்டுக்கு வந்த இந்த இரண்டு வருடங்களில், என் அண்ணனைத் தவிர எங்களிடம் ஒன்றிரண்டு வார்த்தைகளுக்கு மேல் அவர் பேசியதில்லை. இதுகுறித்து என் சின்ன அண்ணனிடம் பேசியபோது, 'என்னிடம் நன்றாகத்தான் பேசுகிறாள். வீட்டிலுள்ளவர்களிடம் கலகலப்பாகப் பேசிப் பழகு என்று நானும் சொல்லிவிட்டேன். அதனால் எந்தப் பயனும் இல்லை' என்று கூறிவிட்டார். அண்ணியின் அம்மாவோ, 'எங்கள் வீட்டிலும் அவள் இப்படித்தான் இருப்பாள். குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும்' என்றார்.

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship
Representational Image

அண்ணிக்கு தம்பி, தங்கைகள் உண்டு. அவர்கள் வீட்டிற்கு அருகிலேயே நிறைய உறவினர்களும் உண்டு. அனைவருமே ஒற்றுமையாக உள்ளனர். என்னுடைய கேள்வி என்னவென்றால், இவ்வளவு பெரிய குடும்பத்தில் பிறந்தும் எப்படி தனிமையை விரும்புகிறார்? ஒருவேளை இதுதான் அவர் இயல்பா? நாங்கள் எல்லோருமே அவரிடம் மிகவும் அன்பாகத்தான் நடந்துகொள்கிறோம். ஒரு வார்த்தைகூட தவறாகப் பேசியதில்லை. இப்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார். இந்த நேரத்தில் யாருடனும் பேசாமல் அவருடைய அறையிலேயே தனிமையில் இருப்பது எங்களுக்கு என்னவோ போல் இருக்கிறது. இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

- பெயர் சொல்ல விரும்பாத சென்னை வாசகி

பதில் சொல்கிறார் உளவியல் ஆலோசகர் லஷ்மி பாய்:

``மனிதர்களிடம் மூன்று ஆளுமைப் பண்புகள் இருக்கின்றன. முதல் வகையினர் எல்லாருடனும் சகஜமாகப் பேசக்கூடியவர்கள். தன்னம்பிக்கையும் ஊக்கமும் கொண்டவர்களாகத் திகழ்வர். எல்லாவற்றையும் சமாளிக்கும் திறன் பெற்றவர்கள் இவர்கள். இரண்டாவது வகையினர், மிகவும் கூச்ச சுபாவம் உடையவர்களாகவும் தனிமை விரும்பிகளாகவும் இருப்பர். மூன்றாவது வகையினர், மேலே சொன்ன இரண்டு ஆளுமைகளுக்கும் இடையேயான பொதுவான குணங்களைக் கொண்டிருப்பர்.

பதில் அளிப்பவர் உளவியல் நிபுணர் லஷ்மி பாய்
பதில் அளிப்பவர் உளவியல் நிபுணர் லஷ்மி பாய்

உங்கள் அண்ணியைப் பற்றி நீங்கள் கூறியதை வைத்து அவர் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர் என்பது தெரிகிறது. இந்த இயல்பு கொண்டவர்கள், தங்களுக்கு மிகவும் பிடித்தவர்களைத் தவிர வேறு யாருடனும் பேசமாட்டார்கள். தனிமை விரும்பிகளாக இருப்பார்கள். இதற்கு அவர்கள் வளர்ந்த சூழ்நிலையோ குடும்பமோ காரணமில்லை. இந்த குணாதிசயங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க சம்பந்தப்பட்டவரின் மனநிலையுடன் தொடர்புடையதுதான். இதற்கு வேறு யாரும் எப்படிப் பொறுப்பாகவோ காரணமாகவோ இருக்க முடியாது. அதேபோல இந்த இயல்புடன் இருப்பதில் அவர்களுடைய தவறும் ஏதுமில்லை.

இயற்கையிலேயே உங்கள் அண்ணி இப்படிப்பட்டவர்தான். உங்கள் அண்ணியைப்போன்ற இரண்டாவது ஆளுமையைச் சேர்ந்தவர்களிடம் மிகுதியான நற்பண்புகள் காணப்படும். இவர்கள் மிகவும் நல்லவர்களாக இருப்பார்கள், யாருக்கும் தீங்கு செய்யமாட்டார்கள், யாரையும் காயப்படுத்தவும் மாட்டார்கள். நீங்கள் எல்லோரும் உங்கள் அண்ணி மீது அன்பு செலுத்த செலுத்த, காலப்போக்கில் அவரே மாற ஆரம்பிப்பார். திருமணமாகி இரண்டு வருடங்கள்தான் ஆகின்றன என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் காலம் போனால் மாறி விடுவார். கவலை வேண்டாம்.''

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship
அடுத்த கட்டுரைக்கு