Published:Updated:

``ஐந்து லட்சம் கொடுத்துவிட்டு அட்வைஸ் பண்ணுங்க"-டிக்டாக் ரவுடி பேபி சூர்யா.. மனநல ஆலோசகரின் அலர்ட்!

`இணையத்தைத் தட்டினால் ஏராளமான அந்தரங்க காணொலிகள் மற்றும் காட்சிகள் குவிகின்றன. ஏற்கெனவே, அந்தரங்கத்தைத் தேடி அலைபாயும் மனம், டிக்டாக் காணொலிகளில் வரும் பெண்களைப் பார்க்கும்போது அவர்களின் எண்ணம் தவறான பாதைகளுக்குச் செல்ல வழிவகுக்கிறது.’

டிக்டாக் அலப்பறைகளும் அதற்கான தீர்வுகளும்
டிக்டாக் அலப்பறைகளும் அதற்கான தீர்வுகளும்

பல்லாங்குழி, பம்பரம், தாயம், அச்சாங்கல், ஆடு புலியாட்டம், கோலம் போட்டுப் பார்ப்பது என அந்தக் காலத்துப் பெண்கள் இதுபோன்ற விளையாட்டுகளின்மூலம் தங்களின் பொழுதைப் போக்கினார்கள். ஆனால், இன்றைய நவீன யுகப் பெண்களுக்கு மேலே குறிப்பிட்ட விளையாட்டுகளின் பெயர்கள்கூடத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள்தான் இன்றைய மனிதர்களின் விளையாட்டு மைதானம். அதன் சமீபத்திய வரவு டிக்டாக் செயலி.

TikTok
TikTok

`டிக்-டாக்' - யார், எந்த இடத்திலிருந்தும் தங்களின் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்ட செயலி. இந்தப் பொழுதுபோக்கு செயலி பலருக்கு சின்னத்திரை, வெள்ளித்திரை வாய்ப்புகளைக் கம்பளம் விரித்து வரவேற்றிருந்தாலும் பலரின் வாழ்க்கையைச் சீரழித்துள்ளது. சில உயிர்களைப் பறித்திருக்கிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது திருமணமான பெண்களே. டிக்டாக் செயலிமூலம் ஏற்படும் நட்பு, பின்னாளில் தகாத உறவாக மாறி விவாகரத்து வரை நீள்கிறது. அப்படி சமீபத்தில் தென்னிந்தியாவில் நடந்த இரண்டு சம்பவங்கள்தான் இவை.

சம்பவம் 1:

மனைவியின் சந்தோஷத்துக்காக எதையும் செய்யும் கணவர், இரண்டு செல்லமான மகன்கள் என்று நடுத்தர குடும்ப வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக நகர்த்திக்கொண்டிருந்தார் ஆந்திராவைச் சேர்ந்த அர்ச்சனா. நாகரிகமான வாழ்க்கையின்மேல் விருப்பம் கொண்ட அர்ச்சனாவுக்கு ஸ்மார்ட் போன் மீது ஈர்ப்பு வந்துள்ளது. மனைவி கேட்பதையெல்லாம் மறுகணமே வாங்கிக்கொடுக்கும் கணவர் ரவிச்சந்திரனுக்கு அந்த மொபைல் போனால்தான் அவரின் வாழ்க்கை திசைமாறும் என்று நினைத்திருக்க மாட்டார்.

Archana and her husband
Archana and her husband

கணவன் ஆசையாக வாங்கிக்கொடுத்த மொபைலில், டிக்டாக் செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதில் எந்நேரமும் மூழ்கி இருந்திருக்கிறார் அர்ச்சனா. இந்த நிலையில், டிக்டாக் மூலம் தன் சகோதரியின் தோழி அஞ்சலியின் அறிமுகம் கிடைக்க, இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர். அஞ்சலி, ஆண் வேடமிட்டு அர்ச்சனாவோடு டூயட் பாடுவது வழக்கம். இவர்களின் நெருக்கம், அர்ச்சனாவின் வீட்டுக்கு அஞ்சலி வந்து தங்கும் அளவுக்கு ஆழமாகியுள்ளது. இருவரின் நடவடிக்கைகளின்மேல் சந்தேகம் கொண்ட ரவிச்சந்திரன் பல முறை அர்ச்சனாவைக் கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தன்னுடைய தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார் அர்ச்சனா. ஆனால், அஞ்சலியை விடவில்லை. இந்த நிலையில், பெற்றோர்களும் கண்டித்ததால், தன்னுடைய இரண்டு மகன்களை அழைத்துக்கொண்டு அஞ்சலியோடு மாயமாகியுள்ளார் அர்ச்சனா.

சம்பவம் 2:

திருப்பூரைச் சேர்ந்த பெண் சூர்யா (செல்லமாக ரவுடி பேபி சூர்யா). இவருக்குத் திருமணமாகி ஒரு மகனும் இருக்கிறார். தன் நடிப்புத் திறமையைக் காட்ட டிக்டாக் செயலியைப் பதிவிறக்கம் செய்தவர், லட்சக்கணக்கான லைக்ஸா'ல், நாளடைவில் ஆடைகளின் அளவைக் குறைக்கத் தொடங்கினார். இதனால், மக்களின் நெகட்டிவ் கமென்ட்டுகள் அதிகமாகின. அவற்றை எதிர்கொள்ள முடியாமல், ஆபாசமாகப் பேசி காணொலிகளைப் பதிவேற்றினார் ரவுடி பேபி. மேலும், வீடியோ மீம்களுக்கு பேர் போன ஜி.பி.முத்து என்பவருடன் இணைந்து டூயட் பாடிய சூர்யா, சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் அவருடன் இணைந்து பங்கேற்றார். இவரின் இந்த அதீத டிக்டாக் மோகத்தால், அவருடைய கணவர் பிரிந்து சென்றுவிட்டதாக வதந்திகளும் பரவின. இதனால் பல மோசமான விமர்சனங்களுக்குள்ளானார் சூர்யா.

Rowdy Baby Surya
Rowdy Baby Surya

இதைத் தொடர்ந்து மென்மையாகப் பேசி மக்களிடம் மன்னிப்பும் கேட்டார். ஆனால், அதனால் எந்தப் பயனும் இல்லை. அவரின் முந்தைய செயல்பாடுகள் மட்டுமே மக்கள் மனதில் பதிந்துள்ளன. இந்த நிலையில், சமீபத்தில் ஒரு காணொலியை வெளியிட்ட சூர்யா, தன்னை பலரும் பாலியல் தொழிலுக்கு அழைப்பதாகவும் அதனால்தான் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் கூறி அழுதுள்ளார். இதற்காகப் பலர் ஆலோசனை கொடுத்தபோது, ``எனக்கு நிறைய கடன் இருக்கிறது. ஐந்து லட்சம் பணம் கொடுத்துவிட்டு எனக்கு புத்தி சொல்லுங்கள்" என்று திமிராகக் கூறியுள்ளார். இவரின் நிலை குறித்து வேதனைப்படுவதா கோவப்படுவதா என்ற குழப்பத்தில் டிக்டாக் குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர்.

இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில், இதன் உளவியல் மாற்றம் குறித்து உளவியல் ஆலோசகர் வசந்தி பாபுவிடம் கேட்டோம்.

``இன்ஸ்டா புகைப்படத்துக்கும், முகநூல் கவிதைக்கும் கிடைக்காத வரவேற்பு ஒரு நடிகையைப்போல் நடிக்க வேண்டும் என்ற நோக்கில் பதியப்படும் காணொலிக்கு அதிகம் கிடைக்கிறது. அந்தப் பாராட்டு தவறான ஆள்களிடமிருந்து வரும்போது ஏராளமான பிரச்னைகளைச் சந்திக்க நேரிடுகிறது.

Social Media apps
Social Media apps

டிக்டாக் செயலி ஒருவிதமான அடிக்ஷன். இதை அதிகப்படியாக உபயோகிப்பவர்களின் மனதில், தான் ஒரு பெரிய கதாநாயகன்/ கதாநாயகி என்ற எண்ணம் எப்போதும் இருக்கும். தனக்குப் பிடித்த ஹீரோ/ஹீரோயினுடன் இணைந்து டூயட் பாடி நடிப்பது அவர்களின் மனநிலையைப் பெரிதளவு பாதிக்கும். மற்ற சமூக வலைதளங்களில் மனதில் தோன்றும் எண்ணங்களை எழுத்து வடிவிலோ அல்லது புகைப்பட வடிவிலோ பதிவிடலாம். அது மனதளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது.

ஆனால், டிக்டாக்கில் அப்படியல்ல. நமக்கு அழகு என்று நினைத்துப் பதிவிடும் காணொலிகள் யாவும் பார்ப்பவர்களின் கண்ணோட்டத்துக்குத் தகுந்தாற்போல் மாறுபடும். சிலர் கேஷுவலாகப் பார்ப்பார்கள். சிலரோ அவர்களின் நடிப்பை ரசிப்பார்கள். வேறு சிலர் அவர்களின் உடலசைவுகளை மட்டுமே பார்ப்பார்கள். மேலும் அந்தப் பதிவை, நினைக்கும் நேரத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்து ரசிக்கலாம் என்ற சூழலில், தேவையில்லாத ஆசைகள் மனதில் தோன்ற அதிக வாய்ப்பிருக்கிறது."

ஆண்களைவிடப் பெண்களே இந்தச் செயலியை அதிகம் உபயோகிக்கிறார்கள். அதிகம் பாதிப்படையவும் செய்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன?

டிக்டாக் போன்ற செயலிகளை ஆண், பெண் மூன்றாம் பாலினத்தவர்கள் என அனைவரும் உபயோகித்தாலும், இதற்குப் பெண்களே அதிகம் அடிமையாகின்றனர். அதற்கு முக்கியமான காரணம் அவர்களின் தனிமை. வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டு வீட்டுக்குள்ளேயே இருக்கிற பெண்களுக்கு, ஹேண்ட்-பேக் மாட்டிக்கொண்டு வேலைக்குச் செல்லும் பெண்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது.

Woman in stress
Woman in stress

ஆனால், அவர்களின் நிறைவேறாத ஆசையைத் தீர்த்துக்கொள்ள இதுபோன்ற செயல்களில் இறங்குகிறார்கள். கணவரிடமிருந்து அன்பு, பொருளாதார சுதந்திரம் போன்றவை கிடைக்காத நிலையில், டிக்டாக் போன்ற சமூகவலைதள செயலிகளில் நேரத்தைச் செலவிட்டு மனநிறைவு பெறுகிறார்கள். இதுபோன்ற காணொலிகளை எப்படிப்பட்டவர்கள் வேண்டுமானாலும் பார்க்கலாம், என்ன கமென்ட் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் அவ்வளவு ஏன் அதை எப்படி வேண்டுமானாலும் உபயோகித்தும் கொள்ளலாம். இதன் பின்விளைவுகள் பற்றி யாரும் யோசிப்பதேயில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாவது பெரும்பாலும் பெண்களே.

ஒரு செயலிமூலம் அறிமுகமாகும் உறவுக்காக, கணவரை விவாகரத்து செய்வது முதல் பெற்ற குழந்தைகளைக் கொலை செய்வதுவரை குற்றம் நீள்வதற்கான காரணம் என்ன?

புகழ்ச்சிக்கு மயங்காதவர்கள் யாருமில்லை. கணவரிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்க்கும் அன்பு, அரவணைப்பு, நேரம், தாம்பத்ய உறவு போன்றவை சரியாகக் கிடைக்காத பட்சத்தில், அவற்றை நிறைவேற்றும் வேறொரு நபரோடு பழகுவதற்கு அதிக வாய்ப்புண்டு. இப்படிப் பெண்களிடம் பேசுவதற்கென்றே தனிக் குழு இருக்கிறது. காணொலிக்காக அந்த நபரிடமிருந்து `புகழ்ச்சி வார்த்தைகள்' பெருகப்பெருக இன்னும் என்னவெல்லாம் செய்யலாம் போன்ற எண்ணம் அந்தப் பெண்களின் நேரத்தை முற்றிலும் அழிக்கிறது.

Phone addiction
Phone addiction

மதுவுக்கு எப்படி அடிமையாகிறார்களோ, அதுபோல் இதுவும் ஒருவித போதைதான். இது முழுக்க முழுக்க சமூக வலைதள அடிக்ஷன். இதற்குக் குறுக்கே யார் வந்தாலும் அவர்கள் இவர்களுக்கு எதிரியே. அது கணவர், குழந்தை என யாராக இருந்தாலும் இவர்கள் கண்களுக்குத் தொல்லையாக மட்டுமே தெரிவார்கள். எல்லாப் பெண்களும் அப்படித் தவறான பாதையில் சென்றுவிடுவார்கள் என்றும் சொல்ல முடியாது. அவர்களுக்கான வரைமுறைகளை அவர்கள்தான் நிர்ணயிக்க வேண்டும்.

டிக்டாக் செயலிமூலம் அறிமுகமான ஒரு பெண் இன்னொரு பெண்ணோடு வாழ்வதற்காகக் கணவன், குழந்தைகளை விட்டுச் செல்வது போன்ற சம்பவங்களையும் பார்க்க முடிகிறது. இதுபோன்ற குழப்பமான மனநிலையில் பெண்கள் இருப்பதற்குக் காரணம்?

வெளி நபர்கள் உபயோகிக்கும் `ஹனி', `ஸ்வீட்டி', `டார்லிங்', `கியூட்டி' போன்ற சர்க்கரை தடவிய வார்த்தைகள் பெண்களின் மனதை எளிதாகக் கவர்ந்துவிடும். ஆண், பெண் என யாரிடமிருந்து வந்தாலும் அவற்றை ரசிக்க மட்டுமே செய்கிறார்கள். மேலும், நம் நாட்டில் தற்போது ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் ஏற்கப்படுகிறது.

LGBTQ community
LGBTQ community

இதன் உண்மைத்தன்மையை அறியாமல் பலரும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பிடித்த நபரோடு சேர்ந்து வாழலாம் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் வந்துவிட்டது. பெண்ணுரிமை, பெண்ணியவாதிகளின் கூற்றை முற்றிலும் தவறாகப் புரிந்துகொண்ட இதே சமூகம்தான் இந்த ஓரினச் சேர்க்கையின் நியதியையும் தவறாகப் புரிந்துகொண்டு பல தவறுகளைச் செய்துகொண்டிருக்கிறது.

`காடுவெட்டி குருவை கொன்னுட்டீங்க!' - பா.ம.க-வை விமர்சித்து டிக் டாக் வெளியிட்ட உதவி இயக்குநர் கைது

இதுபோன்ற செயலிகள் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்குக் காரணமாக அமைகிறதா?

முன்பெல்லாம் கணவன் மனைவிக்கு இடையேயான தாம்பத்ய உறவைப் பெரிதாக மதித்தார்கள். இருவரும் வெளியே கைகோத்துப் போவதற்குக்கூடத் தயங்குவார்கள். ஆனால், இப்போதெல்லாம் அப்படியல்ல. பொதுவெளியில் முத்தமிடுவதும், அதைப் பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பகிர்வதும் சாதாரணமாகிவிட்டது. இதைத் திருமணமாகாத டீன் ஏஜ் பெண்கள் மற்றும் ஆண்களும்கூட கேஷுவலாக செய்கின்றனர். மேலும், இப்போதெல்லாம் `உடலுறவு' என்பது சாதாரணாமாகிவிட்டது. யார், யாரிடம் வேண்டுமானாலும் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்கிற மனப்பான்மை வந்துவிட்டது.

Wedding
Wedding

பாலியல் எண்ணங்களில் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் போய்விட்டது. பத்து வருடங்களுக்கு முன்பு `போர்ன்' காணொலிகளெல்லாம் எங்கோ ஓரிடத்தில் கிடைக்கும். அதைத் தேடி வாங்கி, ஒளித்து மறைத்துப் பார்ப்பார்கள். ஆனால், இப்போது அனைவரின் கையில் இருக்கும் மொபைல் போன்களில் சர்வசாதாரணமாகக் கிடைக்கிறது. இணையத்தைத் தட்டினால் ஏராளமான அந்தரங்க காணொலிகள் மற்றும் காட்சிகள் குவிகின்றன. ஏற்கெனவே, அந்தரங்கத்தைத் தேடி அலைபாயும் மனம், டிக்டாக் காணொலிகளில் வரும் பெண்களைப் பார்க்கும்போது அவர்களின் எண்ணம் தவறான பாதைகளுக்குச் செல்ல வழிவகுக்கிறது.

இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதற்கு என்ன வழி?

இரண்டு மனங்களோடு குடும்பம் மற்றும் கலாசாரங்கள் இணைவதுதான் `திருமணம்'. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் பிடித்தால் மோதிரம் மாற்றிக்கொள்வதும் பிடிக்கவில்லையென்றால் தூக்கிப் போட்டுவிட்டுப் போவதும் சாதாரணமாகிவிட்டது. கூட்டுக் குடும்பம் உடைந்தது, நகர வாழ்க்கையின் மோகம், பெற்றோர்கள் அல்லாமல் வீட்டு வேலை செய்யும் ஆயாக்களிடம் குழந்தைகள் வளர்வது போன்ற செயல்கள்தான் இந்த மாற்றத்துக்கான காரணங்கள். இவற்றைத் திருத்திக்கொண்டாலே நிச்சயம் இதுபோன்ற குற்றங்கள் குறையும். முன்பெல்லாம் பக்கத்துக்கு வீட்டில் என்ன நடக்கிறது என்பதுதான் தெரியாமல் இருந்தது. இப்போதோ அவரவர்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாத அளவுக்கு இணையம் நம்மைக் கட்டிப்போட்டிருக்கிறது.

Relationship
Relationship

கணவன் மனைவிக்குள் இருக்கும் பிணைப்பு உடையும்போது நிச்சயம் தவறான பாதைகள் உருவாகும். ஹீரோ ஹீரோயின் கனவு அவர்களின் உண்மையான வாழ்க்கையைக் கெடுக்கிறது. ஏற்கெனவே, அன்பு மற்றும் பாராட்டுகளுக்கு ஏங்கிக்கொண்டிருக்கும் பெண்கள் இதற்கு எளிதாக மயங்கிவிடுவார்கள். இது உடலையும் பாதித்து மனநிலையையும் பாதிப்படையச் செய்வதால்தான் கணவன், குழந்தை போன்றவர்களையும் எதிர்த்து வாழத் தோன்றுகிறது. தற்கொலை, கொலை போன்றவற்றுக்கும் வழிவிடுகிறது. எனவே, இதுபோன்ற செயலிகளுக்கு நம் அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு அனைவரும் விழிப்புணர்வுடன் இருப்பது சிறந்தது.

`டிக் டாக் மோகத்தால் பணம், நகையை இழந்துவிட்டேன்!- சிவகங்கை பெண் கண்ணீர்

ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்யலாம்?

இதுபோன்ற செயலிகள் உபயோகித்து, அவற்றுக்கு அடிமையாகி, மனக் குழப்பத்தில் இருப்பவர்கள் உடனே மனநல ஆலோசகர்களிடம் செல்வது சிறந்தது. இதிலிருந்து மீண்டு வருவதற்கான தெரபிக்கள் ஏராளமாக இருக்கின்றன. மன உறுத்தல்களிலிருந்து வெளியே வருவதற்கு அங்கே வழிகாட்டுவார்கள். அவர்களின் பிரச்னைகள் முதல் தீர்வுகள்வரை அத்தனையும் பாதுகாக்கப்படும். எனவே, பயப்படத் தேவையில்லை.

Psychologist Vasanthi Babu
Psychologist Vasanthi Babu

பைத்தியம் பிடித்தவர்கள்தான் ஆலோசகரிடம் செல்ல வேண்டும் என்ற பிம்பம் இங்கு உண்டு. அந்த எண்ணத்தை முதலில் மாற்றிக்கொண்டு. உடல்நலத்தோடு மனநலமும் மிகவும் முக்கியம் என்பதை உணர வேண்டும். உங்களைப் பற்றிய தகவல்கள் வெளியே எங்கேயும் பகிரவும் படாது. எனவே, ஆலோசனை பெறுவதில் தவறேதுமில்லை. எதுவாக இருந்தாலும் எச்சரிக்கையாக இருப்பதே சிறந்தது.