Published:Updated:

லாக் டவுணில் நடந்துமுடிந்தவற்றைப் பேசாமல் நடக்கப் போவதைப் பேசுங்கள்... குடும்ப வன்முறை தவிர்க்க நிபுணர் ஆலோசனை!

"உலகளாவிய தொற்று ஒன்று பரவுகிற இந்நேரத்தில், குடும்பங்களில் வன்முறை அதிகரித்திருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது. சில நாடுகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை முந்தைய நாள்களைவிட சமீபத்தில் இரு மடங்காக அதிகரித்திருக்கிறது.’’

உலகமே லாக்-டவுணில் முடங்கிக்கிடக்கிற இந்த நேரத்தில், இந்தியாவில் ஆரம்பித்து அமெரிக்கா, ஸ்பெய்ன், பிரான்ஸ், சீனா என்று உலகின் பல நாடுகளிலும் குடும்ப வன்முறைகள் அதிகரித்து விட்டன. பிரான்ஸில், தங்கள் துணைவர்களால் அடித்துத் துன்புறுத்தப்படும் பெண்கள் தங்குவதற்கென்றே விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தவிர, அவர்களுக்குத் தேவையான மருந்துப் பொருள்களையும் அரசு சொல்லும் கடைகளில், கடவுச்சொல்லைக் கூறி பெற்றுக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து செலவுகளையும் அரசாங்கமே ஏற்றிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையினரை அழைக்க வேண்டுமென்றால், மருந்துக் கடைகளில் 'மாஸ்க் 19' என்ற கடவுச்சொல்லைச் சொன்னால், உடனே காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்படும். பிரான்ஸ் அரசின், ’Stop the violence’ என்ற இணையத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான பெண்கள் புகார் அளித்துவருகின்றனர். இந்தத் தளத்தின் மூலம் பயிற்சிபெற்ற போலீஸ் அதிகாரிகளுடன் அவர்கள் நேரடியாகத் தொடர்புகொள்ளலாம்.

Domestic Violence During Epidemic
Domestic Violence During Epidemic

சீனாவில், குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகக் குரல்கொடுக்க, #AntiDomesticViolenceDuringEpidemic என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகிக்கொண்டிருக்கிறது.

ஸ்பெய்னிலும் கணவர்களால் பாதிக்கப்பட்டவர்கள், தொடர்புகொள்ள அரசாங்கம் உதவி எண் அறிவித்திருக்கிறது. இந்தியாவிலும், உத்தரப்பிரதேசத்தில், லாக்-டவுண் நேரத்தில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், 112 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

நிலைமை இப்படியிருக்க, ஐ.நா-வின் பொதுச் செயலாளர் அந்தோணியோ, "உலகளாவிய தொற்று ஒன்று பரவுகிற இந்நேரத்தில், குடும்பங்களில் வன்முறை அதிகரித்திருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது. சில நாடுகளில், பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை முந்தைய நாள்களைவிட சமீபத்தில் இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. உடனடியாக இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய வேண்டும்" என்று வருத்தப்பட்டிருக்கிறார்.

உயிர் பயத்துடன் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிற இந்த நேரத்தில், குடும்ப வன்முறைகள் அதிகரித்தி ருப்பதற்கான உளவியல் காரணங்கள், அதற்கான தீர்வுகள் பற்றிச் சொல்கிறார், உளவியல் ஆலோசகர் சரஸ் பாஸ்கர்.

உளவியல் நிபுணர் சரஸ் பாஸ்கர்
உளவியல் நிபுணர் சரஸ் பாஸ்கர்

"வீட்டிலிருந்து வேலை செய்கிறபோது, நிறுவனங்கள் தரும் வேலைச்சுமையால் வருகிற கோபத்தை மனைவி மீது காட்டுவது கணவர்களுக்கு சுலபமாக இருக்கிறது.

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்கள்கூட, இ.எம்.ஐ காரணமாக சேமிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பார்கள். இப்படிப் போதுமான அளவு சேமிப்பு இல்லாதவர்கள், வருமானமின்மை அல்லது இன்னும் சில மாதங்கள் கழித்து வரவிருக்கிற பொருளாதாரப் பிரச்னைகளை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்கிற பயத்தை மனைவிமீது கோபமாக வெளிப்படுத்துகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கணவன் சம்பாதிக்கும் நபராகவும் மனைவி குடும்பத்தை நடத்துகிற நபராகவும் இருக்கிற குடும்பங்களில் பொருளாதார பிரச்னைகள் தருகிற மன அழுத்தம் இன்னும் அதிகம். வீட்டுக்குத் தேவையான அளவுக்கு சம்பாதிக்க முடியவில்லை என்று கணவரும், கணவர் போதுமான அளவுக்கு சம்பாதிக்கவில்லை என்று மனைவியும் கோபப்படும்போது, அது குடும்ப வன்முறையில் கொண்டுபோய் விட்டுவிடலாம்.

Domestic Violence During Epidemic
Domestic Violence During Epidemic
அவள் சினிமா: ரியல் சிங்கப்பெண்!

லாக்-டவுண் முடிந்த பிறகு வேலை தொடருமா, அப்படியே தொடர்ந்தாலும் இதே சம்பளம் வருமா, சம்பளம் குறைக்கப்படுமா போன்ற பயங்களும் குடும்ப வன்முறைகளாக உருமாறுகின்றன.

எல்லோரும் வீட்டுக்குள் இருக்கிற இந்த நேரத்தில், ஒருவரின் குற்றத்தை மற்றொருவர் எந்நேரமும் கண்காணித்துக்கொண்டே இருப்பது, குறை சொல்லிக்கொண்டே இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இத்தகைய தனி மனித இயல்புகளும் குடும்ப வன்முறைக்கான பலமான காரணம்தான்.

Domestic Violence During Epidemic
Domestic Violence During Epidemic

மதுப்பழக்கம் மற்றும் போதைப் பழக்கத்துக்கு அடிமையான ஆண்கள், அவை கிடைக்காத இந்த நேரத்தில் மனைவியை அடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

'உன்னாலதான் கடன் வாங்கி வீடு வாங்கினேன்', 'கார் வாங்கினேன்', 'இந்தப் பொருளாதாரக் கஷ்டத்துக்கு எல்லாம் நீ தான் காரணம்' என்று ஒருவரையொருவர் பழி சொல்லிக் கொண்டிருந்தால், வீட்டுக்குள் வன்முறை அதிகரிக்கத்தான் செய்யும்.

குழந்தைகள் சேட்டை செய்யும்போது, 'அப்படியே உங்கள மாதிரி', 'அப்படியே உன்ன மாதிரி' என்று கமென்ட் செய்தால்கூட இந்த நேரத்தில் பிரச்னை வெடிக்கும்.

'அன்னைக்கு உங்க அம்மா இப்படி நடந்துகிட்டாங்க' , 'உன் தம்பி மட்டும் சரியா' என்கிற ரீதியில் கணவர், மனைவியின் குடும்பத்தைக் குறை சொல்வது... மனைவி கணவரின் குடும்பத்தைக் குறை சொல்வது என்று இந்த நேரத்திலும் உங்கள் வழக்கமான பேச்சுகளைத் தொடர்ந்தால், பிரச்னைகள் வெடிக்கவே செய்யும்" என்றவர், இதற்கான தீர்வுகளையும் சொன்னார்.

Domestic Violence During Epidemic
Domestic Violence During Epidemic
`நிவாரணம் வழங்கும்போது தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டியவை!’ - மருத்துவரின் அறிவுறுத்தல்

கணவன் மனைவி இருவரும், லாக்-டவுண் நேரம் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொள்வதற்கும் பழி சொல்லிக் கொள்வதற்குமான நேரமில்லை என்று புரிந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் சண்டை போடுவதாலோ, கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொள்வதாலோ பிரச்னைகள் எதுவும் சரியாகப்போவதில்லை. இதைப் புரிந்துக்கொண்டாலும் குடும்ப வன்முறைகள் குறையும்.

ஸ்ட்ரெஸ் அதிகமானால் சிறிது நேரம் தனிமையில் இருக்கலாம். இதுவும் குடும்ப வன்முறை நிகழாமல் தடுப்பதற்கான வழிமுறைதான்.

Women abuse
Women abuse
freepik
`வீடாக மாறிய கார்!’ - கொரோனாவிலிருந்து குடும்பத்தைக் காக்க அரசு மருத்துவரின் அசத்தல் முயற்சி

தெளிவான தம்பதியர், நடந்துவிட்ட சம்பவங்களுக்காக சண்டை போடுவதைவிட, இனி நடக்கப்போவது குறித்துப் பேச ஆரம்பிப்பார்கள். இந்த நேரத்தில் அதிகரித்துள்ள குடும்ப வன்முறைகளைக் குறைப்பதற்கு இதுதான் சரியான வழி. இதைப் பின்பற்றாமல், உங்கள் ஈகோவுக்குள் சிக்கிக்கொண்டீர்கள் என்றால், மிகப்பெரிய ஆபத்தை நோக்கி, அதாவது தற்கொலை என்ற அளவுக்குகூட கொண்டுசென்றுவிடலாம் கவனம். இது, கணவனும் மனைவியும் நண்பர்களாக இருக்கவேண்டிய அல்லது மாறவேண்டிய தருணம்" என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார், சரஸ் பாஸ்கர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு