Published:Updated:

``சகோதரிபோல பழகினோம்; இப்போது...'' - வாசகி வருத்தத்துக்கு நிபுணர் தீர்வு! #LetsSpeakRelationship

Let's Speak Relationship
Let's Speak Relationship

''வேலைக்குச் செல்லாத திருமணமான பெண்களுக்கு, தன் கணவரைத்தாண்டி மற்றவர்களை நம்பியிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதற்கு உங்கள் கொழுந்தனாரின் மனைவியும் விதிவிலக்கில்லை.''

"எங்களுடையது கூட்டுக்குடும்பம். மாமனார், மாமியார், அண்ணன், தம்பி, அவர்களுடைய குடும்பம் என்று மூன்று படுக்கையறை வசதி உள்ள ஃபிளாட்டில் வசித்து வருகிறோம். நானும் என் கொழுந்தனார் மனைவியும் கூடப்பிறந்த சகோதரிகள் போலத்தான் இருந்தோம். மாமனாருக்கு ஓய்வூதியம் வருகிறது. என் கணவர் வேலைபார்த்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் என் கொழுந்தனாருக்கு வேலை போய்விட்டது. அதிலிருந்து என் கொழுந்தனாரின் மனைவி என்னிடம் முன்புபோல பழகுவதில்லை.

உளவியல் ஆலோசகர் சரஸ் பாஸ்கர்
உளவியல் ஆலோசகர் சரஸ் பாஸ்கர்

'உங்களை நம்பித்தானே நாங்க இருக்கோம்' என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக்கொண்டிருக்கிறாள். 'நிலைமை மாறி உன் வீட்டுக்காரரும் பழையபடி வேலைக்குப் போவார்' என்று சொன்னாலும் ஆறுதலடைவதில்லை. எந்நேரமும் புலம்பிக்கொண்டே இருக்கிறாள். என்ன செய்வது?"

விகடன் வாசகியின் இந்தப் பிரச்னை குறித்து உளவியல் ஆலோசகர் சரஸ் பாஸ்கரிடம் ஆலோசனை கேட்டோம்.

''இந்தக் காலத்தில் அண்ணன், தம்பி இருவரும் திருமணத்துக்குப் பிறகும் ஒரே கூட்டுக்குள் பெற்றோருடன் சேர்ந்து வசிப்பதைக் கேள்விப்படும்போது மனதுக்கு மிகவும் இதமாக இருக்கிறது. கொழுந்தனார் மனைவியும் நீங்களும் கூடப்பிறந்த சகோதரிகள்போல இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஒரு கூட்டுக்குடும்பம் உடையாமல் இருப்பதற்கு இந்த உணர்வைவிட வேறென்ன வேண்டும்... இனி உங்கள் பிரச்னைக்கு வருகிறேன்.

Let's Speak Relationship
Let's Speak Relationship

உங்கள் தங்கை இப்போது பொருளாதார பாதுகாப்பின்மை காரணமாக மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறார். இந்த பேண்டெமிக் நேரத்தில் வேலையிழப்பு என்பது மிகவும் கடினமான காலகட்டம்தான். வேலைக்குச் செல்லாத திருமணமான பெண்களுக்கு, தன் கணவரைத்தாண்டி மற்றவர்களை நம்பியிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதற்கு உங்கள் கொழுந்தனாரின் மனைவியும் விதிவிலக்கில்லை.

அதனால்தான், கூடப்பிறந்தவர்போல பழகினாலும் 'பொருளாதாரரீதியாக, தான் தன்னுடைய கணவருடைய அண்ணனையும் அவருடைய மனைவியையும் சார்ந்திருக்கிறோம்' என்ற உணர்வு அவரிடம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, வீட்டில் உள்ள மற்றவர்கள் தன்னை அவமரியாதையாக நடத்திவிடுவார்களோ என்ற பயத்தில்தான், 'உங்களைத்தான் நம்பியுள்ளோம்' என அடிக்கடி கூறிக்கொண்டிருக்கிறார். ஒருவகையில் நீங்கள் இந்த வார்த்தையை அவரைப் பார்த்துச் சொல்லிவிடுவீர்களோ என்ற பயத்தில்தான், அவரே முந்திக்கொண்டு இந்த வார்த்தையைச் சொல்கிறார். அதனால், இந்த நேரத்தில் நீங்கள் கொஞ்சம் கடினமாக நடந்துகொண்டாலும் அவர் மனதைப் பெரிதும் பாதிக்கும். அதை எக்காரணம் கொண்டும் செய்துவிடாதீர்கள்.

"பொருளாதாரரீதியில் பார்த்தால் 'ஆளுக்கொரு செலவை ஏற்றுக்கொள்ளும்' கூட்டுக்குடும்ப வாழ்க்கையே இன்றைய காலகட்டத்துக்குச் சரியானது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.''
உளவியல் ஆலோசகர் சரஸ் பாஸ்கர்
கர்ப்பகாலத்திலும் தனிமை! -வாசகியின் வருத்தமும் நிபுணரின் விளக்கமும் #LetsSpeakRelationship

குடும்பத்தில் ஒருவர் வேலையிழந்துள்ள சூழ்நிலையில், ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காமல் இருப்பது மிகவும் அவசியம். உங்கள் கேள்வியிலிருந்தே நீங்கள் அதை மிகச்சரியாகச் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. இனியும் அதையே தொடருங்கள். கொழுந்தனார் மனைவியின் புலம்பலைக் கரிசனத்துடன் காதுகொடுத்துக் கேளுங்கள். அது எத்தனை முறையென்றாலும். 'சொன்னதையே எத்தனை முறை சொல்லுவே' என்பதுபோல சிடுசிடுத்து விடாதீர்கள்.

'தன் கணவர் இப்போது சம்பாதிக்கவில்லை. தானும் அவரும் தற்போது வீட்டில் உழைக்காமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்' என்ற குற்றவுணர்வு உங்கள் சகோதரியிடம் அதிகமாக இருக்கிறது. அவருடைய கணவருக்கு வேலை கிடைக்கிறவரை அந்த உணர்வு அவரைவிட்டு நீங்காது. அதனால், அவரிடமும் உங்கள் கொழுந்தனாரிடமும் ஆறுதலாகப் பேசுங்கள். முடிந்தால் உங்கள் கொழுந்தனாருக்கு மறுபடியும் வேலை கிடைக்கத் தேவையான உதவிகளைச் செய்யுங்கள். 'இது நம்முடைய குடும்பம். எப்படிப்பட்ட பொருளாதாரப் பிரச்னைகள் வந்தாலும், நாம் சேர்ந்து எதிர்கொள்ளலாம்' என தைரியம் கொடுங்கள்'' என்ற சரஸ் பாஸ்கர், கூட்டுக் குடித்தனம் பற்றிய தன்னுடைய கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார்.

Let's Speak Relationship
Let's Speak Relationship
WFH: குடும்பத்தலைவியின் பறிபோன மீ டைம்... நிபுணரின் தீர்வுகள்! #LetsSpeakRelationship

''பொருளாதாரரீதியில் பார்த்தால் 'ஆளுக்கொரு செலவை ஏற்றுக்கொள்ளும்' கூட்டுக்குடும்ப வாழ்க்கையே இன்றைய காலகட்டத்துக்குச் சரியானது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. 'நீ வீட்டு வாடகை கொடு; நான் மளிகைச் செலவை ஏத்துக்கிறேன்' என்று வாழ்ந்தால், சேமிப்பிலும் அதிக கவனம் செலுத்த முடியும். இந்த நிலையில் ஒருவர் பொருளாதாரரீதியில் சரியும்போது குடும்ப சேமிப்பிலிருந்து எடுத்து அவரைக் காப்பாற்ற முடியும். பாதிக்கப்பட்டவரும் மனதளவில் தெம்பாக இருந்து தன்னுடைய பிரச்னையிலிருந்து மீண்டு, அடுத்தகட்டத்தை நோக்கிப் பயணிப்பார்.''

அடுத்த கட்டுரைக்கு