Published:Updated:

"மனப்பதற்ற நோயால் மகளைக் கொஞ்ச முடியவில்லை"- வாசகர் பிரச்னை, நிபுணர் தீர்வு! #LetsSpeakRelationship

Anxiety
Anxiety

’’உண்மையில் விபத்து நடப்பதற்கு 50 சதவிகிதம் வாய்ப்பு இருப்பதைப்போலவே விபத்து நடக்காமல் இருப்பதற்கும் 50 சதவிகிதம் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், பதற்றநோய் இருப்பவர்கள், பயந்து பயந்தே அதை 100 சதவிகிதமாக்கி விடுவார்கள்.’’

"எனக்கு தற்போது 30 வயதாகிறது. கடந்த 5 வருடங்களாக நல்ல வேலையில் இருக்கிறேன். கைநிறைய சம்பாதிக்கிறேன். நிம்மதியான வாழ்க்கை என்னுடையது. இவை எல்லாமே, இரண்டு வருடங்களுக்கு முன்னால் என் நண்பனிடமிருந்து அந்த அழைப்பு வரும்வரைதான். தற்போது, நிம்மதியே இல்லாமல் எல்லா நேரமும் பயந்துகொண்டே இருக்கிறேன். என் நண்பனுக்கு ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்ததைச் சொல்வதற்காக வந்த அழைப்பு அது. நெருங்கிய நண்பன் என்பதால், நானும் அவனுடன் மருத்துவமனையில் சில நாள்கள் தங்கியிருந்தேன். அதன்பிறகு அவன் சொன்ன ஹார்ட் அட்டாக் அறிகுறிகள் எனக்கும் இருப்பதைப் போன்ற உணர்வு. உடனே மருத்துவமனைக்குச் சென்று இதயம் தொடர்பான பரிசோதனைகளைச் செய்துபார்க்க, எல்லாம் நார்மலாக இருந்தன.

ஒரு வாரம் நிம்மதியாக இருந்தேன். மறுபடியும் நெஞ்சு வலிப்பதுபோல இருக்கவே மறுபடியும் மருத்துவமனை... மறுபடியும் பரிசோதனைகள்... மறுபடியும் நார்மல் ரிசல்ட்... சொன்னால் நம்ப மாட்டீர்கள். வாரத்துக்கு ஒருமுறை ’நெஞ்சு வலிக்குது’ என மருத்துவமனைக்குச் சென்று விடுவேன். இப்படியே ஒரு வருடம் சென்றது. அதன்பிறகுதான் இது, ’இந்த நோய் வந்துவிடுமோ’, ‘அந்த நோய் வந்துவிடுமோ’ என்று நினைத்து பயப்படுகிற ஹைப்போகாண்டிரியாக் (Hypochondriac) என்கிற மனப் பதற்ற (Anxiety) பிரச்னை என்பது தெரியவந்தது. ஆனால், பிரச்னை தெரிந்து நான் சிகிச்சை எடுக்க ஆரம்பிப்பதற்குள் என் விந்தணுக்களின் எண்ணிக்கை வரை ஆங்சைட்டி பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தது. இதற்குச் சிகிச்சை எடுத்து நார்மலான பிறகுதான் திருமணம் செய்துகொண்டேன். அழகான ஒரு மகளும் பிறந்தாள்.

Anxiety
Anxiety

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில் கொரோனா வந்தது. லேசாக டெம்ப்ரேச்சர் கூடினாலே பயப்பட ஆரம்பித்தேன். தொண்டை லேசாக கரகரப்பானாலும் ‘எனக்கு கொரோனா வந்துடுச்சு’ என்று பதற ஆரம்பித்தேன். சளிப்பிடித்ததும் கொரோனா பரிசோதனையே செய்துபார்த்துவிட்டேன். ரிசல்ட் நெகட்டிவ் என்றுதான் வந்தது. ஆனால், ரிசல்ட் வருவதற்கான அந்த இரண்டு, மூன்று நாள்களுக்குள் நான் செத்து செத்துப் பிழைத்தேன். என் மகளைக் கொஞ்சுவதற்குக்கூட பயமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு 5 மணி நேரமாவது கொரோனா பற்றிய செய்திகளைத் தேடித்தேடிப் படிக்கிறேன். கொரோனாவுக்கு தடுப்பூசி வந்துவிடாதா என்று கவலைப்படுகிறேன். என் பய நோய் தீர ஏதாவது வழியிருக்கிறதா..?"

தீர்வு சொல்கிறார் உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்.

‘’உங்கள் மெயிலின் ஆரம்ப வரிகளைப் படித்தவுடன் மிகப்பெரிய பிரச்னையில் இருந்து நல்லபடியாக மீண்டு வந்துவிட்டீர்கள் என்று மகிழ்ச்சியடைந்தேன். ஆனால், கொரோனா காரணமாக மறுபடியும் அதே பிரச்னைக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய பிரச்னையை ’ஆங்சைட்டி டிஸார்டர்’ என்று சொல்வோம். இந்தப் பிரச்னை இருப்பவர்கள் சின்ன விஷயத்தையோ அல்லது சின்ன பிரச்னையையோ பெரிதாக நினைத்துக்கொண்டு கவலைப்படுவார்கள். இதை ஓர் உதாரணத்துடன் சொல்ல வேண்டுமென்றால், கார் ஓட்டுகிற ஒருவருக்கு இந்த ஆங்சைட்டி டிஸார்டர் பிரச்னை இருக்கிறது என்றால், ‘அய்யோ காரை யார் மேலேயாவது இடிச்சு ஆக்ஸிடென்ட் பண்ணிடுவேனோ’, ‘இல்லன்னா என் வண்டி மேல வேற எந்த வண்டியாவது வந்து மோதிடுமோ’ என்ற பயத்திலேயே இருப்பார்கள். உண்மையில் விபத்து நடப்பதற்கு 50 சதவிகிதம் வாய்ப்பு இருப்பதைப்போலவே விபத்து நடக்காமல் இருப்பதற்கும் 50 சதவிகிதம் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், பதற்றநோய் இருப்பவர்கள், பயந்து பயந்தே அதை 100 சதவிகிதமாக்கி விடுவார்கள்.

உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்
உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்

இனி, உங்கள் பிரச்னைக்கு வருகிறேன். தொண்டை லேசாக கரகரப்பானால்கூட கொரோனா வந்துவிட்டதோ என்று பயப்படுகிற நீங்கள், ‘என் குழந்தையைக் கொஞ்சினால் அவளுக்கும் கொரோனா வந்து ஏதாவது சீரியசாகி விடுமோ என்று பயப்படுகிறீர்கள். இதற்குத் தீர்வு என்னவென்று பார்த்தால், கொரோனா பரிசோதனை செய்து பார்ப்பதுதான். ஆனால், உங்களைப் போன்ற மனப்பதற்ற நோய் இருப்பவர்கள் அடிக்கடி பயப்படுவீர்கள் என்பதால், அடிக்கடி கொரோனா பரிசோதனை செய்துகொண்டு இருக்க முடியாது. அதற்கு பதில், உங்களுக்குத் தெரிந்த மருத்துவரிடம் போனிலேயே உங்கள் பிரச்னையைச் சொல்லி தீர்வுக் காணலாம். இல்லையென்றால், உங்கள் மகளைக் கொஞ்சப் போகும் நேரத்தில் முகத்துக்கு மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள். கைகளுக்கு க்ளவுஸ் அணிந்துகொள்ளுங்கள்.

மகன்களுக்கான மரபைக் கட்டமைக்கும் தந்தைகள்! - ஓர் உளவியல் பார்வை #MyVikatan

‘இது தினமும் சாத்தியமா’ என்று நீங்கள் கேட்கலாம். சாத்தியப்படாதுதான். இதற்குத் தீர்வு, நீங்கள் ஓர் உளவியல் ஆலோசகரிடம் கவுன்சலிங் பெறுவதுதான். திருமணத்துக்கு முன்பு இருந்த அளவுக்கு, தற்போது உங்களுக்கு மனப்பதற்ற நோய் இல்லாதிருந்தால், ஆலோசனைகளாலேயே பிரச்னையை சரிசெய்துவிடலாம். அல்லது மருந்துகள் தேவைப்பட்டால், எடுத்துக்கொள்ளுங்கள்.

உடம்பில் இல்லையென்றாலும் உங்கள் சிந்தனையில் ‘கொரோனா வந்திடுமோ’ என்ற நெகட்டிவ் எண்ணம் இருக்கிறது. இந்த எண்ணமானது சங்கிலித்தொடராக நீண்டுகொண்டே போகிறது.

Let's Speak Relationship
Let's Speak Relationship
``மகனே பேரனாகப் பிறந்து வந்துட்டார்!''- நடிகர் சேதுராமனின் அப்பா உருக்கம்

இந்த நெகட்டிவ் எண்ண சங்கிலித்தொடரை உளவியல் ஆலோசகரால்தான் பாசிட்டிவ்வாக மாற்ற முடியும். உங்களுக்கான ரிலாக்சேஷன் டெக்னிக்குகளையும் அவரால்தான் சொல்லித்தர முடியும். அதனால், நீங்கள் உடனடியாக ஓர் உளவியல் ஆலோசகரிடம் நேரடியாகவோ அல்லது போன் வழியாகவோ ஆலோசனை பெறுங்கள். ஏற்கெனவே மனப்பதற்ற நோயிலிருந்து மீண்டு வந்த நீங்கள் மறுபடியும் மீண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கையை மனதுக்குள் அழுத்தமாக விதையுங்கள். ஆல் தி பெஸ்ட்.’’

அடுத்த கட்டுரைக்கு